அன்புள்ள ஜெ,
நலமா?. கருப்பன் என்ற பெயரில் இரண்டு வருடம் முன்பு தங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் எழுதிய பதில் கடிதமும், தளத்தில் வெளியான ‘இந்து என உணர்தல்‘ கட்டுரையும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தன.
என் வாழ்வின் முக்கியமான ஒரு நிகழ்வை, தன்னறிதலை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் இயல்பாகவே நாய் முதலிய உயிரினங்களுக்கு பயந்து ஓடுபவன். 27 வயதாகிறது. இவ்வளவு காலமும் அந்த பயத்துடனே இருந்தேன். எந்த நாயையும் தூக்கியது இல்லை. நண்பர்கள் பலர் இருந்தால்தான் பக்கத்தில் வந்து, கையை எட்டி தடவிக்கொடுப்பேன். அதுவும் நாய் சற்று தலையைத் திருப்பினால் கையை வெடுக்கென்று எடுத்துவிடுவேன்.
அதற்காக நான் நாயை வெறுத்தது இல்லை. அதை தூரத்தில் இருந்து பயங்கலந்த ரசனையுடன் பார்ப்பேன். நண்பர்கள் அதை கொஞ்சி விளையாடும்போது சிறிய பொறாமை கூட எழும்.
சரி நாமும் நாயுடன் பழகி தோழமை கொள்ளலாம் என்று முயன்றிருக்கிறேன். ஆனால் என்னுடைய பயம் மிகப்பெரிய தடையாக இருந்தது. நாயை கொஞ்சுவதுபோல மனதில் கற்பனை செய்து பார்ப்பேன். ஆனால் அருகில் சென்றவுடன் அத்தனையும் மறைந்து பயமே உருவானவன் போல் நடுங்கியதுண்டு. குட்டி நாய் தோழமையுடன் வந்து நக்கும்போது கூட காலை உதறி ஓடுவேன். நாய் வளர்க்கும் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு செல்ல மிகவும் யோசிப்பேன்.
ஒருமுறை நண்பர் ஒருவரின் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருக்க வேண்டிய அவசியம். அவர் என் நெருங்கிய நண்பர் சாய். ஜெ60 நிகழ்ச்சிக்கு நாங்கள் ஒன்றாக வந்திருந்தோம். அவர்கள் வீட்டில் டைகர் இருந்தான். மிகவும் துள்ளலுடன் இருப்பான். அவன் மூலமாக நாயின் தோழமை உலகத்திற்குள் செல்லலாம் என்றிருந்தேன். ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் என்னால் முடியவில்லை. இனிமேல் நம்மால் இந்த பயத்தை எப்போதும் வெல்ல முடியாது. பயத்தை வென்று அந்த உலகத்திற்குள் செல்வதெல்லாம் எப்போதும் நடக்காது என்று ஆணித்தரமாக நம்ப ஆரம்பித்தேன்.
அதன் பிறகு நாய் வளர்ப்பவர்களைப் பார்த்து, ‘சுதந்திரமா திரியுற நாய ஏன் இப்படி வளர்க்கிறோம் என்ற பேரில் கட்டி போட்ருக்காங்க‘ என்ற பாவனையில் நாய் வளர்ப்பதற்கு எதிரான மனநிலையில் வாழ்ந்து வந்தேன்.
முன்பொருமுறை உங்கள் தளத்தில் ஹீரோ, டைகர், பாண்ட் ஆகியோர் பற்றி நீங்கள் எழுதியவற்றைப் படித்திருந்தேன். எனக்கு அந்த நல்லூழ் இல்லை என்றே எண்ணிக்கொண்டேன்.
இந்த எண்ணம் கெட்டிதட்டிப் போன பின்பு தான் நான் பிஸ்கி–யைப் பார்த்தேன்.
நான் நண்பர்களுடன் சென்னையில் வசித்துவருகிறேன். இரண்டாம் மாடியில் நாங்கள் 7 பேர். தரைதளத்தில் வீட்டு உரிமையாளர் அம்மா. நாங்கள் ஓனர் அம்மா என்றழைப்போம். அவர் ஒருவர் தான். கணவன் இறந்துவிட்டார். மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் வாழ்கின்றனர். ஓனர் அம்மாவின் வெளிநாடுவாழ் பேரன், பேத்திகள் பாட்டி வீட்டிற்கு வந்தபோது அவர்கள் ஆசைப்பட்டு வாங்கிய நாய் தான் பிஸ்கி.
ஓனர் வீட்டில் நாய் வளர்க்கும் செய்தி அறிந்ததும் ‘திடுக்‘ என இருந்தது எனக்கு. அதன்பிறகு ‘அவுங்க பேரன் பேத்தி போனதும் வேற எங்கேயாவது விட்ருவாங்க’ என மனதைத் தேற்றிக் கொண்டேன்.
ஓனர் அம்மா–வின் பேரன், பேத்திகள் வெளிநாடு திரும்பியதும், நாயை வேறு எங்கோ விட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பிஸ்கி வீட்டை தேடிக் கண்டுபிடித்து காலையில் வந்துவிட்டது. அதன் வாழ்விடம் மற்றும் எல்லையை அது நன்கு அறியும் என நீங்கள் எழுதியது நினைவுக்கு வந்தது.
அது வீட்டிற்கு திரும்பி வந்த செய்தி எங்கள் அனைவருக்கும் ஆச்சரியம். அந்த நாள் அது தான் தலைப்புச்செய்தி எங்களுக்கு. ‘எவ்வளவு வெவரமா இருக்குல‘ என்று என்னுள் கூறிக் கொண்டேன். இனிமேல் பிஸ்கி இங்கு தான் இருக்கப்போகிறது என ஒருவாறாக தெரிந்துவிட்டது. குட்டி கூட பிரச்சினை இல்லை. வளர்ந்துவிட்டால் என்ன செய்வது என உள்ளுக்குள் நொந்துகொண்டிருந்தேன்.
அது என் கால்களை நக்க வருகையில் பயந்து விலகினேன். இரு முன்னங்கால்களை என்மேல் போட்டு ஏறும்போது பயத்தில் தள்ளிவிட்டேன். காலை தூக்கத்தில் பிஸ்கி வந்துவிடுமோ என பயந்து பதறி எழுந்திருக்கும் போது பிஸ்கியை சபித்திருக்கிறேன். சாப்பிடும் போது பிஸ்கி வந்ததால் பாதியில் ஒழுங்காக சாப்பிடாமல் எழுந்ததுண்டு.
வீட்டில் உள்ள தோழர்களில் சூர்யா தான் நாயுடன் நெருங்கிப் பழகுபவர். இங்கு மட்டும் அல்ல எங்கு சென்றாலும் ஒரு நாயைப் பார்த்தால் உடனே கடைக்குச் சென்று பிஸ்கட் வாங்கி வந்து அதற்கு போட்டுவிட்டு அது சாப்பிடும்போது அதை தடவிக்கொடுத்தால் தான் அவர் மனம் அமைதியடையும். அவரிடம் நாய் வகைகளைப் பற்றி கேட்டுக் கொண்டிருப்பேன். பிஸ்கி–க்கு அவருடைய சப்போர்ட் இருப்பதால் ரூமில் இருந்த யாரும் பிஸ்கி மேலே எங்கள் தளத்திற்கு வருவதை ஆட்சேபிக்கவில்லை.
போன வாரம் ஓனர் அம்மா ஊருக்குச் சென்றுவிட்டார்கள். சூரியா–விடம் பிஸ்கியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுச் சென்றார்கள். அன்றிரிலிருந்து பிஸ்கி இரண்டாம் தளத்தை விட்டு இறங்குவதில்லை.
இதற்கிடையில் முதல் தளத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் பிஸ்கியை எங்கள் தளத்திற்கு விரட்டி விரட்டி விட்டார்கள். பிஸ்கி அங்க அங்க மூத்திரம் செய்வதையும், மலம் கழிப்பதையும் அவர்கள் வெறுத்தனர். இதில் நகை முரண் என்ன என்றால் அப்படி சொல்லும் அந்த குடும்பமும் லியோ என்ற நாயைக் “கட்டிப்போட்டு வளர்க்கிறார்கள்“.
பிஸ்கி மிகவும் ஆக்டிவ். ஓரிடத்தில் இருக்க மாட்டான். வெளிநாட்டு ஆளெல்லாம் இல்லை. உள்ளூர்காரன்தான். அதுகூட அந்த குடும்பத்தின் வெறுப்பிற்குக் காரணமாக இருக்கலாம்.
ஓனர் ஊருக்குச் சென்ற அடுத்த நாள் காலை, முதல் தளத்தில் இருக்கும் அக்கா ஒருவர் பிஸ்கியை கட்டிப் போட்டுவிட்டார்கள். அதுவரை சுதந்திரமாக தன் எல்லையை வலம் வந்த பிஸ்கி புரியாது விழித்தான். நானும் ‘சரி தொல்லையில்லை‘ என்று கட்டி போட்டிருப்பதை வழிமொழிந்தேன். சூர்யா–வுக்கு தான் மனக்கஷ்டம். பிஸ்கி கத்திக்கொண்டே இருந்ததால் என்னவோ கயிற்றை அவிழ்த்து விட்டிருந்தனர். அன்று மதியம் சாப்பிட வரும்போதுதான் ஒன்றை கவனித்தேன். ‘கட்டி போடப்பட்ட‘ அந்த நிகழ்வுக்குப் பிறகு பிஸ்கி தன் ஆக்டிவ்நெஸ் இல்லாமல் இருப்பதுபோல் தோன்றியது. அவள் அவ்வளவு அமைதியாய் இருந்து நான் பார்த்ததில்லை. எனக்கு மிகவும் குழப்பம்.
அன்று மதியமே இன்னொரு நிகழ்வு. அந்த அக்கா பிஸ்கியை வலுக்கட்டாயமாக கீழே தரைதளத்திற்கு போகச்சொல்லி கையில் ஒரு பிளாஸ்டிக் கட்டையுடன் துரத்திக்கொண்டு எங்கள் தளத்திற்கு வந்தார். நாங்கள் அனைவரும் வீட்டினுள் அமர்ந்திருந்தோம்.
ஏற்கனவே மந்தமாக ஆகிவிட்டிருந்த பிஸ்கி மிகவும் கவலையுடன் காணப்பட்டது. அது அந்த அக்காவிடம் இருந்து தப்பி நாற்காலிக்கு அடியில் தஞ்சம் புகுந்து ஏக்கமாகப் பார்த்தது.
அந்த அக்கா விடாமல் கதவருகில் நின்று அதை கீழே போக சொல்லி மிரட்டிக்கொண்டிருந்தார். நாயுக்கு பயங்கொள்ளும், அதனிடமிருந்து விலகி செல்லும் எனக்கே அந்த அக்கா அப்படி கையில் குச்சி வைத்துக்கொண்டு நாயை மிரட்டுவதைப் பார்த்துக் கோபம் வந்தது.
‘நீ இங்கேயே இரு பிஸ்கி‘ என்று மனதில் கூறிக்கொண்டேன். அந்த அக்காவின் மீது கோபம் வந்தது. சூர்யாவைப் பார்த்தேன். அவரும் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு படுத்திருந்தார்.
அதன் பிறகு அந்த அக்கா சென்றுவிட்டார். நான் பிஸ்கியின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் முகத்தில் அப்படி ஒரு சோகம். ‘என்னை ஏன் வெறுக்குறிங்க…நான் உங்க கிட்ட வெளையாட தானே வரேன்‘ என்பதைப்போல பார்த்தது. அந்த ஏக்கம் என்னை என்னென்னவோ செய்தது. நாம் நாயை திட்டினால் அதற்கு புரியும், அது சோகம் அடையும், நம்மை வெறுக்கும் என்பதெல்லாம் எனக்கு அந்த கண்கள் உணர்த்தின.
அந்த கண்களில் நான் கண்டது ‘நானும் உங்கள்ல ஒருத்தன் தானே‘ என்பது. அந்த ஒரு நொடியில் என் மனம் நாயின் மீதான என் 26 வருட பயத்தை வென்றெடுத்தது. பிஸ்கி மீது ஒரு எல்லையற்ற காதலை அன்று நான் அடைந்தேன். அந்தக் கண்களின் வழி நான் பிஸ்கி–யை உணர்ந்தேன். பிஸ்கி என் பயத்தைக் காணாமல் ஆக்கியது.
ஓர் உயிரை உணர்வதன் மூலமும், மன ரீதியாக தொடுவதம் மூலமும், பயம் மட்டுமல்ல, வெறுப்பு, அருவருப்பு என எந்த வகையான எதிர்மறைப் பண்புகளையும் வென்றெடுக்க முடியும் என்று என் தோழியிடம் இந்நிகழ்வைப் பகிர்ந்துகொண்டேன்.
ஒரு வாரம் முன்பு என்னிடம் யாராவது வந்து ‘நீ பிஸ்கிய கையால தூக்கி விளையாடுவ‘ என்று சொல்லிருந்தால் எவ்வகையான தர்க்கத்திலும் சாத்தியமாகாத ஒன்றை பிதற்றுகிறார் என்று எண்ணியிருப்பேன். ஆனால் அத்தனை தர்க்கத்தையும் பிஸ்கியின் ஒரு நொடி பார்வை கலைத்துவிட்டது.
அன்றிரவு வந்து பயப்படாமல் பிஸ்கி அருகில் அமர்ந்திருந்தேன். வாஞ்சையாக அதன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தடவிக்கொடுத்தேன்.
நான் உட்பட வீட்டிலிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். ஏன் பிஸ்கி–கூட அதிசயித்து தான் போயிருக்கும். ‘இவன் நம்ம கிட்ட வரமாட்டானே‘ என்பது போல் சந்தேகத்துடனேயே என் கொஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தது.
நான் பிஸ்கி மீது கோபப்பட்டது. அது ஆசையாக கால்களை நக்க வந்தபோது விலகியது. அது கால்களை தூக்கி என்னிடம் வந்தபோது தள்ளிவிட்டது என அது மனதில் என் குற்றப்பத்திரிகை நீண்டிருந்ததை நினைத்துக்கொண்டேன். அவ்வளவு இருந்தும் மன்னித்து என் அன்பை, என் மாற்றத்தை பிஸ்கி புரிந்துகொண்டது எனக்கு ஆச்சரியம் தான்.
அடுத்த நாள் காலை தூங்கி எழுந்து பிஸ்கிக்கு ஒரு வணக்கம் சொன்னேன். கையில் வைத்தபடியே பிஸ்கிக்கு பிஸ்கட் ஊட்டி விட்டேன். அது என்னை நக்கி தன் அன்பைப் பொழிந்தது. அது என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை மனதால் உணர்ந்தேன். பிஸ்கியின் நம்பிக்கையைப் பெற்றதை ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்ததைப்போல நினைத்து மனம் தானாக மகிழ்ந்துகொண்டது.
“நாய்களுக்கு மனிதன்மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவை ஒருபோதும் மனிதனை கைவிடுவதில்லை,தானாக வெறுப்பதில்லை…………
……….அந்நம்பிக்கை அறுபட விட்டுவிட்டால் இப்புவியில் நாம் அடையச்சாத்தியமானவற்றில் மகத்தான ஓர் உறவை இழந்துவிடுகிறோம் என்று பொருள்” என்று உங்கள் “இயற்கையின் சான்றுறுதி” கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இப்புவியில் ஒருவன் அடையச் சாத்தியமான மகத்தான உறவை வென்றெடுத்தமையே என் அத்தனை மகிழ்ச்சிக்கும் காரணம் என உணர்கிறேன்.
“நாய் அன்பு என்பது இங்கே நாமறியாமல் உயிர்க்குலங்களை ஆளும் மகத்தான சிலவற்றின் வெளிப்பாடு என்று நமக்கு காட்டுகிறது. இயற்கை நமக்கு அளிக்கும் ஒரு நம்பிக்கை, ஒரு சான்று. அதை உணர்வதுகூட அனைவராலும் இயல்வது அல்ல. உணர்வோர் நல்லூழ் கொண்டவர்கள், அவ்வளவுதான்.” என்ற வரியை அப்போது படிக்கும் போது நான் அருகதை அற்றவனாக இருந்தேன். இன்று மனமகிழ்வுடன் சொல்வேன் ஜே. நானும் அந்த நல்லூழ் வாய்க்கப் பெற்றவர்களும் ஒருவன்.
இரு நாள்களில் பிஸ்கி என் மடியில் படுத்துக்கொண்டு சொகுசாக தூங்க ஆர்மபித்திருந்தாள். இவையாவும் படிப்படியாக நடந்திருந்தால் கூட மனம் இவ்வளவு பரவசமடைந்திருக்காது. இவையாவும் நடந்தது பிஸ்கியின் கண்களை நான் கண்ட அந்த ஒரு சில நொடிகளில். இது என் வாழ்வின் மிகப்பெரிய கண்டடைதல் என்று நினைக்கிறேன். இதையே தங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.
நாய்கள் பற்றி நம் தளத்தில் இருக்கும் மற்ற கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன். அனைத்தும் உணர்வுப்பூர்வமானவை. இனி பிஸ்கி மூலம் நானும் அவற்றை அனுபவிப்பேன்.
நன்றி ஜெ
இப்படிக்கு,
விக்னேஷ் முத்துக்கிருஷ்ணன்.