குரு நித்யா ஆய்வரங்கு- கடிதம்

அன்பிற்கினிய ஜெ,

எந்த மங்கலத்தையும் தொடங்குவதற்கு அதற்கான முகூர்த்தம் வரவேண்டும் என்று முன்பொரு கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள். கீதை படிப்பதற்கு கீதா முகூர்த்தம் அவசியம். அதுபோல்தான் இவ்வாண்டு குரு நித்ய காவிய முகாமில் நான் கலந்து கொண்டதும்.

இனி சம்பளத்திற்காக உயிர் கரைத்து உழைக்க வேண்டாம் என்ற முடிவை இவ்வாண்டு தொடக்கத்திலேயே எடுத்துவிட்டேன். நண்பர்கள்மாணவர்களுடன் சேர்ந்து எங்கள் வளாகத்தில் கைவிடப்பட்டிருந்த மாடித்தோட்டத்தை மீட்பதில் என் அலுவல் நேரங்களை கழித்தேன். எங்கள் கல்லூரியின் இணைப்பேராசிரியர் திரு சுரேஷ்குமார் துரைசாமி அவர்களின் பெரும் அர்ப்பணிப்பால் அந்த மாடித்தோட்டம் பெரும் பொலிவுற்றது. தங்கள் மீது பெரும் மதிப்புடையவர். ஆகவே புதுமைப்பித்தன்ஜெயகாந்தன்எஸ் ராமகிருஷ்ணன்பிரபஞ்சன்தாகூர்தகழி மற்றும் தங்களின் பிறந்த நாள்களை கொண்டாடும் விதமாக செடிகளை நட்டோம். அல்லி ஆரண்யம் என அந்த தோட்டத்திற்கு பெயர் சூட்டினோம். நாளும் அதில் பூக்கள் மலர்கின்றன. செடிகளில் இருந்து வழிந்த நீரை குடிக்க பறவைகள் வந்தன. மலர்களில் தேன் மாந்த ஈக்களும்பட்டாம் பூச்சிகளும் வந்தன. எங்கள் தோட்டத்தை பார்வையிடும் ஆசிரியர்கள்மாணவர்கள் அனைவரும் அல்லி ஆரண்யத்தில் நிற்கும் போது பேரினிமையை உணர்வதாக நாள்தோறும் சொல்ல கேட்கிறோம்.

சமையல் வேலைகள் வீட்டிலிருக்கும் நேரங்களை பெரும் அளவில் அபகரிப்பதால்உணவை எளிமை செய்துகொண்டேன். அதனால் மிச்சப்பட்ட நேரங்களில் நாளொரு சிறுகதையை வாசித்து என் அவதானிப்புகளை குறிப்பெழுதிக் கொண்டே வந்தேன்.

என் பிள்ளைகளுக்கு இரு மாத கோடை விடுமுறை. மனைவி மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார்கள். வார விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம்  திருவித்துவகோடுதிருஆவினன்குடி என தெய்வ தரிசனங்களுடன் ஊர் சுற்றியே வந்தேன்

இவையெல்லாம் இவ்வாண்டு குரு நித்யா காவிய முகாமில் கலந்து கொள்வதற்காக நான் ஈட்டிய முகூர்த்தங்கள் என இப்போது தோன்றுகிறது.

இது பருவத்தேர்வுகள் நடக்கும் காலம். சரியாக காவிய முகாம் தொடங்கிய நாளான மே 12 அன்றுதான் தேர்வுகள் தொடங்கின. விடுப்பையெல்லாம் கேட்பதில்லை எனும் தீர்மானம் இவ்வாண்டு ஜனவரியிலேயே எனக்குள் நிறைவேற்றி விட்டதால்மே 12 அன்று விடுப்பு எடுத்து கொள்வதாக தகவலை மட்டுமே உயரதிகாரிக்கு சொன்னேன்.

மங்களூர்சென்னை ரயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஈரோடு வந்து விட்டேன். அந்தியூர் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பின்னிருக்கையில் தாமரைக்கரைவெள்ளிமலைமடம் என யாரிடமோ கைப்பேசியிலும்நடத்துனரிடமும் பதறிக்கொண்டிருந்தார் வந்தவாசியிலிருந்து வந்திருந்த அதியமான். அந்தியூரில் இறங்கியவுடன் அறிமுகம் செய்து கொண்டோம். 5 .30 பேருந்துக்கு நாங்கள் 3 .40 லிருந்து காத்திருந்தோம். அதிகாலை 4.30 க்கு பிறகு இருவர்நால்வர்அறுவர் என குறுங்குழுக்கள் பெருகிய படியே இருந்தன. மடம்  செல்லும் பேருந்தில் வெள்ளிமலை பயணிகளை தவிர பிற பயணிகள் எண்ணிக்கைக்கு விரல்கள் அதிகம். அந்தியூரில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின் விளக்குகள் சூடாறத் தொடங்கிய போது மலையேறத்தொடங்கியது பேருந்து.

சமீபமாக சிக்மகளூருகுடகுமூணாறுசிறுமலைகுமுளி என  பல மலைகளின் ஈர மேகங்களில் குளிர குளிர உலவியிருக்கிறேன்.  நான் வசிப்பது வெக்கை மிகுந்த வடகேரள மலைப்பகுதி. நான் பிறந்து வளர்ந்த ஊரில் சூரியன் குண திசையில் எழுவதும்குட திசையில் மறைவதும் மலைச்சிகரங்களில்தான். மலைகள் எனக்கு அலுத்ததே இல்லை. ஆனால் என்னை மலைக்காட்சிகளை ரசிக்க விடாமல் பெரியாழ்வாரின் பாடல்களை ரசிக்க வைத்தார் நண்பர் கதிரேசன். முதல் அமர்வுக்கு ஜா ரா தேர்வு செய்திருந்த பாடல்களுக்கு விளக்கம் கேட்டார் கதிரேசன். பெரியாழ்வாரின் அருளிச்செயல்களை இருவருமாக சிந்தை மகிழ அனுபவித்தோம். வைணவம் அத்தனை தித்திப்பானது. வெள்ளிமலையில் நாங்கள் இறங்கும் போதுபுறத்தோலை ஊடுருவி சதை கீறாத இளங்குளிர்.

மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியில் சிவபெருமானின் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் காட்சி குறிப்பிடுவது போல

இன்னிசை வீணையர் யாழினர்  ஒருபால்

இருக்கோடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

என நித்யவனத்திற்குள் நண்பர்கள் பல ரகங்களாக பிரவேசித்தனர்.  கனிந்த முகத்தில்நிலைத்த நகை பொலிந்து அமர்ந்திருந்தார் புத்தர்தங்களை சந்தித்த பின் குரு நித்யா அரங்குக்கு கீழிறங்குகையில் மனோன்மணி ஞான பிரகாசமாய் அமர்ந்திருந்தாள். உலகின் அத்தனை கலைகளுக்குமான ஆதார நிமிர்வு.

குளிரக்குளிர குளித்து அசதி நீக்கிய பின் காலையுணவுஒரு சொல்லையும் தவற விடக்கூடாது என்ற வேட்கையுடன் எல்லோரும் தயாராகி அரங்கில் வந்தமர்ந்தனர்.

ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை இருபதாம் பாடலான ‘முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்‘ என்ற பாடலை பார்கவி பாடி அனுபவித்தார். திரு சிறில் அலெக்ஸ் அவர்கள் விவிலிய வழியில் சிறு பிரார்த்தனை செய்தார்

திரு ஜா ராஜகோபாலன் அவர்களின் வைணவ கவிதை உரை தொடங்கியது. பெரியாழ்வாரின் திருமொழியில் இருந்துபன்னிரண்டு பாடல்களை தேர்வு செய்திருந்தார். பாடல்களும் அதன் எளிய விளக்கங்களும் முன்பே பகிரப்பட்டிருந்தன. ஜா ரா வின் பாடல் தேர்வில் கண்ணனின் பிள்ளை விளையாட்டுகளும்அவ்விளையாட்டுகளில் வெளிப்படும் கவித்துவமும் முதன்மைப்பட்டிருந்தன.

சில ஆண்டுகளாக ஆழ்வார்களின் பாடல்களை நாள்தோறும் அனுபவித்து வருகிறேன். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக திருப்பல்லாண்டை என் நா நவிழாமல் ஒரு நாளும் இருந்ததில்லை. திருப்பாவைதிருப்பள்ளியெழுச்சிதிருமாலை,  கண்ணிநுன் சிறுத்தாம்புஅமலனாதிபிரான் போன்றவற்றை நாள்தோறும் செவியுற்று மனம் பயின்றுகொண்டேன். பக்திமான்கள் செய்த உரைகள் சில சமயம் அலுப்பூட்டுவதுண்டு. இலக்கியவாதிகளின் சிலாகிப்புகளில் அப்பாடலின் உட்பொருள் வறண்டிருப்பதுமுண்டுஒலியாக என் செவியில் எப்படி விழுகிறதோ அதுவே அதன் பொருளாகிறது. அது அளிக்கும் நிறைவைவெளிச்சத்தை உரைகள் அளிப்பதில்லை. ஆகவே உரைகளை வாசிப்பதில்லைபுரியாத சொற்களிருந்தால் கவிஞர் சாம்ராஜ் அண்ணன் வாங்கி கொடுத்த உலக தமிழாராய்ச்சி நிறுவன  தமிழகராதியை பார்ப்பேன்சுயமாக மரபிலக்கியம் கற்பதன் பிழைகளும் என்னிடம் உண்டு என்பதை உணர்ந்தே இதனை குறிப்பிடுகிறேன்.

தமிழின் மரபிலக்கியத்தை காதால் கேட்டு அனுபவிப்பதே முறை. மரபிலக்கியம் நம் செவிகளின்  வழி மனதை நோக்கி இயற்றப்பட்ட பாக்கள். பார்வைத்திறனற்றஉடலூனமுற்ற புலவர்கள்பாணர்கள் நம் மரபில் இருந்திருக்கிறார்கள். பிறவிகேள்திறனற்ற புலவர்கள் இல்லவே  இல்லை. “நம் சங்கீதம் நம் செவிகளில் இருக்கிறது” என்பார் ஜெயகாந்தன். நம் மரபிலக்கியங்களும் நம் செவிகளில்தான் இருக்கின்றன.

மரபிலக்கியத்தில் பாடல்களின் வைப்பு முறைகள் மிக மிக முக்கியமானவை. அது ஒரு பயணம். ஒவ்வொரு பாடலுக்குள்ளுமே ஒரு பயணம்தான் இருக்கிறது. வீட்டிலிருந்து வெளியேறி வீடு வீடாக தோழிகளை அழைத்து கொண்டு கோயிலுக்கு சென்றுபெருமானை தரிசிக்கும் பயணம்தான்  திருப்பாவைதிருவெம்பாவை.

உள்ளத்தை பெருக்கோயிலாக கொண்ட பூசலார் விதிவிலக்கு. ஆனால் அவரும் அவருள் கடக்கும் பயணத்தை மேற்கொண்டவர்தான். முதலடிக்கு பின் மூன்றாவது அடி வைத்தல் முறையன்று. முதலடிக்கு பின் இரண்டாவது அடிதான்.

ஜா ரா அவர்கள் பெரியாழ்வார் திருமொழியில் கவித்துவம் தேடியதால் கண்ணன் பிள்ளைப்பருவ  விளையாட்டுகளில் பெரியாழ்வார் வெளிப்படுத்தும் கவித்திறனை அழகுற எடுத்து வைத்தார். இப்பாடல்களில் கவித்துவம் கடந்த ஆழ்ந்த ஞானம் உண்டு என்பதை மிக கவனமாக அழுத்தமாகவே குறிப்பிட்டார். ஆனால் நம் இலக்கிய ரசிகர்கள் ஜா ரா வை அதற்குள் ஆழ செல்ல விடவில்லை. ஜா ரா அதற்கும் ஆயத்தமாகவே வந்திருந்தார். இன்னும் சொன்னால் அதை சொல்லவே ஆசைப்பட்டார் என்பது அவரின் பின்னுரையாடலிலும்காவிய முகாம் பட்டியலில் இல்லாத அவரின் நாச்சியார் திருமொழி அரங்கிலும் தெரிந்தது.

பெரும்பாலானவர்களுக்கு மரபிலக்கிய அறிமுக பயிற்சியே இல்லை. ஜா ராகடலூர் சீனுவை தவிர பிறருக்கு அப்பாசுரங்களை சரியாக வாசிக்கவே தெரியவில்லை. நம் மரபிலக்கியங்கள் வெறும் மூளைத்திறனால் படைக்கப்பட்டவை அல்ல. அது அதற்கும் மேலானது. மீண்டும் ஜெயகாந்தன் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. “ஆழ்ந்த ஞானம் என்பது இலக்கியத்திற்கு புறம்பானதல்ல“.

பின்னர் கடலூர் சீனுவின் நவீன கவிதை அரங்கில் பல கவிஞர்களின் கவிதைகளை வாசித்துஅதன் போக்குகளை விவரித்தார். கவிதைகளில் அவரின் தேடல் பலரின் ரசனைகளை கூர்மையாக்கியது. ஆழமான உரை.

மாலை நடந்த சிறுகதை அரங்குகளில் தாமரைக்கண்ணன் பரிந்துரைத்த அம்மை பார்த்திருந்தாள் என்ற நாஞ்சில்நாடனின் கதைதான் பெரிதாக ரசிக்கப்பட்டது. தாங்கள் துறவியாக திரிந்த காலத்து அனுபவங்களை சொல்லிஅக்கதையின் உள்ளுறை பொருளை விளக்கினீர்கள். கவிஞர் போகன் சங்கர் அவர்களும் பல சம்பவங்களை சொல்லி அதனை நிறுவினார்.

பாரியின் தேர்வான ஆஷாபூர்ண தேவியின்  தோற்கடிக்கப்பட்டவர் கதையும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அக்கதையின் நாயகனை எதிர்மறை கதாபாத்திரமாக பலரும் முன் வைக்க முயன்ற போதுகவிஞர் மோகனரங்கன் அவர்கள் எழுந்து அந்த கதைக்கு மிகத்தெளிவான வாசிப்பு சித்திரத்தை அளித்தார்.

சுகதேவின் தேர்வான சார்வாகனின் பிராயசித்தம்தான் படுபாடு பட்டது. நமது தெய்வங்களின் ஒப்பனைகளை கலைத்து மானுட விளையாட்டினை ஆட முயன்ற கதை. அந்த கதை வெளிவந்த பத்திரிகைஅந்த பத்திரிகையின் அரசியல் பின்புலம் அந்த கதையின் ஆழத்தை அணுக விடாமல் செய்திருந்த செய்தி வியப்பாயிருந்தது.

ரம்யா அவர்கள் தொடங்கும் போதே இந்திய சுதந்திர காலகட்டம்அதற்கு பிற்பட்ட காலம் என தெளிவாக வரையறை செய்துவிட்டார். ஆகவே அதற்கு முற்பட்ட இலக்கிய சூழல் அவ்வரங்கின் விவாதகளமல்ல என்பதையே பெரும்பாலும் புரிந்துகொள்ளவில்லை. முதல் நாளின் அனலாக ரம்யாவின் அரங்கு இருந்தது.

சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னாள் சென்னையில் நடந்த ஒரு சிறு கவியரங்கில்கவிஞர் ரஹீமா அவர்கள் பெண்ணியம் என சொல்லிபெண்ணை ஏன் ஈயத்தோடு சேர்க்கிறீர்கள் என்றார். மேலும் கவியரங்குகளில் பெண் கவிஞர்களை கவிதாயினி என சொல்வதை தீவிரமாக எதிர்த்தார். ஏனென்றால் கவிஞர் என்பது பொதுவின் பால். மேலும் பெண்ணியத்தை பெண்ணியல் என குறிப்பிட வற்புறுத்தினார்.  எழுத்தாளர் ரம்யாவின் அமர்வில் அவருக்கு எதிரில் அமர்ந்திருந்தவர்கள் பொதுவின் பாலாக தன்னை உணர்வதில் என்ன சிக்கல் என தெரியவில்லை. மாறுவேட போட்டியில் பெண் வேடமிடும் ஆணும்ஆண் வேடமிடும் பெண்ணும் போட்டிக்கு பின் தங்கள் ஒப்பனையை நீட்டிப்பார்களாஇயற்கலை அனைத்தும் பொதுவின் பால்தான். அக்கலை நிகழ்கையில் அப்பாலினமாக தன்னை பாவிக்கிறதுவரலாற்றில் பிழை செய்தது ஆணாதிக்கம்தான்.

முதல் நாளின் இறுதி அமர்வாக திரு சிறில் அலெக்ஸ் அவர்களின் விவிலிய வகுப்பு. என் பத்தொன்பது வயது வரை நாள்தோறும் விவிலிய வாசகங்கள் என் காதில் ஓலித்திருந்தன. நான் பிறந்த ஊரில் கத்தோலிக்கம்சி எஸ் ஐபெந்தே கோஸ்தே, TELC , ஜெருசலேம் சர்ச்செவந்த் டே அட்வென்டிஸ் என அனைத்து வகை கிறிஸ்துவர்களுக்கும் தனித்தனியே தேவாலயங்கள் இப்போதும் இருக்கின்றன. கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி பூசைகளை தினந்தோறும் கேட்டு வளர்ந்தவன் நான். கேளுங்கள் தரப்படும்வண்ண வண்ண லீலி மலர்அன்னையே தாயேஆரோக்கிய மாதாவே அம்மா போன்ற பாடல்கள் இப்போதும் அடிக்கடி கேட்கிறேன். சிறில் அலெக்ஸ் சொன்ன பெரும்பாலான கதைகளைவிவிலிய வசனங்களை எங்களூரின் தேவாலய திருப்பலி பூசையில் பல முறை கேட்டிருக்கிறேன்.அதன் கவித்துவம் அற்புதமானது. குமரித்துறைவியில் ஆத்தா மீனாட்சியின் ஆரல்வாய்மொழி பயண வரலாற்றை நாயகன் சொல்லி வரும்போதுராஜா சொல்வதாக ஒரு வரி வரும். “கேட்டதுதான். கேட்டுட்டே இருக்கலாம்.” மதங்களற்ற ஆன்மீக வழியில்தான் விவிலியமும் உருவாகி வந்திருக்கிறது. ஒரு நாளின் கொந்தளிப்பை ஆற்ற மிக சிறந்த வழி விவிலிய வாசிப்பு என எனக்கு தோன்றியது

இரண்டாம் நாள் சிறில் அலெக்ஸ் அவர்கள் மிக சிறந்த பிரார்த்தனை பாடலை பாடினார். எளிமையை போன்ற பேரழகு வேறுண்டா என எண்ணவைக்கின்ற பாடல். அழகான தொடக்கம்.

ஓவியர் ஜெயராம் அவர்கள் ஓவியம்மற்றும் ஓவியத்தின் நவீன போக்குகள் பற்றிய உரையை நிகழ்த்தினார்நவீன சமூக வாழ்வியல் முறைகளே அக்கலைகளில் வெளிப்படுகின்றன. இந்த நவீன சூழல் மரபார்ந்த கலைக்கூறுகளில் உடைப்புகளை உருவாக்கும் தேவையை தங்களுக்கு அளிப்பதாக ஜெயராம் சொன்னார். ஒன்றை ஒரு வடிவாக்குவது ஒரு அழகென்றால்அவ்வடிவை கலைத்து வைப்பதும் அழகு என்றார். மரபார்ந்த சிற்பஓவிய கலையில் மீறலுக்கான அனுமதி குறைவு என்றார். ஆகவே நவீன ஓவியர்கள் அதனில் உடைப்புகளை செய்து வருகிறார்கள் என்றார்.

அவரின் பேச்சு எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மரபில் மீறலுக்கு இடமில்லை என்பதை தாங்களும் தெளிவாக மறுத்தீர்கள்.

கழிவறை சாதனங்கள் தேவைபயன் கருதி வடிவமைக்க பட்டவை. ஒரு நாளில் மனிதனின் சில நிமிடங்களே அதன் பயன்பாடு. அதன் கலை முயற்சிகளில் இந்த சிந்தனை அவசியம். அழகாயிருக்கிறது என்பதற்காக நாள் முழுக்க கழிவறையில் யாராலும் இருக்க முடியாது. ஜெயராம் கழிவறைகள் மேடையேறுவதும் நவீன கலையம்சம் என குறிப்பிட்டார். என்னால் அதனை ஏற்கவே முடியவில்லை.

மனிதன் முதலில் எதைக்கொண்டு எங்கு எதை வரைந்தான் என்பதற்கான விளக்கங்களை ஓவிய வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லட்டும். ஆனால் நம் நாட்டின் சிறந்த ஓவியங்கள் சேமிக்கப்பட்டது கோயில்களில்தான். மனிதனின் அனைத்து கலை வெளிப்பாடுகளின் களமாக கோயில்களே இருந்திருக்கின்றன. கோயில்களில் காக்கப்படுவதாலேயே அவற்றுக்கு கலைமதிப்புடன் ஒரு ஆன்மீக தகுதியும் உண்டு. அமர்வுக்கு பின் ஜெயராமிடம் கேட்டேன். இப்படி கலைத்து வைப்பதன் ஆன்மீக பெறுமதி என்னகலைப்பே ஆன்மிகம் என்பது போல பதில் சொன்னார். ஓராண்டுக்கு முன் நான் பார்த்த ஒரு சிற்பம் பற்றியும் விளக்கம் சொன்னேன். அது ஒரு உலோக சிற்பம். சிற்பத்தின் பீடத்தில் புல்தரை. புல்தரையின் மேல் மரங்களை போல மனித கால்கள். உடலே ஒரு காடாக இருந்தது. அந்த மனித வடிவத்தின் கைகளில் வாசிக்கும் நிலையில் புல்லாங்குழல் இருந்தது. முகம் இல்லை. காடு போல பின் தலை. தலையுச்சி மூடப்படாமல் திறந்திருந்தது. புல்லாங்குழலை பார்த்தவுடன் இது கிருஷ்ணன்தானே என்றனர். அந்த சிற்பி நானாகவோநீங்களாகவோ இருக்க கூடாதா என்றார். இது காற்று என்றார். தாவரங்களின் மூச்சு மனிதனின் உயிராகிறது. மனிதன் ஒரு புல்லை உடைத்து தன் எண்ணம் போல இசைக்கிறான். இறுதியில் காற்று இருக்கும். காற்று என்னவாகவெல்லாம் இருக்கிறதுஉணரப்படுகிறது என்பதே அந்த சிற்பம். சாமுத்திரிகா லட்சணத்தை அந்த சிற்பி கருத்தில் கொள்ளவே இல்லை. அந்த சிற்பம் எந்த ஆலயத்திலும் நிறுவப்படவில்லை. ஆனால் அந்த சிற்பத்திற்கு உன்னதமான ஆன்மீக தகுதி இருக்கிறது.

ஆனால் இந்த நவீன கலைஞர்கள் அந்த கலையின் ஆன்மீக மதிப்பை குலைப்பதே அதன் தகுதியாக நிறுவ முற்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

அடுத்ததாக அழகிய மணவாளனின் கதகளி பற்றிய அறிமுக உரை. வளமான உரை. தெய்யம்மற்றும் கதகளிக்கான வேறுபாடுகளை தாங்களும் எடுத்துரைத்தீர்கள்முந்தைய உரையின் சோர்வைஎனக்கேற்பட்ட அழுத்தத்தை குறைத்தது தம்பி அழகிய மணவாளனின் உரை. ஒரு நுண்கலையை ரசிக்க நம் புலன்களில் இருக்க வேண்டியது கூர்மை. சில ஆண்டுகளுக்கு முன் பாரிமணவாளன்தாமரைக்கண்ணன் குழுவினர் தெய்யம் காண கண்ணூர் வந்திருந்தனர். அப்போது என் வீட்டுக்கு அருகிலிருக்கும் கதகளி கலைஞரை அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். மணவாளன் அந்த கதகளி கலைஞருடன் தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று சிந்தித்து பார்த்தால் மணவாளனின் தேடலும் அர்ப்பணிப்பும் ஆச்சரியமளிக்கிறது.   

எழுத்தாளர் எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் நாவல்கள் வரலாறு குறித்த சிறு உரை. எழுத்தாளர் சோ தர்மன் அவர்களின் சிறு சீறல். தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த இசங்கள் மீதும் நம்பிக்கையில்லை. இசங்களாக வகைப்படுத்த வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கே உண்டு. அரசு செய்வதற்கு அது அவசியம்தான். இசங்கள் வேண்டாம் எனும் போது இசம் சார்ந்த கலைஞன் என எந்த கலைஞனையும் சொல்ல தேவை இல்லை. எழுத்தாளர் எம் கோபாலகிருஷ்ணன் அவர்களும் அவ்வாறு முத்திரை குத்த விரும்பவில்லை.

மாலையில் ஜி எஸ் எஸ் வி நவீனின் கவிதை அரங்கு. கோலு கொம்பு அவர்களின் பணியர் மொழிப்பாடல்தான் மிகவும் பிடித்திருந்தது. காரணம் அதன் ஓசை நயம். அசலான காட்டின் பச்சை மணம். அதனோடு மனித புழக்கம். அக்கவிதை பேசுபொருளாக கொண்ட முக்காலுஞ் சத்தியமான விஷயம்.

நான் முன்பே சொன்னது போல நமது மரபிலக்கியம் நம் செவிகளில் உள்ளதுஒரு கவிதை ஒலியாக செவியுறும் போதுதான் உணர்வாக நெஞ்சில் பதிகிறதென்பது என் அனுபவம். அந்த பணியர் கவிதையும் நம் செவிகளை நோக்கி பாடப்பட்டதாகவே இருந்தது.

அருள் அவர்களின் அமர்வில் கவிஞர் அபி அவர்களின் இரு கவிதைகள் வாசிக்கப்பட்டன. இரண்டுமே வெறுமையை குடைந்து பேசும் கவிதைகள். அர்த்தமின்மையை ஆழச்சிந்தித்த கவிதைகள். இக்கவிதைக்கு எதிரீடாக வைக்கப்பட்ட கவிஞர் தேவ தேவனின் கவிதை என்னை மலர்த்தியது. ஏந்துதல் என்ற அந்த கவிதை காதில்கண்களில்கருத்தில் என அனைத்திலும் ராஜ இனிப்பு. ஆசை ஆசையாய் அந்த கவிதையை கையால் எழுதி பார்த்தேன். அத்தனை சுகம். உண்மையிலேயே கவிஞர் தேவதேவன் ஒரு ரிஷிதான். அந்த அமர்வுக்கு பின்அவர் பின்னாலேயே இரண்டு நாட்களும் திரிந்தேன். அவரின் அருகிருப்பு சுகந்தமானது.

அடுத்து வந்த விக்னேஷ் ஹரிஹரனின் அமர்வும் பெரும்பாடு பட்டது.  வேலாயுதம் பெரியசாமியின் அரங்கு சுவாரஸ்யமானது. அவர் மட்டுமே கவிதைகளை மனம் பயின்று வந்திருந்தார். அவர் முன்வைத்த கவிதைகளிலும் தேவதேவனின் கவிதையே மனம் பறித்தது.

இன்றைய கவிஞர்கள் இயற்றும் கவிதைகளில் இருக்கும் போதாமைகளை போகன் சங்கர் அவர்கள் தன்னுரையில் மிக சரியாக முன்வைத்தார். உதாரணமாக பெருந்தேவியின் வரிகளையும் வாசித்து காண்பித்தார். மரபுக்கவிதை அளிக்கும் நிறைவை இன்றைய புதுக்கவிதைகள் அளிப்பதில்லை என்ற அவரின் கருத்து என்னளவில் சத்தியம். நவீன கவிஞர்களின் பாடுபொருள்களே எனக்கு அலுப்பூட்டுவதுண்டு.

வையம் தகளிவார்கடலே நெய்வெய்ய கதிரோன் விளக்கு என்ற பொய்கையாழ்வாரின் பாடலில் பக்தியை களைந்து விட்டால் கூட அந்த பாடல் தன் மேன்மையை இழக்காது. அன்பே தகளிஆர்வமே நெய்இன்புருகு சிந்தை இடுதிரி என்ற பூதத்தாழ்வாரின் பாடலில் நாராயணனை நீக்கினாலும் அந்த பாடல் அதன் சுடரை நம் நெஞ்சில் ஏற்றும்இந்த உண்மையை நவீன கவிஞர்கள் உணர மறுப்பதுதான் பெருந்துயரளிக்கிறது.

இறுதி அமர்வாக எழுத்தாளர் சு வேணுகோபால் அவர்களின் இன்றைய நாவல் குறித்த அமர்வு. எப்போதும் போலவே ஆழ்ந்த உணர்வு நிலைகளுடன்கலகலப்பாக உரையாடினார். நாவல்களிலிருந்து பேசாமல் நாவல்களையே பேசியதால் நேரம் சற்று இழுபட்டுவிட்டது.

அன்று இரவு எனக்கு உறக்கமே பிடிக்கவில்லை. சில ஆண்டுகளாக நானே முனைந்து ஆழ்வார்களின் பாடல்களை பயின்று கொண்டேன். அந்த வெளிச்சத்தில் திருவாசகமும்திருப்புகழ் போன்ற மரபிலக்கியங்களின் மேன்மை புரிபடுகிறது. இந்த நவீன கலைஞர்களால் என் அறிவு அர்த்தமிழப்பது கிடக்கட்டும்நம் முன்னோடிகள் திரட்டியளித்த ஞானம் கேட்பாரற்று போவதே பெரும் வேதனையை அளித்தது. மேலும் காந்தி எனும் பிரம்மாண்டம் நாளும் என்னுள் வளர்ந்தபடியே இருக்கிறது. மூன்றாம் நாள் சுனில் கிருஷ்ணனின் அமர்வுக்காக அவர் பரிந்துரைத்த ஜி நாகராஜனின் கிழவனின் வருகை கதையை பகலிடைவேளையில் படித்திருந்தேன். தேவிபாரதியின் கதையை விட கிழவனின் வருகை கதைநான் நம்பும் அறத்தின் மீது பெரும் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. ஒட்டுமொத்த கலையுலகமே பெரும் அறவீழ்ச்சியைவறட்சியை சந்திக்கிறதோ என தோன்றிய போதுதான் மீண்டும் மீண்டும் தேவதேவன் நினைவுக்கு வந்தார். அவர் இவ்வுலகுக்கு வெகு அப்பால் இருக்கிறார். அவரின் ஏந்துதல் என்ற கவிதையை நினைத்தபடியே இரவு முழுக்க கிடந்தேன்.    

கடைசி நாள் அதிகாலையில் எழுந்து எதை செய்யவும் விருப்பமின்றி நின்று கொண்டிருந்த போதுதூரத்தில் கவிஞர் தேவதேவன் அவர்கள் காலை நடை சென்று கொண்டிருந்தார். வேகமாக ஓடி அவருடன் சேர்ந்து கொண்டேன். திருக்குறள்ஆழ்வார்களின் அருளிசெயல்கள்திருவாசகம்அவ்வைஜெயகாந்தன் என அவர் பேசப்பேச ஆசை ஆசையாய் அவருடன் நடந்து கொண்டிருந்தேன். நடை அலுக்கவேயில்லை. தன்னருகிலுருக்கும் அனைத்தையும் பிரகாசிக்க செய்யும் பெரிய வெளிச்சம் அவரிடமுண்டு.

மூன்றாம் நாளின் முதல் அமர்வாக சுனில் கிருஷ்ணனின் காந்திஇலக்கியம். இவ்வுலகில் வெல்ல முடியாத ஆயுதம் அகிம்சைதான். இன்றும் காந்திய வழியில் வென்ற நாடுகளின் சிறு பட்டியல் அரங்கில் பேசப்பட்டது. ஈழப்போராட்டம் தோற்றதை வருத்தங்களுடன் குறிக்க வேண்டியிருந்தது. எழுத்தாளர் அகர முதல்வனும் அமைதி கொள்ளும்படியாகி விட்டது.

சோ தர்மன் அவர்களின் அமர்வு வழக்கம் போல கலகலப்பு. அவர் மீன் பிடிக்கும் கண்மாயில் பட்டி மாடுகளை தண்ணீருக்கு விடுவதில் இருக்கும் அரசியல்நம் மனசாட்சியை உலுக்குவதாக இருந்தது. எங்கிருந்தோ பறந்து வரும் பறவையின் பசி மீதுவன்முறை ஏவும் அரசியல்சமூக சூழல் எத்தனை கீழ்மையானதுஆனால் உயர் நீதி மன்றம் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கும் தேவையை உருவாக்கி இருப்பது இலக்கியத்தின் வெற்றிதான். ஜெயகாந்தன் சொன்னது போலஎழுத்தாளன் கூலி நீதிபதி அல்ல“.

இந்த மூன்று நாட்களின் கூடுகைகளில் எனக்கு எஞ்சுவது என்ன என யோசித்து பார்க்கிறேன். ஞாயிறன்று காலையில் கவிஞர் தேவதேவனுடன் நடை சென்ற போது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். இந்த உலகின் சகலமும் தங்களுக்கு சுவையானதாகவே இருக்கிறது. தங்களுக்குள்  நிறைவும் முழுமையுமாக  தளும்பி இருக்கிறீர்கள். உங்களுக்கு தெய்வம் தேவையாஎன கேட்டேன். “வேண்டாம்என உடனடியாக சொன்னார். நாங்கள் நின்று கொண்டிருந்த சாலையோரம் வெட்டவெளியில் நிறைய சூலங்கள் மண்ணில் நிறுத்தப்பட்டிருந்தன.  வெள்ளிமலை கிராம மக்கள் வழிபடும் கோயில் அது. அந்த இடத்திலிருந்து நித்யவனத்திற்கு திரும்பி நடந்தோம்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்றற்று விடற்கு

என்ற திருக்குறளுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டே நடந்தார். தார்சாலையிலிருந்து மண்பாதையில் இறங்கி நடந்து கொண்டிருந்த போது வழியிலிருந்த ஒரு புளிய மரத்தினடியில் நின்றுவிட்டார். புளியம் பூக்கள் எத்தனை அழகு என வியந்தார். சில பூக்களை பறித்து கொடுத்தேன். குழந்தை போல வாயிலிட்டு சுவைத்தார். என் கையிலிருந்த புளியம் பூ மொக்கையும் அவரிடமே கொடுத்தேன். அதன் சுவையை அவரால் வியக்காமல் இருக்கவே முடியாது என நம்பினேன். தன்னுள் நிறைந்து விட்டால்நிறைவற்ற எதையும் அந்நிறைவு அவருக்கு காட்டாது.

அனைத்து அமர்வுகளும் முடிந்தபின் அந்த குரு நித்யா அரங்கின் வாயிலில் நின்ற அவரின் பாதத்தை தொட்டேன். என்னில் மிஞ்சுவது கவிஞர் தேவதேவனின் அந்த ஸ்பரிசமே.

அன்பன்

அ மலைச்சாமி

கண்ணூர்.

முந்தைய கட்டுரைபுவி எனும் கலைக்கூடம்
அடுத்த கட்டுரைமு.செல்லையா