இரண்டாம் கட்ட யோகப்பயிற்சி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

யோக முகாமில் நான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

வீட்டில் த்தரயக் தடாசனம் செய்து முடித்துவிட்டு உடம்பை கவனிக்கும் போது,  “உங்கள் கைகள் இரண்டும் தளர்வாக இரு பக்கமும் தொங்கும் படி இருக்கட்டும்”  என்ற சௌந்தர் குருஜியின் வார்த்தைகள் மனதில் ஒலித்தது. ஆசனங்களுக்கு இடையில் உடல், உள்ளம் சார்ந்த அவதானிப்பை(awareness) பற்றி எனது கவனமின்மையை குருஜி முழுமையாக மாற்றினார்.

அவதானிப்பு என்றால் என்ன அதன் நிலைகள் என்ன அதன் அவசியமென்ன அதனால் என்ன பலன்கள் என்ன என எளிமையாகவும் கூர்மையாகவும் விளக்கினார்.இந்த அவதானிப்பு பயிற்சி யோகப் பயிற்சிகளில் மட்டுமல்ல, வாசிப்புகளில், பிற அறிவார்ந்த செயல்களில், நாம் நாளும் செய்யும் செயல்களில்  பேருதவியாக இருக்கும் என பின்னர் எனக்குப் புரிந்தது.

இந்த மூன்று நாட்களும் ஏதோ ஒரு குறுநாவலை ஒவ்வொரு அத்தியாயமாக இடைவெளி விட்டு படிப்பது போல சுவாரஸ்யமாகவும், கருத்தாழம் கொண்டதாகவும் இருந்தது.

நம் இந்தியா மரபில் ஞானம் என்பது செவி வழியாகவே ஒருவரிடம் இன்னொருவருக்கு ஆதி காலம் தொட்டே வந்தடைந்து கொண்டிருந்தது. நடுவில் ஏட்டுச்  சுவடியும் பிறகு காகிதங்களும் இப்பொழுது மென்பொருள் வழியாகவும் நம் அதனை தேடிக் கொண்டிருக்கிறோம்.இருந்தாலும் செவி வழியாக ஞானம் பெறுவது என்பதும், அதுவும் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர் மூலமாக அடைவது என்பதும் மிகுந்த இன்பத்தையும் ஆழமான கற்றலையுமே அளிக்கிறது.

முதல் கட்டம் பயிற்சி முடிந்து இரண்டாம் கட்டம் பயிற்சி என்பது மரபில் எப்படி குறிப்பிடப்படுகிறது என்று குருஜி கூறினார்.

Basic course அதாவது பிரதம சாதகம், Indermediate course என்ற   மத்யம சாதகம் மற்றும் Advanced course உத்தம சாதகம் என்றால் என்ன, இவற்றால்  ஒருவருக்கு கிடைப்பது என்ன அதை எப்படி அடைவது என்று அறிந்து கொண்டோம்.

மிக முக்கியமாக ஒருவர் பிரதம சாதகனாக இருப்பதில் தவறேதும் இல்லை ஆனால் அடுத்த கட்டமாக பயிற்சியை தொடங்கினால் அவருக்கு கிடைக்கும் பலன்களையும் அனுபவங்களையும் விளக்கி மிகுந்த ஆர்வத்தை உருவாக்கினார்.

முந்தைய யோக  முகாமில் கற்றுக் கொண்ட யோகப் பயிற்சிகளை ஓரளவு தொடர்ந்து செய்வதால்,புதிய பயிற்சிகளை செய்ய உடம்பும் மனமும் இலகுவாக இருந்ததுஇப்பொழுது முகாமில் குருஜி கூறியவற்றுக்கும் நான் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் உடனடியாக எனது கவனத்திற்கு வந்ததுஇந்த வித்தியாசத்தை உடனடியாக குருஜியுடன் கூறி அதற்கான திருத்தங்களையும் பெற மிக வாய்ப்பாக இந்த முகம் அமைந்தது.

ஆரம்ப நிலை முகாமின் போது போது  தொடர்ந்து 90 நாட்கள் பயிற்சி செய்வது மிகவும் நல்லது என்று குருஜி கூறியிருந்தார் ஆனால் வெகு சில, பல காரணங்களால்  தொடர்ச்சியாக 90 நாட்கள் செய்ய முடியவில்லை என்று நானும் வேறு ஒரு சிலரும், அதனால் குற்ற உணர்ச்சி இருக்கிறது என்றும் அவரிடம் பகிர்ந்து கொண்டோம்.

அதற்கு அவர் எங்களை கடிந்து கொள்ளவில்லை. மிக எளிமையாக முக்கியமான எவற்றைச் செய்வதால் நாம் தினமும் ஏதாவது ஒரு வகையில் யோகப் பயிற்சியில் ஈடுபட முடியும், அப்படி செய்யும்போது அந்த தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது, திரும்ப வாய்ப்பு கிடைக்கும் ஒரு நாளில் முழு யோகா பயிற்சியையும்  செய்யும்போது அது ஒரு பெரிய சவாலாக இல்லாமல் இருக்கும் என்று மிக அழகாக எங்களுக்கு ஊக்கமூட்டினார்.

நாம் நம் யோக பயிற்சியில் முன்னேற்றமடைந்தோமா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வதுநம் உள்ளும் புறமும் உள்ள  புலம்பல்கள்  குறைவதே முன்னேற்றத்தின் அறிகுறி எனக் குறிப்பிட்டு காட்டினார்.

நாம் உறக்கத்திலிருந்து எழும் முதல் 15 நிமிடங்கள் எப்படி நம்முடைய முழு நாளையும்  தீர்மானிக்கிறது என்பதை மிக அழகாக விளக்கி அதை எப்படி சரியாக எடுத்துச் செல்வது என்று நாத யோகத்தையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஒரு சில புதிய சற்று கடினமான பயிற்சிகளின் போது இடையிடையே திரிஷாவும், பூஜா ஹெக்டேயும் வந்து கலகலப்பு மூட்டி களைப்பைக் குறைத்தனர்.

அது மட்டுமல்ல, அடிக்கடி யுவால் நோவா ஹராரியும்நியூரோ சயின்டிஸ்ட்களும் வகுப்புகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர்.

ஏப்ரல் 22,  உங்களுடைய பிறந்த நாளை வகுப்பில் கொண்டாடினோம்.உங்களுடைய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை குருஜி எங்களுக்கு வகுப்பில் வாசித்தார்பெரியோர்களின் பிறந்த நாளை இப்படியும் கூட கொண்டாடலாம் என எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நிறைவு நாளில்நாம் கற்றுக் கொண்டதை தொடர்ச்சியாக பயிற்சி செய்தால்  நாம் நம் பிரணாசக்தியை பெருக்கிக் கொள்ள முடியும், அதனை சேமித்துக் கொள்ள முடியும், அதனை மிகச் சரியாக ஒரு உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கு சங்கல்பத்தை உள்ளடக்கிய யோக நித்ரா என்ற பயிற்சியும் பயன்படுத்திக் கொள்ளும் போது ஒரு முழுமை கிடைக்கிறது என்று விளக்கினார்.

இந்த மூன்று நாட்களும் அழகிய மலைத் தங்கும் இடத்தில், மயில்களுடனும், சிறந்த பயிற்றுநருடனும், ஆர்வம் மிக்க யோகா சாதகர்களுடனும், அக்கறை உள்ள அந்தியூர் மணி அவர்களுடனும், பரிவுள்ள சமையல் பாட்டிகளுடனும்   மகிழ்ச்சியாக மிகுந்த பயனுள்ளதாக அமைந்தன.

நம்முடைய கற்றல் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும். ஒருவர் 2 மணி நேரம் 40 நிமிஷம் ஒரு ஆசனத்திலோ  அல்லது ஒரு கூர்ந்த பயிற்சியிலோ ஈடுபட்டால் அவர் உத்தம சாதகன் அல்லது தபஸ்வி என தன்னை கூறிக் கொள்ளலாம் என்று எங்களிடம் பகிர்ந்து இருந்தார் குருஜி.

இதை கவனித்துக் கொண்டிருந்த சிறுவன் ப்ரத்விக்நான் ஒரு  வீடியோ கேமையும் 2 மணி நேரம் 40 நிமிஷம் பார்த்துக் கொண்டிருந்தால் நானும் தபஸ்வி அல்லவா என்று  நண்பர் வெற்றியிடம் வேறொரு சமயத்தில் கேட்டான்!

இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியும்.தெரியாதவர்களுக்கு?குருஜியின்  யோக முகாம் இரண்டாம் நிலையில் பதில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.இப்படியான ஆழமான அபூர்வமான கற்றலை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

சகுந்தலா.

முந்தைய கட்டுரைபாரதத்திற்கான பாதை
அடுத்த கட்டுரைராஜா – கடிதம்