ஆலயக்கலை- கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன்,

National treasure, The Mummy போன்ற மேற்கத்திய படங்களை பார்த்திருப்பீர்கள், புராதானமான கட்டிடங்களை தேடி அதிலுள்ள புதிர்களை கட்டவிழ்த்து சரியான பொத்தானையோ, லிவரையோ அழுத்திய மறு நிமிடம் பிரம்மாண்டமான சுவற்றின் மதில்கள் திறந்து அங்கு மாபெரும் புதையலோ அல்லது அபரிமிதமான ஆற்றலோ நமக்காக காத்திருக்கும். இந்த கற்பனையே சிறுவயதில் என்னை ஆலயங்களை சுற்றிவர செய்தது

சிற்பங்களையும், தூண்களையும் திறக்க கூடிய அந்த மாயப் புள்ளியை சுற்றி சுற்றி தேடி வருவேன், சுவற்றில் உள்ள தொல் மொழியை படித்து விட்டால் அந்த சூட்சமம் தெரிந்துவிடும் என்று என் நண்பனிடம் கதை அளந்துக் கொண்டிருப்பேன். அர்ஜுனனின் காண்டீபத்தை இதைப் போல் எத்தனையோ முறை தேடி இருக்கிறேன். குறுகிய காலம் நாத்திகனாக திரிந்ததில் இந்த கற்பனையெல்லாம் மழுங்கி விட்டது, ஆனாலும் பழமையான கோவில்களுக்கு செல்வதை ஒருபோதும் தவிர்த்ததில்லை அந்த கட்டிடங்களில் சிற்பங்களில் இருந்த அழகு, கலைநயம், அதன் நிசப்தம், கோவிலின் உள் பரவும் மிதமான ஒளியும் இருளும் மீண்டும் மீண்டும் என்னை அங்கு கொண்டு வந்தது. என் நண்பன் ஒருவன் சில கோவில்களின் கருவறையில் நுழைந்தால் அவன் கை தானாக நடுங்குவதை காண்பித்துசெம பவருடா உனக்கு பீல் ஆகலையாஎன்று கேட்ப்பான் நான் அமைதியாக தலையை மட்டும் ஆட்டி வைப்பேன்.

எவ்வளவுதான் சிற்பங்களை ரசிக்க முடிந்தாலும்எவ்ளோ அழகா செதுக்கி இருக்கான்ல கலைஞன் டாஎன மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக் கொள்வதை தாண்டி ஒரு சிற்பத்தை அடையாளம் காணவோ அதனோடு உறவாடவே முடிவதில்லை, சிறுவயதில் இருந்த கற்பனைகளுக்கும் திரும்ப முடியாது. இந்த சோர்வில் இருந்து மீள ஆலயக் கலை பயிற்சி ஒரு பெரிய வரம்

ஆசிரியர் ஜெயக்குமார் தஞ்சை பெரிய கோவிலின் படங்களை காட்டி அதை விவரித்துக் கொண்டே செல்கிறார் இராசராசன் திருவாயிலில் உள்ள துவார பாலகர் காலடியில் உள்ள யானையை விழுங்கும் பாம்பு சிற்பத்தை காட்டியானை எத்தனை பெரிய விலங்கு, அதை ஒரு பாம்பு விழுங்குகிறது என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் அந்த இரு சிற்பங்களும் துவார பாலகரின் கால் அளவுதான் இருக்கிறது, அதற்கும் மேல் உயர்ந்திருக்கும் துவார பாலகர் தர்ஜனிமுத்திரையால் நமக்கு எச்சரிக்கை கொடுத்து உள்ளிருக்கும் இறைவனை சுட்டி விஸ்மய முத்திரையால் அவர் எத்தனை பெரியவர் என்று வியக்கிறார்இதை கேட்ட கணம் உள்ளிருக்கும் கோவில் வெறும் 216 அடி கோபுரம் இல்லை அது வான் கயிலாயத்தின் சிறு வடிவம் (miniature), மிக பிரம்மாண்டமான இமயமலையை நம் கண்களுக்கு அடக்கமான 6×4 சட்டகத்தில் பொருத்தி பார்ப்பது போல், ராஜராஜன் அந்த இமயமலையை அல்லவா நம்முன் செதுக்கி வைத்துள்ளான் என ஆச்சரியத்தில் திளைக்கும் போதே கயிலாயம் முக மண்டபத்தோடே முடிந்து விட்டது பின்னால் உள்ள ஸ்ரீ கோபுரம் சுட்டுவது அதைவிடவும் பிரம்மாண்டமானதை என மேலும் அதிர்ச்சி தந்தார். மேரு, மகாமேரு, விசும்பு, வெளி, பிரபஞ்சம்என எண்ணங்கள் ததும்பின. தனி சிற்பங்களுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த கோவிலுக்கே கலை அம்சமும் தத்துவ நோக்கும் இருக்கிறது என்பது எனக்கு பெரிய ஆச்சரியம்.

ஆசிரியர் ஜெயக்குமார் வகுப்பின் துவக்கத்தில் ஒரு கரடு முரடான பாறையில் பாதி யானை உருவம் செதுக்கப்பட்டு மீதம் பாறையாகவே விடப்பட்ட சிற்பத்தை காட்டி, உயிருள்ள யானை பாறையில் இருந்து எழுந்து வருவது போல் உள்ளது என்றார். இன்று எனக்கு லிங்கத்திற்கு பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் வெறும் மூன்றடி சிற்பம் இல்லை விஷ்ணுவாலும் பிரம்மனாலும் அடிமுடி காணமுடியாமல் கணம் தோரும் வளர்ந்து கொண்டே போகும் பிரம்மாண்டத்தின் வடிவம். மகிஷாசுரமர்த்தினி, திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், நடராஜர் என இன்று நான் பார்க்கும் எந்த ஒரு சிற்பமும் உறைந்து நின்றுவிட்டவை அல்ல உயிருள்ளவை, வளர்பவை கண்முன்னே ஒரு கலையை நிகழ்த்தி காட்டுபவை. ஆசிரியர் ஜெயக்குமார் எனக்கு கற்று தந்தது சிற்பங்களை திறக்கும் அந்த மாயப் புள்ளியை. எழுத்தில் இருந்து கற்பனைக்கு செல்வது போல் சிற்பங்களில் இருந்து கற்பனைக்கு செல்கிறேன் ஒவ்வொரு சிற்பங்களின் மாயப் புள்ளியையும் தொட்டு திறந்து உள்ளே எனக்காக காத்திருக்கும் புராணத்தையோ, தத்துவத்தையோ எடுத்துக் பத்திரப்படுத்திக் கொள்கிறேன். கோவில் என்முன்னே திறந்து கிடக்கும் புத்தகமாக மாறிவிட்டது

இப்படிப்பட்ட ஒரு வகுப்பை அமைத்துக் கொடுத்ததற்கு உங்களுக்கும், ஆலைய கலை பயிற்சி வழங்கிய ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கும் நன்றி ஜெ.

                                          – கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைகவிதையும், ரசனை மதிப்பீட்டின் எல்லையும்
அடுத்த கட்டுரைகற்றல், கடிதம்