சித்ரரதன் கதை- நிர்மல்

காண்டீபம் மின்னூல் வாங்க

காண்டீபம் வாங்க


வில்லின் கதை

காண்டீபத்தில் மாலினி தேவி மனதளவில் பயந்தொடுங்கிய சிறுவனான சுஜயனுக்கு முதலில் சொல்லும் கதை சித்ரரதன் கதை.  கதையில் சுஜயன் காண்பது என்ன?  கதையில் கந்தர்வர்கள் முக்கிய பாத்திரங்கள்.  கந்தர்வர்களின் தோற்றம், பண்புகள் பற்றி விவரணைகள் வருகின்றது

சித்ரரதன் காஷ்யப முனிவருக்கும், முனி என்ற அன்னைக்கும் பிறந்த கந்தர்வன். காஷ்யப முனிவர் தன் மைந்தன் மீது கொண்ட அன்பால், பரிவால் வாடா மலரில் கட்டப்பட்ட அழகிய ரதம் என்பதை பரிசாக அளித்தார்.  அந்த மலர் தேர் பாலகனான சித்ரரதன் உடன் சேர்ந்து வளர்ந்தது. ஒரு நாள் சித்ரரதன் விண்ணுலகில் தன் மனைவி கும்பீநசியுடன் ரதத்தில் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு வாடிய மலர் கிடந்தது. மனைவி தேரை மலர் மேல் தேர் ஏற்றாமல் தேரை ஒதுக்க சொன்னதையும் கேளாமல்  “வாடிய மலருக்காக என் தேர் வழிமாறாது” என சொல்லி தேரின் மீது ரதமேற்றி சென்றான்.

அந்த மலருக்குள் பீதாம்பரன் என்னும் தேவன் தன் தேவியுடன் வண்டு உருவில் நுழைந்து இருந்தான். சித்ரரதனின் தேரை மறித்து கோபத்துடன் எழுந்து உண்ணுதல்,புணர்தல் , ஊழ்கத்தில் அமர்தல் என்ற மூன்று இன்பங்களையும் சிதைக்கும் உரிமை விண்ணவருக்கோ, மண்ணவருக்கோ இல்லை என சொல்லி சித்ரதன் செய்த அவன் இருந்த மலரின் மேல் ரதமேற்றிய பிழைக்கு பதில் கேட்கின்றான்.

சித்ரரதனுக்கும், பீதாம்பரனுக்கும் நடக்கும் உரையாடல் மிக முக்கியமான கேள்வி ஓன்றையும், அதன் பதிலையும் தொடர்கின்றது. மானுடம் காலம் காலமாக நிகழ்த்தும் தர்க்க விவாதங்களில் இதும் ஒன்று. சிற்றுயிரின் இடம் என்ன என்ற கேள்வி.

“சித்ரரதன்தேவனே, விண்ணவருக்கானாலும் மண்ணில் வாழும் மானுடர்க்கானாலும் சிற்றுயிர்க்கானாலும் ஆன்மா ஒன்றே. ஊழ்நெறியும் ஒன்றே. வாழ்வின் இன்பங்களும் துன்பங்களும் நிகரானவையே. ஆயினும் யானைகள் செல்லும்போது எறும்புக்கூட்டங்கள் அழிகின்றன. பெருமீன் வாய்திறந்து ஒரு இமைப்புக்கு ஆயிரம் சிறு மீன்களை உண்கிறது. வேட்டையாடி விலங்கைக் கொன்று உண்பவன் அதன் உடலில் உள்ள பல்லாயிரம் சிற்றுயிர்களையும் எண்ணாமல் கொல்கிறான். ஆன்மா அமைந்திருக்கும் உடலே இப்புடவி நாடகத்தில் அதன் இடத்தை முடிவெடுக்கிறது. சிற்றுயிரென்பது உடலால் சிற்றுயிரே. இன்று என் முன் பேருருவம் கொண்டு எழுந்து நிற்கும் நீ அம்மலருக்குள் வண்டென அமர்ந்திருக்கும்போது சிற்றுயிராக இருந்தாய். என் செயலை அவ்வடிவில் இருந்தபடியே நீ மதிப்பிடவேண்டும்என்றான்.”

இதை எதிர்க் கொள்ளும் பீதாம்பரன் “கந்தர்வன் எனப் பிறந்தவன் நீ. இவ்வுடல் மட்டும் காணும் கண் கொண்டிருந்தாய் என்றால் இங்கு நீ வாழ்வதற்கான தகுதி என்ன?”  என கேட்கின்றான். பீதாம்பரனின் இந்த கேள்வி அட்டமாசித்திகளையும் கொண்டிருக்கும் கந்தர்வனை பார்த்து எழுகின்றது. கந்தர்வனாக இருத்தல் வெறும் அதன் சக்திகளை நுகர்ந்து மூழ்க மட்டுமல்ல, கந்தர்வனாக இருத்தல் அதன் சக்திகளை பொறுப்புடன் கையாளுதலும் கூட என சொல்கின்றான்.  இது நம் நூற்றாண்டின் மிக பெரிய கேள்வி. பொறுப்பு தேவையில்லை, உரிமை கொடு என கோரி உரிமையை நுகர்வாக மாற்றும் சூழல். இக்காலத்திலும் சித்ரரதனிடம் பீதாம்பரன் கேட்ட கேள்வி பொருந்தும் அல்லவா?

அந்த கேள்வியின் பதிலறியா சித்ரரதன் பூமியில் கங்கை கரை வனமொன்றில் பொன்வண்டாக வாழ வேண்டியதாகின்றது. அந்த கேள்விக்கு விடை தெரியும் வரை பூவுலக வாழ்வு என அவனது தந்தையின் குரல் வழி காட்டுகின்றது.  அறியாமை வீழ்ச்சியாகின்றது. அறிதலின் வழி மீட்சி. என்றைக்கும் அதுதானே. தன்னையறிதல் மீட்சிதானே.

மீட்சிக்காக காத்திருக்கும் காலமொன்றில் ஒரு சித்திரை மாத முழு நிலவு வருகின்றது. அந்த இரவில் ஒரு பகுதி கந்தர்வ காலம். அக்காலத்தில் மானுடர்கள் கந்தவர்களுக்கு உரிய வனங்களின் அருகே செல்லக் கூடாது என்பது நியதி.

பொறாமையிலும், ஆற்றாமையிலும், வஞ்சத்திலும் எரியும்  சகுனி,கர்ண, துரியோதன, துச்சாதனாதிகளால் அரக்கு மாளிகையில் தூங்கிய பாண்டவர்களை, முதியவள் குந்தியை கொலை செய்ய முயன்றார்கள் அல்லவா? குந்திக்கு துரியோதனாதிகள் மகன் போல.  தாயை தீயூட்டும் பிள்ளைகள்.

அங்கிருந்து தப்பி பாண்டவர்களும், குந்தியும் வனங்களின் கல்லிலும், முள்ளிலும் நடந்து செல்கின்றார்கள். வனத்தின் கடுமையில் நடை தடுமாறும் முதியவளான குந்தியை தோளில் தூக்கி செல்கின்றான். நள்ளிரவு ஆனாலும் நடக்க வேண்டிய சூழல், பீமார்ஜுனர்களே நடப்பது கடினம் என சொல்லும் வனம், வஞ்சகர்களால் உருவான மனதின் துயரம் என கதை நடக்கும் சூழல் சொல்லப்படுகின்றது. உள்ளத்திலும், உடலிலும் கல்லும்,முள்ளும் குத்தும் நிலை.

ஸ்தூலமாக இல்லாமல் சூட்சுமாக இருக்கும் இயக்கர்களும், பாதாள நாகங்களும் சூது செய்கின்றார்கள். பாண்டவர்களை தன் வனத்தில் அனுமதி இல்லாது வருபவர்களை கொன்று விடும் சித்ரரதன் வாழும் கங்கா வனமான சைத்ரிகத்தின் பக்கம் திருப்பி விடுகின்றார்கள்.

கஷ்ட நஷ்டங்களில் ஒருவருக்கொருவர் மாறுப்பட்ட கருத்திருந்தாலும் அன்பாலும், பாசத்தாலும் குடும்பம் தாங்கி பிடித்து ஒருவருகொருவர் சாய்ந்து கொள்ளும் , ஓய்வு உணரும் பெருமர நிழலாக மாறுவதை பாண்டவர் உரையாடலில், நடத்தையில் காணலாம்.

தைத்ரியத்தின் நுழைவில் கந்தர்வர்களின் வீரன் ஆந்தை வடிவில் அது கந்தர்வர் காடு, நுழைய அனுமதியில்லை என சொன்னதும், வீண் வம்பும், வாதமும் இன்றி திரும்பி செல்ல பாண்டவர் ஒப்புக் கொள்கின்றனர். பாண்டவர்களின் கவனிக்கதக்க இயல்புகளில்  காய்ப்பும், வீண் வம்பும் இல்லாமல் வாழ பழகியவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 அர்ஜுனன்எவர் எல்லையையும் மீற நான் விழையவில்லை. நாங்கள் இவ்வழிச்செல்லவே எண்ணினோம்என்றான்.

திரும்பிவிடுவோம்என்று தருமன் அர்ஜுனன் தோள்களைப் பற்றினான். “சித்ரரதனிடம் நாங்கள் அறியாது எல்லை கடந்ததை அறிவித்துவிடுக! எங்களுடன் முதிய அன்னை இருக்கிறாள். எந்தத் தீங்கும் விளையலாகாது.” பீமன்ஆம், விலகிச்செல்கிறோம். கந்தர்வர் மகிழ்ந்திருக்கட்டும்என்றான்.

தர்ம, பீம, அர்ஜுனர்கள் பதிலை பாருங்கள், நள்ளிரவு நேரத்தில் கடும் களைப்பிலும், பெரும் தோள் வலிவும்,அம்பு விடும் திறமும் இருந்தாலும் வம்பை, சச்சரவை தவிர்ப்பதை காணலாம்.

ஆனால் ஆந்தை வடிவ வீரனுக்கு பொறுமையில்லை, சச்சரவை தவிர்க்கும் மனமில்லை. அவன் என்ன சொன்னான் தெரியுமா?

உங்கள் பணிவு உங்களைக் காத்தது. மானுடரே, தலைதாழ்த்தி இந்த மண்தொட்டு வணங்கி எல்லை கடந்தமைக்கு பொறுத்தருளக் கோரி பின்முகம் காட்டாது விலகுங்கள்

பெரும் வீரர்கள் வம்பை தவிர்ப்பதை அவன் அறிய இயலவில்லை. பொறுமையை பலவீனமாக கருதுகின்றான்.

பாண்டவர் என்ன செய்தனர். அகிம்சை, பொறுமை என்பது இழிவினை பொறுத்துக் கொள்வது அல்ல. சச்சரவினை, வம்பினை திணிக்கும் தடித்தனத்தினை கண்டதும் அவர்கள் முடிவ் என்ன ஆயிற்று தெரியுமா?

அற்ப திமிருக்கு பணியாது எதிர் கொள்ளும் தைரியம் பாண்டவருக்கு உண்டென்பதால் ஆந்தை வடிவ வீரனுடனான போர் நிகழ்ந்து அவன் கொல்லப்பட்டான். அர்ஜுனன் வீர லட்சணம் வெளிப்படும் காட்சி. அவன் தானாக வம்புக்கு செல்வதில்லை, வீணர்கள் வம்புக்கு வந்தால் அகிம்சை பேசுவதும் இல்லை. வீணர்களிடம் அகிம்சை பேசி வென்று காட்டியதாக வரலாறே இல்லை

பின்னர் அர்ஜுனன் தனியாளாக சைத்திரிய வனத்துள் நுழைந்து சித்ரரதனுடன் போரிட்டு வெல்கின்றான். அந்த போர் அர்ஜுனன் வெறும் அம்பை துல்லியமாக அடிக்கும் எந்திரம் அல்ல, புத்தியும் அம்பை போல கூராக கொண்டவன்  என காட்டுகின்றது.  கந்தர்வனை அர்ஜுனன் கொல்லவில்லை, மாறாக மலரில் மயங்கும் கந்தர்வர் பலகீனம் உணர்ந்து மலரம்பால் தோற்கடிக்கின்றான். அர்ஜுனன் வீரம் என்பது கொலை என நினைக்கவோ, மாற்றாராரை அவமானப்படுத்தவோ இல்லை என்பதும், தன் மரியாதை காத்தலும், வீண் மிரட்டல் ,சவாலுக்கு எதிர் நிற்பதும் என நமக்கு புலப்படுத்துகின்றான்.

கந்தர்வனுக்கு அட்டமா சித்தி பலம், அர்ஜுனன் அதை கொண்டே அவனை வீழ்த்துகின்றான். எது பலமோ, அதுவே எல்லையாகவும் அமைகின்றது. அந்த திறம் கண்டு சித்ரதன் பணிந்து நின்றான்.

தன் தோல்வியின் காரணத்தினை கண்டு பிடிக்க முடியாமல் குழம்பி வருந்தும் சித்ரதனுக்கும் “வெல்லப்படுபவர்கள் அனைவரும் பிளவுண்டவர்களே, ஒன்றென நின்றவன் தோற்றதில்லை” என அர்ஜுனன் தெளிவுப் படுத்துவான். கதையில் இந்த வரிகள் எனக்கு முக்கியமாக பட்டது.  ஞானமும், செயலும் பிளவுறுதல் அல்லது சிந்தையும், செயலும் பிளவுறுதல் வெற்றிக்கு வெளியேதான் எடுத்துச் செல்லும்.

மாபெரும் கருணைக் கொண்ட வீரம் அர்ஜுனன் சொற்களில் வெளிப்படும் இடமாக கதையில் இவ்விடம் உள்ளது. தன் வெற்றியால் தலைக்கனம் கொள்ளாது, கந்தர்வனின் தோல்வியால் அவனிடம் தாறுமாறாக நடந்து கொள்ளாது அன்பாக பேசுவது ஒரு பெருவீரனுக்கே சாத்தியம். வீரனின் இயல்பாக அர்ஜுனன் “அறைகூவல்களை ஏற்பதும் களம் நின்று வெல்வதும் இயலாதபோது அங்கே மாய்வதும் வீரனுக்குரிய நெறிகள். வணங்குமிடத்தில் வணங்கவும் பிற இடங்களில் நிமிரவும் அவன் கடமைப்பட்டிருக்கிறான்”  என சொல்கின்றான். வணங்குமிடத்தில் வணங்க, பிற இடத்தில் நிமிருவது வீரம். யுத்தகளம் வீரனுக்கு நிச்சயம். அதிலொன்றும் தவிர்க்க இல்லை. வென்றாலும், மாய்ந்தாலும் நிமிர்ந்து கொண்டிருத்தல் வீரம்.

அர்ஜுனன் யாரென்பதையும் அறிந்த கந்தர்வன் அர்ஜுனனிடத்து யுக யுகத்துக்கு முன்பு தான் கொண்ட சிறுமலரின் மீது வண்டியேற்றி சென்ற நிகழ்வினை சொல்லி தன் சந்தேகத்தினை கேட்டான்.

அதற்கு அர்ஜுனன் உரைத்த பதில் அருமையானது. கதையில் இரு பத்திகளில் கீழ்கண்டவாறு வருகின்றது. நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் பொருத்தமான பதில்.

அர்ஜுனன்ஆம், சிற்றுயிர்களை சகடங்கள் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த இலக்கு அச்சிற்றுயிர்களின் நலனுக்காக அமைந்திருக்கவேண்டும். அனைத்துயிரும் மண்ணில் காலூன்றி அறத்தில் உயிரூன்றி இங்கு வாழ்கின்றன. அவ்வறத்தை இலக்காக்கியவன் செல்லும் பயணம் தெய்வங்கள் நிகழ்த்துவது. அவன் அதன் கருவி மட்டுமேஎன்றான்.

ஆம், எளியோர் கொல்லப்படாது போர் நிகழமுடியாது. ஆனால் அப்போர் அன்னோரன்ன எளியோர் அச்சமின்றி சிறந்து வாழ்வதற்காக அமைந்திருக்க வேண்டும் கந்தர்வரே. அறத்தின் பொருட்டு வில்லேந்துபவனுக்கு மட்டுமே கொல்லும் உரிமையுள்ளது. அறத்தின் பொருட்டன்றி சிந்தப்படும் ஒவ்வொரு துளிக் குருதியும் பழி சூழ்ந்ததே. அன்று நீர் சென்று கொண்டிருந்தது உமது உவகைக்காக மட்டுமே. ஆணவத்திற்காகவும் அகமகிழ்வுக்காகவும் இலக்குகொள்பவன் பழி சுமந்தாக வேண்டும்.””

இந்த பதிலால் விளைந்த அறிதல் மண்வீழ்ந்த கந்தர்வனுக்கு, விண் செல்ல பாதையாக திறந்தது, போகும் முன் படைக்கலங்களை ஆளும் கந்தர்வ விழிகளை தரும் சாக்ஷுஷி மந்திரம் அர்ஜுனனுக்கு தந்தான்.

அர்ஜுனனின் வீரமும், நிதானமும் தன்னால் போரில் தோற்கடிப்பட்ட சித்ரரதனை பணிந்து குருவாக ஏற்பதில் தெளிவாகும். வெண்முரசின் கிராதத்தில் அர்ஜுனன் ஈசனிடம் தோற்று நிற்கையிலும் அம்மையின் கருணையால் ஈசன் அடிபணிந்து மாணாக்காவான். தன் அறிதலை மேம்படுத்திக் கொள்ளும் திறந்த மனதோடு அர்ஜுனன் முன் வருவதை வெண்முரசில் காணலாம்.

சாக்ஷுஷி மந்திரம் வழியாக தெய்வங்களையும், தேவர்களையும், மூதாதையரையும் காணலாம், பூவுலகின் அனைத்தையும், இருள்மணி விழியால் ஒளியென எதுவும் எட்டியிராத ஏழு ஆழுலகங்களையும், பாதாள நாகங்களை, இருள் வடிவ தெய்வங்களை, பழி கொண்ட ஆன்மாக்களை அர்ஜுனனால் காண இயலும் என சித்ரரதன் அவனுக்கு சொல்கின்றான். இந்த ஆற்றலை நெருப்போடு சித்ரரதன் ஓப்பிடுகின்றான், இதனை அறிவினால், ஆசையில் இருந்து காத்துக் கொள் என அறிவுறுத்துகின்றான்.

கதை கேட்ட சுஜயன் அனைத்தையும் நோக்கும் விழி என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. இங்கு அனைத்துமா ஒரே நேரத்தில் இருக்கின்றது, ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லையா என கேட்கின்றான். அப்பொழுது மாலினி சொன்ன பதிலையும்,சுஜயனின் எதிர்வினையையும் இவ்வாறு காண்டீபம் சொல்கின்றது.

இதோ காற்று அடிக்கிறது. அதன்மேல் ஒளிபடுகிறதா என்ன? அவையிரண்டும் ஒரே இடத்தில்தானே உள்ளன?” என்று மாலினி சொன்னாள். சுஜயன் ஒருகணம் திகைத்து தன்முன் தெரிந்த காட்சியை நோக்கினான். அது அவனுக்குப் புரிந்ததும் எழுச்சி தாளாமல் எழுந்து விட்டான்.”

இந்த கதையில் சிற்றுயிரின் மதிப்பென்ன, எதன் பொருட்டு ஆயுதம் கொண்டு வீரம் எழுதல் வேண்டும்? எது மீட்சி? வெல்லப்படுவன் பிளவுபடுபவனா? நமக்கு சக்தியும், உரிமையும் மட்டுமே அவசியமா?, பொறுப்பு வேண்டாமா? என  பல கேள்விகள் உண்டு. இது நமக்கான கேள்விகளாக இருக்க வாய்ப்பு உள்ளது.

நிர்மல்

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா
அடுத்த கட்டுரைகனடாவில் பாவண்ணனும் சாம்ராஜும்