காவியமுகாம், கடிதம்

அன்புள்ள ஜெ,

இலக்கிய வாசிப்பும் ரசனையும் எந்தளவு அந்தரங்கமானது என்பது உண்மையோ அதேயளவு கூட்டு வாசிப்பும் அது சார்ந்த விவாதமும் அவசியமானது என்பதை இந்த மூன்று நாட்களில் கண்டு கொண்டேன்.

முகாம் இனிதாக பெரியாழ்வார் பாடல்களுடன் தொடங்கியது. ஜா ராஜகோபாலன் சரியாக பாடல்களை தேர்ந்தெடுத்திருந்தார். முதல் பாடலில் கண்ணன் பிறந்தது சார்பான ஆயர்களின் மகிழ்ச்சி குறித்து ‘அறிவு அழிந்து ஆடுவார்’ என்று பெரியாழ்வார் சொல்லியிருக்கிறார். அது குறித்த விளக்கமும் விவாதமும் நன்றாக இருந்தது. அது போல குழந்தை கண்ணனின் சிறு வெண்பற்களின் நுனிகள் அந்தியில் பிறை நிலாவின் இரு சிறு நுனிகள் என தோன்றுகிறது என்னும் அபார கவித்துவம் இயல்பாக மனம் மலர வைத்தது.

கடலூர் சீனு அவர்களின் நவீன கவிதை குறித்த அரங்கு தீவிரமானது. ஒரு சிறந்த கவிதைக்கான வரையறை என அவர் சொன்னது,

  1. கவித் தன்னிலை
  2. கவிதையின் செயற்களம்
  3. கவிதைக்கான மொழி – உணர்ச்சிகரமான மிழற்றலுக்கும் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் மந்திரத்திற்கும் இடையில் ஊடாடி, இரண்டும் இணையும் ஒரு தருணத்தில் நமக்கு கிடைப்பதே கவிதை.

4.தனக்கேயுரிய ஒரு உலகை கொண்டிருப்பது.

ச.துரையின் முகம் கவிதை வாசிப்பில் மரண அனுபவம் – உறக்கத்தில் நாம் இருக்கும் நினைவின்மை – இது குறித்த விளக்கம் சரியான ஒன்று. அது போல போகன் சங்கரின் டோவினோ வாசிப்பில் ‘மௌனத்திற்கு இருபுறமும் பிறப்பும் இறப்பும் உள்ளது, நாம் பிறவாமலோ இறவாமலோ இருந்திருக்கலாம்’ என்று சீனு சொன்னது அதிர வைத்தது. கவிதையின் ‘பற்றிக்’ கொள்ளும் தன்மையின் முதற்சுவை கிடைத்தது. சதீஷ்குமார் சீனிவாசனின் அணைக்கும் தீ, ஆனந் குமாரின் வேறு மார்க்கம் உண்டா கவிதைகளும் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. துரையின் கவிதைகளில் உள்ள ஒரு போதாமை குறித்து நீங்கள் சொன்னதை மறந்து விட்டேன்.

சிறுகதை அரங்கில் பாரி தேர்ந்தெடுத்த ஆஷாபூர்ணா தேவியின் ‘தோற்கடிக்கப்பட்டவர்கள்’ மற்றும் தாமரைக்கண்ணன் தேர்ந்தெடுத்த நாஞ்சில் நாடனின் அம்மை பார்த்திருந்தாள் சிறுகதையும் அற்புதமானது. அதிலும் தாமரைக்கண்ணன் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனின் அடியும் முடியும் தேடும் காட்சியில் அகழ்ந்து செல்லும் விஷ்ணு தேடுவது பசியின் நிறைவு அதே போல் பறந்து செல்லும் பிரம்மா தேடுவது ருசிக்கான நிறைவு என்று அவர் சொன்னது அபாரமான உதாரணம். மேற்கொண்டு பழங்கால குடிப்பெருமை நமது தற்போதைய சமூகத்தில் பொருளிழந்து போனதும், ஆனால் அதை கைவிடவும் இயலாமல் நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாமலும் தவிக்கும் சார்பான குடும்பங்களின் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டது. நீங்கள் சொன்ன பசியில் துடித்து இறந்தாலும் குடிப்பெருமையை விடாத குடும்பங்களின் கதைகள் திகைக்க வைத்தன.

சிறில் அலெக்ஸ் விவிலிய அறிமுக வகுப்பும் நன்றாக இருந்தது. விவிலிய இறையியலில் order is masculine but chaos is feminine என்னும் கருத்து புதியதாக இருந்தது.

அழகிய மணவாளன் அவர்களின் கதகளி வகுப்பு நிறைவானதாக இருந்தது. கதகளி குறித்த ஒரு விரிவான, முழுமையான அறிமுகத்தை சிறிதும் குழப்பமின்றி அளித்தார்.

மறுநாள் நவீன கவிதை குறித்த அரங்கில் போகன் சங்கர் தனது இயல்பான நகைச்சுவையுடன் ஆரம்பித்து ஒரு தீவிரமான உரையை நிகழ்த்தினார். கவிஞனை ரிஷி எனவும் குரங்கு எனவும் சொல்லலாம். இங்கு உலகெங்கும் கவிஞர்கள் குரங்குகளாக நடந்து கொள்கிறார்கள் என்பது அவரது முடிபு. இன்றைய தமிழ்க் கவிதைகளில் கொந்தளிப்பு களை மட்டுமே காண முடிகிறது என்றும் அதில் இப்போது இல்லாதது solace என்றும் கூறினார். இன்றைய கவிதை என்பது வாசகனுக்கு அமைதியையும் ஆறுதலையும் தரவல்லதாக இருக்க வேண்டும். ஆனால் கவிஞர்களால் அப்பால் என்பதை தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை. ஃப்ராய்டின் கூற்றான ‘நான் செல்லும் இடங்களுக்கு கவிஞர்கள் முன்பே சென்றுள்ளனர்’ என்பதையும் சொல்லி , இன்றைய கவிஞர்களை அப்படி சொல்ல முடியாது என்றவர், நல்ல கவிதை என்பது ஒரு ஓலமாக

இருந்தாலும் தன்னகத்தே அமைதியைக் கொண்டிருக்க வேண்டும் என்று முடித்தார். ஒரு வகையில் போகனின் உரை கவிஞர்களை நோக்கிய அறைகூவல் என்று தோன்றுகிறது.

அடுத்த அமர்வில் நாவலாசிரியர்களுக்கான அறைகூவலை எம்.கோபாலகிருஷ்ணன் விடுத்தார். தமிழ் நாவல்களின் வரலாற்றில் ஆரம்பித்து எவ்வாறு ஒவ்வொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டது என்று மிக விரிவாக விளக்கியவர், ஒரு சிறந்த நாவலின் தன்மையாக சொன்னது எதேச்சை. சிறந்த எழுத்தாளன் என்பவன் எதேச்சையை சரியாக கைப்பற்றுபவன் என்று சொல்லியவர், 2010க்கு பிறகு சாதனை என்று சொல்லத்தக்க நாவல் என்றும் கூறி முடித்தார். சு.வேணுகோபால் அவர்களும் ஐந்து நாவல்களைப் பற்றி விரிவாக பேசினார்.

முகாம் நிறைவடைந்த பிறகு நடைபெற்ற பொது கேள்வி பதில் நிகழ்வில் தற்கால இளைஞர்கள் சந்திக்கும் மன அழுத்தம் குறித்த கேள்விக்கு நீங்களும் கவிஞர் தேவதேவனும் சொல்லியது நேரடியாகவே மனதை அசைத்து விட்டது. காந்தியவாதி ஜெகந்நாதன் அவர்கள் காந்தியம் தோற்றதா என்னும் உங்களின் சீண்டல் கேள்விக்கு பதிலாக, விடுதலைக்கு முன்பு லக்னெள காங்கிரஸ் காரியாலயம் போகும் வழியில் பசியில் உயிர் துறந்த ஏழைகளின் பிணத்தை கடந்து சென்றதையும், பிறகு ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் ஒரிஸாவில் மூன்று ஆதிவாசிகள் பஞ்சத்தில் இறந்ததற்காக மாநில அரசையே ராஜீவ் காந்தி கலைத்ததையும் சொல்லி, இந்த தொலைவிற்கு இந்தியா வந்ததே காந்தியத்தின் வெற்றி என்று சொன்னதாக கூறினீர்கள். தேவதேவன், வரண்ட தூத்துக்குடியில் இருந்து கொண்டு எவ்வாறு நுண்மையான பசுமையை கவிதையில் கொண்டு வருகிறார் என்னும் உங்களின் கேள்விக்கு, தான் அந்த வேறுபாட்டிற்கு அப்பால் ஒருமையையே பார்ப்பதாக சொன்னார். இயல்பாக அவர் அதைச் சொன்னாலும் நான் அதிர்ந்து விட்டேன். முந்தைய நாள் கவிஞர்கள் ரிஷியாக வேண்டும் என்று போகன் சங்கர் சொன்னதற்கு கண்ணெதிரே ஒருவரை கண்டேன். ஞானம் என்பது நூல்களில் இல்லை.

பெரியாழ்வாரில் தொடங்கிய முகாம் தேவதேவன் அவர்களது விடையுடன் நிறைவுற்றது.

நன்றிகள் ஜெ.

சங்கரன் இ.ஆர்

முந்தைய கட்டுரைவரலாறு, கடிதங்கள்
அடுத்த கட்டுரைசேதாரம்பட்டு சமணப்பள்ளி