சுசி, ஏற்கனவே இறந்துவிட்ட ஒருவனின் வாக்குமூலம் இது. அவன் தன்னைச் சூழ்ந்தவர்களால் முற்றிலும் புரிந்துகொள்ளப்படாதவனாக இருந்தான். ஏனென்றால் அவனை அவனே புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொருகணமும் அவன் அஞ்சியது அவனால் புரிந்துகொள்ள முடியாத ஒருவன் அவனிலிருந்து வெளிப்படும் தருணங்களையே.
சந்திராவின் ·ப்ளாட்டுக்கு முன் பைக்கை நிறுத்திவிட்டு லி·ப்டில் ஏறினேன். என் மனம் படபடத்தது. ஒருநாளும் உணராத பதற்றத்தில் கண்பார்வையே மங்கலாகி வருவதுபோலிருந்தது. நேராக எட்டாவது மாடிக்குச் சென்றுவிட்டேன். பின்பு மீண்டும் லிப்ட் பித்தானை அழுத்தி இம்முறை தரைக்கே வந்துவிட்டேன். தலையில் அடித்துக்கொண்டபடி மீண்டும் ஏறி ஆறாவது மாடிக்கு வந்தேன். லிப்ட் திறப்பதற்கு முன் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். சட்டையை சரி செய்துகொண்டேன். புன்னகையை வரவழைத்தேன். நெஞ்சில் இல்லாத புன்னகையை முகத்தில் வரவழைப்பதென்பது எத்தனை சிரமமானது…
வெளியே வரும்போது ராஜம்மா கிழவியின் முகத்தைத்தான் பார்த்தேன். பக்கத்துவீட்டு வம்புக்கிழம். தொங்கிய தாடைச்சதைகள். கண்கள் மேல் தொங்கும் மேலிமைகள். ஐயத்தால் சரிந்த பார்வை.. ”என்ன இப்ப வாறே?” என்றாள் என்ன அர்த்தமில்லாத கேள்வி.
எரிச்சலுடன் ”நவீன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்..”என்றேன்
”ஆ” என்றாள். அவளுடைய பார்வை குரல் அனைத்திலும் ஒரு அழுத்தம்.
அழைப்புமணியை அழுத்திய என் விரல் நடுங்கியது. கதவு திறந்து நவீன் சிரித்தபடி வெளிப்பட்டான். ”ஹாய் அருண்” என்றான். டென்னிஸ் சீருடை அணிந்திருந்தான்.
”ஹாய் நவீன்… எங்கடா உங்க ஆத்தா?”
”உள்ள படுத்திருக்காங்க… அவளுக்கு தலைவலி…” என்றான் ”கம் இன்”
”வெளயாடப்போறியா?”
”இல்ல , இப்பதான் ஆடிட்டு வந்தேன். டிரெஸ்சை கழட்டலை. இ.எஸ்.பி.என்னிலே யு.எஸ் ஓபன் போய்ட்டிருந்தது, பாத்தேன். என்ன இன்னைக்கு லீவா?”
”இன்னிக்கு போகல்லை. லண்டனிலேருந்து சுசி வந்திருக்கா…” என்றபடி அமர்ந்தேன். நவீன் பத்துவயதான பையன் என்றாலும் தோற்றமும் தோரணையும் பெரிய பையன் மாதிரித்தான். நல்ல குண்டு. குண்டான பையன்கள் ஒரு கட்டம்வரை கைக்குழந்தைபோல இருக்கிறார்கள். சட்டென்று பெரிய மாமாக்கள் ஆகிவிடுகிறார்கள். பையன்பருவமே அவர்களுக்கு கிடையாது.
”ஜஸ்ட் எ மினிட்” என்றபடி உள்ளே போனவன் உள்ளே ”அருண் அண்ணா வந்திருக்கான்” என்று சொல்வது கேட்டது
நான் பதற்றமாக கைவிரல்களால் தாளமிட்டேன். சோபாவில் அமர்ந்து அழுந்திக்கொண்டு டிவியில் ஓடிய உருவங்களை அர்த்தமில்லாமல் பார்த்தேன். என் பதற்றத்தை நானே உணர்ந்து அதை வெளியேற்றுபவன் போல மெல்ல மூச்சுவிட்டேன். எண்ணங்களை திசைதிருப்ப விரும்புபவன் போல ஒரு இதழை எடுத்தபின் அதை மீண்டும் வைத்தேன். என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. பதற்றம் மிக்க மனத்துடன் உட்கார்ந்திருப்பது ஹீலியம் வாயு நிறைந்த உடலுடன் அமர்ந்திருப்பது போன்றது….
மெல்லிய காலடி ஓசை… அவள்தான். அவள் காலடி ஓசையை நான் அத்தனை துல்லியமாக அறிவேன். மெல்லக் கேட்கும்தோறும் ஓசைமிக்கதாக ஆகும் காலடி ஓசை…
கூந்தலை அள்ளி சுழற்றியபடி மெல்லிய பட்டு நைட்டி அணிந்தவளாக சந்திரா வந்தாள். புன்னகையுடன் ”இப்பதான் வந்தியா? எனக்கு தலைவலி… அதான் படுத்திருந்தேன்…” என்றாள். தூங்கி எழுந்தவள்போல முகம் வீங்கியிருந்தது.
”கொஞ்சம் லேட்டாயிடுச்சு..வெளியே போயிருந்தேன்…”
”அம்மா , உனக்கு காபி வேணுமா?” என்றான் நவீன் உள்ளே
”அரை டம்ளர் குடுடா…நீ சாப்பிடறியா?”
”ம்” என்றேன்
சந்திரா ”…அருண் அண்ணாவுக்கும் காபி” என்றபின் என்னைக் கூர்ந்து நோக்கினாள். நான் தலைகுனிந்தேன்.
மெல்லிய குரலில் ”இப்ப வந்திருக்கே?” என்றாள்
”நேரமாயிடுச்சு” என்றேன்
மெல்ல கூர்ந்து நோக்கி தலையசைத்தாள். ”சினிமா போயிருந்தியோ?”
நான் நிமிர்ந்து நோக்கினேன்
”சினிமா பாத்தா உன் கண்ணு உள்ள போயிடுது…”
பார்வையை விலக்கி ஆமாம் என்று தலையசைத்தேன்
காபியுடன் நவீன் வந்தான். பெர்முடா டி ஷர்ட்டுக்கு மாறியிருந்தான். நான் காபி எடுத்துக் கொண்டேன். நவீன் காபியுடன் எதிரே சோபாவில் அமர்ந்து டிவியைப்போட்டான். காபியை உறிஞ்சியபடி ”பாக்கிறியா?” என்றான்
”மூட் இல்லை” என்றேன். மிக நெருக்கமாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட கணங்கள். பின்னால் செல்லும் ஆட்டை முட்டி முன்னால்தள்ளி நகரும் ஆட்டுமந்தைபோல காலம்…
சந்திரா காலிக்காபி கோப்பைகளுடன் எழுந்து உள்ளே சென்றாள்.
நவீன் டிவியை விட்டு பார்வையை எடுக்காமலேயே ”எங்க ஸ்கூல் டீமிலே என்னைச் சேக்கலை. வெயிட் ஜாஸ்திங்கிறான். எதுக்கு வெயிட்டைப் பாக்கணும், ஸ்டாமினா இருக்கான்னு பாத்தா போதாதா? நான்சென்ஸ்” என்றான் ஒரு சிப்ஸ் பொட்டலத்தை பிரித்தபடி
”பொட்டட்டோ சிப்ஸை நீ விடாதவரைக்கும் வெயிட் குறைய சான்ஸே இல்லை” என்றேன்.
”ஐ டோண்ட் கேர்” என்றான். சிப்ஸுடன் அவன் டிவியில் மூழ்கியிருந்தான். நான் ஹாலில் இருந்த மாலைபோடப்பட்ட குமார்மாமாவின் படத்தையே பார்த்தேன். அவருக்கு நவீன் சாயல் இருந்தது. பொதுக்கான உடம்பு.
”அருண்” என்றாள் சந்திரா.
”கூப்பிட்டீயா?” என்றேன்
”அங்க டிரே இருக்கா? இங்க எடுத்திட்டுவரியா?”
நான் டிரேயுடன் உள்ளே சென்றேன். சமையலறையில் சந்திரா கோப்பைகளை கழுவிக் கொண்டிருந்தாள். நான் மெல்லச்சென்று அருகே நின்றேன்.
”நீ வரமாட்டேன்னு நெனைச்சேன்…” என்றாள் என்னைப் பார்க்காமலேயே. ”ஆனா நீ ரொம்ப புத்திசாலி. நவீன் வீட்டில இருக்கிற நேரம் பாத்து வந்திருக்கே” அவள் குரலின் கனத்த அடங்கிய தன்மை என்னை எப்போதுமே கிளரச்செய்வது. கெட்டியான தேன் கனத்துத் தயங்கி விழுவது போல. சூடான தேன்…
நான் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் அவளே ”போதும். பொய்யெல்லாம் சொல்ல ஆரம்பிக்க வேண்டாம்” என்றாள்்
”நான் இப்ப என்ன தப்பு பண்ணினேன்?” என்றேன் மெல்ல
”தப்பு பண்ணப்போறே…அதான்”
”என்ன தப்பு?”
அவள் நிமிர்ந்து என் கண்களைப்பார்த்தாள் ”என்ன தப்பு தெரியல்லை?”
”இல்லியே” அந்த நிலையிலும் நான் இரண்டாகப் பிரிந்தேன். ஒரு நான் அவள் உடலை என் இருப்பே கண்களாக ஆகி பார்த்துக்கொண்டிருந்தேன். வெண்மையான கழுத்தின் சருமத்தில் ஒட்டியிருந்த கூந்தலிழைகளை ஆடை விலக்கத்துக்குள் அவள் மார்புப்பிளவு மூச்சில் மெல்ல அசைவதை அவள் கன்னத்தில் புதிதாக முளைவிட்டிருந்த மெல்லிய சிவந்த பருவை எனக்கு எப்போதுமே பிடித்தமான நெற்றிமுனையின் வெடுக்காய வடுவை….
அவள் கோபத்தில் சிவந்த முகத்துடன், ”அந்தப்பொண்ணை நீ லவ் பண்ணப்போறே. அதான். உன் முகத்திலயே தெரியுது தேன்குடிச்ச நரி மாதிரி ஒரு இளிப்பு”
”சத்தியமா இல்ல..”
”பொய் சொல்லாதே…இதாலேயே போட்டிருவேன்” என்று கரண்டியை காட்டினாள்.
”அவளே இன்னைக்குதான் வந்திருக்கா…”
”ஒரு நாள் எதுக்கு? ஒரு நிமிஷம்போதும்… ஒண்ணுமட்டும் தெரிஞ்சுக்க உன் மனசை நீ என்கிட்டேருந்து மறைக்க முடியாது… ஏன்னா நான் அதை அப்டி கவனமா உத்து பாத்திட்டிருக்கேன்.. ” அவள் கண்கள் ஒளிவிட்டன ”உன்னை ஓவ்வொரு செகண்டும் நெனைச்சிட்டிருக்கேன்… முழிச்சிட்டிருக்கிறப்ப எல்லாம் உன்னைத்தான் பார்த்துட்டிருக்கேன்.. நீ என் கண்முன்னாடி இல்லாதப்பகூட நான் உன்னைத்தான் பார்த்திட்டிருக்கேன்.. ”
சட்டென்று என் கன்னத்தில் படீரென அடித்தாள் ”இப்ப நீ என்னைவிட்டு வெலகிப் போய்ட்டிருக்கே..” அவள் கண்களில் சட்டென்று ஈரம் படரந்தது. மூச்சு எழுந்தடங்கியது. மூக்கு காய்ச்சிய உலோகம் போலச் சிவந்தது. ஆம், நான் அவள் உடலை பார்க்கும் இன்னொருவனாக நின்றிருந்தேன். அவளருகே அவள் உடலைப் பார்க்காமல் நான் இருந்த ஒருகணம் கூட இல்லை…
”நீ எதையாவது கற்பனை செஞ்சுட்டு சொன்னா நானா பொறுப்பு?” என்றேன் வலிந்த கோபத்துடன்.
”டேய் என் கண்ணைப் பாத்துச் சொல்லு, நீ அவளை விரும்பலைன்னு… சொல்லுடா பாக்கலாம்”
நான் கண்களை திருப்பினேன்.
அவள் என் தோளைத்தொட்டு முரட்டுத்தனமாக திருப்பினாள். ”குமார் செத்துப்போய் ஏழுவருஷம் நான் அவரையே நெனைச்சுட்டு இருந்தேன்… மறுகல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எத்தனையோ பிரஷர் வந்திச்சு… நவீனுக்காகத்தான் வேணாம்ணு இருந்தேன்…”
”மெல்ல… அவன் கேக்கப்போறான்…”
”…என்னை மாத்தினவன் நீ… நான் உன் பின்னால வரல்லை… நீதான் என் பின்னால வந்தே… என்னை கொஞ்சம் கொஞ்சமா கரைச்சே…” அவள் குரல் கிசசுகிசுப்பாக இருந்தது.
நான் நவீனுக்குக் கேட்கிறதா என்று பார்த்தேன். அவள் அதைப் பொருட்படுத்தவேயில்லை
”இப்ப நான் உனக்கு அடிமை… நீ இல்லாம வாழ்க்கையே இல்லைன்னு ஆயிட்டுது எனக்கு… இனிமே உன்னை என்னால விட முடியாது. நீ எனக்கு வேணும்…. நீ எனக்குமட்டும்தான்… என்னை விட்டுட்டு போக விடமாட்டேன்” அவள் குரலில் ஏறி ஏறி வந்த அந்த மந்திர உச்சாடனத்தன்மை எப்போதுமே எனக்கு அச்சமூட்டுவது. அவள் வீங்கி வீங்கி பலமடங்கு பெரிதாக ஆகிவிடதுபோலத் தோன்றும்.
”இப்ப என்ன ஆச்சு?” என்றேன் , அவள் கண்களைச் சந்திக்காமல்.
”ஒண்ணும் ஆகல்லியா? நெஜமாத்தானா?” என்று கூர்மையான கண்களை என்மீது நாட்டி கேட்டாள்.
”நெஜம்தான் சந்திரா… சத்தியமா ஒண்ணும் ஆகல்லை” என்றபோது என்னால் அவளைப் பார்க்க முடியவில்லை.
”என் செல்லமே” என்று மூச்சிரைக்க கூவியபடி அவள் என்னை ஆரத்தழுவிக்கொண்டாள். அக்கணத்தில் அதை நான் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்ததை அறிந்தேன். அவளை அள்ளி இறுக்கி என் உடலுடன் சேர்த்துக் கொண்டேன்.
என்னை தன் மார்புகளோடு இறுக்கி மாறி மாறி ஆவேசமாக முத்தமிட்டாள். அவள் மார்புகளின் திண்மையையும் மென்மையையும் என் நெஞ்சில் உணர்ந்தேன். எனக்குக் கீழே அவளுடைய மென்மையான கழுத்துக்குழி மெல்லிய இதயத்துடிப்பால் அதிர்ந்துகொண்டிருந்ததை குனிந்து பார்த்தேன்.
மிக அருகே ஒரு பெண் உடல். கை வளையம் நிறைந்து திரண்ட பெண் உடல். என் கைகளுக்குள்… என் ஆளுகைக்குள்… ஆனால் மிக மிக அப்பால் இருப்பதுபோலவே எப்போதும் பிரமை கொள்ளச்செய்யும் மாயம் கொண்டது அது. என் கைகளுக்குள் இருக்கும்போதுகூட அதை என்னால் நம்பமுடியாதது போல. முதிரா இளமையின் ஒரு கிளர்ச்சியூட்டும் கனவு போல… ஒரு பெண்தான்… ஓர் உடல்தான்… உடல்… அதை எத்தனை சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம் சுசி… அது எத்தனை வல்லமை மிக்கது. எத்தனை மகத்தானது…
அக்கணம் அவளை இழுத்து என்னுடன் இணைத்துக்கொள்ள, இரு உடல்களும் இரண்டில்லாமல், ஆக விரும்பினேன். என் உடல் என்னைச்சூழ்ந்து மூடி இறுக்கியது. கடும்புழுக்கத்தில் உடைகளை களைந்து வீசுவதுபோல இவ்வுடலை களைந்துவீசி விட்டு அவளுக்குள் சென்று , அவள் கருவறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொள்ள வேண்டும்…
சுசி, நீ என்னை மன்னிக்கவே வேண்டாம். அக்கணம் நான் உன்னை வெறுத்தேன். உன்னைச் சந்தித்தமைக்காக மனம் கசந்தேன். உன்னை முற்றாக என் நெஞ்சிலிருந்து ஒதுக்கிவிட எண்ணினேன்.
கூடத்தில் கோல் விழுந்த ஒலி. நான் திணறலுடன் விடுவிக்க முயன்றேன். அவளுடைய ஆவேசத்தை என்னால் தடுக்க முடியவில்லை. முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சுவாங்க மெல்லமெல்ல அவள் தணிந்தாள். முகமெங்கும் கண்ணீர் வழிந்தது. உதடுகளும் மூக்கும் சிவந்து தீப்பட்டவை போலிருந்தன. இணைந்து ஒட்டிய கனத்த மார்புகள் ஏறியிறங்கின. அவற்றின் இடுக்கில் வியர்வை பொன்சருமத்தை பளபளக்கச்செய்தது.
என் காமத்தை தழல்விடச்செய்யும் அவளுடைய தோள்கள். அவற்றின் மென்மையான சருமத்தின் வரிகள் ரோமங்கள். அவளுடைய மார்பகங்கள்…. நான் அவளை என் கைகளால் தூக்கி அவளுடைய மார்புகளுக்குள் என் முகத்தைப் புதைத்துக்கோண்டேன். பின்பு வெறியுடன் அவள் மேலாடையை விலக்கி மார்புகளின் மேல் என் முகத்தை அழுத்தினேன். அவள் அதை அனுமதித்தாள். ஒருபோதும் அவள் அப்படி அபாயகரமாக அனுமதிப்பதில்லை.
அவள் கதவுகளை விலக்கி விலக்கி என்னைக் கொண்டு செல்வதுபோலிருந்தது .நான் இடம் காலம் எல்லாவற்றையும் மறந்து அவள் மார்புகள் அன்றி எண்ணமற்றவனாகி அவள் உடைக்குள் இருந்து அவள் இடமார்பகத்தை அள்ளி வெளியே எடுத்தபோது சட்டென்று அவள் என் மார்பில் கைவைத்து உந்தி பின்னுக்குத்தள்ளி மேலாடையை அள்ளி போட்டுக்கொண்டாள்
என்னை என் எல்லா கவசங்களையும் கழற்றி வைத்து விட்டு அவள் மட்டுமே கோலோச்சும் ஒரு வெட்டவெளியில் நிற்க வைத்துவிட்டாள் என உணர்ந்தேன். வெறுமொரு மிருகமாக அங்கே நின்றேன். என் முகம் அப்போது காமம் கொண்ட ஆதிக்குரங்கின் முகமாக இருந்திருக்கும். நான் அவளை எட்டிப்பிடிக்க முன்னகர்ந்தேன்.
”நோ” என்று அவள் கடுமையான குரலில் சொன்னாள். டீச்சர்களுக்கே உரிய முகபாவனை. நான் தணிந்தேன். சரசரவென என் உடலில் இருந்து ஆற்றல்கள் அனைத்தும் வெளியேறின. நான் பெருமூச்சு விட்டேன்.
”செத்திருவேன்… நீ இல்லேன்னா செத்திருவேன்..” என்று சொல்லி என் காதுகளைப் பிடித்து உலுக்கினாள்.
நான் அவள் முகத்தைப் பார்த்தேன். கன்னங்களின் மீது கண்ணீர் வழிந்ததை மிக அருகே கண்டேன். காதோர மயிர்க்கற்றைகள் கண்ணீரில் ஈரமாகியிருந்தன. உதடுகள் துடித்தன. தாளமுடியாத ஏக்கம் கொண்ட சின்னஞ்சிறுமி போலிருந்தது அவள் முகம்.
என் மனம் ஆதரவுதேடும் சிறுவனின் நிலையில் இருந்து ஒரே பாய்ச்சலில் ஆண்டு அரவணைக்கும் ஆண்மகனாக மாறியதை நானே வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை பாவனைகள் வழியாக காமம் தன்னை நடத்திக் கொள்கிறது!
அல்லது இவை ஒவ்வொன்றும் வேறு வேறு மனிதர்கள்தாமா? நூறு நூறு சந்திராக்களும் அருண்களும் ஒருவரை ஒருவர் நெருங்கியும் விலகியும் கவர்ந்தும் வெறுத்தும் வேவுபார்த்தும் கண்ணீர் வாரத் தழுவிக்கொண்டும் சலிக்காது ஆடும் ஒரு மாபெரும் மேடை.. என்ன எண்ணங்கள். காமத்தை கூர்ந்து கவனிப்பவன் அபத்தத்தின் பேரழகுள்ள கவித்துவங்களை மட்டுமே கண்டுகொள்கிறான் சுசி..
நான் அவளை இறுகப்பிடித்து அடக்கினேன் ”என்ன இப்ப..? .இங்கபார்…” என்றேன். அவள் கழுத்தைப்பற்றி முகத்தை மேலே தூக்கினேன். அவள் கன்னத்தில் இமைமுடி கண்ணீரின் பசையில் ஒட்டியிருந்தது.
”எனக்குப் பயமா இருக்கு… எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” என்று அவள் விசும்பினாள்
”சும்ம எதையாவது நெனைச்சுக்காதே… ப்ளீஸ்”
”என்னை விட்டுரமாட்டியே? சொல்லு” என் கைகளைப் பற்றினாள்.
”கண்டிப்பா இல்லை..சத்தியமா” என்று அவள் தலையை தொட்டேன்.
”உன் அம்மா மேல சத்தியமா சொல்லு”
அம்மா என்ற சொல்லில் நான் அதிர்ந்து அவள் மீதிருந்த பிடியை தளர்த்தினேன். அவள் என்னை மேலும் இறுக்கி என்னை நோக்கி முகம் தூக்கி ”சொல்லு…” என்றாள்
”அம்மா மேல சத்தியமா மாட்டேன்… போருமா”
அவள் சட்டென்று உடைந்து அழுதபடி என் தோளில் சாய்ந்தாள். அவள் உடல் குலுங்கியது. அவள் அழுதுகொண்டிருப்பதை வெறுமே பார்த்தேன். தன் மேல் சாய்ந்து அழும் ஒரு பெண்தான் ஆணை முழு ஆண்மகனாக உணர வைக்கிறாள்…
நான் அவளை மெல்ல தட்டினேன். அவள் பின்பக்கத்திரட்சியை கைகளால் கவ்வி இறுக்கி அவளை கழுத்திலும் சாய்ந்த இடது கன்னத்திலும் மென்மையாக முத்தமிட ஆரம்பித்தேன். அவள் மெல்ல பெருமூச்சுவிட்டாள். முகம் மலர்ந்தது. அழுகையும் பெண்களுக்கு ஓர் உறவுச்சம் போன்றது
பின்பு மெல்ல அழுகையடங்கி என் மார்பிலேயே முகம் சேர்த்து நின்றிருந்தாள். நான் அவளை மெல்ல விலக்க எண்ணினேன். அந்த எண்ணம் என் உடலில் எப்படியோ வெளிப்பட அவள் என்னை மேலும் இறுக்கிக் கொண்டாள்.
”தள்ளிப்போ… நவீன் வந்திரப்போறான்” என்றேன் ரகசியமாக.
”நீ எனக்கு ஒரு கிஸ் குடு..அப்பதான்”
”வெளயாடாதே”
”குடுக்கிறியா இல்லியா” என்று அடம்பிடிக்கும் குழந்தைபோலக் கேட்டாள். கன்னத்தில் அந்த இமைமயிரை கையால் எடுத்தேன். மிக மெல்ல… பெண்சருமத்தின் மென்மைக்கு ஈடுஇணையே இல்லை
”கிஸ் மீ”
”இத்தனைநேரம் அதைத்தானே செய்தோம்”
”கிஸ்மீ” என்று பெருமூச்சுவிட்டாள்.
”என்ன இது?”
”எனக்கு வேணும்”
நான் அவளை அணைத்து உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டேன். அவள் தாபத்துடன் முனகினாள். ‘ஐ லவ் யூ ஐ லவ் யூ” என்றாள். அது வேறு முத்தம். உதடுகள் சுடாகி உருகி இணையும் முத்தம். சூடு உடலெங்கும் பரவும் முத்தம்.
கனவிலிருந்து விடுபடுவதுபோல சட்டென்று பிடியை விட்டுவிட்டு நான் ஹாலுக்கு வந்தேன். நவீன் டிவியில் மூழ்கியிருந்தான். அவனைப் பார்த்தபோது சற்றே சங்கடமாக இருந்தது. சமீபநாட்களாக உருவாகிவரும் சங்கடம் அது.
”கெளம்புறியா? அருண்? ”என்றான் நவீன்
”ஆமாடா…போய் அர்ஜெண்டா ஒரு வேலை இருக்கு”
உள்ளிருந்து சந்திரா தலைமுடியை முடிந்தபடி சாவகாசமாக வந்து ”அக்கா கிட்டே நான் முடிஞ்சா நாளன்னிக்கு வரேன்னு சொல்லு. நாளைக்கு மிட் செமஸ்டர் டெஸ்ட் ஒண்ணு இருக்கு…” என்றாள்.
”சரி” என்றபடி வெளியே இறங்கினேன். நேராக லிப்டில் நுழைந்தேன். லிப்ட் இறங்கும்போது சட்டென்று எழுந்த மனவேகத்துடன் என் மண்டையில் ஓங்கி ஓங்கி அறைந்தேன்.
பின்பு திரும்பி கண்ணாடியில் தெரிந்த என்னைப் பார்த்தேன். அந்த அன்னியன் என்னுடன் நின்றிருந்தான், என்னை வியப்புடன் கசப்புடன் சலிப்புடன் பார்த்தபடி. ஓங்கி அறைந்து அவனை உடைக்கவேண்டும் போலிருந்தது. பின்பு நான் சோர்ந்து கண்ணாடியின் குளிர்பரப்பில் கன்னம் சேர்த்தேன். லிப்ட் இறங்கியது. மூழ்கி மூழ்கி நேராக பூமியின் ஆழத்துக்கே சென்று விடுவதுபோல.
பைககை நிறுத்திவிட்டு என் அறைக்குள் கதவைத் தட்டினேன். அம்மா திறந்து ”சாப்பிடறியாடா?” என்றாள்.
”வெளியே சாப்பிட்டுட்டேன்” என்றபடி உள்ளே சென்றேன்.
”சுசி சாப்பிட்டுட்டா… அவளுக்கு ஜெட்லாக் இருக்குபோலிருக்கு… தூங்கிட்டா”
நான் அம்மாவைப் பார்க்காமல் என் அறைக்குச் சென்று உடைகளைக் களைந்தேன். லுங்கியைக் கட்டிக் கொண்டு முகம் கழுவிவந்தேன். அம்மா என் அறைக்குள் நின்றிருந்தாள்.
”ம்?” என்றேன்
”ஒண்ணுமில்ல…”
நான் அவளை பார்க்கவில்லை. ஏதோ சொல்ல விரும்புகிறாள்
சட்டென்று தொடங்கினாள் ”சுசி தங்கமான பொண்ணுடா….இந்தமாதிரி ஒரு செல்லம் கெடைக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்”
நான் ஒன்றும் சொல்லவில்லை
”அவளுக்கு மனசு கோணாதபடி நடந்துக்க… அவ்ளவுதான் நான் சொல்றது…”
”அப்டீன்னா?”
”சும்மா சொன்னேண்டா…. தாயில்லா பொண்ணு… அவளுக்கு இனிமே ஒரு மனக்கஷ்டம் வரப்பிடாது… ”
”இப்ப நான் என்ன செய்யணும்கிறே? அவளை தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடணும்கிறியா?”
”நான் பொதுவா சொன்னேண்டா”
”பொதுவா என்ன சொல்றது? வந்து இருபத்துநாலு மணி நேரம் ஆகல்லை, அதுக்குள்ள என்ன உபதேசம்?”
”டேய் நான்–”
”பேசாமப்போறியா இல்லியா? சும்மா வந்து தொணதொணண்ணு”
”நான் என்ன சொன்னாலும் உனக்கு வேப்பங்காயிதான்… நான் செத்தாத்தான் தெரியும் சொல்றதுக்கு அர்த்தம்…. இப்டி உன் வாயிலேருந்து பேச்சு கேட்டுட்டு எதுக்கு உசிரோட இருக்கணும்? செத்து தொலைஞ்சா போரும்”
”இப்ப எதுக்கு சாவு அது இதுண்ணு பேசுறே? அதுக்கு இங்க என்ன நடந்துச்சு?”
”ஒண்ணும் நடக்கலை…உனக்கு இப்பல்லாம் என்னைக் கண்டாலே பிடிக்கிறதில்லை. என்னமோ ஜென்ம விரோதிமாதிரி பாக்கிறே. உன்ன மட்டும் நம்பி இருபதுவருசம் தனிமரமா வாழ்ந்தவ நான்… இப்ப நான் இருக்கிறதே உனக்குப் பிடிக்கலை”
கண்களை துடைத்தபடி அம்மா வெளியே சென்றாள். நான் எழுந்து பின்னால் சென்று அம்மா என்று கூப்பிட எண்ணி, அவ்வெண்ணத்தையே கூசி, தயங்கி அப்படியே நின்றேன்.
பின்பு விளக்குகளை அணைத்து கதவை மூடிவிட்டு கட்டிலில் வந்து படுத்து கண்களை மூடிக்கொண்டேன். இமைகள் துடித்துக்கொண்டே இருந்தன. தலையை தலையணையில் வைத்து உரசினேன். பின்பு எழுந்தமர்ந்து இருளில் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநேரம்
ஒரு தீவிரமான உலுக்கலுடன் சந்திரா என்னுள் நிகழ்ந்தாள் அப்போது. அக்கணம் நான் இருந்தது நான் உருவாக்கிய பிறிதொன்றிலாத பிரபஞ்சத்தில். அதில் அவளுடைய நிர்வாண உடலும் அதன் ஆயிரம் நளின அசைவுகளும் மட்டுமே எஞ்சியிருந்தன. சுசி நீ துள்ளல் என்றால் அவள் நிதானம். மண் அலுங்காமல் காடுகுலையாமல் பஞ்சுப்பொதியெனக் கால் தூக்கி வைத்துச் செல்லும் காட்டுயானையின் நிறைவு அவள். இருகரை நிரப்பி ஆழ்ந்த நீரோட்டத்தை மேல்பரப்பின் மென்மையான ஒளியால் மறைத்து ஓடும் பெருநதியின் முழுமை அவள்.
அன்றிரவு என்னுடன் அவள் இருக்க நீ ஒரு குற்றவுணர்வாக எங்கோ நின்று என்னை பார்த்துகொண்டிருந்தாய், சுசி.