புராணமும் அதிகாரமும்

கடவுளும் ஆட்சியும்

ஜனநாயகத்தில் செங்கோல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். இது தங்களின் “வாட்ஸ் அப் வரலாறு” குறிப்பு தொடர்பானது. என்  பணி காரணமாக நான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் / பெருநகரங்களில் 35 ஆண்டுகள் வசித்துள்ளேன். என் அனுபவத்தில் தாங்கள் கூறியது போல தமிழ்நாட்டில் தற்போது உள்ள இந்த ‘வெளியில் எதிரிகள்” – “நாம் ஆக உயர்தோர்” எனும் எண்ணம் வேறெங்கும் இவ்வளவு தீவிரத்துடன் கண்டதில்லை.

UPSC சிவில் சர்வீசஸ் 2023 முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்திலிருந்து ஒருவர் கூட முதல் 100 தரப்பட்டியலில் இல்லை. மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் தரும் செய்தி. மத்திய, மாநில அரசுகளின் உயர் பதிவிக்கான தேர்வு இது. தமிழ்நாடு போன்ற கல்வி, பொருளாதரத்தில் முன்னேறியுள்ள மாநிலத்தில் இது பெரும் முரண். இதைப்பற்றி தீவிர செய்திகள் கூட இல்லை. சுமார் 40 வருடங்களுக்கு முன் இத்தேர்வில் தேர்ந்து இப்போது பணி ஓய்வு பெற்றதுவரை நான் கவனித்து வருவது அகில இந்திய தேர்வுகளில் நமது பெரும் சரிவை. தாங்கள் கூறியது போல பரந்த சமன்பட்ட நோக்கு இல்லாமல் குழுப் பெருமையில் நாள் கடத்தல் இதற்கு காரணம் என தோன்றுகிறது.

அன்புடன்

பா.ரவிச்சந்திரன்

சென்னை

*

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

செங்கோல் பற்றிய செய்திகளையும் காணொளிகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அவை அனைத்தும் அரசு வெளியிட்ட செய்திகள். அதன் உண்மைத்தன்மை குறித்து  இன்று தி இந்துவில் ஒரு கட்டுரை வந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் செங்கோல் பற்றி விளக்கமளித்து செய்தியாளர்களுக்கு வரலாற்றில் செங்கோல் பற்றிய தரவுகள் உள்ள ஆதாரங்களை அளித்துள்ளார். அதில் ஓர் ஆதாரமாக, உங்கள் தளத்திலுள்ள ‘வாட்சப் வரலாறு’ கட்டுரையும் வரலாற்று ஆதாரமாக  வந்துள்ளதாம். இந்த தலைப்பு இருந்துமா ஆதாரமாக சேர்த்து இருப்பார்கள்?. உயர்க செங்கோல் வளர்க வாட்சப்.

இப்படிக்கு

கோ.

*

அன்புள்ள நண்பர்களுக்கு,

சோழவரலாற்றுக்கும் சைவ ஆதீனங்களுக்கும் நேரடி உறவு இல்லை. சோழர்கள் அழிந்துபட்டு நீண்ட காலம் கழித்து, மிகக்கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில், சைவம் அழிந்துகொண்டிருந்த சூழலில், சைவத்தை மீட்டு நிறுவும் பொருட்டு உருவானவை சைவ ஆதீனங்கள். திருக்கைலாய பரம்பரை என்னும் சைவ மடங்களின் குருமரபு மெய்கண்டாரின் சைவசித்தாந்தத்தை சைவத்தின் மையமாக நிறுவும் பொருட்டு உருவானது.

இந்தியச் சுதந்திரத்தின்போது அவர்கள் ஒரு செங்கோலை நேருவுக்கு அளித்தனர். ஆனால் ராஜாஜி கோரிக்கொண்டபடி அவசரமாகச் செய்யப்பட்டு, தனிவிமானத்தில் டெல்லிக்கு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அழைத்துச்செல்லப்பட்டு, மௌண்ட்பாட்டனிடமிருந்து அதை நேரு பெற்றுக்கொண்டு அவ்வாறு ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது என்பது பொய். அது நேருவின் இல்லத்தில் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. ரயிலில் கொண்டுசெல்லப்பட்டது, நல்லி நகைமாளிகையால் அது செய்யப்பட்டது, ஒரு கட்டளைத் தம்புரான் அதைக்கொண்டுசென்று கொடுத்தார் என்றெல்லாம் இன்று ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டது.

ஆனால் அந்த தகவல்களை திரும்பத் திரும்ப ஆய்வாளர்கள் மறுத்தபோதிலும்கூட அதன் ஆதரவாளர்கள் அந்தச் செங்கோல் அளிக்கப்பட்டது என்ற செய்தியை, புகைப்படத்தை மட்டுமே காட்டி அது வரலாறு என ஆணித்தரமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் இதுவே எப்போதும் நிகழ்கிறது. இன்னொரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறேன். .வெ.ரா அவர்கள் வைக்கம் ஆலயநுழைவுப் போரில் கலந்துகொண்டார் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆனால் அவர் அவ்வாறு தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட தலைவர்களில் ஒருவர் மட்டுமே. அவருக்கு நிகரான தலைவர்களாக தமிழகத்தில் அன்றிருந்த கோவை அய்யாமுத்து, எம்.வி.நாயுடு போன்ற பலரும் கலந்துகொண்டார்கள். கேரளத்தில் ஏற்கனவே டி.கே.மாதவன் முதலியோரால் அப்போராட்டம் கருக்கொள்ளப்பட்டு, காந்தியால் ஒருங்கிணைக்கப்பட்டு, கேளப்பன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற காந்தியர்களால் முன்னெடுக்கப்பட்டது. நாராயணகுரு, மன்னத்து பத்மநாபன் போன்றவர்கள் களமிறங்கியபோது அது முடிவுக்கு வந்தது. 

வைக்கம்போராட்டத்தை  ஒரு சத்யாக்கிரகப் போராட்டமாக வடிவமைத்து, நடத்தி, முடித்தவர் காந்தி. அதில் வென்றதுமே அதை கேரளம் முழுக்கவும், இந்தியா எங்கிலும் காந்தி மேலும் பேருருவில் நடத்தினார். இதுதான் வரலாறு. இந்த வரலாற்றை தமிழகத்தில்வைக்கம் போராட்டத்தை ஈவெரா தொடங்கி நடத்தினார்என்றும்ஈவெரா வைக்கத்தில் உரிமைகளை வாங்கிக்கொடுத்தார்என்றும் பாடநூல்கள் உட்பட அனைத்திலும் எழுதிவைத்தனர். வைக்கம் வீரர் என அவரை முத்திரையடித்தனர். 

இதை மறுத்து வைக்கம் போராட்டத்தில் ஈவெராவின் இடம் தமிழகத்தில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அவர் பங்கெடுத்தது உண்மை ஆனால் அவர் அதன் மையம் அல்ல என்றும், அவர் அதை ’தொடங்கவில்லைநடத்தவில்லைமுடிக்கவில்லை’ என்றும் நான் 2009ல் எழுதினேன். அதற்கு வசைகளை பெற்றேன். ஈவெரா வைக்கத்திற்குச்  சென்று போராட்டத்தில் பங்கெடுத்தமைக்கான ஆதாரங்களை மட்டும் தொகுத்து அளித்து என்னைமூக்குடைபடசெய்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் செல்லவில்லை என நான் சொல்லவே இல்லை என்று மறுத்தும் பயனில்லை. ‘அவர் சென்றார் என்பதற்கு ஆதாரமுள்ளது, ஆகவே அவர்தான் அதை தொடங்கி நடத்தி வென்றார், அவரே மையம் என்பதும் உண்மைஎன கூசாமல் வாதிடுகிறார்கள். ‘ஆய்வுகளைஎழுதிக்குவிக்கிறார்கள். இதையே இப்போது இந்துத்துவர்களும் செய்கிறார்கள்.  

ஒருபகுதி உண்மை எஞ்சியவை மிகை. அரசியலியக்கங்களின் வழிமுறையே இதுதான். அதில் தர்க்கத்துக்கு இடமே இல்லை. மூர்க்கமான பிரச்சார இயந்திரங்களுடன் நம்மால் மோதவே முடியாது. இன்னும் பத்தாண்டுகளில் இந்த செங்கோல் வரலாறு அதிகாரபூர்வ செய்தியாகிவிடும். பாடநூல்களில் இடம்பெறும். பல்லாயிரம் நூல்களில் இடம்பெறும். கூலிஅறிவுஜீவிகள் ஆய்வுநூல்களை எழுதி வெளியிடுவார்கள். நடுவே என் குரல் பலவீனமாக ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கும். 

இதேபோன்ற இன்னொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புனித தாமஸ் இந்தியா வந்தார் என்ற கதை. வந்தவர் கானாயி தோமஸ் என்னும் சிரிய மிஷனைச் சார்ந்த கிறிஸ்தவர். நாற்பதாண்டுகள் வரை அப்படித்தான் இருந்தது. அதன்பின் மெல்லமெல்ல அது ஏசுவின் சீடரான தாமஸ் என மாற்ற ஆரம்பித்து வரலாறாகவே ஆக்கிவிட்டனர். இன்னும்கூட வாட்டிகன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் 2009 ல் இந்திய ஜனாதிபதியே அதை தன் உரையில் குறிப்பிட்டார், அதிகாரபூர்வ வரலாறாக ஆகிவிட்டது. நான் மிக விரிவாக அதை மறுட்து எழுதியிருக்கிறேன். ஆதாரங்களுடன். ஆனால் அது எவர் செவிக்குச் செல்ல முடியும்? 

இந்துத்துவர் செங்கோல் வரலாற்றை மிகைப்படுத்தக்கண்டு கொப்பளிக்கும் திராவிட இயக்கத்தவர் செய்யும் வரலாற்றுத்திரிபும் அச்சு அசலாக அதேதான் என்பதைச் சொல்லவந்தேன். ஒரு வரலாற்றுச் செய்தியை தங்களுக்கு உகந்தவகையில் பூதாகரப்படுத்திக்கொள்வது அந்த வழிமுறை. அது அமெரிக்கா முதல் ரஷ்யா வரை எங்கும் எப்போதும் காணக்கிடைப்பது. வில்லியம் டார்லிம்பிள் கோழிக்கோடு கடற்கரையில் அமர்ந்துகொண்டு புனித தோமா வந்த வழி அது என பேசும் காணொளியை கண்டேன். ஆம், வெள்ளைக்காரர்களும் நம்மைப்போலத்தான் என்னும் நிறைவை அடைந்தேன். 

இப்படி பல புராணங்கள். பெரும்பாலும் அனைத்தையும் ஒரே மனநிலையில் சுட்டிக்காட்டி வருகிறேன். வள்ளலாரின் பாடல் அருட்பா அல்ல என்று ஆறுமுகநாவலர் வழக்கு தொடுத்தார், வள்ளலாருக்கு ஆறுமுகநாவலர் நீதிமன்றத்தில் எழுந்து நின்று மரியாதைகொடுத்தார் என்றதனால் வெள்ளைய நீதிபதி அவ்வழக்கை தள்ளுபடி செய்தார் என்பது ஒரு புராணம். பாரதியை காந்தி சந்தித்தார் என்பது இன்னொரு புராணம். இதேபோல பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளும் மிகைப்படுத்தப்பட்ட புராணங்களே.பெரும்பாலான சாதியத் தலைவர்களின் வரலாறுகள் நாட்டார்ப்பாடல்கள் அல்லது செவிவழிப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தொன்மங்களே. போராட்டகாலத்தில் ஒரு போராட்ட உத்தியாக அந்த புராணமயமாக்கல் தேவையாகியது. இன்று இந்த புராணங்களை எல்லாம் ஓர் அறிவுஜீவி மிகைக்கதை என அறிந்திருக்கவேண்டும். அதை நான் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறேன்.

நேற்று புனித தாமஸ் புனைவு, அல்லது வைக்கம் மிகைவரலாறு ஆகியவற்றை நான் எழுதியபோது என்னை இந்துத்துவர் என்றனர் அத்தரப்பினர். இன்று என்னை இந்துத்துவர் எதிரி என வசைபாடுகின்றனர். மற்ற தரப்பினர் மேற்கோள்காட்டுகின்றனர். அதுவும் அவரவர் அரசியலுக்கேற்ற செயல்பாடுதானே ஒழிய உண்மை மீதான ஆர்வம் அல்ல. 

அதிகாரம் பலவகையான புனைவுகள் வழியாகவே கட்டப்படுகிறது. அக்காலப் புராணங்கள் போலத்தான் இக்கால வரலாறுகளும். அறிவியக்கம் சார்ந்தவர்கள் அதனுடன் போரிட முடியாது. கட்சிச்சார்பானவர்களின் கூச்சல்களை எதிர்கொள்ளவே முடியாது. ஆனால் தங்களுக்குள்ளாகவாவது அவர்கள் உண்மையை அறிந்திருக்கவேண்டும். அவர்கள் ஒரு ஆயிரம் பேராவது ஒரு சமூகத்தில் இருந்தாகவேண்டும். அவர்களிடமே நான் பேசுகிறேன். இப்படி ஒரு குரலும் இங்கிருக்கட்டும். செவியுள்ளோர் கேட்கட்டும்.

ஜெ

செங்கோல்கள், கடிதம்

செங்கோல், கடிதம்

செங்கோலும் இந்து விரோதமும் -கடிதம்

செங்கோல், கடிதம்

காஞ்சி பெரியவர் சொன்னாரா?

முந்தைய கட்டுரைகுருவிக்கரம்பை வேலு
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள் பேட்டி, வனம் இதழ்