குரு நித்யா ஆய்வரங்கு – கடிதம்

அன்பு ஜெ,

குரு நித்யா காவிய முகாம் எனக்கு முதல் முறை. உண்மையில் விழாக்களை விட இந்த முகாம் மிகவும் செரிவாக இருந்ததை உணர்ந்தேன். நூறு பேருக்கும் மேல் இருந்ததால் எல்லோருடனும் உரையாட முடியவில்லை. சில முகங்கள் மட்டும் நினைவில் உள்ளன.

முதல் நாள் சிறில் அலெக்ஸின் சிறு ஜெபம் மற்றும் பார்கவியின் பாடலோடு துவங்கியது. வைணவக் கவிதைகளுடன் ராஜகோபாலன் முதல் அரங்கைத் தொடங்கினார். அன்னையென கடவுளை கையில் ஏந்தி நிற்கும் ஓர் உணர்வை அமர்வு அளித்தது. நண்பர்கள் கம்பராமாயணம், திருப்பாவை, திருவாசகம், திருமந்திரம் என பல குழுக்களாகப் பிரிந்து கூட்டு வாசிப்பு செய்து வருகின்றனர். இந்த கூட்டு வாசிப்பில் பொருள் சுவையும், சொற்சுவையும் கூடி துலங்கி வருவதைக் கண்டிருக்கிறேன். ராஜகோபாலன் பெரியாழ்வார் கவிதைகளை இன்றைய நவீன வாசகன் பொருள் கொள்வதற்கான பல சாத்தியங்களை அமர்வில் நிகழ்த்திக் காண்பித்தார்.

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போலே

நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலகஎன்ற வரிகளின் இனிமை நெஞ்சில் பதிந்து விட்டது. கண்ணனுக்கு புதிதாக முளைத்த பல்லைசெக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறைஎன்றதும், பல அமைந்திருக்கும் அரணையைவாய்த்திண்ணைஎன்றதும் அதை மீள மீள ராஜகோபாலன் வியந்தோதிய இடமும் பிடித்திருந்தது. கவிதைகளில் இயல்பாக கவிஞன் தான் அன்றாடம் பார்க்கும் ஒன்றை வேறொன்றாகக் காண்பதைஅடஎன தோன்றவைக்கும் பல இடங்களை ராஜகோபாலன் எடுத்துக் காண்பித்தார். அதே போல சில சமயம் அடுக்குமுறைகள் வழியாக சில கவிதை வரிகள் நெஞ்சில் நின்று விடுகின்றன. அப்படியான வரியாக

புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து

அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமேஎன்ற வரி அமைந்தது.

அடுத்த அரங்கு நவீனக்கவிதை பற்றிய கடலூர் சீனுவின் அரங்கு. இந்த அரங்கின் வழியாக கவிதையை பிறர் ரசிக்கும் வாசிக்கும் தன்மையை அறிய முடிந்ததுஇந்த அமர்வில் நினைவில் தொடரும் கவிதையாக சதீஷ்குமார் சீனிவாசனின் ”அழைக்கும் தீகவிதை அமைந்தது.

காற்றில் அலையும்

ஒரு சுடர்போல்

தீண்டு என ஏங்குகிறாய்

தீண்டிவிட்டு விலக முடிந்த

தீயா இதுவென

யோசித்தவன்

குளத்தில் குதிக்கும் சிறுவன்போல்

அச்சுடரில் ஆழக் குதிக்கிறேன்

சுடர் அணையும்வரை

அத்தனை வெளிச்சம்

இருளென்ற ஒன்று

இல்லவே இல்லை என்பது மாதிரி

உறவை, காமத்தை என பொருள் ஆரம்பித்து மெய்மையைச் சென்று தொடும் ஒன்றாக கவிதை மாறி நிற்கும் விந்தையை உரையாடல் வழியாக அடைய முடிந்தது

அமர்வுகளில் நீங்கள், போகன்சங்கர், மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன், சோ. தர்மன், நிர்மால்யாமணிஆனந்த்குமார், அகரமுதல்வன் மற்றும் நண்பர்கள் வழியாக அமைந்த உரையாடல் பயனுள்ளதாக இருந்தது.

நண்பர்கள் பார்கவி, பாரி, சுகதேவ் பாலன், தாமரைக்கண்ணன் ஆகியோரின் சிறுகதை அமர்வு சிறுகதைகள் வாசிப்பின் வெவ்வேறு பார்வைக் கோணங்களை வாசகர்கள், எழுத்தாளர்கள் வழி அறிய வைத்தது. நண்பர் பாரி ஆஷாபூர்ணாதேவியின்தோற்கடிக்கப்பட்டவர்கள்சிறுகதையை எடுத்திருந்தார். அதன் வழியாக ஆஷாபூர்ணாதேவி காண்பிக்கும் சிறியவற்றின் பிரபஞ்சத்தை நுண்ணிய வாசிப்புப் பார்வையின் வழி அறிய முடிந்தது. தாமரைக்கண்ணன் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின்அம்மை பார்த்திருந்தாள்சிறுகதை பற்றிய உரையாடலை நடத்தினார். சுனில்கிருஷ்ணன் தான் எப்போது படித்தாலும் இரு சொட்டு கண்ணீர் விடுவேன் என்று சொன்ன கதையது. பசி என்ற உணர்வு உச்சமாகக் கடத்தப்பட்டதா இல்லையா என்ற காரசாரமான விவாதமாகச் சென்று உயர்சமூகத்தினரின் உளவியல் சார்ந்த ஒரு பார்வைக் கோணமாக அமைந்து வேறு பார்வையைக் கொடுத்தது எனக்கு. சுகதேவ் பாலன் உரையாடிய சாலிவாஹனின் பிராயச்சித்தம் கதையும், பார்கவி உரையாடிய ஆலிஸ் மன்றோவின்ஜூப்பிட்டர் அண்ட் மூன்ஸ்கதை எவ்வகையிலெல்லாம் பெரும்பான்மையாக நல்ல கதை இல்லை என்பதற்கான காரணங்களும் பேசப்பட்டன.

ஒரு சிறுகதை நல்ல சிறுகதை, நல்ல சிறுகதை இல்லை என்பதற்கான காரணங்களாக எழுத்தாளர்களும் வாசர்களும் என விவாதித்தது அங்கு வந்திருந்த இளம் எழுத்தாளர்களுக்கு தங்கள் கதைகளை மதிப்பிட்டுக் கொள்வதற்கான கருவியாகவும், வாசகர்களுக்கு மேலும் வாசிப்பை, ரசனையை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது உறுதி.

முதல் நாள் மாலை நான்இலக்கியம் பெண்ணியம்என்ற தாலைப்பில் உரையாற்றினேன். ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், நண்பர்களுமென நூறு பேர் குழுமியிருந்த அவையில் நிகழ்ந்த என்னுடைய முதல் இலக்கிய உரை. ஓரளவு திருப்திகரமாகச் செய்தேன். தமிழ் விக்கி வழியாக, நீலி வழியாக இப்போதைக்கு செய்த சில அவதானிப்புகளை முன் வைத்தேன். அதற்குபின் ஒரு கலகலப்பான/கைகலப்பான உரையாடல் நிகழ்ந்தது. இரவு முழுவதும் பெண்கள் அறையில் விவாதம் நடந்ததாகச் சொன்னார்கள். நான் சென்று தூங்கிவிட்டேன். ஏதோ ஒரு வகையான வெறுமை போல இருந்தது. நல்ல வேளையாக என் உரைக்குப் பின் சிறில் அலெக்ஸின் பைபிள் அறிமுக உரை நிகழ்ந்தது. மெல்ல மனதை அமைதிப்படுத்தியிருந்தது.

இரண்டாம் நாள் காலை விரைவிலேயே தொடங்கியது போல இருந்தது. இரவு உரையாடாமல் தூங்கியதற்கு மன்னிப்பு கேடுக்கொண்டு நண்பர்களுடன் காலையிலேயே இலக்கியம் பெண்ணியம் சார்ந்த அமர்வுக்கான விவாதத்தை ஆரம்பித்தோம். நண்பர் அருள் மட்டுறுத்துனராக செயல்பட்டார். பின் கிளம்பி சாப்பிட்டுவிட்டு அமர்வுக்காக ஓடிவிட்டோம்.

காலை சிறில் அலெக்ஸ் ஒரு கிறுஸ்தவ பாடலுடன் அரங்கை ஆரம்பித்தார். அற்புதமான பாடல். என் பள்ளியில், விடுதியில் அடிக்கடி பாடும் பாடல் அது.

அகல் போல் எறியும் அன்பு

அது பகல் போல் மணம் பரவும்

நிலையாய் உன்னை நினைத்தால்

நான் மலையாய் உயர்வடைவேன்

என்ற வரிகள் சிறுவயதில் படித்ததைவிட ஆழமேறி நிற்பது போலத் தெரிந்தது.

இரண்டாம் நாள் முதல் அரங்கு நண்பர் ஓவியர் ஜெயராமுடையது. நவீன ஓவியக்கலை பற்றிய அவரின் உரையும், உரையாடலும் அதனை மிகச்சரியாக அறிமுகப்படுத்தியது. அடுத்த அரங்கு அழகிய மணவாளனுடையகதகளிசெவ்வியல் கலை பற்றிய உரை. இந்த இரு உரைகளும் கட்டுரைகளாக எழுதப்பட்டு வாசகர்களை சென்றடைய வேண்டியது.

மூன்றாவதாக எழுந்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் நவீன நாவல் பற்றிய வரலாற்றுப் பார்வையுடன் கூடிய ஒரு உரையை நிகழ்த்தினார். விடுதலைக்கு முன் என ஆரம்பித்து அவர் தொண்ணூறுகளைத் தொடும்போது மட்டும் ஒரு கதாநாயகனின் வருகைக்கான அறிமுகத்தைக் கொடுத்தது போல உணர்ந்தேன். சிலிர்ப்பான இடமும் கூட. “இதுவரை ஜேஜே சில குறிப்புகளைத்தவிர தமிழில் நாவல்களே இல்லைஎன்று சொல்லி தன் நாவலுடன் அறிமுகமான ஒரு எழுத்தாளர் என்றார். அதன் பின் ஐந்து வருடங்கள் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த விவாதங்களை ஒட்டிநாவல் கோட்பாடுஎன்ற புத்தகத்தையும் எழுதி 1997-ல் விஷ்ணுபுரம் என்ற நாவலோடு நாவலில் ஒரு புதிய வீச்சை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் என உங்களை அறிமுகப்படுத்தினார். விஷ்ணுபுரத்திற்கு பின், நாவல் கோட்பாடு வந்தபின் தமிழ் நாவல்களின் வளர்ச்சி என இன்று எழுதும் எழுத்தாளர்கள் வரை வந்து சேர்ந்தார்.

சிறுகதைகளைப் போலவே இரண்டாம் நாள் மதியம் நிகழ்ந்த கவிதை அரங்கு நவீனக் கவிதைகளை வாசிப்பதற்கும் ரசிப்பதற்குமான வாசலாக அமைந்தது. ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் பழங்குடிகளின் பாடல்களை அறிமுகப்படுத்தினார். நவீனப் போக்கு ஒன்றை அது அறிமுகப்படுத்தியது. நண்பர் அருள் அபி, தேவதேவன் என கனமான கவிதைகளை உரையாடலுக்கு முன் வைத்தார். விக்னேஷ் ஹரிஹரன் உரையாடுவதற்கு எளிமையான ஃப்ராங்க் ஓ ஹாராவின்லானா டார்னர் வீழ்ந்துவிட்டார்”; ஒஸிமாண்டியஸ் கவிதையை முன் வைத்தார். இறுதியாக வந்த வேலாயுதம் பெரியசாமி மரபுக் கவிதையிலுள்ள பிரிவின் வலியை எடுத்துரைக்கும்படி நல்ல உரையை ஆற்றினார்.

மாலையில் அமைந்த கவிஞர் போகன் சங்கரின்கவிதையில் இன்று என்ன நிகழ்கிறதுஎன்ற அரங்கும் கவிஞர் சு.வேணுகோபாலின்இன்றைய நாவல்அரங்கும் இன்றைய எழுத்தின் மேல் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியது எனலாம்.

பொதுவாக வெளியிலும் அரங்கிலும் மூத்த எழுத்தாளர்களின் உரையாடல் வழி தெரிந்து கொண்டது இன்னும் ஒரு பெரும் மாற்றத்தை நிகழ்த்திய எழுத்தாளர்கள் என இந்தத் தலைமுறையில் யாரும் குறிப்பிடும்படியாக  இல்லை என்பது தான். ஆனால் பலர் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

அன்றைய இரவுணவு முடித்தபின் நிகழ்ந்த உரையாடலில் போகனும், சு.வேணுகோபாலும் வயிறு வலிக்க எங்களை சிரிக்க வைத்தனர். சு.வேணுகோபாலுக்குள் இருந்த  சிவாஜிகணேசன், சாவித்ரியை சிரிக்க சிரிக்க எதிர்கொண்டோம். கூடவே இலக்கிய அரட்டைகள், கிண்டல்கள் என ஒரு நீண்ட இரவு. நாளை சென்றுவிடுவோம் என்பதே இரவை இன்னும் இன்னும் என நீட்ட வைத்தது. வேனில்கால இரவின் வானத்தில் நட்சத்திரங்கள் அள்ளித் தெறித்திருந்தது. எல்லோரும் சென்ற பிறகு சிறிது நேரம் வேடிக்கை பார்த்திருந்தேன்.

மூன்றாம் நாள் அவசர அவசரமாக விடிந்தது. சுனில் கிருஷ்ணன்இலக்கியம் காந்தியம்என்ற தலைப்பில் நவீன இலக்கியம் ஆரம்பித்து இன்று வரை எழுதப்பட்ட காந்தியப் புனைவுகளைப் பற்றி பேசினார். அவருடைய அரங்குக்காக எழுத்தாளர் தேவிபாரதியின்பிறகொரு இரவு”; ஜி. நாகராஜனின்கிழவனின் வருகைசிறுகதை வாசித்து வந்திருந்தோம். அதைப் பற்றிய உரையாடலும், மேலும் காந்திபுனைவு சார்ந்த உரையாடலும் நிறைவாக அமைந்ததுநிகழ்ச்சியின் இறுதி அமர்வு எழுத்தாளர் சோ. தர்மன் ஐயாவுடையது. “சமூகவியலும் நாவலும்என்ற தலைப்பில் மதமும், அரசியலும் புனைவுகளில் விரவி வரும் சித்திரத்தை அளித்தார்.

இறுதியாக மூத்த எழுத்தாளர்களிடம் உரையாடலாம் என கட்டற்ற ஒரு அரங்கு அமைக்கப்பட்டது. இறுதிக் கேள்வி தேவதேவனிடம் கேட்கப்பட்டது. ”அரசியல், இஸங்கள், சமூகம், பெண்ணியம், காந்தியம் என பலவாறாக இங்கே உரையாடல் நிகழ்ந்தது. இவையெல்லாமும் பாதிக்காம எப்படி கவிதை எழுதுகிறீர்கள்என்று கேட்ட கேள்விக்கு, “இவையெல்லாம் என்னைச் சுற்றி நடக்கிறது தான். இவற்றையெல்லாம் வேறு ஒரு இடத்திலிருந்து பார்க்கும் பார்வையும், அதிலிருந்து விடுவித்துக் கொண்டு அந்தக் கணத்தில் நிறைவாக மகிழ்வாக வாழும் வாழ்க்கையை அறிந்திருக்கிறேன்என்று சொன்னார். சமீபத்திய உரையாடல் ஒன்றில் வாசகர் ஒருவர் அவரின் கவிதையிலுள்ள விடுபடல் தன்மை பற்றி கேட்டபோதுநான் காலத்திற்கு கட்டுப்படாதவன். கவிஞன் என்பதை அறிந்திருந்தேன்என்று சொன்னார்.

இத்தனை மண்டை பிளக்கும் உரையாடல்களுக்குப் பின் தேவதேவனின் இறுதி வரியை நெஞ்சில் ஏந்தியபடியே வீடு வந்து சேர்ந்தேன். மகிழ்ச்சியான நிறைவான அனுபவம் ஜெ. இதை சாத்தியப்படுத்திய உங்களுக்கும், அந்தியூர் மணி, கிருஷ்ணன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

ரம்யா

முந்தைய கட்டுரைஅஞ்சலி: வாதூலன்
அடுத்த கட்டுரைதேவதேவன் சந்திப்பு