எங்கள் தத்துவப்பயிற்சி முகாம் ஒன்றில், மலைப்பகுதியில் மாலைநடை செல்லும்போது நான் இளம் நண்பர்களிடம் கேட்டேன், சென்ற நூறாண்டுகளில் மானுடசிந்தனையில் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்வு என எதைச் சொல்லமுடியும்? மானுடரெல்லாம் சமம் என்னும் கருத்தா? தனிமனிதன் என்னும் உருவகமா? நலம்நாடும் அரசா, இகவுலகின் இன்பங்களை நாடுவது ஒன்றும் பாவம் அல்ல என்னும் எண்ணமா?
ஒரு விவாதத்திற்குப்பின் நான் சொன்னேன். “அவையெல்லாம் முக்கியமானவையே, ஆனால் முதன்மையானது ‘அதிகாரத்திற்கு தெய்வீகத்தன்மை இல்லை’ என்னும் கருத்துதான். அதுதான் சென்ற யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாம் காணும் இந்த நவீன உலகை வடிவமைத்தது. இனிவரும் உலகுக்கான வாக்குறுதியாகவும் நம்பிக்கையாகவும் நீடிக்கிறது. இன்று நாம் காணும் மனித உரிமைகள், சமத்துவக் கருத்துக்கள், நலம்நாடும் அரசுகள் அனைத்துமே அந்த ஒற்றைக்கருத்தின்மேல்தான் நிலைகொள்கின்றன.”
மனிதகுலத்துக்கே அந்தச் சிந்தனை புதியது. சொல்லப்போனால் பழைய உள்ளத்தை கொந்தளிக்கச் செய்யும் அளவுக்கு கடும் வெம்மை கொண்டது. நான் 1947 வரை மன்னராட்சி திகழ்ந்த திருவிதாங்கூரில், மன்னராட்சி ஒழிந்து பதினைந்தாண்டுகள் கழிந்து பிறந்தவன். ஆனால் 1920களில் பிறந்த என் அப்பாவைப் போன்றவர்கள் தீவிரமான ராஜபக்தர்கள். ஜனநாயகத்தின் கடுமையான விரோதிகள். திருவிதாங்கூர் அரசர் மற்ற மனிதர்களைப் போன்ற ஒருவர்தான் என என் அப்பாவிடம் ஒருவர் சொன்னால் அவர் சீறி எழுந்து சொன்னவரின் செவுளில் அறைவிடுவார், முடியாதென்றால் கண்ணீர் மல்குவார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜாவை நேரில் சந்தித்தபோது அவர் பலமுறை அமரச்சொல்லியும்கூட நான் அவர் முன் அமரவில்லை, காரணம் என் அப்பா மறைந்த சங்கரப்பிள்ளை பாகுலேயன் பிள்ளை அதை விரும்பியிருக்கமாட்டார் என எனக்கு அப்போது தோன்றியது. அவ்வளவு எளிதாக நாம் பழமையில் இருந்து விடுபட முடியாது.
அரசர்கள் தெய்வத்துடன் பிணைக்கப்படுவது உலகமெங்கும் உள்ள பொதுவான மரபு. இந்தியாவின் அரசர்கள் அனைவருமே சூரியவம்சம், சந்திரவம்சம் அல்லது அக்னிவம்சம் சார்ந்தவர்கள். மனிதர்களின் வயிற்றில் பிறந்தாலும் அவர்கள் தெய்வங்களின் மைந்தர்களே. திருவிதாங்கூர் அரசர் ஹிரண்யகர்ப்பம் என்னும் வைதிகச்சடங்கின் வழியாக மறுபிறப்பு அடைந்தவர். வைதிகர் வேதம் முழக்க, பொன்னாலான ஒரு கிண்ணத்தில் சாணி, பசுவின் சிறுநீர், பால், நெய், தயிர் என்னும் ஐந்து பொருட்களின் கலவையை நிறைத்து அதில் மூழ்கி மறுபக்கம் எழுந்து வருவது அச்சடங்கு. அவ்வாறாக அவர் தெய்வீகமான பசுவின் கருவறைக்குள் புகுந்து மீண்டும் பிறந்து வருகிறார். அரசர்கள் சார்ந்த ஒவ்வொன்றுக்கும் வேறு சொல் உண்டு. மற்றவர்கள் போல அவர்கள் பிறப்பதில்லை, மண்நிகழ்கிறார்கள். உணவுண்பதில்லை அமுதேற்பு நடத்துகிறார்கள். மறைவதில்லை, தீப்படுகிறார்கள். இதே போன்ற சடங்கு வழியாகவே மராட்டிய போர்வீரரான சிவாஜி சத்ரபதி என்னும் பட்டம் பெற்று அரசராக ஆனார். அச்சடங்கைச் செய்தவர் காசியில் இருந்து வந்த அந்தணரான காகபட்டர் என்பவர்.
திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா 1749ல் தன் வாளை திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சாமியின் முன்பாக வைத்து வணங்கி மொத்த நாட்டையே அந்த தெய்வத்திற்கு அளித்து அந்த தெய்வத்தின் பிரதிநிதியாக ஶ்ரீபத்மநாபதாசன் என்று பெயர் தாங்கி அரசாட்சி செய்தார். அதற்கு முன் அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நிலப்பிரபுக்கள் அனைவருமே அச்செயல் வழியாக ஒரே நாளில் இறைவனுக்கு எதிரான பாவிகளானார்கள். மன்னரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்நிலப்பிரபுக்களும், அவரால் சிறைப்பிடிக்கப்பட்டு கடலோர மீனவர்களுக்கு விற்கப்பட்ட அந்த நிலப்பிரபுக்களின் இல்லத்துப் பெண்களும் தெய்வத்துரோகிகளாக ஆனார்கள். காரணம், மன்னர் இறைவனின் பிரதிநிதியாக ஆனதும் அவர் செய்த கொடுமைகள்கூட இறையாணையாக ஆகிவிட்டன.
திருவிதாங்கூர் மன்னரின் தெய்வீகமான அந்த அதிகாரம் 1948ல் வல்லபாய் பட்டேலின் தூதன் வழியாக பறிக்கப்பட்டு, திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தேர்தல் வழியாக புதிய ஆட்சியாளர் வந்தார். என் அப்பா போன்றவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. புதிய ஆட்சியாளர் பட்டம் தாணுபிள்ளை என்பவர் என் அப்பாவை போன்ற இன்னொரு பிள்ளை. எப்படி அவர் அதிகாரத்தை ஏற்கமுடியும்? அப்படியானால் இனி எந்த பிள்ளையும், எந்த நாயரும் ஆட்சி செய்யலாமா என்ன?
சென்ற நூற்றாண்டுவரை உலகமெங்கும் அரசத்துரோகமும் தெய்வநிந்தனையும் ஒன்றே என்றுதான் பெரும்பாலும் நம்பப்பட்டு வந்தது. அரச அதிகாரம் மதம் வழியாக தெய்வத்துடன் பிணைக்கப்பட்டது. மதகுருக்கள் அரசனுக்கு அந்த தெய்வீக அங்கீகாரத்தை வழங்கினர். பதிலுக்கு மதகுருக்களை தனக்கும் மேலான ஓர் இடத்தில் தெய்வத்தின் நேரடிப்பிரதிநிதிகளாக அரசன் நிலைநிறுத்தினான். கிறிஸ்தவப் பாதிரிமார்கள், இஸ்லாமிய மதகுருக்கள், பௌத்த பிக்குகள் அவ்வாறு அரசனை தெய்வத்தின் பிரதிநிதியாக நியமிக்கும் அதிகாரம் உடையவர்கள். இந்தியாவில் வைதிகப் பிராமணர்களும், வெவ்வேறு மடத்தலைவர்களும் அந்த இடத்தில் வைக்கப்பட்டனர்.
அந்த தெய்வீகத்தன்மை நூற்றுக்கணக்கான தத்துவசிந்தனையாளர்கள், அரசியல்ஞானிகள், எழுத்தாளர்கள் வழியாக மெல்லமெல்ல மறுக்கப்பட்டு அம்மறுப்பு ஒரு கருத்தாக நிறுவப்பட்டது. அதன்பொருட்டு உயிர்கொடுத்த அறிஞர்களின் பட்டியலையே போடமுடியும். 1215ல் பிரிட்டனில் மாக்னாகார்ட்டா போன்ற மக்களுரிமைக் கோரிக்கைகளில் இருந்து தொடங்கி ‘ஆள்வோர் தெய்வத்தின் பிரதிநிதிகள் அல்ல’ என்னும் கருத்து எப்படி வளர்ந்து வந்தது என்று நாம் எளிய வரலாற்று நூல்கள் வழியாகவே பார்க்கமுடியும்.
ஒரு தேசத்தை ஆட்சி செய்பவர் அந்த தேசத்தின் குடிமக்களில் இருந்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அவருடைய ஆட்சிக்காலம் முடிந்ததும் அவர் மீண்டும் சாதாரண குடிமகன் ஆகிவிடுவார் என்ற கருத்தை இன்னும்கூட உலக மக்களில் முக்கால்வாசிப்பேர் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஐரோப்பாவில் உருவாகி, பெரும்பாலும் அங்கே மட்டுமே நிலவும் இக்கருத்தை இந்தியா என்ற பழமையான பண்பாடு ஏற்றுக்கொண்டது என்பது சென்ற நூற்றாண்டின் மாபெரும் அற்புதநிகழ்வுகளில் ஒன்று. அதற்குக் காரணம், காந்தி. காந்தி எளிய விவசாயியின் உடையணிந்தது என்பது அந்த புதியகருத்தின் வெளிப்பாடு. அவர் அக்கருத்தின் குறியீடாக தன் தோற்றத்தையே ஆக்கிக்கொண்டார். மணிமுடி சூடிய பேரரசர்களின் இடத்தில் அரைநிர்வாண பக்கிரியை நம் மக்கள் வைத்தனர். அதன் வழியாக நாம் ஜனநாயகத்திற்கு வந்தோம். நாம் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதுபோல நம்முடன் விடுதலைபெற்ற ஏராளமான நாடுகள் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அங்கே மேலாடையில்லாத விவசாயி ஒருவர் அரசியல்தலைவராக வந்து நிற்கவில்லை.
இந்தியாவின் தொடக்ககால ஜனநாயக ஆட்சியாளர்கள் அந்த எளிமையையே தகுதியாகக் கொண்டவர்கள். அதை அவர்கள் பிரகடனம் செய்தார்கள். காமராஜர் சாலையில் சாதாரணமாக தொண்டர்களுடன் நடந்தார். இம்.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு கையில் பையுடன் நடந்து தலைமைச்செயலகம் சென்றார். தன் சட்டையை தானே துவைத்து போட்டுக்கொண்டார். அவர்கள் அனைவரிலும் காந்தி வாழ்ந்தார், இ.எம்.எஸ் அதை வெளிப்படையாகவே சொல்லியுமிருக்கிறார். வெறும் எழுபத்தைந்து ஆண்டுகளில் அப்படிப்பட்ட தலைவர்களே இல்லாமலாகிவிட்டனர். நாம் காந்தியில் இருந்து கற்ற ஜனநாயகப்பாடம் சட்டென்று மறக்கப்பட்டுவிட்டது.
சென்ற நூற்றாண்டில் அரசரின் அதிகாரம் முதல் மிகக்கீழ்மட்டத்தில் உள்ளூர் கிராமத்தலைவரின் அதிகாரம் வரை எல்லா பதவிகளும் புனிதமானவை. தமிழகத்தில் கிராமத்தலைவரின் அதிகாரம் என்பது உள்ளூரின் ஆலயத்தின் பூசாரி அவருக்கு முதல்மரியாதையையும், தலைப்பாகையையும் அளிக்கிறாரா என்பதைச் சார்ந்தது. தோப்பில் முகமது மீரானின் துறைமுகம் நாவலில் இஸ்லாமிய பிரபுவின் அதிகாரம் என்பது மசூதியில் தொழுகையில் முதலில் அமர்வதில் இருந்து தொடங்குவதை நாம் காணலாம், அதில் இஸ்லாமிய பிரபு தன் தலைப்பாகையை ஒரு தட்டில் வைத்து மசூதிக்கு கொடுத்தனுப்புகிறார்.
அதிகாரம் புனிதப்படுத்தப்படும் அந்த முறை அரசாட்சியில் இருந்து கீழ்நோக்கி வரவில்லை. மாறாக கீழிருந்து மேலே செல்கிறது. பளியர்கள், காணிக்காரர்கள் போன்ற திருவிதாங்கூர் பழங்குடிகளில் குடித்தலைவனின் அதிகாரம் என்பது பூசாரியால் அளிக்கப்படுவது. பூசாரி நேரடியாக தெய்வத்துடன் பேசுபவர். தெய்வம் அவர் வழியாகப் பேசும். அவர் தெய்வமாகவே ஆகி வழிபடப்படுவதும் உண்டு. பூசாரியின் கையில் இருக்கும் கோல்தான் அதிகாரத்தின் முதல் அடையாளம். நூறாண்டுகளுக்கு முன்புவரை காணிக்காரர்களின் பூசாரிகள் அந்தக் கழியை கீழே வைப்பதே இல்லை. கரசூர் பத்மபாரதி எழுதிய ஆய்வுநூலின்படி நாடோடிகளான நரிக்குறவர்களின் குடித்தலைவர்கள் ஒரு துணிமூட்டையில் அவர்களின் தெய்வத்தை வைத்திருக்கிறார்கள், அவர்கள் அதை கீழே வைக்கவே கூடாது. அந்த தெய்வமே அவர்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.
முதல் செங்கோல் என்பது பூசாரியின் கையில் இருப்பதே. அது இன்றும் எல்லா மரபிலும் துறவிகளின் கையில் உண்டு. அக்கோலின் அடிப்படையிலேயே அவர்களின் மரபு வகுக்கப்படுகிறது. மூன்றுகோல்கள் கொண்டது வைணவர்களின் திரிதண்டி சம்பிரதாயம். எல்லா மரபையும் இணைத்த சங்கரரின் மரபு ஏகதண்டி சம்பிரதாயம். மதத்தலைவரின் கையில் இருந்துதான் அரசன் அந்த கோலை தனக்காக பெற்றுக்கொள்கிறான். அவனுக்கு அதன் வழியாக தெய்வீக அதிகாரம் கைமாறப்படுகிறது.
செங்கோல் என்னும் சொல் மிகப்பழைமையான தமிழ் இலக்கியத்திலேயே காணக்கிடைக்கிறது. பெரும்பாலும் கோல் (கழி) என்றே அது அழைக்கப்படுகிறது. ஆசாரம், நீதி ஆகியவற்றை தவறவிட்டவனின் கோல் வளைந்துவிட்ட ஒன்று என்று சொல்லப்படுகிறது. அதுவே கொடுங்கோல். கோடுவது என்றால் வளைவது. செங்கோல் என்றால் வளையாத நேரான கோல் என பொருள். மன்னனுக்கான அடையாளங்கள் செங்கோல், வெண்குடை, சாமரம், மணிமுடி, சிம்மாசனம் ஆகிய ஐந்தும் என நம் மரபு சொன்னது. ஓர் அரசன் பட்டத்துக்கு வரும்போது இவை அவனுக்கு அளிக்கப்படுகின்றன. அதற்கான விரிவான சடங்குகளும் இருந்தன என பழைய நூல்குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
அரசன் அதிகாரம் ஏற்கும் சடங்குகள் மதம்சார்ந்தவையாகவும், மதகுருக்களால் நிறைவேற்றப்பட்டவையாகவும் இருந்தன. சங்க காலம் முதலே தமிழ் மன்னர்கள் வேள்விகள் செய்பவர்களாகவும், பிராமணர்களை ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள் என்பதை புறநாநூறு முதலிய நூல்களின் குறிப்புகள் காட்டுகின்றன. புறநாநூறு காட்டும் மிகப்பழைய பாண்டிய மன்னனின் பெயர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. பிராமணர்கள் எப்போதெல்லாம் குறிப்பிடப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மூன்றுதீ வளர்த்து வேள்விசெய்பவர்கள், நோன்பினால் உடல்மெலிந்தவர்கள் என்றே சொல்லப்படுகிறார்கள். பிராமணர்களை புனிதப்படுத்தி, பதிலுக்கு பிராமணர்களால் புனிதப்படுத்தப்படும் அதிகாரமே தமிழ் மன்னர்களுடையதாக இருந்தது.
‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்’ என்று நம்மாழ்வார் பாடினார். அதுவே நம் மனநிலை. பின்னர் தெய்வமேகூட ஒரு மன்னராக ஆக்கப்பட்டார். தமிழகத்தில் சோழர்காலத்தில் இருந்து தெய்வ வழிபாடு என்பது தெய்வத்தை ஓர் அரசனாக கருத்தி அவருக்கு ஷோடச உபச்சாரம் என்னும் பதினாறு வகை பணிவிடைகளைச் செய்வதுதான். அதிகாலையில் துயிலெழுப்புவது, நீராட்டுவது, தாம்பூலம் அளிப்பது, அலங்கரிப்பது முதல் இரவில் பள்ளியறைக்குக் கொண்டுசென்று துணைவியுடன் படுக்கவைப்பது, பாடல்பாடி விசிறிவிட்டு தூங்கவைத்துவிட்டு கதவை மூடிக்கொண்டு வெளிவருவது வரை அவற்றிலுண்டு.
இதுவே உலகமெங்கும் ஏறத்தாழ நடைமுறையில் இருந்தது. செங்கோல் பெரும்பாலான மன்னர்களுக்கு உண்டு. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே சென்றபோது நாம் இங்கிலாந்து அரசியின் செங்கோலை ஏற்றுக்கொண்டோம். பிரிட்டிஷ் அரசி விக்டோரியாவின் முடிசூட்டுவிழா மிகவிமரிசையாக இந்தியாவில் கொண்டாடப்பட்டது. நாடெங்கும் அந்நிகழ்வுக்கான நினைவுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டன. இன்றும் என் வீடு அருகே செல்லும் கால்வாயின் பெயர் அனந்தவிக்டோரியா கால்வாய். தெய்வமான அனந்தபத்மநாபனும் விக்டோரியா மகாராணியும் ஒன்றே என இணைக்கப்பட்டிருக்கிறார்கள் அப்பெயரில். அன்று நம் புலவர்களால் எழுதப்பட்ட பெரும்பாலான வாழ்த்துக்களில் விக்டோரியா மகாராணி இந்து தெய்வங்கள அளித்த அதிகாரம் கொண்டவர் என்றே சொல்லப்படுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் அச்செங்கோல் வேறுவடிவில் கீழே உள்ள எல்லா அதிகாரபீடங்களுக்கும் இருந்தது. நீதிபதிகளுக்கு முன்னாலும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முன்னாலும் ஒருவன் செங்கோலுடன் சாமானியர்களை நோக்கி ‘விலகு விலகு’ என ஆணையிட்டபடி சென்றான். அந்த வழக்கம் இன்றும் பெரும்பாலும் அப்படியே உள்ளது. அதற்கென்றே சரிகைப்பட்டை போட்ட ஆடையணிந்த டவாலி சேவகன் உள்ளான். நாம் இன்னும்கூட ஆள்பரை தெய்வமாகக் கருதும் மனநிலையில் நீடிப்பவர்கள்.
ஜனநாயகம் என்பது அடிப்படையில் இந்தக் கோலுக்கு எதிரானது. செங்கோல் ஆட்சியாளனை தெய்வத்தின் வடிவமாக்குகிறது. ஜனநாயகம் அவனை நம்மில் ஒருவராக்குகிறது. காமராஜரிடம் செங்கோல் இருக்கவில்லை. ஆனால் நாமறிந்த இரண்டாயிரமாண்டு தமிழகவரலாற்றில் அவர்தான் மிகச்சிறந்த ஆட்சியாளர். நவீனத்தமிழகத்தின் சிற்பி அவர். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாத ஒருவர் நவீன உள்ளம் கொண்டவராக இருக்கமுடியாது. இந்த வேறுபாட்டை மறுத்தால் நாம் காலத்தில் திரும்பிச் செல்கிறோம். சென்ற மூன்று நூறாண்டுகளாக தத்துவஞானிகளும் அரசியலறிஞர்களும் எழுத்தாளர்களும் திரட்டியளித்த ஜனநாயகம் என்னும் மகத்தான நல்வாய்ப்பை நிராகரிக்கிறோம்.
*
திருவாவடுதுறை ஆதீனம் ஜவகர்லால் நேருவுக்கு அளித்தச் செங்கோல் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டதை ஒட்டிய உரையாடலில் இவ்வெண்ணங்களைச் சொன்னேன்.
2019 மேமாதம் 9 ஆம் தேதி இந்தச் செங்கோலைப் பற்றிய ஓர் ஐயத்தை என் வாசகர் ஒருவர் கேட்டார், அவருக்கு இது வாட்ஸப் வழியாக வந்தது. அதற்கு என் இணையதளத்தில் நான் விரிவாகப் பதிலளித்தேன். என் வழக்கப்படி முதலில் எதிர்த்தரப்பை முழுமையாக அளித்துவிட்டு அதன்மீதான என் கருத்தை அடுத்தபடியாக அளித்தேன். முழுக்க வாசிக்கும் வழக்கமில்லாத எவரோ முதல்சில பத்திகளை வாசித்துவிட்டு அந்தச் செங்கோல் விவகாரத்தை நான் ஆதரிப்பதாக எண்ணி அதை மேலிடத்துக்கு அனுப்ப, அவர்கள் தங்கள் தரப்புக்கான சான்றுக் கட்டுரையாக அதை மேற்கோள்காட்டிவிட்டனர். அந்த அபத்தத்தை ஆங்கில நாளிதழ்கள் சுட்டிக் காட்டியிருந்தன.
அந்த வாட்சப் வரலாறு இதுதான். ’1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த தருணத்தில் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசியிடமிருந்து இந்திய ஆட்சியாளர்களுக்கு எப்படி கைமாற்றம் செய்வது, அதற்கான சடங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒரு அரசமுறைச் சடங்கு தேவைப்பட்டது. அதை நேரு போன்றவர்கள் சி.ராஜகோபாலாச்சாரியிடம் சொன்னபோது அவர் அத்தகைய சடங்கு தமிழகத்தில் உள்ளது என்று சொல்லி திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்புகொண்டார். ஆதீனம் ‘கவலைவேண்டாம், சோழர்கள் மணிமுடி சூடும்போது நாங்கள்தான் செங்கோலை அளிப்போம். அந்த செங்கோலை அனுப்புகிறேன். அதை மௌண்ட்பாட்டன் நேருவுக்கு அளித்தால் ஆட்சிமாற்றம் நிகழ்ந்துவிடும்’ என்று சொல்லி செங்கோலை அனுப்பினார். அவருக்கு அன்று காய்ச்சல் என்பதனால் அவருடைய கீழிருந்த ஒரு துறவி அச்செங்கோலை டெல்லிக்குச் சென்று நேருவுக்கு அளித்தார். அந்த செங்கோலை மௌண்ட்பாட்டன் நேருவுக்கு அளிக்கும் சடங்கு ராஷ்டிரபதி பவனில் நிகழ்ந்தது. அந்தச் செங்கோல் வழியாகவே இந்தியாவில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது. இந்த உண்மை வரலாறு பிற்காலத்தவர்களால் மறைக்கப்பட்டுவிட்டது.’
இந்த ’வாட்ஸப் வரலாறு’ முதலில் மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதியால் சொல்லப்பட்டது என தெரிகிறது. (ஆனால் இவ்வாறு சொல்லப்பட்டாலும் காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதியின் உரைகளின் அதிகாரபூர்வ தொகுப்புகள் எதிலும் இது இல்லை. அவர் சொன்னதாக அவர் மறைந்தபின் சிலர் எழுதிய நம்பத்தகாத பதிவுகளில் மட்டுமே இது சொல்லப்படுகிறது) பின்னர் எஸ்.குருமூர்த்தி அதை துக்ளக் இதழில் எழுதினார். அதன்பின் இந்துத்துவ வாட்ஸப் குழுக்களில் இது சுற்றிக்கொண்டிருந்தது. நான் அந்த வரலாறு ஆதாரமற்றது என்று மறுத்தேன். திருவாவடுதுறை ஆதீன வரலாற்றுக்குறிப்புகளில்கூட ஆதீனம் தன் வாழ்த்தை தெரிவிக்க ஒரு செங்கோலைச் செய்து அனுப்பி வைத்தார் என்று மட்டுமே உள்ளது. எழுபதாண்டுகளில் எங்கும் அது அதிகாரமாற்றத்தின் அடையாளம் என்று சொல்லப்பட்டதே இல்லை.
நான் முதலில் சுட்டிக்காட்டியது அந்தக் குறிப்பிட்ட மனநிலையைத்தான். ஒரு வரலாறு ‘மறைக்கப்பட்டது’ என்று சொன்னதுமே சாமானிய உள்ளம் கொள்ளும் தீவிரம் என்பது மிக அசட்டுத்தனமானதும் அபாயமானதுமாகும். ஒருவிஷயம் மறைக்கப்பட்டது என்று சொன்னாலே அதற்கு ஆதாரம் தேவையில்லாமலாகிறது, ஏனென்றால் ஆதாரங்கள்தான் அழிக்கப்பட்டுவிட்டிருக்குமே! ஆதாரங்கள் எங்கே என்று கேட்பவர் ஆதாரங்களை அழித்த தரப்பைச் சேர்ந்தவராக ஆகிவிடுகிறார்.
‘நாங்கள் உயர்ந்தவர்கள், அபூர்வமானவர்கள், எங்கள் எதிரிகள் எங்கள் வரலாற்றை மறைக்கிறார்கள்’ இதுதான் சாமானியர்களிடம் செல்லுபடியாகும் வரலாற்று மனநிலை. இது ஃபாசிசத்தின் அடிப்படைச் சிந்தனை. இப்படி தங்கள் வரலாறு மறைக்கப்படுகிறதே என்று கொந்தளிக்கும் எந்த சாமானியரும் கண்ணெதிரே தங்கள் உண்மையான வரலாற்றுப் பெருமைகள் சிதைந்தும் சீரழிந்தும் கிடப்பதை பொருட்படுத்துவதே இல்லை. இந்தியாவில் பெரும்பாலான இந்து புனிதத்தலங்கள் குப்பைமேடுகள், ஒவ்வொருநாளும் அழிந்துகொண்டிருக்கும் இடிபாடுகள். அதைப்பற்றிய கவலையே எவருக்கும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை எதிரியால் மறைக்கப்படுவது மட்டுமே உடனே தூக்கிப்பிடிக்கப்படவேண்டிய வரலாறு.
இந்திய வரலாற்றை எழுதிய அத்தனை வரலாற்றாசிரியர்களும், இந்தியா சுதந்திரம் பெற்ற நினைவுகளை பதிவுசெய்த ராஜேந்திர பிரசாத், நேரு, ராஜாஜி உள்ளிட்ட அத்தனை தலைவர்களும் பொய்யர்கள் என்று சொல்ல இந்த வாட்ஸப் வரலாற்றாளர்களுக்கு தயக்கமே இல்லை. அவர்களுக்கு எதிர்த்தரப்பே இல்லை, எதிரிகள் மட்டுமே உள்ளனர். இந்த மனநிலையே வரலாற்றுணர்வுக்கு எதிரானது, அடிப்படைச் சிந்தனைக்கு எதிரானது. சிந்தனையில் நிகழும் உச்சகட்ட வன்முறை இது. திரும்பத் திரும்ப எல்லா தரப்பினரிடமும் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.
இப்போது இந்த விவாதத்தை ஒட்டி வழக்கம்போல ஏராளமான மின்னஞ்சல்கள் வந்தன, பெரும்பாலானவை கடும் வசைகள். வசைபாடுபவர்கள் இருவகையினர். இந்துத்துவர்கள், தமிழ்ப்பெருமை பேசும் சைவர்கள். இருசாராருமே திரும்பத்திரும்ப திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து நேருவிடம் ஒரு செங்கோல் அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அனுப்பி நான் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும் என்று சொல்லியிருந்தனர். என் முதல்குறிப்பிலேயே அப்படி ஒரு செங்கோல் நேருவுக்கு அளிக்கப்பட்டது உண்மை என்றே சொல்லியிருந்தேன். உண்மையில் ஓர் இந்துவாக அதில் எனக்கு மகிழ்ச்சி என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் இந்தியாவின் ஆட்சியதிகாரமே அதன் வழியாக கைமாறியது என்பதற்கான சான்றுகள் இல்லை. இருந்தால் என் கருத்தை மாற்றிக்கொள்ள எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் மாறாத அரசியல் தரப்பு கொண்டவன் அல்ல.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 14 இரவில் அவ்வாறு கங்கைநீர் நிறைந்த பொற்குடங்கள் உட்பட பல பரிசுகள் நேருவுக்கு அளிக்கப்பட்டன. அஜ்மீரில் இருந்து சத்ரா சென்றிருக்கும். அவை எல்லாம் வாழ்த்துகள், ஆசிகள். அவ்வளவுதான். அவ்வாறு மதத்தலைவர்களின் வாழ்த்துகளும் ஆசிகளும் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்படுவது இன்றும் வழக்கம்தான். பெரும்பாலான மதநம்பிக்கையாளர் வாழும் நாட்டில் அது இயல்பும்கூட. ஆனால் இந்திய ஆட்சியதிகாரமே ஒரு குறிப்பிட்ட மதத்தலைவர் அளித்த செங்கோல் வழியாக கைமாறப்பட்டது என்பது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான மதச்சார்பின்மைக்கே எதிரானது. ஆட்சியாளரை தெய்வத்தின் பிரதிநிதியாக புனிதப்படுத்திக்காட்டும் மனநிலை கொண்டது என்பதனால் ஜனநாயகத்துக்கே எதிரானது. அப்படி நிகழ்ந்தமைக்கான சான்றுகள் இல்லை.
முதலில் சில அடிப்படை கேள்விகள். அது சோழர் செங்கோலா? உறுதியாகவே சொல்லலாம், இல்லை. வேறு எந்த இந்திய அரசர்களைப்போலவும் சோழர்காலகட்டம் பற்றி நமக்கு மிகக்குறைவான தரவுகளே கிடைக்கின்றன. அவையும் மறைமுகமான செய்திகள். வெவ்வேறு ஆலயங்களில் நிலக்கொடைகள் பற்றி எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இருந்தும், நாணயங்களில் இருந்தும், இலக்கியநூல்களில் இருந்தும்தான் சோழர் வரலாறு தெரியவருகிறது. பல கல்வெட்டுகளில் அரசர்களின் அடைமொழி மட்டும் இருப்பதனால் அது எந்த அரசர் என்னும் விவாதம் ஆய்வாளர்களிடையே இன்றும் தொடர்கிறது. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி முதல் குடவாயில் பாலசுப்ரமணியம் வரையிலான ஆய்வாளர்கள் கிடைக்கும் குறைந்தபட்ச தரவுகளை ஊகத்தால் இணைத்து எழுதியதே நம்மிடமுள்ள சோழர் வரலாறு.
சோழர்கால சடங்குகள், ஆடைகள், நகைகள், கட்டிடங்கள் ஆகியவை பற்றி நமக்கு எந்த தெளிவான சித்திரமும் இல்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக சோழர்கால உடைகள் மற்றும் ஆபரணங்கள் பற்றிய தரவுகளை தாராசுரம் போன்ற ஆலயங்களிலுள்ள மிகச்சிறிய கற்செதுக்குச் சிற்பங்களில் இருந்து வரைந்து எடுக்கவேண்டியிருந்தது. உதாரணமாக, சோழர்காலத்தில் போரில் தலைக்கவசம் அணிந்திருந்தார்களா என்ற விவாதம் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்பட அணியினரிடையே ஒருமாத காலம் ஓடியது. அதன் எழுத்தாளனாக நான் மணி ரத்னத்துக்கு இந்த தரவுகள் சார்ந்து ஏராளமான கடிதங்களை எழுதினேன்.
ஆகவே சோழர்களின் செங்கோலின் வடிவம் இது என எவரும் சொல்லமுடியாது. நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் அளித்த செங்கோல் சென்னையின் உம்மிடி பங்காரு செட்டி என்னும் நகைத்தயாரிப்பாளரால் வடிவமைக்கப்பட்டது. அது ராஜாஜி அவசரமாக கோரியமையால் உருவாக்கப்படவில்லை. நேருவுக்கு பரிசாக அளிக்கப்படும் பொருட்டு அது முன்னரே திட்டமிடப்பட்டுவிட்டது என்றே தெரிகிறது. அதிலுள்ளது திருவாவடுதுறை ஆதீனத்தின் நந்தி அடையாளமே ஒழிய சோழர்களின் அடையாளம் அல்ல.
அத்துடன் ஒன்றும் சொல்லவேண்டும், சோழர்கள் சைவர்கள். அவர்களின் குலகுரு கருவூர்த்தேவர் என்னும் சைவ ஆசாரியார். ஆனால் சோழர்களின் முதன்மை அமைச்சர் அநிருத்த பிரம்மராயர் வைணவ ஆசாரியார். சோழ அரசு சைவ அரசு அல்ல. அக்காலத்தைய பெரும்பாலான இந்திய அரசுகளைப்போல அது ஒருவகை மதச்சார்பின்மை உடையது. சோழர்கள் ஏராளமான வைணவ ஆலயங்களை கட்டினார்கள். நாகப்பட்டினத்தில் இருந்த பௌத்த மடாலயமான சூடாமணி விகாரத்துக்கு ராஜராஜசோழன் நிதி வழங்கினான். ஏராளமான சமணப்பள்ளிகள் சோழர்களால் உருவாக்கப்பட்டன. ராஜராஜராஜப் பெரும்பள்ளி, ராஜேந்திரப்பெரும்பள்ளி என அவர்களின் பெயராலேயே அவை அழைக்கப்பட்டன. ஆகவே சோழர்கள் முடிசூட்டிக்கொண்ட சடங்கு என்பது சைவமதத்தவர்கள் மட்டுமே நடத்திவைப்பதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அன்றிருந்த அத்தனை மதத்தலைவர்களின் வாழ்த்தும் அவர்களுக்கு அப்போது அளிக்கப்பட்டிருக்கும்.
அடுத்த வினா, சைவமடங்கள் சோழர்களுக்கு செங்கோல் வழங்கினவா? இருக்க வாய்ப்பே இல்லை. பதிமூன்றாம் நூற்றாண்டு வரையிலான இந்து மரபின்படி பிராமணர், ஷத்ரியர், வைசியர் ஆகிய மூன்று பிறப்பாளர்களே துறவுபூண உரிமைகொண்டவர்கள். ஏனென்றால அவர்களே சுதந்திரமானவர்கள். சூத்திரர்கள் முதல்மூவருக்கும் கட்டுப்பட்டவர்கள். ஆகவே அவர்களுக்கு துறக்க உரிமை இல்லை. பௌத்த, சமண மதங்கள்கூட இந்த கட்டுப்பாட்டை கடைப்பிடித்தன என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. சைவ மடங்களின் தலைவர்கள் நம் சாதியமைப்பின்படி சூத்திர சாதியினர்.
இந்த மரபு உடைக்கப்பட்டு சைவமடங்கள் உருவானது பொதுயுகம் 14 ஆம் நூற்றாண்டில். தமிழகத்தின் சைவமடங்களின் தோற்றம் ஒரு மகத்தான பண்பாட்டு நிகழ்வு. சைவம் சோழர்களின் ஆட்சிக்குப்பின் பன்னிரண்டு பிரிவுகளாக ஆகி சிதைவுற்றபோது ஒரு மீட்பியக்கமாக சைவ மடங்கள் உருவாயின. பொயு 8 ஆம் நூற்றாண்டுமுதல் தமிழகத்தில் ஏகான்மவாதம் என்னும் சைவதத்துவம் ஓங்கியது, அது வேதாந்தத்துக்கு நெருக்கமானது, சிவனே நான் என்னும் பொருள்படும் ‘சிவோகம்’ என்னும் கோஷம் கொண்டது. இதை மறுத்தவர் பொயு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் என்னும் சைவஞானி. பசு–பதி –பாசம் என்னும் மும்மைத்தத்துவத்தை முன்வைத்த சிவஞானபோதம் என்னும் நூலை இவர் இயற்றினார். அவருடைய தத்துவ மரபு சைவசித்தாந்தம் என அழைக்கப்படுகிறது.
மெய்கண்டாரிடம் 49 மாணவர்கள் பயின்றனர், அவர்களில் முதல்வர் அருள்நந்தி சிவாச்சாரியார். அவருடைய மாணவர் மறைஞானசம்பந்தர். அவருடைய மாணவர் உமாபதி சிவாச்சாரியார். உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணவர்தான் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமச்சிவாய மூர்த்திகள் என்னும் பஞ்சாக்கர தேவர். அவருக்குப்பின் அவர் மாணவர் ஆதிசிவப்பிரகாசர்தான் இந்த மடத்தை ஒரு பெரிய அமைப்பாக ஆக்கியவர். இந்த மடத்தில் இருந்து பல சைவ மடங்கள் கிளைபிரிந்து வளர்ந்தன.
இந்த சைவத்துறவியர் மரபு திருக்கையிலாய பரம்பரை என்றும் சந்தான மரபு என்றும் அழைக்கப்படுகிறது. சந்தானம் (வாரிசு) என அழைக்கப்படும் இந்த மரபு இரண்டாகப் பகுக்கப்படுகிறது. அகச்சந்தான மரபு, புறச்சந்தான மரபு. அகச்சந்தான மரபு என்பது புராணத்தில் உள்ளது. சிவபெருமானில் தொடங்குவது இம்மரபு. நந்திதேவர், சனத்குமார், சத்தியஞானதரிசி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் அகச்சந்தான மரபினர். பரஞ்சோதி முனிவரின் மாணவர் மெய்கண்டார். மெய்கண்டாரும் அவருடைய மாணவர் வரிசையும புறச்சந்தான மரபைச் சேர்ந்தவர்கள். அதாவது இவர்களுக்கு துறவு தொன்மத்தில் சிவபெருமானால் அளிக்கப்பட்டது. நடைமுறையில் பரஞ்சோதி முனிவரிடமிருந்து வழிவழியாக வருவது. இப்படித்தான் சூத்திர சாதியில் துறவியர் உருவானார்கள். இது உண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு புரட்சி.
இந்த சைவமடங்கள் அரசர்களால் பேணப்பட்டன. சிறிய அரசுகளைப்போலவே செல்வமும் அதிகாரமும் கொண்டவையாக ஆயின. இவை ஆலயங்களை நிர்வாகம் செய்தன. சைவத்திற்கும் தமிழுக்குமான கல்விநிலையங்களை நடத்தின. தமிழ்ப்பண்பாட்டில் இவற்றின் இடம் மிகமிக முக்கியமானது. தமிழ் இலக்கியநூல்கள் இந்த மடங்களின் நிலவறைகளில் இருந்துதான் மீட்டெடுக்கப்பட்டன. பல பேரறிஞர்கள், ஆன்மஞானிகள் இந்த மரபில் உருவாகியுள்ளனர்.
சோழர்கள் 1279 லேயே, இந்த மடங்கள் உருவாவதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே, பாண்டியர்களால் பெரும்பாலும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர். சோழர்களின் வம்சம் என எதுவுமே தமிழகத்தில் எஞ்சவில்லை. ஆகவே சைவ மடங்களுக்கும் சோழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாயக்க மன்னர்களாலும் பின்னர் மராட்டியர்களாலும் சைவ மடங்கள் ஆதரிக்கப்பட்டன என்பதே வரலாற்று உண்மை.
தமிழகத்தில் சைவ மடங்கள் உருவானபின்னர் ஏறத்தாழ நாநூறாண்டுக்காலம் மன்னராட்சி திகழ்ந்துள்ளது. இந்த மன்னர்களில் எவரேனும் சைவமடங்களின் செங்கோல் வழியாக அதிகாரக் கைமாற்றம் செய்தனர் என்பதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை நானறிய இல்லை. இவர்களின் காலகட்டத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் வைணவர்கள். அவர்களுக்கு அகோபிலம் போன்ற வைணவமடங்கள்தான் குருபீடங்கள். மராட்டியர்களுக்கு குலகுரு இந்த சைவமடத்தலைவர்கள் அல்ல.
காஞ்சி சங்கராச்சாரியார் வேண்டுமென்றே பொய்சொன்னார் என நான் எண்ணவில்லை, அவருடைய ஆளுமை அத்தகையதல்ல. அவருக்கு அச்செய்தி சொல்லப்பட்டிருக்கலாம். அவருடையது மரபான உள்ளம், அது எதையும் உடனே புராணமாக மாற்றிக்கொண்டுவிடும். (அல்லது அவரை ஒட்டி இன்று பிறரால் உருவாக்கப்படும் ஏராளமான புராணக்கதைகளில் இதுவும் ஒன்று) இந்தியாவில் வரலாறு என்பது உடனடியாக புராணமாக ஆகிக்கொண்டே இருக்கிறது. நமக்கு இந்தியவரலாறு என கிடைப்பதே பெரும்பாலும் புராணங்கள்தான். சோழர்களின் வரலாறு எவ்வளவு குறைவோ அதேபோல சோழர் பற்றிய புராணக்கதைகள் மிகுதி. ஒரு வரலாற்றுச் செய்தி உடனே முளைத்து வளர்ந்து புராணமாக ஆகிவிடும்.
இங்கே ஒரு புராண இயந்திரம் செயல்பட்டுக்கொண்டே உள்ளது. மதம் சாராத அரசியல் விஷயங்களில்கூட நாம் புராணங்களைத்தான் உருவாக்கிக் கொள்கிறோம். ஈ.வெ.ராமசாமி முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை அத்தனைபேரைப் பற்றியும் ஏராளமான அற்புதப் புராணங்களைத்தான் உருவாக்கி வைத்துள்ளோம். அப்படி தமிழகத்தில் பரவலாக ஏற்கப்பட்ட நூறு ‘நவீன புராணங்களை’ சொல்ல முடியும். அந்தப்புராணங்களுக்கு ஆதாரம் கேட்டால் அந்த தரப்பினர் உச்சகட்ட சீற்றம் கொள்கிறார்கள். எம்.ஜி.ராமச்சந்திரனின் கைக்கடிகாரம் அவருடைய சமாதிக்குள் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதாக நம்பி சமாதிமேல் ஒவ்வொரு நாளும் பலநூறுபேர் காதை வைத்து உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் இன்றும்.
இப்படிப்பட்ட புராணங்களை அதிகாரம் மிகச்சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டு தன் அடித்தளத்தை அமைக்கிறது. மு.கருணாநிதி ‘சோழன்’ என்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் ‘சேரன்’ என்றும் இங்கே சொல்லப்பட்டதை நினைவுகூர்க. எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குச் செங்கோல் கொடுத்தார். கருணாநிதி செங்கோலுடன் இருக்கும் பல நிகழ்வுப்படங்கள் உள்ளன. இன்று திருவாவடுதுறை செங்கோல் விஷயத்திலும் அதுவே நிகழ்கிறது. நாம் மறுப்பது அந்த புராண அம்சத்தை, அது வரலாறு அல்ல என்கிறோம். அவர்கள் அதிலுள்ள துளி வரலாற்றை ஆதாரமாக திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுகிறார்கள். இவர்களிடம் விவாதிக்கவே முடியாது. அவதூறு, ஏளனம், தகவல்திரிப்பு வழியாக விவாதிப்பவர்கள் சோர்வுறச் செய்யப்படுவார்கள். திரும்பத்திரும்ப உச்சகட்டப் பிரச்சாரம் வழியாக ஒரு புனைவு வரலாறாக நிலைநிறுத்தப்பட்டு காலப்போக்கில் தொன்மம் என ஆகும். நடைமுறையில் பெரிதாக நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் சொல்லாமலும் இருக்க முடியாது.
இதன் அபாயங்கள் என்ன? முதல் விஷயம் இந்தியாவின் மொத்த அதிகாரத்துக்கும் அடையாளமாக பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் சைவ மடத்தால் அளிக்கப்பட்டது என்றால் இங்கே வைணவத்தின் இடமென்ன? நந்தி சிலை வைணவர்களுக்கு ஏற்புடையதா என்ன? சைவ மடம் அதிகாரக் கைமாற்றம் செய்தது என்றால் மற்ற நூற்றுக்கணக்கான மடங்களின் முக்கியத்துவம் என்ன? தேசக்கட்டமைப்பில் இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பார்ஸி உடபட மற்ற மதங்களின் பங்கு என்ன? மதநம்பிக்கை அற்றவர்களும் அந்த மதச்செங்கோலுக்கு கட்டுப்பட்டவர்களா? சரி, நாராயணகுருவின் மரபை ஏற்ற அத்வைதியான எனக்கு இங்கே ஏதாவது இடமுண்டா? நீண்டகால அளவில் இந்த செயலின் விளைவுகள் என்னவாக இருக்கும்?
நான் பலமுறை குறிப்பிட்டுள்ளது போல அடிப்படைவாதத்துக்கு உண்மையில் பண்பாட்டு அக்கறையோ மதநம்பிக்கையோ இல்லை. அவர்கள் பண்பாட்டையும் மதத்தையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்றைய ஆட்சியாளர்களுக்கு மதநம்பிக்கை, மத ஆசாரங்களில் மதிப்பு இருந்திருந்தால் சைவ மடாதிபதிகளை டெல்லிக்கு அழைத்து வரிசையாக நிற்கவைத்திருக்க மாட்டார்கள். மரபின்படி மன்னரே ஆனாலும், ஜனாதிபதியே ஆனாலும் மடாதிபதியைத்தான் தேடிவந்து வணங்கி முறை செய்யவேண்டும். அவர் எவரையும் சந்திக்கச் செல்லக்கூடாது. அப்படி மரபே இல்லை.
ஏனென்றால் மடாதிபதி அரசர்களுக்கும் மேலானவர், அவர் அரசர் உட்பட அனைவருக்கும் ஞானாசிரியரின் இடத்திலிருப்பவர். ‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்ற திருநாவுக்கரசரின் சொல்தான் அவரது கொள்கை அறிவிப்பு. அவர் எந்த அரசிலும் குடிமகன் அல்ல. தனக்கான துறவாசாரங்கள் தவிர எதற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. ‘துறவிக்கு வேந்தன் துரும்பு’ என ஒரு பழைய கூற்று உண்டு. அதுதான் அவர்களின் ஆசாரமாக இருக்கவேண்டும். அரசை கண்டிக்கவும் வழிநடத்தவும் கடமை கொண்டவர்கள் அவர்கள். அதிகாரம் அப்படி ஒன்றையொன்று கட்டுப்படுத்தும் பல அமைப்புகளால்தான் ஓரளவேனும் நீதியுடன் செயல்பட முடியும்.
24 ஜனவரி 2009ல் கும்பகோணத்தில் நடந்த ஒரு விழாவில் நான் சித்தி அடைந்த முந்தைய தருமபுரம் ஆதீனகர்த்தர் அவர்களுடன் கலந்துகொண்டேன். அப்போது எதிர்பாராமல் மேடையேறிய ஒருவர் இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரில் சைவர்களான விடுதலைப்புலிகள் வெல்லவேண்டும் என ஆதீனகர்த்தர் அவர்கள் ஆசியளிக்கவேண்டும் என கோரினார். முதிர்ந்துப் பழுத்த ஆதீனம் அதை உறுதியாக மறுத்தார். “ஒரு போரில் ஒரு தரப்பு வெல்லவேண்டும் என துறவியான நான் சொல்லக்கூடாது. அது சைவர்களே ஆனாலும். அது போரை ஆதரிப்பதாகும். உலகத்தில் அமைதி நிலவவேண்டும் என்று மட்டுமே நான் வாழ்த்தமுடியும்” என்று மென்மையாகச் சொன்னார்.
அன்று அங்கிருந்த மொத்த மனநிலையும் அவருடைய கூற்றுக்கு எதிரானது, ஆனால் அவருடைய முதுமையும், மரபின் அதிகாரமும், அனைத்துக்கும் மேல் அவருடைய அறிவின் மீதான மதிப்பும் அதை ஏற்கச் செய்தன. அதுவே ஓர் இந்து தன் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கும் ஆன்மிகத் தெளிவு. இன்று ஓர் உறுதியான இந்துவாக எனக்கு என் மதத்தின் ஞானாசிரியர்கள் அதிகாரத்தின் முன் கையறுநிலையில் வரிசையாக நிற்கும் காட்சி பெரும்அவமதிப்பாக இருந்தது. உண்மையிலேயே கண்ணீர் மல்கினேன். இது ஒரு யுகத்தின் சாவை காட்டும் காட்சி என தோன்றியது.
இன்ற அத்தனை மடாதிபதிகளும் ஓர் ஆட்சியாளருக்காக அனைத்து மரபுகளையும் மீறி சென்று வாழ்த்துவதற்காக வரிசையாக நிற்கிறார்கள். குறியீட்டுரீதியாக அவர் அந்த மடாதிபதிகளுக்குமேல் ஆதிக்கமும் புனிதமும் கொண்டவராக நிறுவப்படுகிறார். இனி இதை மற்ற ஆட்சியாளர்களும் தொடரலாம். இப்படி அரசியல்வாதிகளுக்கு புனிதமான அதிகாரம் அளிக்கும் இடம் மடாதிபதிகளுக்கு உண்டு என்றால் விரைவிலேயே அந்த மடங்களை அரசியல்வாதிகள் கைப்பற்றுவார்கள். அங்கே தங்களுக்குச் சாதகமான மடாதிபதிகளை நிறுவுவார்கள். அது பலநூறாண்டுகளாக இருந்துவரும் அந்த மாபெரும் நிறுவனங்களின் அழிவுக்கே இட்டுச்செல்லும். ஒவ்வொரு உண்மையான இந்துவும் கவலைகொள்ள வேண்டிய இடம் இதுவே. அடிப்படைவாதம் மதத்தின் காவலன் அல்ல, அது மதத்தை அழிக்கும் முதற்பெரும் சக்தி.
அனைத்துக்கும் மேல் நான் முதலில் கூறிய அழிவு. ஒருவரை நாம் ஆட்சியாளராக தேர்வுசெய்கிறோம் என்றால் அவருடைய அதிகாரம் என்பது முழுக்கமுழுக்க நாம் நமது வாக்குகளால் அளிப்பது மட்டும்தான். நாம் அந்த வாக்கை மாற்றி அளித்தால் மறுகணமே அவர் நம்மைப்போன்ற ஒருவர். இந்த உரிமையே மக்களாகிய நமக்கு அவரிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கவும், அவருக்கு ஆணையிடவும் உரிமையை அளிக்கிறது. அத்தனை உரிமைப்போராட்டங்களுக்கும் அதுவே அடிப்படை. ஆட்சியாளருடைய அதிகாரம் ஏதேனும் வகையில் புனிதமானது, தெய்வீகமானது என்றால் அவரிடம் நாம் மன்றாட மட்டுமே முடியும். அவருக்கு ஆணையிடும் உரிமை நமக்கு இல்லாமலாகிறது. அது ஜனநாயகம் நமக்களிக்கும் உரிமை. மதநம்பிக்கையின் பொருட்டோ வேறேதோ பற்றின்பொருட்டோ அதை நாம் கைவிடுகிறோம் என்றால் அது தற்கொலை.
ஆட்சியாளரை வீரராக, தியாகியாக உருவகித்து தொன்மக்கதாபாத்திரமாக ஆக்குவது ஜனநாயகத்தை ஆற்றலிழக்கச் செய்யும். மதம், இனம், மொழி, பண்பாடு என எந்த காரணத்தாலானாலும் சரி; ஆட்சியாளருக்கு தெய்வீகத்தன்மையை அளிப்பது ஜனநாயகத்தின் முற்றழிவு. நம் முன்னோர் நமக்கு ஈட்டி அளித்த ஒவ்வொரு உரிமையையும் நாமே கைவிட்டு அடிமைகளாகிறோம். ஒவ்வொரு சுடராக ஊதி அணைத்துக்கொண்டு இருள்நோக்கிச் செல்கிறோம். நம்மைச்சூழ்ந்திருக்கும் பல நாடுகள் ஏற்கனவே அந்த இருளுக்குள் சென்றுவிட்டவை. அந்நாடுகள் நமக்களிக்கும் திட்டவட்டமான ஒரு பாடம் உண்டு. அடிப்படைவாதம் நேரடியாக பொருளியல் அழிவை, போர்களை மட்டுமே கொண்டுவரும். ஒரு விதிவிலக்குகூட உலகவரலாற்றில் கிடையாது.