பாதிகளின் கவி – ரம்யா

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு

(சதீஷ்குமார் சீனிவாசனின்  பாதி நன்மைகள் கவிதைத் தொகுப்பை முன்வைத்து)

எல்லாவற்றிலுமே பரிபூரணத்தைத் தேடித்தான் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு புள்ளியில், ஏதோ ஓர் தருணத்தில், யார் மூலமாகவோ, எதன் புறக்கணிப்பிலோ, எவற்றின் அருகமைவிலோ அது சாத்தியப்படாது என நாம் உள்ளூர அறிந்தும் போலியான நம்பிக்கைகளுடன் அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம். மனுஷ்யபுத்திரன் அடிக்கடி சொல்லும் வரியென “எல்லாவற்றுக்கும் மறுபாதி உண்மை என ஒன்று உள்ளது” என்ற வரியை சதீஷ்குமார் சீனிவாசன் சொல்வார். முழு உண்மை சாத்தியமே இல்லை என்றால் பாதி உண்மைதான் சாத்தியம் இல்லயா? அப்படியானால் நாம் சிலாகித்துக் கொண்டிருப்பதெல்லாம் பாதி அறிவு, பாதி அறம், பாதி காதல், பாதி பிரிவு, பாதி காமம், பாதி நன்மைகள் தானே? ஒருவேளை இந்த அலைக்கழிதல்கள் யாவுமே மறுபாதியைத்தேடித்தானோ என்ற எண்ணம் எழுகிறது.

விளக்கவே முடியாதது ”அசல்”. அதன் முன்னால் திகைப்படைவதைத் தவிர சொல்ல வேறொன்றும் இல்லை. மொழியின் உச்ச சாத்தியமான வெளிப்பாடான கவிதைக்கு மேல் ஒன்று இருக்குமானால் அது விளக்கமுடியாதவைகளின் முன் நாம் அடையும் மெளனம் தான். அந்த மெளனம் சாத்தியப்படாததாலேயே கவிஞர்கள் இத்தனை சலம்பல்களை கவிதைகளில் கொட்டித்தீர்க்கிறார்கள். ஒரு வேளை அந்த மெளனத்தை அடையும் பாதையாகக் கூட இந்த புலம்பல்கள் இருக்கலாம். அசலானதை அடையமுடியாததின் பரிதவிப்பைச் சொல்லும் சதீஷின் ஒரு கவிதை.

இந்த குளிர்காற்று போலத்தான் 

முத்தம்

இந்த வெயில் போலத்தான் பிரிவும் காமமும்

ஒதுங்க இடமற்ற வெளிகளின் இருப்பு போலத்தான் 

அவமானங்கள்

அசலான காதலை அடைந்ததில்லை

அசலான நீதியை அடைந்ததில்லை

பொதுவாக

நாம் அறிந்த எல்லாமே அப்படித்தான்

 “போல” என்ற சொல்லத்துவங்கும்போதே நாம் அதன் முழுமையை அடையவில்லை எனலாம். முழுமை இல்லை எனும்போதே அது அசல் அல்ல என்றாகிறது. பொதுவாகவே நாம் அடையும் எந்த உணர்வும் அசல் இல்லை எனும்போது சூழ்ந்துகொள்கிறது வெறுமை.

சதீஷை பொதுவாக பூரண வாழ்விற்கும், பூரண சாவிற்கும் இடையில் அலைக்கழியும் கவிஞர் எனலாம். அவரைத்தெரிந்த நண்பர்கள் அதிகம் கேட்கும் வரி ”எப்படியாவது இந்த உலகத்தை அழிக்க வேண்டும்” என்ற அவரின் நிறைவேறாத ஆசையைத்தான். மற்ற சமயங்களில் அவர் முழு உண்மையை அல்லது முழு நன்மைகளைத் தேடிக் கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது. இரண்டு அழிவுகள் என்ற கவிதை அவரின் இந்த ஊசலாட்டத்தை சொல்லக்கூடியது.

நான் இருக்கும்வரை 

என்வரை இந்த உலகு

தீராதென்பது எவ்வளவு பெரிய நிம்மதி

நான் நினைத்தபோது 

இந்த உலகு அழியாதென்பது 

எவ்வளவு பெரிய சஞ்சலம்

மன்னிப்பின் முழுமை மன்னிப்பவர்களுக்கு சாத்தியமாயிருக்கலாம். ஆனால் பெறப்பட்டவனுக்கு தோன்றிக்கொண்டே இருப்பது அதன் முழுமையின் மீதான தொடர் சந்தேகம் தான். 

விடிந்ததும்

உயிர் இருக்காதது மாதிரி

ஒரு மன்னிப்பை வழங்கு

தினம்

உயிரோடிருக்கிற மாதிரி

விடாதே

முழுமையாக சொல்லவே முடியாத சிலவை இவ்வுலகத்தில் உண்டு. ”ஏன்” என்று கேட்டால் தெரியவேயில்லை என்று சொல்லும் சிரிப்பு, கண்ணீர் என சில உணர்வுகள். சில தனிமைகளும் கூட அப்படித்தான்.

அடையும் தனிமையை 

சொல்லவாகூடும்

தீபம்போல் தனியே எரிகிறேன்

எந்தெந்த காற்றுக்கோ அணைகிறேன்

பின் சொல்கிறேன்

ஒரு கதையை

உண்மையான தனிமைக்கு

சம்மந்தமே இல்லாத

ஒரு கதையை

எந்த உண்மையான உணர்வு நிலைக்கும் பொருத்திப் பார்க்கக் கூடிய கவிதையிது. உண்மைக்கும் கூட பொதுவாக முழுமையான காரணத்தை சொல்ல முடிவதில்லை. அதனாலேயே அதன் சரிபாதியை பொய்யால் நம்மால் நிறைத்துவிட முடிகிறது.

குழந்தைமையில் முழு உண்மை சாத்தியமாவதுண்டு. நான் பருவத்தைச் சொல்லவில்லை. எந்த ஒன்றின் ஆரம்பத்திலும் இருப்பது குழந்தைமையே. புதிய மனிதர்கள், புதிய ஈடுபாடுகள், புதிய வேலை, புதிய காதல், புதிய காமம் என யாவற்றின் முன் நாம் நிற்பது குழந்தைமையுடன் தான். மானுடனாக மாற மாற நாம் ஒவ்வொன்றிலும் முதிர்ச்சியாகிறோம். பிரக்ஞையோடு நிற்கும் நமக்கு ஒரு போதும் கைக்கு அகப்படாதது முழு உண்மைதான். அது கவிஞர்களுக்கு ஒரு கணமாவது வாய்க்கிறது. அத்தருணத்தைக் கண்டுகொள்ளத்தான் அவர்கள் எழுதித்தீர்க்கிறார்கள்.

உடனிருந்த ஒரு பொழுதில்

நீ ஒரு கண்ணாடி மாதிரி

இருந்த ஒரு பொழுதுண்டு

நீ எல்லா பக்கமும் நிறைந்திருக்கும்

வாசலுடன் அப்போதிருந்தாய்

அப்போதிருந்தன

உள்ளது உள்ளபடிச்செல்லும் சொல்

உள்ளதை உள்ளபடி படரவிடும் வாசனைகள்

உள்ளதை உள்ளபடிகாட்டும் ஒரு தன்மை

செல்ல செல்ல

கண்ணாடிகள் உருகி உருகி 

நீர் மாதிரி 

உன் மனம் மாறிப்போனது

எந்த அந்நியமும் இன்றி

நீந்தினோம்

காலமோ 

நீயோ 

புலப்படாத வேளையில் 

எதை எதையோ அடுக்கி அடுக்கி 

எல்லா வாசல்களையும் மறைத்துக் கொண்டாய்

குளிர்ந்துறைந்தாய் எதுவும் உட்புகாதபடிக்கு 

நீர் மாதிரியான 

உனதந்த பொழுதின் மனதுக்கு 

எங்கே தவறினோம் என ஒரே ஒரு சஞ்சலம்

பின்னெப்போதும் திரும்பிவிட முடியாத அந்த குழந்தைமையைக் கடந்துவிட்ட போது வரும் அலைக்கழிதல்கள் அளப்பரியவை. அதை தன்னிடத்திலும் பிறரிடத்திலும் சூழலிலும் எனத் தேடித் தேடி சென்றடைய முடியாத பரிதவிப்பை சதீஷின் கவிதைகள் அளிக்கிறது. குழந்தைமையிலிருந்து கன்னியாகிவிட்டவள் அடையும் பரிதவிப்பின் கவிதைகள் இவை.

பாதி மரம் ஏறியாயிற்று

வெற்றி அறிவிக்கப்பட்டுவிட்டது

உலகை அசைக்கிறது கூச்சல்

ஆனால்

எல்லாவற்றிலும் நமக்குக் கிடைத்தது

பாதி நன்மைகள்

ஒரு முழுநிலவை விழுங்கத்தான்

இத்தனையும் என்றார்கள்

விழுங்கியதாய் நினைத்த பின்னும்

தன் ஸ்திதியின் இயல்பிலது

தேய்கிறது வளர்கிறது

இல்லாமலாகிறது

பாதி நன்மைகள் நன்மைகள் தானா

என்பதுதான் இப்போதைய குழப்பங்கள்

ஒருவேளை கவிஞர் அவதானிப்பது போல எல்லோரையும் சாகடித்துவிட்டால் யாவும் பூரணமாகிவிடுமா? இல்லை. ஒரு போதும் அடையமுடியாதவை என அமையும் போது இந்த பரிதவிப்பின் தீ சமாதானப்படலாம். ஆனால் இப்போதைக்கு இந்தக் குழப்பங்களும் பரிதவிப்புகளும் ஏக்கங்களும் துயரங்களும் கசப்புகளும் அழகாக உள்ளன. அதனால் எந்த அவசியமும் எழவில்லை. இந்த பரிதவிப்பின் அழகுகளை ரசிப்பதற்கேனும் நிகழட்டும் இந்த உலகம்.

-ரம்யா

‘கவிதைகள்’ சதீஷ்குமார் சீனிவாசன் சிறப்பிதழ்

சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதம்

சதீஷ்குமார் சீனிவாசன் – மூன்று கவிதைகள்

வெயில்’ மூன்று கவிதைகள், சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்

சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருது, கடிதம்

முந்தைய கட்டுரைஉரையாடும் வழி, கடிதம்
அடுத்த கட்டுரைமாயதேவன்