புவி எனும் கலைக்கூடம்
நான் இந்த வீட்டிற்கு வந்து பதினெட்டு வருடங்கள் ஆகிடுச்சு , சென்னையில் ஒரு மத்தியதர அடுக்ககம். சின்ன மூன்றே அறைகள் கொண்டது . கொஞ்ச கொஞ்சமாக பணம் சேர்த்து சமயலறைக்கும் படுக்கை அறைக்கும் மரத்தில் கதவுகள் செய்து அழகுபடுத்திக்கொண்டேன். வீடு முழுக்க கிருஷ்ணனின் படங்களை மாட்டினேன். மிக நிம்மதியாகத்தான் வாழ்க்கை இருந்தது . மூன்றாம் வருடத்தில் ஒருநாள் சமையலறை ஜன்னலில் கரையான் கோடுகளை பார்த்து அதிர்ந்து படுக்கையில் இருந்த பையனை அலறியபடி எழுப்ப கூடவே பொண்ணும் எழுந்து ஓடிவர “கரையான் வந்துடுச்சுடா பாரு இப்போ என்ன செய்றது” என நான் கூச்சலிட “ஐயோ அம்மா எதுக்கு இவ்ளோ கத்துற லீவ் அன்னைக்கும் தூங்கவிடாம” என்று சர்வ சாதாரணமாக தூங்க போனான். பொண்ணு ஒரே ஒரு பார்வை பார்த்துவிட்டு போய்விட்டாள். என் நிம்மதியே போய்விட்டதாக உணர்ந்தேன்.
கூகுளில் தேடி பூச்சிகளை கொல்லும் ஒரு நிறுவனத்திடம் வீடு முழுதும் மருந்தடிக்க வரும்படி கூறி, மருந்து அடித்த பின்தான் நிம்மதியாக முகத்தில் துண்டை கட்டிக்கொண்டு தூங்கினேன் . எப்பொழுதும் எனது கண்கள் அனைத்தையும் கண்டுகொள்ளும், அவ்ளோ தீட்சண்யம் கொண்டது. மருந்து அடிச்சு இரண்டு வருடத்தில் குளியலறை கதவுகளில் மீண்டும் கரையான். இந்தமுறை சத்தம் போடலை நான். மீண்டும் மருந்து அடித்தேன். பிறகு வருடம் ஒருமுறை மருந்து அடிப்பது சாதாரணமாக போய்விட்டது. இப்படியே பதினைந்து வருடம் கழிந்தது. போன ஆறு மாதம் முன்பு புத்தக அலமாரியில் மீண்டும் கரையான். அடுக்கி வைத்திருந்த புத்தகம் அனைத்தையும் அள்ளி வெளியே போட்டு பார்த்தால் அட்டைகள் மட்டுமே விட்டுவிட்டு உள்ளே மொத்தத்தையும் படித்துவிட்டிருந்தது கரையான். ஒரு இருபது புத்தகங்கள் போய்விட்டது. எனக்கு மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கி ஓவென்று அழுதே விட்டேன். பிள்ளைகளுக்கு திருமணமாகிவிட்டதால் நான் மட்டுமே இருந்தேன் (நானும் கரையானும்)
இந்தமுறை கடையில் மருந்து வாங்கிவந்து நானே துருவித்தூவும் புட்டியில் அடைத்து நானே முகமூடி அணிந்து கரையான் மேல் ஊற்றினேன். இப்படியாக ஒரு வாரம் ஊற்றியும் கரையான் சாகவில்லை.(அந்த மருந்தை நான் குடித்திருந்தால் முதல் நாளே செத்திருப்பேன்) உன்னால் ஒரு புழுவைக்கூட சாகடிக்க முடியலை நீ எல்லாம் பெரிதாக “நான் நான்” என்று பீத்திக்கொள்வதில் ஒன்னுமே இல்லை. “நீ மாயை” என்ற தத்துவத்தை அன்று நான் உணர்ந்தேன்.
மீண்டும் மருந்து அடிப்பவரை அழைக்க அவர் வந்து ஒட்டு மொத்த மரவேலைப்பாடுகளையும் குடைந்து அனைத்திலும் கரையான் உங்களைவிட சௌகர்யமாக குடித்தனம் செய்கிறது. வீட்டில் இருக்கும் அணைத்து மரங்களையும் எடுத்துவிட்டு அலுமினியம் கதவுகளை போட்டுக்கொள்வது மட்டுமே தீர்வு என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
வேறு வழி இல்லாமல் ஜன்னல்களை, கதவுகளை அலுமினியத்தில் மாற்றினேன். அப்பாடா இனி நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்க உன்னை நிம்மதியாக வாழ விடவே மாட்டேன் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த கரையான் இன்று விளக்குப் போட பொத்தானில் கைவைக்க அதற்குள் இருந்து எட்டி பார்த்தது. சோர்ந்தே போய்விட்டேன். உள்ளுக்குள் வந்த இயலாமையை அடக்கிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.
பக்கத்து வீட்டில் வீட்டுக்கார அம்மா ஒருமுறை கரையான் உங்க வீட்டுக்கு மட்டும்தான் வருது என கூறி சிரித்தது நினைவுக்கு வர எனக்கு சட்டென மண்டைக்குள் பூப்பூத்து நான் ஞானம் அடைந்தேன். யார்வீட்டுக்கும் வராத கரையான் என்னையே பதினெட்டு வருடமாக ஏன் தொந்தரவு செய்யனும்?. கரையான் படித்த புத்தக லிஸ்டை எடுத்து பார்த்தேன் அனைத்தும் விஷ்ணு புராணமும், பாகவதமும், உபநிஷத்தும், இமைக்கணமும் கைகளை கூப்பி கண்ணீர் மல்கி “கிருஷ்ணா” என்றேன்.
ஜெயந்தி