அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். ஆங்கில நாவல்களையும், முக்கியச் சிறுகதைகளையும் முழுமையாக படிக்காதவர்கள், படித்தவர்களே தங்கள் நினைவுகளை மீட்டுக்கொள்ள, Sparknotes பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது கிட்டத்தட்ட நமது கோனார் தமிழ் உரை போல என்று நினைத்துக்கொள்வேன். தமிழ் நாவல்களுக்கு, சிறந்த சிறுகதைகளுக்கு Sparknotes போன்ற ஒன்று எனது தேடலில் கிடைத்ததில்லை. ஆனால், வெண்முரசுக்கு இருக்கிறது என்று இனிமேல் சொல்லிக்கொள்ளலாம்.
சமீபத்தில், நண்பர் கீதா செந்தில்குமார் அவர்கள் வடிவமைத்துள்ள Venmurasu Snippets என்ற போஸ்டர்களை முதற்கனல் அத்தியாயங்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்டிருப்பதை பார்த்தேன். சஹா மஹாபாரதத்திலும், இராமாயணத்திலும் ஆழமான கேள்விகள் கேட்கும்பொழுது, ராதாவும், நானும் உனக்கு வெண்முரசு மாதிரி ஒவ்வொன்றும் தமிழில் எழுதப்பட்டால்தான். உனக்கு பதில் சொல்லமுடியும் என்போம். தமிழில் வாசிக்கமுடிந்தாலும், அவனால், வேகமாக வாசிக்கமுடியாது. கீதாவின் இந்த போஸ்டர்கள், அவனைப்போல அமெரிக்காவிலேயே வளர்ந்துவிட்ட அடுத்த தலைமுறையினருக்கு உதவும். அதாவது முறையாக வெண்முரசு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளிவரும்வரை.
ஏற்கனவே வாசித்தவர்கள்கூட, அவசரமாக குறிப்புகள் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான் வாசித்தவரை நல்ல புரிதல்களுடன்தான் முதற்கனல் அத்தியாயங்களின் சுருக்கமான வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் இருக்கும் போஸ்டர்களில் கூட பெயர்கள் தமிழிலேயே உள்ளது. அதனால் என்ன? கல்விக்கூடங்களில் ஆங்கிலமே மூலமொழியாகிவிட்ட தமிழகத்தில்கூட, இரத்தினச் சுருக்கமாக வெண்முரசு வாசிக்கக் கிடைக்கிறது. இப்பொழுதெல்லாம் வெண்முரசை முழுதாக வாசிக்கவேண்டும் என்ற உந்துதலை வெகுவான வாசகர்களிடம் நான் கண்கூடாகப் பார்க்கிறேன். ஆதலால், இதைப்போன்ற முயற்சிகள் வெண்முரசை மேலும் புதிய வாசகர்களைக் கொண்டுவரும் என்றே நினைக்கிறேன். தடையாக இருக்காது என்பதே என் எண்ணம். கீதா மற்றும் நண்பர்களின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன். மழைப்பாடல் அத்தியாயங்கள் தயாராகிக்கொண்டுள்ளதாக தகவல் சொன்னார்கள்.
ஆங்கில போஸ்டர்கள் : bit.ly/VMSnippets
தமிழ் போஸ்டர்கள் : bit.ly/TamilVMSnippets
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்