ராஜா – கடிதம்

அன்புள்ள ஜெ

இளையராஜா பற்றிய உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. அவரை பற்றிய சர்ச்சை வரும்போதெல்லாம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அந்த பதிவுகளில் உலவுவது மிகவும் உதவும். குறிப்பாக, ‘விண்ணளக்கும்போதே அது பறவை!’ என்ற சொல்லாடல். நான் வாய்விட்டு அடிக்கடி சொல்லும் வாக்கியம் அது. அந்த ஒரு சொல்லாடல் இதுவரை இளையராஜா அவர்களை பற்றி விளக்க சொல்லப்பட்ட எல்லாவாற்றையும் விட சிறப்பானது.

என்னுடைய ஆரம்பகால வேலையின் பொது உடன் பணியாற்றிய மூத்த பொறியாளர் எனக்கு கிட்டத்தட்ட இந்த துறையில் குருவாக இருந்தார். ஐரோப்பிய வெள்ளையர். அவர் வேலை பார்க்கும் விதமே ஒரு தனித்துவமானது. யாரிடமும் பேசமாட்டார். கணினி முன் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை பார்ப்பார். எங்களுக்கு onjob ட்ரைனிங் என்று அவரிடம் வேலை பார்க்க சொன்னார்கள். அவர் வேலையின் பொது ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் எரிந்து விழுவார். இது கூட தெரியாதா? என்ற சீண்டல்கள் ஏராளம். மெதுவாக அனைவருமே வேறு டீம் – மாறிவிட்டார்கள். நான் கொஞ்சம் புரிந்து கொண்டு அவர் கூடவே அமர்ந்திருப்பேன். இரண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை புகைக்க வெளியில் நடப்பார். அதுவே எனக்கு பொற்காலம். என்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் நேரம். அப்போது ஒரு முறை அவர் கூறியது “நீ பூனை சாப்பிடும்போது கவனித்து இருக்கிறாயா?” “பார்த்திருக்கிறேன், ஆனால் கவனமாக இல்லை” என்றேன். அவரே தொடர்ந்தார் “பூனைக்கு சாப்பிடுவது தியானம் போல. அது அனுபவித்து சாப்பிடும் வேறு எந்த கவனசிதறலும் அதனை எரிச்சல் படுத்தும் அதற்குள் இருக்கும் புலியை வெளியே கொண்டுவரும்…” ஒரு முறை புகையை இழுத்துவிட்டு சொன்னார். “நானும் அதுபோல தான். வேலை செய்யும்போது நான் சஞ்சரிக்கும் உலகம் வேறு. எனக்குள்ளே நான் உரையாடி கொள்ளும் தருணம் அது. வேறு எந்த கேள்வியும் என்னை கீழிறக்கி எரிச்சல் ஏற்படுத்தும். என்னை சகித்து கொண்டால் உனக்கு நல்லது!” நான் சகித்துமட்டும் கொள்ளவில்லை. புரிந்து கொண்டேன். அவர் இன்றும் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். மாறாமல். இளம் பொறியாளர்கள் என்னிடம் அவரை பற்றி புகார் சொல்லும்போதெல்லாம் நான் சொல்வது ஒன்றுதான். “அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு சிலவருடம் கழித்து இதை சொன்னதற்காக எனக்கு நன்றி சொல்லுங்கள்” :). என்னால் வார்த்தையால் விளக்க முடியாமல் இருந்த விஷயத்தை உங்கள் ‘விண்ணளக்கும் பறவை’ விளக்கியது.

ராஜா அவர்களை பற்றி நான் உணர்ந்த மற்றொரு விஷயம் உண்டு. என்னை போன்ற செவ்வியல் இசையின் (கர்நாடக மற்றும் மேற்கத்திய) வாசமே அறியாத பாமரர்களின் செவிகளை அந்த இசையை கேட்க பழக்கப்படுத்தியது அவரின் இசைதான். ராஜாவின் வெறித்தனமான ரசிகர்களிடம் உள்ள ஒரு பொதுமை இது. வெறித்தனமான ரசிகர்கள் என்றால் அவரின் சினிமா பாடல்களை கேட்பவர்கள் அல்ல. அவரின் ஆல்பங்களையும் தேடி ரசிப்பவர்கள். how to name it , nothing but wind , the mussic messiah , ரமணமாலை, கீதவழிபாடு, திருவாசகம் pandavas திரைப்பட பின்னணி கோர்ப்பு போன்ற அனைத்தையும் தேடி கேட்பவர்கள். ராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டே, how to name it வழியாக செவ்வியல் இசைக்கு நுழைந்த பலருடன் நான் பார்த்திருக்கிறேன். how to name it மற்றும் nothing but wind கேட்டுவிட்டு Mozart , பீத்தோவன், Bach என்று உலாவி பாலமுரளிகிருஷ்ணா, MS சுப்புலட்சுமி போன்றோர்கள் இசையை பலமுறை நாள்கணக்கில் கேட்டிருக்கிறேன். பலநாட்களுக்கு பிறகு மீண்டும் இளையராஜா வழியாகவே திரையிசை பாடல்களுக்கு திரும்பி இருக்கிறேன். இந்த செவ்வியலுக்கு செவிகளை பழக்கப்படுத்தும் விதத்தை வேறு எந்த நிகழ்கால திரையிசை மேதையின் தீவிரமான ரசிகர்களிடமும் நான் கண்டதில்லை. ராஜாவின் மரபு பயிற்சி இதற்கு முக்கிய காரணம் என்றே நான் கருதுகிறேன்.

பெரும்பாலான ராஜா பற்றிய விமர்சனங்கள் ஒரு வகையான வெறுப்பின் மூலம் வெளிவருபவை. இதே ராஜா கொஞ்சம் நாத்திக வேடம் அல்லது முற்போக்கு வேடம் அணிந்தால் இந்த விமர்சனங்களில் பெரும்பாலானவை காணாமல் போகி விடும். :). ராஜாவின் பக்தி ஒரு உறுத்தலாகவே பெரும்பாலான முற்போக்குவாதிகளிடம் நான் பார்க்கிறேன். ஆனால் ராஜாவின் ரசிகர்கள் அவர் மூலமாக உணர்ந்த மரபு ஒன்று உண்டு. அதுவே ராஜாவை கிட்டத்தட்ட கடவுளுக்கு இணையாக அவரை வைக்க தூண்டுகிறது என்றே நான் புரிந்து கொள்கிறேன். என்னையும் சேர்த்துதான்!.

என்னை போல் ஒருவன்.. என்று நீங்கள் ராஜாவை பார்த்த முதல் சந்திப்பை பற்றி எழுதி இருந்தீர்கள். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளை நீங்கள் இங்கு வந்திருந்தபோது நாங்கள் பேசியிருக்கிறோம். கூடவே கமல்ஹாசன் அவர்களையும் சேர்த்து. அவரும் உங்களை போன்றவரே. அவருடைய துறையில்.

இளையராஜாவின் திரையிசை பாடல்களின் வரிகள் மீதான அவர் குறைவான கவனத்தை பற்றி எழுதி இருந்தீர்கள். அதை பற்றிய ஒரு நல்ல கட்டுரையை நான் இதுவரை படித்தது இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட படி..பெரும்பாலான பாடல்களுக்கும் வரிகள் அப்படி ஒன்று சிறப்பாக அமையவில்லை. அவரின் மெட்டுக்களை மேம்படுத்த என்று அல்ல, அதை கீழிறக்காத பாடல் வரிகள் அவருக்கு பெரும்பாலும் அமைய வில்லை என்றே நானும் கருதுகிறேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேலை விஷயமாக ஐரோப்பா சென்றிருந்த பொது ராக்கம்மா கைய தட்டு பாடல் மட்டும் என்னுடைய கணினியில் இருந்ததால் அது மட்டுமே கிட்டத்தட்ட 24 மணிநேரமும் நான் தங்கியிருந்த வீட்டில் ஒலித்து கொண்டு இருந்தது. வீடு உரிமையாளரான வயதான பிரெஞ்சு தம்பதிகள், அந்த பாடலை என்னுடன் அமர்ந்து கேட்டு விட்டு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அதன் நுட்பங்களை சிலாகித்து பேசியதை இப்பொது நினைத்தாலும் மனம் மகிழும். கடைசியாக அவர்கள் பாடல் வரிகளுக்கு வந்து வரி வரியாக நான் மொழி பெயர்த்தபோது என்னை கூச செய்தது அந்த வரிகள். சாமானியர்களுக்கு அந்த பாடலின் மெட்டமைப்பு புரியாமல் இருக்கலாம். ராஜாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் அல்லவா? இந்த பாடல் வரிகளை அவரால் எப்படி ஏற்று கொள்ள முடிந்தது. வரிகளுக்கு இடையில் எந்த தொடர்பும் இல்லாமல்..ஒரு just tune fillers என்ற வகையிலேயே அவருக்கு பாடல் வரிகள் அவருக்கு தோன்றுகிறது போலும். கிட்டத்தட்ட இதே சூழலில் வந்த இரு பாடல்கள் “வீரபாண்டி கோட்டையிலே..” என்ற திருடா திருடா பாடல், மற்றும் “எடுடா அந்த சூரிய மேளம்” என்ற புதிய மன்னர்கள் பட பாடல். ஒப்பு நோக்க அவை சிறப்பான வரிகள் என்றே தோன்றுகிறது.

இதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது..ராஜாவின் மெட்டமைக்கும் வேகம். துரதிருஷ்டவசமாக கண்ணதாசன் அவர் காலத்தில் எழுதவில்லை. ராஜாவின் வேகத்திற்கு கிட்டத்தட்ட எல்லா பாடலாசிரியரும் திணறி இருப்பதாகவே நான் கருதுகிறேன். வாலி அவர்கள் ராஜாவை நன்கு உணர்ந்தவர் என்றே கருதுகிறேன். பெரும்பாலான பாடல்களுக்கு இசைக்கு தோதாக ஏதாவது வார்த்தைகளை பயன்படுத்தி ராஜாவிற்கு பிடித்ததை செய்தவராகவே நினைக்கிறேன். நல்ல கர்நாடக மெட்டுக்களை வாலி அவர் வார்த்தைகள் மூலம் வேறு உயரத்திற்கு கொண்டு செய்திருக்கிறார். குறிப்பாக “ராம நாமம் ஒரு வேதமே” , “தூது செல்வாதாரடி!”, “கமலம் பாத கமலம்” போன்ற பாடல்கள். ஆனால் மற்றொரு புறம் பாடல்களை பாதிக்கும் வரிகளும் எல்லா கவிகளும் செய்திருக்கிறார்கள். பக்தி பாடல்களுக்கு வரிகள் ராஜாவுக்கு அமைந்தது போல் வேறு யாருக்கும் அமைய வில்லை என்று நினைக்கிறன். ஒரு சோறு பதமாக “எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ” என்ற பாரதி பட பாடல். அது போலவே ரமணமாலை என்ற ஆல்பத்தில் இருந்த எல்லா பாடல்களும். இதற்க்கு ராஜாவின் பக்தியும் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். மற்ற பாடல்களில் அவர் பாடல் வரிகளை பற்றி கவலை பட்ட எந்த தடமும் இல்லை. அவரது இசைக்கு அது தேவை இல்லை என்று நினைத்ததாகவே தோன்றுகிறது. தேவை இல்லை என்பதை கூட ஒரு விதத்தில் என்னால் ஏற்று கொள்ள முடியும்..ஆனால் மோசமான வரிகளை உபயோகப்படுத்துவது அந்த இசையை சிறிதளவேனும் கீழிறக்கம் செய்யும் என்றே எனக்கு தோன்றுகிறது.

என்னுடைய விருப்பம் பாடலின் தரத்தை பாதிக்கும் வரிகளை பயன்படுத்துவதற்கு பதில், வரிகளே இல்லாமல் கருவிகளோ அல்லது ஸ்வரங்களையோ பயன்படுத்துவது சிறப்பானது என்றே கருதுகிறேன். ராக்கம்மா கைய தட்டு பாடலை அப்படி கேட்க வேண்டும் என்று எனக்கு பல வருட ஆசை :)

ராஜாவின் பாடல்கள் பல நூற்றாண்டுகள் வாழும். அதில் பாடல் வரிகளின் முக்கியத்துவம் சிறிதாகவே இருந்தாலும் அது முற்றிலுமாக இல்லாமல் ஆவதில்லை.. 300 ஆண்டுகள் வாழும் ஒரு பாடல் மேலும் ஒரு நாள் பாடல் வரிகளுக்காக வாழும் என்றால், அந்த வரிகளை பயன் படுத்துவதே அந்த பாடலுக்கு செய்யும் நியாயம் என்றே நினைக்கிறேன்.

இவையெல்லாம் வருத்தமே தவிர, விமர்சனம் அல்ல. அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நம் பாக்கியம் என்று நான் நினைக்கிறன். மனதில் எந்நாளும் ராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் வேறு யாரையும் கற்பனை கூட செய்ய முடியாமல் இருக்கும் பல லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்.

பாடல் வரிகளுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றி என் அனுபவம் சார்ந்த ஒரு நிகழ்வு.

அப்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். உடன் அறையில் ஒரு நாற்பதை தாண்டிய நண்பர் இருந்தார். நீண்ட நாட்களாகியும் குழந்தை பேறு இல்லாத வருத்தம் அவரிடம் எப்போதும் உண்டு. ஒரு முறை தமிழகத்திற்கு விடுமுறையில் சென்று விட்டு திரும்பும்போது மிக்க மகிழ்ச்சியுடன் அவர் மனைவி கருவாகி இருப்பதை தெரிவித்தார். அவரை நான் அவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் மணிக்கணக்கில் மனைவியிடம் பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு இருந்தார். திடீரென்று ஒரு நாள் மனைவியின் கரு கலைந்ததாக தெரிவித்தார். அன்று இரவு நீண்ட நாள் கழித்து அதிகமாக மது அருந்திவிட்டு அவர் மனைவியிடம் பேச வெளியில் சென்று விட்டு வந்து.. “என்னடா வாழ்க்கை! அவளால தூங்கவே முடியலை.. புள்ள பொறந்து அதுக்கு தாலாட்டு பாடுவோம்னு நெனைச்சா அவளுக்கு நான் பேசி தூங்க வைக்க வேண்டியதாயிடுச்சு..” என்றவர் அவசரமாக எதையோ கணினியில் தேடி ஒரு பாடல் ஒலிக்க விட்டார். “தாலாட்டு மாறி போனதே..” என்ற பாடல். முதல் வரியை கேட்டதும் அழுக ஆரம்பித்தவர் தொடர்ந்து பெருங்குரலெடுத்து அழுது கொண்டே இருந்தார். அன்று இரவு முழுக்க அந்த ஒரு பாடல்தான். இதுதான் ராஜாவுக்கும் ரசிகருக்கும் உள்ள தொடர்பு. நான் அந்த பாடலை இது வரை பார்த்ததில்லை. பார்க்கவும் விரும்ப வில்லை. அந்த முதல் வரியோடு கூடிய ராஜாவின் இசை என் மனதில் இன்றும் ஒரு மாபெரும் கலைஞனை அவரின் கலைக்கும் சாமானியருக்கும் உள்ள தொடர்பை நினைவூட்டி கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு youtube பின்னூட்டத்தில் படித்தது..”ஒரு காலத்திலே , ஒரு ஊர்ல ராஜா ஒருத்தர் இருந்தாராம்..! இப்ப வரைக்கும் அவர் மட்டுமே ராஜாவாம்!” :)

அன்புடன்,

காளிராஜ்

முந்தைய கட்டுரைஇரண்டாம் கட்ட யோகப்பயிற்சி- கடிதம்
அடுத்த கட்டுரைநான்காவது கொலை வாசிப்பு