பிரயாகையில் சங்கமித்தல்

பிரயாகை மின்னூல் வாங்க

பிரயாகை வாங்க

இனிய ஆசிரியருக்குப் பணிவான வணக்கங்கள். ஓர் மாறுதலுக்காக வெண்முரசை மாமலரிலிருந்து பின் வரிசையில் வாசித்து வருகிறேன். அவ்வகையில் பிரயாகையை நேற்று நிறைவு செய்தேன். ஒவ்வொரு புத்தகம்படித்து முடிக்கும் பொழுதும் எழும் உணர்ச்சி வெண்முரசு வரிகையில் இது தான்ஆகச் சிறந்தது என்பதைப் பிரயாகை முடிவிலும் உணர்ந்தேன்.

இந்தப் புத்தகத்தில் இதுதான் கவர்ந்தது என்று குறிப்பிட்டுச் சொல்லவியலாத வகையில் அனைத்துமேஅதன் காரணகாரியத் தர்க்க அடிப்படையில் அமைந்தது ஓர் பேரழகு.

உதாரணத்திற்கு நிலைப் பெயராமை நிலையை விரும்பி எடுத்த துருவனுக்கு ஒருகட்டத்தில் நிலையின்மை நிலையை விழைய விண்முழுதானவன் பள்ளிகொண்ட பாற்கடலின் ஒருத்தத்துளியாய்த் தெறித்துப் பெறுங் காமம், கர்மம் மற்றும் பேரன்பு என்னும் கங்கையை- திரௌபதியின் மறுஉருவைக் கருவாக உருவகித்துப் பிரவாகமாகப் பிரயாகை செல்லுமிடம் ஓர் அழகு.

சொற்கனல் பகுதியை நோக்கும் பொழுது மானசீகமாக வணங்கப்படும் குருத் துரோணர்த் துருபதனை இழுத்துக் கொண்டு வரும் பொழுதுவரும் புன்னகையின் கீழ்மையைக் கண்டு விலகும் அர்ச்சுணனைச் சித்தரிப்பது ஓர் அழகிய கற்பனை. நிதர்சனத்தில் எண்ணும்பொழுது இது போன்ற தருணங்களை நாமும் கடந்து வருகிறோம் என்பதாலா! ஒன்று நாமோ அல்லது நாம் உயர்வாக நினைக்கும் மனிதர்களோ, உறவுகளோ ஒரு ஷனத்தில் ஏதோவொரு கீழ்மைச் செயல்களால் மனதிலிருந்து விலக்கபடுவதோ விலக்கிக்செல்வதையே பார்க்கிறோம் இல்லையா!

இருகூர்வாள் – எனக்காக இல்லை என் மைந்தனுக்காக இல்லை உலகுநீத்த என்கணவருக்காக என்னும் உணர்ச்சிமிகு சொற்களினால் காய் நகர்த்தித் தருமனை முன்னிறுத்தும் குந்தியைப் போல நாம் காணும் உலகில் தாய்மார்கள் செய்யும் அரசியலைத் தெரியாமல் ஏதேனும் இந்தியக் குழந்தைகள் இருப்பார்களா! அழகு.

தாயின் செயலை தட்டவும் தடுக்கவும் இயலாமல் பாண்டவர்கள் தடுமாறும் கட்டம் இயல்பாகப் பின்னிய ஒன்று. ஆணின் காமம் அகங்காரம் சார்ந்தது; பெருங்காமுகர்கள் இருவகை. புணர்ந்தபின் வெறுப்பவர்கள்; வெறுத்தபின் புணர்பவர்கள் எனும் அர்ச்சுனன்-மாருதரின் உரையாடல்கள் இப்பகுதியின் பெரும்சுவை.

அனல்விதைப் பகுதியின் தலைப்பே தனித்தன்மை வாய்ந்தது. துருபதனின் ஓர் தோல்வி, அதன்மூலம் ஏற்படும் கீழ்மை அதிலிருந்து மீள்வதற்கு ஒரு பிரயாணம், பிரயாணத்தின் பயனாய் “நெருப்பை வளர்ப்பதுபோலப் புனிதமானது ஏதுமில்லை. நெருப்புக்கு அவியிடுவதைப்போல மகத்தானது ஏதுமில்லை. நெருப்பில் மூழ்கி அழிவதுபோல முழுமையும் வேறில்லை.”

“ஸ்வாகா! அன்னையே ஸ்வாகா! இப்புவியை ஒரு கவளமாக உண்டுப் பசியாறுக. ஸ்வாகா! அனைத்தையும் அழித்து நடமிடுக. மண்ணை விண்நடனமாக ஆக்கும் பெருவல்லமையே ஸ்வாகா!” என்று அனலின் விதையாய் முளைக்கும் திரௌபதியின் பிறப்பு இதிகாசத்தின் விதை.

ஆயிரம் அடிகள் – தன் மருமகன்களை அரியனையேற்றும் ஓர் பதினெட்டு வருடக் கனவுச் சிதைக்கப்பட்டபின் காந்தரத்தை நோக்கியப் பயணமும் இடையில் கிழ ஒநாயுடன் உரையாடல் மற்றும் அதனிடம் கடிபட்டபின் அதுவாகவே மனமாற்றம் அடையும் தருணங்கள் சிறப்பானவை. ஓநாயைப் பார்ப்பது, அதனுடன் பேசிப் புறம் சார்ந்தது ஏற்படும் நிகழ்வுகள் மூலம் அகத்தில் ஏற்படும் மாற்றம் அதற்கு ஒத்திசைவாகக் கணிகனின் வரவு அற்புதம்.

அழகு என்னும் தலைப்பில் என்றோ கம்பராமாயண உரையில் கேட்கப்பட்டதை நினைத்துப்பார்க்கிறேன் அக அழகுப் புற அழகு – ராமன். அக அழகுப் புற அழகின்மை – குகன். அக அழகின்மைப் புற அழகு – கைகேயி. அகமும் புறமும் அழகின்மை – கூனி. அதுபோல அகமும் புறமும் அழகின்மையாக நாவலெங்கும் வரும் கணிகனைப் பற்றிமட்டுமே ஒருபெரும் ஆராய்ச்சிக்கட்டுரை எழுதலாம். கம்பனின் காவியத்திற்கு உருவான விவாதங்களும் பலப்பல கட்டுரைகள் வந்தது-வருவது போல வெண்முரசிற்கும் பலதரப்பட்ட அர்த்தமுள்ள விவாதங்களும் கட்டுரைகளும் வரும் எதிர்காலத்தை காண்கிறேன்.

சக வெண்முரசு வாசகி ஒருநாள் என்னிடம் சொன்னார் வாசித்துக்கொண்டிரும்பொழுது எதையாவது வாசிக்கத் தவற விட்டுவிடுவோமோ என்று? எனக்கும் அந்த உணர்வுப் பலஇடங்களில் வந்ததுண்டு, இதுவே திரும்பி முதலில் இருந்து ஆரம்பிக்க உந்துகோலாக இருக்கும் என்று தேற்றிக்கொள்கிறேன்.

கதையெங்கும் வரும் திரு ஷண்முகவேலின் ஓவியம் அருமை. ஒருபானைக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு அற்புத ஓவியம். இந்த மனிதன் அலாதியானவர்.

நிற்க. சில வருடங்கள் முன்பு திருக் கமல் 50 என்னும் நிகழ்ச்சியின் திரு ரஜினியின் ஆத்மார்த்தமான உரை இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர் சொல்வார் எங்களைப் போல் இருக்கும் கலைஞர்களைக் கலைத்தாய் கையைப் பிடித்துச் செல்கிறாள்; திருக் கமலைத் தோளில் மார்பில் தூக்கிக்கொண்டு செல்கிறாள். அதைப்போலத் தேவிச் சரஸ்வதி உங்களின் விரல்களில் வாயிலாக வெண்முரசில் நர்த்தனம் ஆடிவிட்டாள். இதை நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் வாசகனாக நான் அறியும் உண்மை இது.

நன்றிகள் பல!

லங்கேஷ் 

பிரயாகை முடிவில்…

பிரயாகையின் பெண்

பிரயாகை, வாசிப்பு

பிரயாகையின் உணர்வுத் தருணங்கள்-இரம்யா

பிரயாகையின் துருவன் – இரம்யா

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

பிரயாகை

பிரயாகை -சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைசினிமா- வெற்றியும் ஊதியமும்
அடுத்த கட்டுரைசதீஷ்குமார் சீனிவாசன்- 13 கவிதைகள்