அறிவியலால் மனிதகுலம் நன்மை அடையுமா? சுதந்திரம், உணவு, உடை, உறைவிடம், மனநிறைவு ஆகியவற்றை அடையுமா? எப்போதும் ‘ஆம்’ என்று சொல்லவே நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் அறிவியலை மறுப்பவர்கள் இனவாதம், மதவாதம் போன்ற பழமைவாதம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அறிவியல் அவர்களின் பிடியில் இருந்து நம்மை விடுவித்து நாம் இன்று அடைந்துள்ள இந்த அளவுக்கான சுதந்திரம், உலகியல் இன்பம், மனநிறைவு ஆகியவற்றை அளித்தது என்பதும் வரலாறே. அறிவியலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்காலச் சமூகத்தை ஒரு வீழ்ச்சி என பழித்து ஒதுக்கிவிட்டு, சென்ற காலகட்டங்களின் நிலப்பிரபுத்துவத்தை புகழ்பவர்கள் வரலாற்று யதார்த்தத்தை மூடத்தனமான பற்றால் பார்க்க மறுப்பவர்கள்.
அறிவியலும் நவீனத்தன்மையும் ஒன்றுடனொன்று பிணைந்தவை. அறிவியலும் பகுத்தறிவும் ஏறத்தாழ ஒன்றே என சொல்லத்தக்கவை. ஆகவே நவீன மனிதர்கள் அறிவியலை முழுமையாக ஏற்றாகவேண்டும் . சென்ற காலங்களில் நம் சமூகத்தில் அறிவுத்தளத்தில் இரண்டு தரப்புகளே இருந்தன. அறிவியலை ஏற்பவர்கள், மறுப்பவர்கள். அறிவியலை ஏற்பவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசினர், மறுப்பவர்கள் நம்பிக்கையின் குரலில் பேசினர். மெல்ல மெல்ல அறிவியல் என்பது ஒரு அறிவுத்தரப்பாகவே ஆகியது. அது ஒரு மானுடத்தரிசனம் போலவும் மதம்போலவும் ஆகியது. ஒருவர் அறிவியல்மதம் சார்ந்தவரா இதர மதங்களைச் சார்ந்தவரா என்பதே கேள்வியாக ஆகியது.
இன்று அறிவியலின் வெற்றி முழுமையாகிவிட்டிருக்கிறது. அறிவியலுக்கு எதிராக இருந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் இன்று தங்கள் மதநம்பிக்கையோ, இனவாதமோ, மொழிபோன்ற வெறிகளோ எந்த அளவுக்கு அறிவியல்பூர்வமானவை என்று ‘நிருபிக்க’ முயல்வதைக் காண்கிறோம். அப்பட்டமான வரலாற்றுத் திரிபுகளும் மூடநம்பிக்கைகளும் கூட ‘அறிவியல் சார்ந்த நிரூபணங்கள்’ கொண்டவை என்று நம்மிடம் சொல்லப்படுகின்றன. சொல்லப்போனால் இன்று எல்லாமே அறிவியல்பூர்வமானவையாகவே நமக்கு காட்டப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட முகச்சாந்தை பூசிக்கொண்டால் செக்கசிவப்பாக ஆகிவிடுவோம் என்பதில் இருந்து சனீஸ்வரன் கோயிலின் சக்தியால் செயற்கைக்கோள்கள் திசைதிரும்புகின்றன என்பது வரை.
இன்று அறிவியலின் எல்லைகள், தீங்குகள் பற்றி அறிவியலின் தரப்பில் இருந்தே நிறைய கேள்விகள் எழுகின்றன. உயிர்நகல் (குளோனிங்) அல்லது செயற்கைநுண்ணறிவு போன்ற ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு முன்வைக்கப்படும்போது அதன்மீதான எச்சரிக்கைகள் அறிவியலின் தரப்பில் இருந்து ஒலிக்கின்றன. இன்றைய பின்நவீனத்துவர்களில் ஒரு சாரார் அறிவியல் என்பதே ஓர் அதிகாரக்கதையாடல் என்றும், அதற்குள் உள்ள அறிவியல்கொள்கைகள் பலவும் அதிகாரக்கதையாடல்களே என்றும் கூறி அறிவியலின் மேலாதிக்கத்தை மறுக்கிறார்கள்.
அறிவியல்மீதான உச்சகட்ட நம்பிக்கை திகழந்த காலகட்டமென்பது 1920 முதல் 1980 வரையிலான அறுபதாண்டுகள் என தோராயமாகச் சொல்லலாம். அறிவியலின் பெரும்சாதனைகள் பலவும் பயன்பாடுகளாக மாறி நேரடியாக உலகத்தை கட்டுப்படுத்தவும், உருவாக்கவும் தொடங்கியது 1900 களில். அதிநவீன போக்குவரத்து, இயந்திரங்கள் சார்ந்த நவீன உற்பத்திமுறை ஆகியவை பொருளியலை முழுமையாக மாற்றியமைத்தன. நவீன செய்தித்தொடர்புமுறை நவீனக் கல்விக்கு வழிவகுத்தது. விளைவாக சமூகங்கள் நவீன நாடுகளாக ஒருங்கிணைந்தன. மிக வலுவான ராணுவமும், மையவல்லமை கொண்ட அரசும் உருவாகியது. ஜனநாயகமும் பிறந்தது.
இரு உலகப்போர்களும் அறிவியலின் விளைவாக உருவானவை. நவீன ராணுவம் நவீன அரசுகளை உருவாக்கியது. நவீன அரசுகள் புதிய ஆதிக்கங்களை தேடின. விளைவாக உலகப்போர்கள் நிகழ்ந்தன. ஆனாலும் கூட அறிவியல் மீதான நம்பிக்கைகள் வலுப்பெறவே செய்தன. போர்களின் சீரழிவுகளை சரிசெய்யவும் அறிவியலே துணைநின்றது. ஆனால் எழுபதுகளில் அறிவியலின் விளைவான நுகர்வால் இயற்கையில் உருவான அழிவுகள் ஆவணப்படுத்தப்பட்டன. அறிவியல் உருவாக்கிய வல்லமைமிக்க அரசுகளால் தனிமனித உரிமைகள் நசுக்கப்படுவது கவனப்படுத்தப்பட்டது. அறிவியல் முதலீட்டுக்குவிப்பு, மேலும் சுரண்டல் என வளர்வது சுட்டிக்காட்டப்பட்டது. அறிவியல்நம்பிக்கையின் பொற்காலம் மறைந்தது
பெர்ட்ரண்ட் ரஸல் அறிவியல் யுகத்தின் மையத்தத்துவச் சிந்தனையாளர். சென்ற நூற்றாண்டில் உலகமெங்கும் மூடநம்பிக்கைகள், பழமைவாதங்கள் ஆகியவற்றுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மேற்கோள் காட்டிய முதன்மை ஆசிரியர்களில் ஒருவர் அவர். அறிவியலை மதம்போல வழிபட்டவர்களின் ஞானகுருவாக அவரே திகழ்ந்தார். 1952ல் ரஸ்ஸல் எழுதிய சிறு நூல் ’The Impact Of Science On Society’ . இந்நூல் அ.நடபராசன் பி.எஸ்.ஸி அவர்களால் 1960 தமிழாக்கம் செய்யப்பட்டு ராஜேஸ்வரி புத்தகநிலையம் வெளியீடாக ரூ 4 விலையில் வெளியாகியது. பரவலாக படிக்கப்படாத நூலாகவே இது இருந்துள்ளது என்பதை இதன் மறுபதிப்பு வரலாறுகள் வழியாக காணமுடிகிறது. இது மீண்டும் அச்சாகவே இல்லை. இதன் முதல்பதிப்பு என்னிடமுள்ளது. நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு பின் அண்மையில் இதை மீண்டும் வாசித்தேன்.
ரஸ்ஸல் அறிவியலை தன்னளவில் ஒரு விடுதலைக் கருவியாகக் காணவில்லை என்பது இன்று பார்க்கையில் வியப்பூட்டுகிறது. ரஸ்ஸல் விரிவாக அறிவியலின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை சொல்கிறார். பிரபஞ்சத்தை, இயற்கையை, மானுடவாழ்க்கையை நம்பிக்கைகள் வழியாகவும் குறியீடுகள் வழியாகவும் புரிந்துகொள்ளவே மானுடம் வரலாறெங்கும் முயன்றுள்ளது. கூடவே அனுபவ அறிவும் அதில் செயல்பட்டது. அனுபவத்திற்கு அப்பாற்பட்ட அனைத்தையும் நம்பிக்கை, குறியீடுகளாகவே பழைய மானுடர் வகுத்துக்கொண்டனர். அனுபவ அறிதல் அவர்களுக்கு உலகவாழ்க்கையை கட்டமைக்க உதவியது. அந்த அனுபவ அறிவுதான் பின்னாளில் அறிவியல்முறையாக வளர்ச்சி அடைந்தது.
மானுடகுலத்தில் ஒன்றுடனொன்று முரண்படும் இரண்டு அறிவுச்செயல்பாடுகள் உள்ளன. ஒன்று, சிந்தனையின் தொடர்ச்சியை உருவாக்கி நிலைநிறுத்துவது. அந்தத் தரப்புக்கு முன்னோர் என்ன சொன்னார்கள் என்பதே முதன்மையானது. அதை கற்பது, வருந்தலைமுறைக்குக் கொண்டுசெல்வது இரண்டையுமே அது தொடர்ச்சியாகச் செய்கிறது. இன்னொரு அறிவுச்செயல்பாடு புதியவற்றை ஆராய்வது,கற்பது. அதற்கு முன்னறிவு என்ற அளவில் மட்டுமே முன்னோர் சொல் முக்கியம். அதன் வழி மீறல். சென்ற காலகங்களில் இவ்விரு அறிவுச்செயல்பாட்டில் முதல்வகைச் செயல்பாட்டுக்கே அதிக இடமும் அதிகாரமும் இருந்தது. மதவாதிகளும் ஆசாரவாதிகளும் இவ்வகையினர். இரண்டாம்வகையினரை அவர்கள் கண்காணித்தனர், ஒடுக்கினர். அதை மீறியே மானுட சிந்தனையில் யில முன்னகர்வுகள் நிகழ்ந்தன.
அறிவியல் யுகம் என்பது இரண்டாம்வகையினர் மேலாதிக்கம் பெற்றதுதான். அவர்கள் முழுச்சுதந்திரம் கொண்டு , தொடர்ச்சியான முன்னகர்வை உருவாக்கினர். பழையவற்றை தங்கள் பார்வையில் ஆராய்ந்து இரக்கமில்லாமல் நிராகரித்தனர். தங்களிடம் உள்ள சிந்தனைகளையே தொடர்ச்சியாக ஆராய்ந்து, மறுபரிசீலனை செய்து, காலாவதியாகிவிட்டால் மறுத்து முன்னகர்ந்தனர். அறிவியல்யுகம் என்பது பதினாறாம் நூற்றாண்டு முதல் உருவாகி மெல்லமெல்ல வலுப்பெற்று இருபதாம் நூற்றாண்டில் தன் அறுதிவெற்றியை அடைந்தது என ரஸ்ஸல் பதிவுசெய்கிறார்
அறிவியலின் இரண்டு விளைவுகள் என ரஸ்ஸல் கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறார். இந்த உலகை அறிந்துகொள்ளுதல், பயன்படுத்துதல். அறிவு பயன்பாடாக ஆகிறது, பயன்பாடு மேலும் அறிந்துகொள்ள தூண்டுதலை அளிக்கிறது. அறிவை அறிவியல் என்றும் பயன்பாட்டை தொழில்நுட்பம் என்றும அழைக்கிறோம். இவ்வாறு தொடர்ச்சியாக அறிவும் பயன்பாடும் வளர்ந்ததே இன்றை நவீன உலகை உருவாக்கியது. இதை ரஸ்ஸல் தொடர்ச்சியாக வலியுறுத்தி, அறிவியலின் மேலதிக வளர்ச்சியே மானுடத்தின் ஒரே செல்வழி என்றும் சொல்கிறார்.
ஆனால் ரஸ்ஸல் இந்நூலில் சிலவற்றை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டுகிறார். ஒன்று, அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வந்தபோது அவை தன்னியல்பாக மானுடனுக்கு நன்மையை உருவாக்கவில்லை. எந்த இயந்திரமும் மனிதனை உழைப்பில் இருந்து விடுதலை செய்யவில்லை, நேர் மாறாக மேலும் பெரிய அடிமையுழைப்பையே உருவாக்கியது. ஒரு புது இயந்திரம் மேலும் பெரிய லாபவெறியை முதலாளிகளிடம் உருவாக்கி தொழிலாளர்களை மேலும் உழைப்படிமைகளாகவே ஆக்கியது.
ரஸ்ஸல் பல உதாரணங்களை அளிக்கிறார். 1820களில் லங்காஷயரில் இருந்த பஞ்சாலைகளில் 5 வயதிலேயே குழந்தைகளை நெசவுப்பணிக்குச் சேர்த்தனர். அவர்களை இயந்திரங்களுடன் பிணைத்து ஒரு நாளுக்கு 16 மணிநேரம் வேலை வாங்கினர். அவர்கள் தூங்கிவிடாமலிருக்க தொடர்ச்சியாக அவர்களை சாட்டையால் அடிக்க கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆவிக்கப்பல்களில் இருந்து கப்பல் தொழில்நுட்பம் வளர்ந்து எண்ணைக்கப்பல்கள் வந்தபோது ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகின. உலகமெங்குமிருந்து பஞ்சு வந்து சேர்ந்தது. ஆகவே தொழிலை பலமடங்கு வளர்க்கவேண்டியிருந்தது. புதியவகை நெசவு இயந்திரங்கள் வந்தன. இன்னும் இன்னும் உற்பத்தி பெருகியது. விளைவாக அடிமைமுறை மேலும் கொடுமையானதாக ஆகியது. 1824 வரை எந்த தொழிலாளர்ச்சட்டமும் உடனடியாக நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது
1793ல் விட்னி என்னும் அறிவியலாளர் பருத்தியைச் சுத்தம் செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அதன் வழியாக ஒரு மனிதர் ஐம்பது மடங்கு கூடுதல் பருத்தியை சுத்தம் செய்ய முடிந்தது. விளைவாக பருத்தி உற்பத்தியும் வணிகமும் பலமடங்கு பெருகி, லாபவெறி மிகுந்து, மேலும் பலமடங்கு கருப்பின மக்கள் பருத்தித்தொழிலில் அடிமைத்தொழிலாளர்களாக இழுக்கப்பட்டனர். 1787லேயே அடிமைமுறை ஒழிந்துவிட்டிருந்தது. ஆனால் இந்த தொழிலடிமைகள் புதியதாக உருவாகி வந்தனர். அவர்கள் தங்களையே விற்றுக்கொண்டனர், வேறு வழியே இருக்கவில்லை.
இன்றும் நாம் தொழில்நுட்பம் உழைப்பை எளிதாக்கும் என நம்புகிறோம். அப்படி அல்ல, நேர் மாறாகவே ஒவ்வொருமுறையும் நிகழ்கிறது என ரஸ்ஸல் காட்டுகிறார். மானுடவிடுதலையும் சரி, மானுடநலனும் சரி, தன்னிச்சையாக அறிவியலாலோ தொழில்நுட்பத்தாலோ உருவாகி வர வாய்ப்பே இல்லை. அவை விடுதலைசார்ந்த கருத்துக்களாலும், அவற்றை மக்களியக்கமாக ஆக்கும் செயல்பாடுகளாலும் படிப்படியாக உருவாகி வந்தாகவேண்டும். இல்லையேல் அறிவியலும் தொழில்நுட்பமும் மேலும் அடிமைத்தனத்தையே உருவாக்கும் என்று காட்டுகிறார். ரஸ்ஸல் இந்நூலில் முன்வைப்பது மானுடநலனை, விடுதலையை இலக்காகக்கொண்ட நவீன சிந்தனைகளின் முக்கியத்துவத்தைத்தான். அச்சிந்தனைகளைக்கொண்டு அறிவியலைப் புரிந்துகொண்டு, அறிவியலை கையாள்வதே நாம் செய்யவேண்டியது என்கிறார்.
அறிவியலின் எதிர்விளைவுகளிலொன்றாக ரஸல் சொல்வது அது நவீனராணுவங்களை மக்களால் எந்நிலையிலும் வெல்லமுடியாதவையாக ஆக்குகின்றன என்பதையே. அந்த ராணுவமே உண்மையில் அரசு என்பதனால் நவீன அரசுகள் எந்த மக்களியக்கத்தாலும் , எதிர்ப்புரட்சியாலும் வெல்லக்கூடியவையாக இல்லை. இன்றுள்ள அரசுகள் அளவுக்கு வரலாற்றில் எப்போதும் அரசு ஆற்றல்கொண்டவையாக இருந்ததில்லை. கொடுங்கோலர்களான காலிகுலா, நீரோ போன்ற ரோமச் சக்கரவர்த்திகள்கூட மற்ற பிரபுக்களையே ஒடுக்கமுடிந்தது. ரோம் முழுக்க சாமானியர்கள்மேல் அவர்களின் அதிகாரமென ஏதுமில்லை. ஆனால் இன்றைய சர்வாதிகாரிகள் ஒவ்வொரு குடிமகனையும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கமுடியும், ஒடுக்கமுடியும்.
அதற்கு எதிராக இருப்பது மானுடனின் சுதந்திரம் சார்ந்த பிரக்ஞ்ஞை. நவீனத்தொழில்நுட்பத்தை அதற்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். உலகமெங்கும் உள்ள மானுடர் ஒன்றாகத் திரளமுடியும். ஒரு சாராரை இன்னொரு சாராரைக்கொண்டு ஒடுக்குவதற்கு எதிராக நவீனத்தொழில்நுட்பம் அளிக்கும் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால் அது எளிதல்ல என்றும் ரஸ்ஸல் சொல்கிறார். இன்றைய அரசு நவீன அறிவியல்வழியாக மூர்க்கமான நம்பிக்கைகளை உருவாக்கமுடியும். அறிவியலைக்கொண்டே அறிவியலுக்கு எதிரான மனநிலைகளை இளமையிலேயே பல்லாயிரம்பேர் நெஞ்சில் நிலைநாட்ட முடியும். அந்தப் பெருவல்லமையுடன் போரிடுவதே இன்று சிந்தனையாளர்கள் செய்யவேண்டியது.
ரஸ்ஸல் இந்நூலில் எதிர்காலத்தில் அறிவியலைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு நலமான சமூகம் உருவாவதற்குச் சில வழிமுறைகளைச் சொல்கிறார். அறிவியலின் சுதந்திரத்தன்மை அதிலொன்று. அது அரசு, வணிகம் ஆகியவற்றின் சேவகனாக இருக்கலாகாது. அதிகாரப்பரவலாக்கம் இன்னொன்று. அரசதிகாரம் அரசுகளுக்கு இணையான மக்களமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுவது. மூன்று உலகமெங்கும் செல்வாக்கு செலுத்தும் சிந்தனைகள். ஆனால் இவையெல்லாம் உருவாக இன்னும் பல தலைமுறை ஆகும் என்றும், பலவகை கொந்தளிப்புகள் மற்றும் அழிவுகளினூடாகவே அவை எய்தப்படும் என்றும் ஊகிக்கிறார்.
இன்று, முக்கால்நூற்றாண்டுக்குப்பின் பார்க்கையில் ரஸ்ஸலின் சிந்தனைகள் புதியவையாகவே உள்ளன. அவை முன்வைக்கும் அச்சங்களும் குழப்பங்களும் கனவுகளும் பெரும்பாலும் இன்றும் நீடிக்கின்றன. இத்துடன் ஒப்பிடும்போது அறிவியலாளர்களின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள் நகைப்புக்கிடமானபடி பொருளில்லாமல் ஆகிவிட்டிருப்பதையும் காண்கிறோம். ரசாயன உரங்கள் உலகில் பட்டினியை அறவே போக்கிவிடும் என்றும், நவீன ஆயுதங்களின் சமநிலை உலகில் போர்களை இல்லாமலாக்கிவிடும் என்றும் அறிவியலாளர்கள் 1950களில் ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ரிச்சர்ட் ஃபெயின்மான் ‘பறவைகளுக்கு பறவையியல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு அறிவியலுக்கு தத்துவம் முக்கியம்’ என்று கேலியாகச் சொன்னார். அது உண்மை, பறவைகள் தன்னிச்சையாகப் பறக்கலாம். ஆனால் அப்பறவைகளுக்கு ஒரு பறவையின் வாழ்வு எப்படி இன்னொன்றை பாதிக்கிறது, ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் எப்படி தொடர்புகொண்டுள்ளன என்றும் தெரிந்திருக்காது. அந்த ஒட்டுமொத்தச் சித்திரம் பறவையியலாளரிடமே உருவாகும்.
இந்நூல் அறிவியலை ஆதரிப்பது, ஆனால் அறவியல் அறிவியல்மேல் ஆட்சிசெய்யவேண்டுமென்று சொல்வது. மானுடநலன்நாடும் நவீன அறவியலையும், அதை உருவாக்கும் நவீன தத்துவத்தையும் முன்வைப்பது. இன்று அதன் தேவை மேலும் ஆழமானதாக உணரப்படுகிறது