உடன்பிறந்தார் சந்திப்பு -கடிதம்

வெண்முரசு நூல்கள் வாங்க

வணக்கம் ஜெயமோகன்

வெண்முரசில் வரும்  பிரயாகை பகுதியில் பாண்டவர்களும், கெளரவர்களும் சந்திக்கும் இடம் வரும். சிறு வயதில் மட்டுமே அவர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ந்து விளையாடிய நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையை அவரவர் கோணத்தில் பார்த்த பிறகு பல வருடங்களுக்கு பின் திரும்பவும் சந்திக்கும் தருணம்.

அந்த தருணத்தில் கர்ணன் இல்லாமல் இருப்பதும் அந்த சந்திப்பின் பொருளை உணர்த்தும். சகோதரர்களாகவே உணர்ந்தவர்களின் சந்திப்பு. எந்த மூன்றாம் மனிதனும் இல்லாமல். கிருஷ்ணன் கூட்டங்களில் இல்லாமல் கரைந்து விடும் தன்மை கொண்டவன் ஆதலால், கிருஷ்ணன் அங்கே இருப்பதையே அனைவரும் மறந்து விடுவார்கள். பாண்டவர்களை பார்க்கும் போது, துரியோதனனும், அவன் தம்பிமார்களும் அடையும் மனநிலை, கண்ணீர், இரு தரப்பினரும் தங்களின் உண்மைகளை பரிமாறிக் கொள்வது. மன்னிப்பு கேட்பது. மன்னிப்பது என்று அந்த சந்திப்பு நல்லதொரு மனநிறைவு தந்தது வாசிக்கும் போது.

கெளரவர்களும், பாண்டவர்களும் ஒரு வேளை இப்படி சந்தித்து பேசியிருந்தால், போர் தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என்று எண்ணியிருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு முடிந்து இரு தரப்பினரும் வெளியேறும் போதே நிஜ உலகின் உண்மை முகத்தில் அறைய, பழைய மனநிலைகளுக்கே திரும்பி விடுவார்கள். அந்த அறை சகோதரர்கள் மட்டுமே இருக்கும் அறை, எண்ணங்களை பரிமாறிக் கொள்வதற்கான, மனக் கசப்பை போக்கி கொள்வதற்கான,  அறை.

நேற்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் இதைப் போன்ற ஒரு காட்சி வந்தது. அருண்மொழிவர்மனும், குந்தவையும், ஆதித்த கரிகாலனும் மூவரும் சந்ததிக்கும் இடம், அவர்களின் உரையாடல் மன நெகிழ்வையும், நிறைவையும் தந்தது. நாவலில் மூவரும் சந்திக்காமலேயே அவரவர் வாழ்க்கையை வாழ்வார்கள். ஒரு முறையேனும் அவர்கள் சந்தித்திருந்தால், தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே எண்ணினேன். படத்தில் அந்த காட்சியை தந்ததிற்கு  நன்றி.

நிஜ வாழ்க்கையிலும் சிறு வயதிற்கு பிறகு, நடுத்தர வயதில் சகோதர, சகோதரிகள் மட்டுமே சந்திக்கும் ஒரு நிகழ்வு ஒவ்வொருவர் வாழ்விலும் வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த வரும் காலங்களில் அந்த சந்திப்பை நினைக்கும் போதெல்லாம் மனம் நெகிழ்வடையும் வாய்ப்பு இருக்கும்.

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

முந்தைய கட்டுரைமார்க்ஸியமும் ரஸ்ஸலும்
அடுத்த கட்டுரைஆலயக்கலை முகாம், கடிதம்