அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். மே 20, கவிஞர் தேவதேவனுடனான சந்திப்பிற்கு, உலகெங்கிலுமிருந்து கலந்துகொண்ட வாசக நண்பர்களால் இணைய அரங்கு நிரம்பி வழிந்தது. பழனி ஜோதி , “வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்” என்ற ஊனை உருக வைக்கும் பாடலைப்பாடி நிகழ்வை ஆரம்பித்து வைக்க அடுத்து இரண்டு மணி நேரங்கள் தேவதேவனின் கவிதைகளாலும், அவரது ஒளிரும் புன்னகையாலும், தீர்க்கமான பதில்களாலும் வாசக நண்பர்கள் கட்டுண்டு இருந்தார்கள்.
வெள்ளிமலை காவ்ய முகாமில் தேவதேவனை நேரில் சந்தித்த பிரமிப்பு மாறாமல் பாலாஜி ராஜு அமெரிக்காத் திரும்பியிருந்தார். அவரது உள்ளங்கை பட்ட வெம்மை தன் உடம்பில் இன்னும் இருப்பதாக உணர்வுப்பூர்வமாக சொல்லி ஏழு நிமிடத்தில் தனது புரிதலை அவரைப் பாதித்த தேவதேவன் கவிதைகளுடன் தனது சிற்றுரையை சிறப்பாக நிகழ்த்தினார். அவர் தோள்பையை , குழந்தையாக தான் தொட்டுப்பார்க்க யத்தனித்து, மரியாதை கருதி தொடாமல் விட்டுவிட்டதை சொல்லி, தோள்பை கவிதையை அவர் வாசித்துக் காண்பித்தது இனிமையாக இருந்தது.
இணையத்தில் வெறுமனே தேடி கவிதை வாசிப்பவர்களுக்குக் காஸ்மிக் தூசி–யின் கவிதைகள் கண்களில் பட்டிருக்கலாம். ஜாஜா, அவர்தான் இவர் என்று கவிஞர் வேணு தயாநிதியை, அமெரிக்காவில் நடக்கும் பன்னாட்டினர் பங்குகொள்ளும் கவியரங்குகளில் தமிழ்க்கவிதைகளை எடுத்துச் செல்பவர் என அழகிய முன்னுரையுடன் அரங்கில் அறிமுகம் செய்துவைத்தார். வேணுவும் அதை மேலும் நியாயப்படுத்துவதுபோல, உலக அளவில் புதுக்கவிதைக்கான வரலாற்றை சுருக்காக சொல்லி தேவதேவனின் கவிதைகளுக்கான இடத்தை முன்வைத்தார். அரிஸ்டாட்டில் இலக்கிய விமர் சகராக இருந்தார், அவர் இப்பொழுது இருந்திருந்தால் தற்காலக் கவிதைகளை லிரிக் பொயட்ரி என்று சொல்லியிருப்பார் என்றார். கதைசொல்வதே பாடலாக கவிதையாக ஆரம்பித்து, பதினான்கு வரிகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட Sonnet (Shakespeare), உவமை உருவகமாக வளர்ச்சியடைந்த கவிதைகள், அமெரிக்க மீ இறையியல் கவிதைகள், தனி மனிதச் சிந்தனைக்கு முக்கியத்துவம் தரும் கவிதைகள் (தோரோ, எமிலி டிக்கின்ஸன்) , நவீனத்துவம் (எஸ்ரா பவுண்ட், டி.எஸ். எலியட்) , சுதந்திரத் தனிமனிதக் கவிதைகள், என 360 டிகிரி பயணம் செய்து திரும்பவும் நிகழ்த்துக்கலை / பேச்சுமொழிக்கவிதையாக மாறியிருக்கும் வரலாற்றை வருடம் மற்றும் உதாரணக் கவிஞர்களின் பெயர்களுடன் ஒரு கோட்டுச் சித்திரத்தைக் கொடுத்தார்.
மீ இறையியல் கவிஞர்கள் வரிசையில் , வொர்ட் ஸ்மித், எமெர்சன், வால்ட் விட்மன், எமில் டிக்கின்ஸன், தோரோ, பாரதி , பிரமிள் நிரையில் தேவதேவனை வைக்கலாம் என்றார். முற்றிலும் கடவுள் சாராததும், இயற்கையை சாரமாக முன்வைக்கும் ஆன்மிகக்கவிதைகள் என்று தேவதேவனின் பெரும்பாலான கவிதைகளை வகைப்படுத்தினார். உரை முடிந்த பிறகு இது ஒரு கட்டுரை வடிவமாக்கப்படவேண்டுமென்று வாசகர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிகழ்வில், கவிதைக்குப் புதியவர்கள், கவிதையை ஓரளவு வாசிப்பவர்கள், ஆழமாக வாசிப்பவர்கள் என பலவகையான வாசக நண்பர்களும் இருந்ததால், கேட்கப்பட்ட கேள்விகள் எல்லா தரத்திலும் இருந்தன. அத்தனை கேள்விகளுக்கும் ஒரு ஆசிரியராக , ஞானியின் நிதானத்துடன் பதில்கள் சொன்னார். அவர் ஒவ்வொருவருக்கும் வணக்கம் சொல்லி, நான் உங்களைப் பார்த்திருக்கிறேனா என்று சகஜமாகக் கேட்டு பதில் சொன்னது நண்பர்களை அணுக்கமாக உணரவைத்தது. பனைமரம், போஸ்ட்மாஸ்டர், விரிசலில் முளைத்துவிட்ட புல், அகன்ற பெண்ணின் முதுகு என சாதாரணமற்றவற்றை எழுதும் ஒரு எளிய மனிதனோ என்று ஒரு சித்திரம் சிலருக்கு இருந்திருக்கலாம். சாதாரணத்தை தனது அழகியல் பார்வையால், இயற்கையின் வழி பிரபஞ்சத்தைக் கண்டடையும் தீர்க்கதரசியை இந்த நிகழ்வு அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஒரு வாசகரின் கேள்விக்குப் பதிலாக சொன்ன, “கற்றது கையளவு கல்லாதது உலகளவு…ஆனால் கற்றது கவிதையானால் கல்லாதது எதுவுமில்லை” Whatsapp குழுக்களில் சுற்றி சுற்றி வருகின்றன.
எல்லோருமே கவிதை எழுதலாம் , கவிதையை வாசிக்க, எழுத உங்களுக்குத் தேவை Vulnerability என்று அவர் சொன்னது புதிய வாசகர்களை, கவிஞர்களை உருவாக்கலாம்.
இந்த நிகழ்வின் வெற்றி, கவிஞனாகவே வாழும் தேவதேவன் அவர்களையே சாரும்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்