விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு
பாதிகளின் கவி – ரம்யா
(சதீஷ்குமார் சீனிவாசனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்’ உயிர்மை பதிப்பகம் வெளியீடாக 2021-ல் வந்தது. அவரின் இரண்டாவது தொகுப்பு ”பாதி நன்மைகள்” விரைவில் வெளியாக உள்ளது. 2023ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதையொட்டி அவருடனான உரையாடல்
நேர்காணல்- ரம்யா)
*
உங்களுடைய குடும்பம், வளர்ந்த சூழல் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
அப்பா சீனிவாசன் அம்மா சம்பூரணம் காதலித்து திருமணம் செய்து காட்டுமன்னார் கோவிலிலிருந்து கும்பகோணத்திற்கு வந்தவர்கள். அப்பா கட்டிடவேலை. அம்மா கரும்பு கட்டுவது, வயல் வேலைகள் என பல வேலைகளுக்குச் செல்வார். ஐந்தாவது வரை திருவைக்காவூர் மேலமாஞ்சேரியில் படித்தேன். எப்போதும் முதல் மதிப்பெண் தான் எடுப்பேன். முதல் மதிப்பெண் எடுத்தால் எதாவது பரிசு தருவார்கள். அதனால் எடுத்தேன்.
கும்பகோணத்தில் மிகச் சில ஆண்டுகளிலேயே எட்டு வீடுகள் மாறியிருக்கிறோம். ஐந்தாவதிலிருந்து விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். மல்லிப்பூ பறிக்கப்போவது, கத்தறிக்காய்க்கு உரம் போடுவது, சோளக்கருது பறிக்கப்போவது என என்னென்ன வேலை கிடைக்கிறதோ அதற்குச் செல்வேன். அப்பாவோடு கட்டட வேலைக்கும் செல்வேன். ஊரில் கொடிக்காபுலி மரம், கருவக்காடு, எலந்தப்பழம், நாவல்பழம்னு சுற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தேன். பெரிதாக பசி, வறுமை இது பற்றியெல்லாம் பிரக்ஞையே இருந்ததில்லை.
நான் எட்டாவது படிக்கும் போது அண்ணன் பதினொன்றாவதில் ஃபெயில் ஆகியிருந்தான். திருப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். அம்மாவிற்கும் உடல் நலம் சரியில்லாமல் ஆனது. அதற்கு முன்னமே அப்பா கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு கை, கால் எல்லாம் உடைந்து ஒரு மாதிரி வீட்டில் நிலைமை சரியில்லை.
கேரளாவா? அங்க ஏன்?
அது ஒரு சீசன் வேலை மாதிரி. எங்கள் ஊரில் ஆறுமாதத்திற்கு ஒரு முறை எல்லோரும் கட்டட வேலைக்கு கேரளா சென்றுவிடுவார்கள். இங்கு மழை சீசன் வந்தால் கேரளாவில் இருக்காது. அதனால் அங்கு போய்விடுவார்கள்
வறுமையினால்தான் படிப்பு இடை நின்றதா?
அப்படின்னு சொல்லிட முடியாது. நாங்கள் தங்கியிருந்த நூற்றைம்பது ரூபாய் வாடகை வீட்டையும் காலி செய்யும் நிலைமை நான் எட்டாவது படிக்கும்போது வந்தது. அக்கா, தங்கை எல்லாம் காட்டுமன்னார் கோவிலில் விடுதியில் படித்தார்கள். என்னையும் கும்பகோணத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டரில் இருந்த பாபநாசத்தில் ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் சேர்த்தார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. முதலில் பத்தொன்பதாவது ராங்க் எடுத்தேன். பின்னர் காலாண்டு பரிட்சையில் ஃபெயில் ஆகிவிட்டேன். அவமானமாக இருந்தது. அதனால் தெரிந்த உறவுக்காரர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். பள்ளி செல்லவில்லை. அதைக் கண்டுபிடித்து அவர்கள் திட்டியதால் புத்தகத்தை எடைக்குப் போட்டு பஸ் ஏறிவிட்டேன். அதற்குப் பின் திருப்பூரில் சென்று வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
பள்ளிப்படிப்பு ஒன்பதாம் வகுப்போடு நின்றபிறகு பாடப்புத்தகமல்லாத புத்தகத்தின் மீதான கவனம் எப்போது வந்தது.
திருப்பூரில் வேலை அதிகமாக இருந்தது. காலை மூன்றரைக்குச் சென்றால் இரவு பதினொன்றுக்குத்தான் வீட்டுக்கு வருவேன். எப்படி அங்கிருந்து தப்பிப்பது என்று வீட்டில் கோபித்துக் கொண்டு கன்னியாகுமரி சென்றுவிட்டேன். அங்கு புத்தகத்தைப் பார்த்ததும் வாங்க வேண்டும் என்று தோன்றியது. என்ன இருந்தாலும் நம்ம ஒரு படித்தபையனாச்சே என ”விவேகானந்தரின் பென்மொழிகள்” என்ற புத்தகம் வாங்கிப்படித்தேன். ஏதோ வாழ்க்கையைப் பற்றி தெரிந்தது போல இருந்தது.
எனக்கு விளையாட்டு, ஊர்சுற்றுவது என வேறு எதிலும் நாட்டம் இல்லை. அதனால் திருப்பூரில் புத்தகக் கடைகளைத்தேடி ஒரு வருடமாக விவேகானந்தர், ராமகிருஷ்ணர் என ஆன்மிகப் புத்தகங்கள் அதிகம் படித்தேன். அந்தப்பயணத்தில் கண்ணதாசனை அறிமுகம் செய்து கொண்டேன். “அர்த்தமுள்ள இந்துமதம்” படித்தேன். அவர் காந்தியின் அபிமானி. ஒரு கட்டுரையில் காந்தி பற்றி சொல்லியிருந்தார். அவர் மூலமாக சத்தியசோதனை வாங்கிப்படித்தேன். ரொம்ப பிடித்திருந்தது. முடிந்தளவு அவர் சொன்னதைக் கடைபிடிக்க முயற்சி செய்தேன். கெட்ட வார்த்தை பேச மாட்டேன். பத்து பைசாவுக்கு சாக்லேட் கூட வாங்கி சாப்பிட மாட்டேன். வண்டி இருந்தது வீட்டில். ஆனால் சைக்கிளில் தான் போவேன். பிரம்மச்சரியம், பெண்களை தாயாகப் பார்ப்பது, நுகர்வுக்கலாச்சாரத்தை தவிர்ப்பது இப்படி ஒன்றரை வருடம் இருந்தேன்.
இலக்கியம் புனைவுகள் என எப்படி வந்தீர்கள்?
கோயம்புத்தூர், பாண்டிச்சேரி என ஆங்கங்கே வேலைகள் பார்த்தேன். 2015களில் நியூஸ் சேனல்கள் அதிகமும் புழங்கி வந்த காலம். அதில் நாஞ்சில் நாடனின் நேர்காணல் ஒன்று பார்த்தேன். அவருடைய பெயரை புத்தகக் கடைகளில் பார்த்திருக்கிறேன். அவருடைய எல்லா படைப்புகளையும் படித்தேன். பிடித்திருந்தது. மிதவை, என்பிலதனை வெயில் காயும் போன்றவையெல்லாம் அவருடைய நல்ல நாவல்.
நாஞ்சிலுக்குப் பின் காந்தியைக் கைவிட்டேன். அது அவர் மேல் தவறு இல்லை. என்னால் எதிலும் முழுமையாக நிற்க முடியவில்லை. ஒன்றிற்கு வரும்போது இன்னொன்றை இயல்பாக கைவிட்டு விட்டேன் என்று சொல்லலாம். விவேகானந்தர், ராமகிருஷ்ணர் என்று இருக்கும்போது கூட இப்படித்தான். நிறைய யோக முறைப் பயிற்சியெல்லாம் செய்து பார்த்தேன். கண்ணதாசன் வந்தபோது அவர்களைக் கைவிட்டேன்.
நாஞ்சில் புத்தகங்களைப் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றை வாங்கினேன். அதில் “நாற்பதாண்டுகால தமிழ் நாவல்கள்” என்ற கட்டுரை ஒன்று இருந்தது. அதையெல்லாம் குறித்துவைத்துக் கொண்டு அது வாங்குவதற்கான காசையும் கணக்கு போட்டு வைத்திருந்தேன். போனஸ் வந்தபோது அப்படியே ஒரு ஐயாயிரத்திற்கு புத்தகம் வாங்கினேன். அதில் சாரு நிவேதிதா, அசோகமித்திரன், சுந்தரராமசாமி, நகுலன் என பலரின் புத்தகங்கள் இருந்தது.
அசோகமித்திரன் முதலில் புரியவில்லை. நகுலன் ஓரளவு புரிந்தார். அவருடைய மொழியும், பைத்தியக்காரத்தனமும் எனக்கு பிடித்திருந்தது. பின்னர் சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகள் படித்தேன். அதைப் படித்த பின்னர் ஒரு நான்கு மாதம் வேலைக்குச் செல்லவில்லை. வாழ்க்கை மீது ஒரு அவநம்பிக்கை வந்தது. அதில் அம்மா பற்றி கூட ஒரு வரி வரும். ”அம்மா, அவளை நான் வளர்ந்தபின் காப்பாற்றுவேன் என்று தான் சின்ன வயதில் என்னைப் பார்த்துக் கொண்டாள் என்று தோன்றியது” என்ற பொருளில் வரும் வரி. அது என்னை மிகவும் தொந்தரவு செய்தது. நகுலனின் நினைவுப்பாதையும் அப்படிப்பட்டது தான்.
சி. மணியின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது
“இந்த உலகம் ஒரு அபத்த நாடகம்
அந்த அபத்த நாடகத்தின்
பாத்திரங்களாகிய நாம்
அபத்தமாகத்தான் நடந்து கொள்வோம்”
அந்தக்கவிதையை மட்டுமே பல முறை படித்துக் கொண்டிருந்தேன். இந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட யாருமில்லை. அப்பறம் மீண்டும் சுந்தரராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் படிக்க முயற்சி செய்தேன். முடியவில்லை.
பின்னர் சாரு நிவேதிதாவின் ஜீரோடிகிரி வந்தேன். அவர் என்னென்னவோ பேசியிருந்தார். அது வித்தியாசமாக இருந்தது. எல்லாத்தையும் மறுக்கும் ஒரு தன்மையை சாருவில் பார்த்தேன். சாரு வெறியனாக மாறினேன். இரண்டு வருடமாக அப்படி இருந்தேன். காந்திக்கு அருகில் அவரை வைக்க முடியும் என்னால். ஆனால் அவர் காந்தியை திட்டி எழுதியிருப்பார். ஆனால் இவர்கள் இருவரியும் இணைக்கும் ஒரு புள்ளி என்பது “வன்முறை நீக்கம்”. வன்முறையிலிருந்து நீக்குவதை சாரு வேறு பாதையில் சென்று தொட்டார் எனலாம். சாரு எனக்கு தனியராக இருந்து சமாளிக்கும் பலவற்றை எழுத்தின் மூலம் அளித்தார்.
அங்கிருந்து மீண்டும் அசோகமித்திரனிடம் வந்து பார்த்தேன். இப்பொது அவர் வாழ்க்கையின் வேறு வேறு லேயர்களை திறந்து வைத்ததை உணர்ந்தேன். ”வாழ்க்கையின் அர்த்தம் தேடத்தேட நழுவிக் கொண்டே போகும்” என்ற வரி ஒன்று அ.மி சொல்லியிருப்பார்.”இந்த வாழ்க்கை இப்படித்தான், கஷ்டமா போகும்” என்ற எண்ணத்தை அ.மி அளித்தார். வாசிப்பு சுவாரசியமாக ஆனது. அப்படியே தீவிர வாசிப்புக்குள் வந்தேன்.
கவிதைகள் எப்போது வாசிக்க ஆரம்பித்தீர்கள்?
நாஞ்சில் நாடன் ஒரு சிறுகதையில் “விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன் கவிதைகள்லாம் படிங்க. அப்பறம் கவிதை எழுதுங்க” என்று எழுதியிருந்தார். சாருவும் ஒரு கட்டுரையில் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி சொல்லியிருந்தார். அப்போது யுடியூப், டி.வி. களில் மனுஷ்யபுத்திரனைப் பார்த்திருக்கிறேன். அவர் அரசியல் கட்சி சார்ந்தவர் என ஒதுங்கியிருந்தேன். ஆனால் சாருவும், நாஞ்சிலும் சொல்கிறார்களே என மனுஷ்யபுத்திரனை வாசிக்க ஆரம்பித்தேன். ”இதற்கு முன்பும் இதற்கு பின்பும்” என்ற தொகுப்பை வாங்கி வந்தேன். அதில்
“நாம் ஏன் இப்படி இருக்கிறோம்
சதா எதையாவது நம்ப நினைத்துக் கொண்டு
எதையாவது நம்பிக்கொண்டு”
என்ற ஒரு மூன்று பக்க கவிதை எழுதியிருப்பார். அதை கும்பகோணம் தாராசுரம் கோவிலில் உட்கார்ந்து தனியாக வாசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கவிதையை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை. பித்து பிடித்தாற்போல இருந்தது. அந்த புத்தகத்தைக் கொண்டுபோய் யாரிடமோ கொடுத்துவிட்டேன். என்னிடம் இருக்கவேண்டாம் என்று நினைத்தேன். அதன்பின் மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைத்தொகுதிகளை வாசித்தேன்.
வேறு எந்தக் கவிஞர்களையெல்லாம் இந்தப் பயணத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டீர்கள்?
பொதுவாக வேலைசெய்யும் நேரங்களில் யாரிடமும் பேச மாட்டேன். உரைகள் கேட்பேன். ஜெயமோகன், மனுஷ்யபுத்திரனின் உரைகள் வழி நகுலன், குமரகுருபரனை அறிமுகப்படுத்திக் கொண்டேன். குமரகுருபரனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.
“கல்லென கல்லென அசையும்
விசையுறு நதியில்
என் செய்வேன் தாயே
கிடக்கிறேன் நதியோரம்”
என்ற கவிதை. முதலில் புரியவில்லை. ஆனால் ஏதோ செய்தது. அதன்பின் பலருடைய கவிதைகளை முழுத்தொகுப்புகளாக வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.
கவிதைகள் எழுத ஆரம்பித்தது எப்போது?
”நாம் நிரந்தரமாக தங்கிக் கொள்ள வீடு வேண்டும், என்னால் அலைய முடியாது” என வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு தனியாக நானே போட்டுக் கொண்ட ஒரு கொட்டகையில் நான்கு மாதம் இருந்தேன். அந்த சமயத்தில் நிறைய கவிதைகள் வாசித்தேன். அப்போது காட்டுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு நாய் கூடவே வரும். வயதான நாய். விஜயவர்மா என்று பெயர். லொக்கு லொக்கு என்று கூடவே ஓடி வரும். அதைப்பார்க்கும் போதெல்லாம் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் வேட்டையாடுவது பற்றி அவர் எழுதிய படிமங்கள் நினைவிற்கு வரும். எனக்கு இந்த நாயைப் பார்க்கும் போது வந்த எண்ணங்களை கவிதை என்ற பெயரில் எழுதினேன். தொடர்ந்து முகநூலில் புனைப்பெயரில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.
இலக்கியம், கவிதை தான் உங்கள் பாதை என எப்போது முடிவு செய்தீர்கள்?
ஒரு தருணம் என்று சொல்லிவிடமுடியாது. கன்னியாகுமரி கோவளம் சென்றிருந்தபோது கவிஞர் ஆனந்த்குமாரை சந்தித்தேன். கவிதைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவர் தான் ஜெயமோகனை சந்திக்கச் சொல்லியிருந்தார்.
அடுத்த நாள் காலை முகம் கழுவாமல், பல்கூட விலக்காமல், ஜெயமோகனை சென்று சந்தித்தேன். எட்டரைக்கு போயிருப்பேன். ஒரு மூன்று மணி நேரம் பேசினோம். தனிமை, கவிதை, இலக்கியம், எது நல்ல கவிதை, யார் சிறந்த கவிஞர் என பேசிக்கொண்டேயிருந்தார். நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது சுற்றிக் கொண்டே இருந்தது போல இருந்தது. ஒரு இடத்தில் அவருக்கு முத்தம் கொடுத்துவிடலாம் என்று கூட தோன்றியது. பேசிமுடித்தபோது “அப்பறம் சதீஷ்” என்றார். நான் “அவ்வளவு தான் சார்” என்றேன். புகைப்படம் எடுத்துக் கொண்டேன். “வந்ததுக்கு ஞாபகமா ஒரு புத்தகம் கொடுக்கனுமே” என்று சொல்லி ஒரு புத்தகம் கொடுத்தார்.
இப்படித்தான் ஜி. கார்ல்மார்க்ஸை வாசித்துவிட்டு வட்டிக்கு பணம் வாங்கிக் கொண்டு அவரை சந்திக்கச் சென்றிருக்கிறேன். அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். என் வாழ்வின் மிகப்பெரிய குற்றவுணர்ச்சியிலிருந்து என்னை விடுவித்தவர் அவர்.
மனுஷ் உயிர்மையில் இடம் கொடுத்தார். ஜெயமோகன், கார்ல், மனுஷ், பெருந்தேவி, சாரு, ஆனந்த்குமார் என எல்லாரும் இலக்கியம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே என்னிடம் பேசினார்கள். நான் ஏதோ இலக்கியம் வாசிக்கிறேன் என்ற ஒரு காரணம் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. எனக்கு அது ரொம்ப பிடித்திருந்தது. காரணகாரியம் இல்லாம ஒருத்தர்கிட்ட பேசறது எல்லாம் இலக்கியத்தில் மட்டுமே நடக்கும். இங்கு இருப்பது எனக்கு பிடித்துள்ளது.
உங்கள் முதல் தொகுப்பு “உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்” 2021-வெளியானது. முகநூலில் எழுதிக் கொண்டிருந்த உங்கள் கவிதைகளை புத்தகமாகப் போட வேண்டும் என்ற ஊக்கம் எங்கிருந்து வந்தது?
மனுஷ்யபுத்திரன் தான் என்னை அழைத்து புத்தகம் போடச் சொன்னார். எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன். பறப்பது தான் முக்கியம், எவ்வளவு உயரம் என்பது இப்போது முக்கியமில்லை என்றார். அதனால் சரி என்று சொன்னேன். கார்ல், மனுஷ் இருவருக்குமே கவிதை சார்ந்த வழக்கமான அணுகுமுறை கிடையாது. ஜி. கார்ல்மார்க்ஸ் தான் தொகுத்துக் கொடுத்தார்.
உங்கள் இரண்டாவது தொகுப்பு ”பாதி நன்மைகள்” வெளிவர உள்ளது. 2021க்குப் பிறகு எழுதிய கவிதைகள் அதிகமும் சேர்ந்துவிட்ட பிறகும் ஏன் தொகுப்பாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
தொகுப்பு வேண்டாமென்று தோன்றியது. இந்தகாலகட்டத்தில் ஒரு அவநம்பிக்கையான சூழல் இருந்தது. வேலையில்லாமல் இருந்தேன். வீட்டில் நான் புத்தகம் வாசிப்பது பிடிக்காமல் அக்கறை என்ற பெயரில் அதைக் கொண்டு போய் எடைக்குப் போட்டு விட்டார்கள். பணம் தான், பொருள் தான் இந்த வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்த காலகட்டம். “இழப்பதற்கு எதுவுமில்லை, எழுத கவிதை இருக்கிறது” இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு பைத்தியம் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். நெருக்கமானவர்களிடம் கூட வம்பிழுத்துக் கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன். தற்கொலை எண்ணம் அதிகமிருந்தது.
அப்பறம் இந்துமதி என் வாழ்க்கையில் வந்தாள். கொஞ்சம் நம்பிக்கை வந்தது. காரணகாரியங்கள் அற்ற ஒரு உறவு சாத்தியம் தான் என்பதே ஆறுதலாக இருந்தது.
இந்த விருதை ஒட்டி இரண்டாவது கவிதைத்தொகுப்பைப் போடலாம் என்று தோன்றியது. இந்த இரண்டாவது கவிதைத்தொகுப்பை தொகுப்பதற்கு கவிஞர் ஆனந்த்குமார் உதவினார். ஒரு நாற்பது கவிதைகள் அவர் தேர்ந்தெடுத்தார். மீதி நாற்பது கவிதைகள் என் விருப்பப்படி தேர்ந்தெடுத்தேன். இன்னும் மூன்று தொகுப்புகள் போடுமளவு கவிதைகள் உள்ளது. போடனும்.
உயிர்மை இணைய இதழில் பணிபுரிந்தீர்கள். அந்த அனுபவம் பற்றி…
நான் உடல் சார்ந்து உழைப்பது மேல் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு சங்கடம் இருந்தது. இன்னும் இலகுவான வேலைகளில் ஈடுபடு என அவ்வப்போதுசொல்வார். கார்ல், பெருந்தேவி ஆகியோரும் என் அன்றாடங்களில் அக்கறை கொண்டவர்கள். மனுஷ் தான் உயிர்மையில் வந்து இருக்கச் சொன்னார். பிடிக்கவில்லையென்றாலும் போகலாம் என்ற அக்கறையோடு. அங்கு இருக்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. மனுஷைத்தவிர வேறு யாரும் என்னை வாசலில் ஏற்றமாட்டார்கள். மனுஷ் நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். கவிதை பற்றி, வாழ்க்கையைப் பற்றி, எழுத்தைப் பற்றி, ஒரு எழுத்தாளன் எழுத்தாளனா இருக்கவே முடியாத எழுத்தைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார். நான் சந்தித்த மனிதர்களில் என்னை நன்றாக பார்த்துக் கொண்டதில் மனுஷ் முதன்மையானவர். என் எல்லா மேடுபள்ளங்களையும் அறிந்தவர். பெரிய மனுசன் எனலாம் சுருக்கமாக. இரண்டு வருடம் உயிர்மையில் இருந்தேன். வீட்டுச்சூழல் காரணமாக தற்போது திருப்பூரில் இருக்கிறேன்.
உங்களுடைய சமகாலத்தில் எழுதுபவர்களை வாசிக்கிறீர்களா? அவர்களில் உங்களுக்குப் பிடித்தவர்கள்.
வாசிக்கிறேன். ஆனந்த்குமார், றாம் சந்தோஷ், பெருவிஷ்ணுகுமார், ச.துரை, சபரிநாதன் ஆகியோரை வாசித்திருக்கிறேன். பிடித்துள்ளது. சிலம்பரசன், பூவன்னா சந்திரசேகர் எல்லாம் எழுதுகிறார்கள். ரோஸ்லின் என்ற ஃபேக் ஐடியில் முகநூலில் ஒருவர் கவிதை எழுதுகிறார். நன்றாக உள்ளது. பிறரை வாசிக்க வேண்டும். பெரிய ஒரு கேன்வாஸ் உருவாக்கினால் தான் மதிப்பிட முடியும் இல்ல.
கவிஞர்களிடம் எப்போதும் கேட்கத் தூண்டும் கேள்வி “கவிதை என்பது என்ன?” என்பது தான். உங்கள் பதில் என்ன?
(சிரிக்கிறார்…) நானே இந்தக் கேள்வியை சந்திக்கும் கவிஞர்களிடமெல்லாம் கேட்பேன். இப்போது என்னிடமே இது திரும்பி வந்து நிற்கிறது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பதில் சொல்வார்கள். ஒவ்வொரு நேரத்திலும் ஒன்றொன்று சொல்வார்கள். “மொழியின் கொதிநிலை” என பெருந்தேவி சொல்வார். மனுஷ் ஒரு நேரம், ” உள்ளார்ந்த தொனியைக் கண்டறிவது” என்பார். “மொழிவயப்படுத்த முடியாத அனுபவங்களை மொழிவயப்படுத்தும் முயற்சி, அது கவிதையின் சவால்” என ஒரு சமயம் சொல்வார்.
ஒரு மலையாள வாசனையோட சொல்லனும்னா மனசிலுள்ளதை தொறந்து பரையறதுன்னு சொல்லலாம். நான் கொஞ்ச நாள் தான் கேரளால வேலை பார்த்தேன் அதனால இந்தளவு மலையாளம் தான். நெஞ்சறிந்ததை சொல்றதுன்னு தமிழ்ல்ல சொல்லலாம்.
சங்ககாலம் தொடங்கி இப்போது வரை நமக்கு நீண்ட கவிதை மரபு உள்ளது. இந்த மரபின் தொடர்ச்சி என்பதின் மேல் நம்பிக்கை உள்ளதா? நீங்கள் உங்களை யாரின் தொடர்ச்சியாக முன் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்?
கட்டாயமாக மரபின் தொடர்ச்சி என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. சங்கக்கவிதைகள் வாசித்திருக்கிறேன். அகப்பாடல்களில் உள்ள மனித உணர்வுகள், படிமங்கள் பிடிக்கும். சங்கப்பாடல்களில் வெளிப்படும் மொழியின் அழகிற்காகவும் அதை விரும்பிப் படிப்பேன்.
நவீனக்கவிதை பாரதியிலிருந்து ஆரம்பிப்பதாகச் சொல்வார்கள். எனக்கு பாரதி ஒரு இலக்கிய ஆளுமையாகப் பிடிக்கும். “எழுத்து தெய்வம்” என்று அவர் சொல்வதன் மேல் நம்பிக்கை உண்டு. எனக்கு நவீனக்கவிதை என்பது நகுலனிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.
நான் மிக விரைவிலேயே தீவிர இலக்கியத்திற்குள் வந்துவிட்டதால் ஏற்கனவே தீவிர இலக்கியமல்ல என மறுதலித்தக்கப்பட்ட யாவும் நான் மீண்டும் வாசித்து மறுதலிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. நகுலனுக்குப்பிறகு மனுஷ் தான் என் ஆதர்சம். அதன்பிறகு பெருந்தேவி, குமரகுருபரன், இசை. மோகனரங்கன், விக்ரமாதித்யன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோரின் சில கவிதைகள்.
சிலகவிதைகள் என நான் சொல்வது என்னை பாதித்த கவிதைகளை. உதாரணமாக விக்ரமாதித்யனின் கேன்வாஸ் சிறியது. ஆனாலும்
“எங்கு போனாலும் என் நிழல் முன்னால் விழுகிறது
எனது கூடேயே வருகிறது
நான் என்ன செய்வது
எனது நிழலை மிதித்து மிதித்து மேலேறுவேன்”
-என்றொரு கவிதை. இது எதையுமே சொல்லவில்லை. ஆனால் ஏதோ செய்யும். அப்படியான சில கவிதைகள்.
நவீன இலக்கியத்தில் சிறுகதை, நாவல் போன்ற புனைவுகளை காலகட்டம் வாரியாக பகுத்து மதிப்பிடுகிறோம். அப்படி நீங்கள் கவிதையை காலகட்டம் வாரியாக பகுத்து கவிஞர்களை மதிப்பிடுவீர்களா?
எனக்கு கவிதையில் ”காலகட்டம்” என்பதன் மேல் நம்பிக்கை இல்லை. அது ஒரு பிரச்சனையாகவும் நான் கருதவில்லை. சில கவிதைகள் காலகட்டம் சார்ந்து இருக்கலாம், சிலவை அந்த நேரத்து ஆனந்தமாக மட்டும் மிஞ்சும். பொதுவாக கவிதை ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தாலும், அந்த காலகட்டத்தைப் பற்றியே பேசினாலும் அது உள்ளார்ந்து மானுடப் பொதுமைகளைப் பேசுகிறதா? என்றே பார்ப்பேன். பசி, துக்கம், காமம், பித்து போன்ற யுனிவர்சலான உணர்ச்சிகள் சார்ந்த கவிதைகள் மேல் அதிக ஈர்ப்பு உண்டு. அவற்றில் என் ரசனை சார்ந்து உவப்பான கவிதைகள், கவிஞர்கள் இருக்கிறார்கள்.
ஆனாலும் பல வகை பேசுபொருள், வடிவ முயற்சிகளில் கவிதை முயற்சித்துள்ளார்கள் தானே. உதாரணமாக வசனக் கவிதைகள், ஹைக்கூ, நீள் கவிதைகள், பேசுபொருள் சார்ந்து பெண்ணியம், உடலரசியல், ஈழம், முற்போக்கு, தலித்தியம் இப்படி. வரலாறு சார்ந்து பகுப்பாய்வு செய்வதன் மேல் நம்பிக்கை உள்ளதா?
அப்படி பிரிவு செய்வதைப்பற்றி எனக்கு அபிப்ராயம் இல்லை. உதாரணமாக பால் சார்ந்து ஒருவேளை பகுத்தால் எனக்கு பெருந்தேவி தவிர பெண்கவிஞர்களே இல்லை என்பேன். ஆனால் அவரைப் பெண்ணாக நான் பார்ப்பதே இல்லை. ஆண் கவிஞர்கள் என நான் சொல்வதே நான்கைந்து பேரைத்தானே. காலகட்டம் சார்ந்து, பேசுபொருள் சார்ந்து எழுதப்படும் கவிதையாகாத கவிதைகள் வளர்ந்து நின்று போகும் கவிதைகளாகவே பார்க்கிறேன்.
அதற்கு இணையாக நான் மறுக்கும் நபர்களை முழுமையாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொருவரையும் ஏன் மறுக்கிறேன் என என்னால் சொல்ல முடியும். தேவதச்சனை எதாவது சொன்னால் மனுஷ் விட்டே கொடுக்கமாட்டார். அவர் பல வகைகளில் தேவதச்சனை சிலாகித்துக் கொண்டே இருப்பவர். ஜெயமோகன் தேவதேவனைப் பற்றி அப்படி சிலாகித்து எழுதுவதைப் பார்த்திருக்கிறேன்.
நான் யாரையும் வாசிக்காமல் மறுதலிப்பதே இல்லை. சிலர் ஏன் கவிதையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்று தோன்றும். கடியாக இருக்கும். சிலர் ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப எழுதுவார்கள். எரிச்சலாக இருக்கும். சிலர் கவிதை எழுதுகிறார்களா? உரை நடை எழுதுகிறார்களா? என்றே சந்தேகமாக இருக்கும். உரைநடையையும் கவிதையையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள்.
சில கவிஞர்களுக்கு கவிதையைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால் கவிதை எழுதத் தெரியாது. சிலர் மிகவும் பிரக்ஞையோடு கவிதையில் எதையாவது நிகழ்த்திவிட வேண்டும் என்று பிரயத்தனப்படுவார்கள். கவிதைக்கு பொதுவாக ஒரு முட்டாள்தனம் உண்டு. கவிதைக்கு என்றில்லை. எழுத்துக்கே அது உண்டு. அசோகமித்திரன், “நல்ல எழுத்து என்பது ஊசலாட்டத்துடன் இருக்க வேண்டும். நம் மனமும் அப்படித்தான். இதுவா, அதுவா என ஊசலாட்டத்தோடுதான் இருக்கும்.” என்பார்.
”படிமங்களின் உற்பத்தி அலைகள்” என ஜெயமோகன் பகடியாகச் சொல்வார். சிலரின் கவிதைகள் அப்படித்தான் படிமங்களை வலிந்து உற்பத்தி செய்யும். இப்படியெல்லாம் வலிந்து இவர்கள் கவிதை ஏன் எழுதுகிறார்கள் என்று தோன்றும். சிலர் போலிக் கவிஞர்கள். கவிதையை பணம் செய்யும் ஊடகமாக, சினிமாவுக்கான வாய்ப்பாகப் பார்ப்பவர்கள். சிலர் கருத்துவாதம் சார்ந்து எழுதி வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எனக்கு ஒவ்வாமையையே அளிக்கிறார்கள். தான் கவிஞன் என்ற மிதமிஞ்சிய கற்பனையில், கைவிடப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற பாவனை செய்து கொண்டு, எல்லாவற்றின் மீதும் கசப்பானவர்களாக காண்பித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி பலவகை மன நோயாளிகள் கவிஞர்களில் உண்டு.
ஞாபகத்தில் தங்காத கவிதைகளை எழுதித்தள்ளுகிறார்கள். ஒரு வரி கூடத் தங்காது. அப்படியான அற்புதத்தை நிகழ்த்தாத கவிஞர்களை நான் கவிஞர்களாகப் பார்ப்பதில்லை.
நீங்கள் மனுஷ்யபுத்திரனைப் பற்றி சொல்லும்போது “அவர் எழுதிய பத்தாயிரம் கவிதைகளில் யாரும் எழுத இயலாத ஐந்தாயிரம் கவிதைகளையாவது எழுதியிருப்பார்” என்றீர்கள். அப்படியானால் அந்த யாருமே எழுத முடியாதது என்பது ”காலமின்மை” என்ற கூறு எனலாமா?
ம்… இப்படிச்சொல்லலாம். “மறுக்கமுடியாத” என்று சொல்லல்லாம். அதாவது ஒரு கவிதை வெவ்வேறு காரணங்களுக்காக நமக்கு பிடிக்காமல் போகலாம் அல்லது பிடிக்கலாம். ஆனால் அதை “மறுக்கமுடியாது”. மறுக்கவே முடியாத உணர்வை ஒருவன் கவிதையில் சொல்கிறான் என்றால் அது தான் கவிதை.
பெருந்தேவியின் ஒரு கவிதை வரி உண்டு. “உன் கண்களின் அணைக்க முடியாத தீக்குள் யாரால் இறங்கிப்பார்க்க முடிந்தது”. இந்தக்கவிதை தரும் சித்திரம் பெரியது. “கவிதை என்பது எல்லா பக்கமும் திறந்து கிடக்கும் ஒரு கோட்டை மாதிரி. ஒரு கவிதையை அப்படித்தான் எழுத வேண்டும், அணுகவேண்டும்.” என மனுஷ் சொல்வார். எல்லா பக்கங்களும் திறந்து கிடக்கும் போது தான் அதன் சாத்தியங்கள் அதிகம். வாசிப்பின் எல்லைகள் அதிகமாகும். பத்து ரூபா வாட்டர்கேன் போல ஒரு கவிதை இருந்தால் பத்து நிமிடத்தில் குடித்து முடித்துவிடலாம். அது ஒன்றும் பெரிதாக இல்லை என்ற உணர்வைத்தரும். எல்லா பக்கமும் திறந்து கிடக்கும் கோட்டை என்பது பெரிய சித்திரம் இல்ல.
மறுக்கமுடியாத ஒன்று தான் கவிதை. நீங்கள் அனுபவப்படாமல் இருக்கலாம். ஆனால் மறுக்க முடியாது. உதாரணமாக “நிழலை மிதித்து” என்ற விக்ரமாதித்யன் கவிதை யாருக்கு வேண்டுமானாலும் புரியும். ஏதாவது ஒருவகையில் வாசகனுடன் அது பேசமுடியும். திருநெல்வேலியிலிருக்கும் இன்ன சாதியைச் சேர்ந்த இன்னாருடைய கவிதை இல்லை அது. இங்கு அடையாளம் இல்லாமல் ஆகிறது.
மனுஷின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது,
”சாலையில் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான்
திடீரென அண்ணார்ந்து பார்க்கிறான்
அப்பார்ட்மெண்ட் மாடியில்
யாருடைய அந்தரங்கத் துணிகளோ காய்கின்றன
ஒரு கணம் தலையை நிமிர்த்தி பார்த்துவிட்டு
தலைகுனிந்தபடி நடந்து போகிறான்”
இதில் ஒன்றுமில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடிகிறது. மறுக்க முடியாது. சங்கப்பாடலில் குறுந்தொகையில் ஒரு பாடல் உண்டு. ஆயிரம் பசுமாடுகளுக்கு நடுவில் ஒரு காளை ஒன்று நடந்துவரும் மணிச்சத்தம் பற்றி தலைவி சொல்லும் ஒரு வரி உள்ளது. இதையும் புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ள ”மட்டும்” தான் முடிகிறது. அதனுடன் சண்டை போட்டுக் கொள்ள நமக்கு ஒன்றுமே இல்லை.
மறுக்கும் ஒரு வரி வரும்பொழுதே அது கலை என்பதிலிருந்து கீழே இறங்கிவிடுகிறது. ”நல்ல கவிதை” என்பதற்கு முன் நமக்கு கருத்துக்கள் இருப்பதில்லை. உதாரணமாக ஒரு இலையைப் பார்த்து இலையே இல்லை என்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதைப்போல ஒருவன் நல்ல கவிதை முன் மோதுவதாக இருக்கும்.
ஒரு கவிதை ஏன் நல்ல கவிதை இல்லை என்பதற்கு முன் அதை மறுப்பதற்கான எல்லா சாத்தியமும் அதிலேயே உள்ளது. மறுக்க சாத்தியமே இல்லாதது தான் கவிதை.
பெருந்தேவியின் சரக்கொன்றை கவிதை ஒன்றுண்டு.
“ஒருவனுக்குப் பின்னால் ஏன் ஒருத்தி
தன்மேல் தானே தீப்பந்தம் சுமந்து
நடந்து போக வேண்டும்?
ஒருவனுக்காக ஏன் ஒருத்தி
தன்னையே அரிந்து உப்பிட்டுத்
தின்னத் தரவேண்டும்?”
இதில் பெண்ணுக்கு பதில் ஆண் எனப் போடலாம். மூன்றாம் பாலினத்தவர் என்று போடலாம். அன்பில்/காதலில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் அதில் பொருத்தலாம். கவிதை மாறப்போவதில்லை. மறுக்க முடியாது. நான் சொல்லும் மறுக்க முடியாதது அது தான்.
கார்ல் மார்க்ஸ் கணபதியிடம் “எழுத்து என்றால் என்ன” என்று கேட்டிருக்கிறேன். “எது கணக்கீடுகளில்லாமல் அப்பட்டமாக இருக்கிறதோ அது தான் எழுத்து” என்றார். ”எது கணக்கீடு” என்று கேட்டபோது, “என் அறிவைப்பார் என்பதும், எதையாவது மறைத்துக் கொள்வதும்” என்றார். எனக்கு கவிதை என்பது அப்படி அப்பட்டமானதுதான். சாட்டையால் அடித்தவுடன் கத்த வேண்டும். அடித்தவுடனே கத்த வேண்டும் என்பது நல்லா இருக்கு இல்ல. (சிரிப்பு…) அதுதான் கவிதை. இதெல்லாம் என் நம்பிக்கை. வேறு ஒன்றாகக் கூட இருக்கலாம்.
”இது என் நம்பிக்கை” என்ற இறுதி வரி தன்னடக்கத்தொனியை அளிக்கிறது. அறிவுஜீவிகள் அப்படிச் சொல்லக்கூடாது என்பார்கள்.
முழு உண்மை என்று ஒன்றில்லை தானே. மனுஷ் அடிக்கடி சொல்லும் ஒரு வரி உண்டு, “எல்லாவற்றுக்கும் மறுபாதி உண்மை என ஒன்று உள்ளது” என்று. ஒரு மனிதனை எத்தனை முழுவதுமாக திறந்து காண்பித்தாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. வாழ்க்கையின் ஏதோவொரு உண்மையைத் தொடுகிறார்கள் அவ்வளவுதான். அறிவுஜீவி என்று சொல்லிக் கொள்பவர்களிடமெல்லாம் நான் சண்டை தான் வளர்த்திருக்கிறேன். தத்துவாதிகளிடமும், அறிவுஜீவிகளிடமும் எல்லாவற்றையும் ஆராயும் தன்மை உண்டு. கவிதைக்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் அது தான். தத்துவவாதி எல்லாவற்றையும் ஆராயவிரும்புவான். எழுதுகிற ஆள் அதைப் புரிந்து கொள்ள விரும்புவான், அனுபவப்பட விரும்புவான்.
அப்ப கவிஞன்?
பாவம் கவிஞன். அவனையும் எழுதுற ஆள் கூட சேர்த்துக்கங்க. (உரத்த சிரிப்பு…) ஆமா அவனும் எழுத்தாளன் தான். ஆனா கொஞ்சம் அவர விட உணர்வெழுச்சி அதிகமா இருப்பாப்டி. சமீபத்தில் ஜெயமோகன் மனுஷ் பற்றி ஒரு கட்டுரையில் “அவர் கவிஞர். உணர்ச்சிவசப்படுவார். அது அவரோட இயல்புதான்” என எழுதியிருந்தார். கவிஞன் கொஞ்சம் எழுத்தாளனைவிட அதிகமா உணர்ச்சிவசப்படுவான்.
உங்களின் இரண்டாவது தொகுப்பு “பாதி நன்மைகள்” மற்றும் விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது 2023-க்காகவும் வாழ்த்துக்கள் சதீஷ்.
நன்றிங்க கா. சியர்ஸ்.
*
(அவரின் கவிதைகள் சார்ந்த கேள்விகள் எல்லாவற்றுக்குமே அவரிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது. “யாராவது என் கவிதைகளைப் படித்துவிட்டு அதைப்பற்றி உரையாடும் போது கூச்சமாக இருக்கும். என்வரையில் அது அந்த தருணத்தின் உணர்வு நிலைதான். அதற்கு அப்பால் அது வாசிப்பவரின் வாசிப்புப் பார்வையாகிவிடுகிறது. மனுஷ்க்கு என்னுடைய சில கவிதைகள் தான் பிடிக்கும். ஜெயமோகன் சில கவிதைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை கேட்டுக் கொள்வேன்.” என்றார். மூன்று நாட்களாக அமைந்த இந்த உரையாடல் இனிய அனுபவமாக அமைந்தது.)
-ரம்யா