ஏப்ரல் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்ற ஆலயக்கலைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, நானும் என் நண்பர் பா.கா.முருகேசனும் காலை 6 மணிக்குக் கோவையிலிருந்து காரில் கிளம்பினோம். ஈரோட்டில் உள்ள வழக்கறிஞர் செந்திலின் பண்ணை வீட்டில் இரண்டு சந்திப்புகளுக்கு நான் முன்னரே வந்திருக்கிறேன். அந்தியூர் மணி தெளிவாக வழி அனுப்பியிருந்தார். எந்தக் குழப்பமும் இல்லாமல் 9.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். காலை உணவிற்குப் பின் 10 மணிக்குப் புத்தர், வாக்தேவி சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கியபின்,
அஜி, ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களைப் பாடச் சொல்ல, அவர் சரஸ்வதி துதிப்பாடலுடன் வகுப்பைத் தொடங்கினார்.
ஆலயம் என்பது என்ன, எதற்காக, ஆலயம் அமைக்க என்னென்ன விதிகள் உள்ளன எனச் சொல்லத்தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே இந்த வகுப்பின் முக்கியத்துவத்தை உணர வைத்துவிட்டார். எத்தனையோ தடவை கோயிலுக்குச் சென்றிருந்தாலும் அதன் அமைப்பை கோபுரம், பலிபீடம், துவஜஸ்தம்பம், முகமண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபம், அந்தராளம், கருவறை, விமானம் என்றெல்லாம் முழுவதுமாக கவனிக்கத் தெரிந்ததில்லை. ஆசிரியர் ஜெயக்குமார் சிறு பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது போல எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும், நிதானமாகவும் வகுப்பெடுத்தார். ஆலய அமைப்புகளையும், சிற்பங்களையும் விளக்க அதன் வரலாறு, புராணங்கள், தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், சிலப்பதிகாரம் எனத் தொடங்கி இன்றைய விஷ்ணுபுரம், வெண்முரசு என எல்லாவற்றையும் துணைக்கெடுத்துக் கொண்டார். பல புத்தகங்கள், நிறையத் தகவல்கள். அவர் சொல்லச்சொல்ல அவரின் பரந்துபட்ட அறிவையும், தேடலையும் வியந்தபடி நாங்கள் சுமார் 40 பேர் அங்கே இருந்தோம்.
வந்திருந்தவர்கள் அனைவரும் நல்ல ஆர்வத்துடன் இருந்தனர். சாம்ராஜ், அருண்மொழி நங்கை இருவரும் முதல் வரிசையிலிருந்து உற்சாகத்துடன் பங்கெடுத்தனர். இந்த இடத்தில் என் நண்பர் பா.கா.முருகேசன் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். தச்சுக்கலையை குலத்தொழிலாகக் கொண்டவர். இலக்கிய வாசகர் அல்ல. அவரை அறம் வாசிக்க வைக்க என்னால் முடியவில்லை. ஒருநாள் உங்களின் ‘கானகம்’ வீட்டைப் பற்றிய கட்டுரையைப் படித்து ஊக்கம் பெற்று, சில ஆராய்ச்சிகள் செய்து, தன் வீட்டை லாரி பேக்கர் முறையில் கட்டியிருக்கிறார்.
குடவாயில் பாலசுப்ரமணியனின் ‘தமிழக கோபுரக்கலை மரபு’ என்ற நூலைப் படித்தபிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேர் கட்டுமானம் தொடர்பாகத் தேடி வருகிறார். ஆலயக்கலைப் பயிற்சி வகுப்பிற்கு நான் அவரை அழைத்தபோது சற்று அவநம்பிக்கையுடனே வந்த அவர் இப்போது ஆசிரியர் ஜெயக்குமார் பற்றி விதந்தோதிக்கொண்டே இருக்கிறார்.
ஆசிரியர் ஜேகே பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, அதன் ஆலயங்கள், சிற்பங்கள், புத்தகங்கள், ஆவணப்படங்கள், பழந்தமிழ் பாடல்கள், கட்டுரை, கவிதை எனச்சொல்லிச் செல்கையில், மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, தஞ்சை பெரிய கோயில் சந்தியா நடனம் எனத் தேடலின் வழி அவர் அடைந்த தரிசனங்களை (என்றுமுள காலம்) எங்களுடன் பகிர்ந்து கொண்டார். எழுத்தாளர் சாம்ராஜ் அதை உள்வாங்கி இருவேறு தருணங்களில் எங்களிடம் மெய் சிலிர்த்தார். ஆசிரியர் பேசும்போது ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் அவரின் ஆசிரியர் நாகசாமியை குறிப்பிடாமல் இருப்பதில்லை, ஏதோ ஒரு நிகழ்ச்சி, ஏதோ ஒரு உரையாடல். நீங்கள் நித்ய சைதன்ய யதி அல்லது சுந்தர ராமசாமியை குறிப்பிடுவதைப் போல பெருமிதத்துடன், காதலுடன்.
வெள்ளி, சனி இரவுகளை சாம்ராஜ் தன் உரையாடலால் சுவாரஸ்யமாக்கினார். அவருக்கு அமைந்த தலைப்புகள், ‘மதுரை மனிதர்களின் குணாதியசியங்கள்’, ‘மலையாள சினிமாவில் பகடி’. தொடர்ந்து நகைச்சுவைகளாக சொல்லிக்கொண்டே சென்றார். ஈ. கே. நாயனார், ஈ.எம்.எஸ், கமல், சிவாஜி, இன்னொசென்ட், மம்முட்டி, மோகன்லால், ஜெகதி, அவரின் சில அனுபவங்கள் என. தொடர் சிரிப்பு. ஞாயிறு மதியத்துடன் வகுப்பு முடிந்து, சாம்ராஜுடன், அன்புராஜின் ஐந்திணை ஆர்கானிக் கடைக்கு வந்து அங்கிருந்து, கோவைக்குக் கிளம்பினோம். சாம்ராஜ், பா.கா. முருகேசனை பாரம்பரிய தச்சுகலைத் தொடர்பாக எழுதும்படி உற்சாகப்படுத்தினார்.
ஆலய, சிற்பக் கட்டுமானத்தின் பல்வேறு அங்கங்களின் பெயர்களை நினைவில் நிறுத்திக் கொள்வது கடினம். தொடர் நேரடிப் பயிற்சியின் வழி வர வேண்டியது அது. ஆனாலும் வகுப்பிற்கு வந்த யாருக்கும் இனிமேல் வெறுமனே ஒரு கோயிலுக்குள் சென்று தொழுது வரவோ, சிற்பங்களைக் கடந்து செல்லவோ முடியாது. கற்றலின் இனிமை நிறைந்த மூன்று நாட்கள்.
நன்றி ஜெ.
ரதீர்ஷ் வேணுகோபால்