எப்போதும் என் கையருகே தொடர் பணி வாசிப்புக்கு இடையே ஓய்வு வாசிப்புக்கு என சிற்சில புத்தகங்கள் இருக்கும், இம்முறை அப்படி கையருகே இருந்த க சீ சிவகுமாரின் ஆதிமங்கலத்து விசேஷங்கள், சுஜாதாவின் திசை கண்டேன் வான் கண்டேன், ஜெயமோகனின் நான்காவது கொலை, இத்யாதி களுக்கு இடையே இருந்து தமிழினி வெளியீடான எம். கோபால கிருஷ்ணனின் மாயப்புன்னகை குறுநாவல் என்னை திரும்ப வாசி என்று அழைக்க, எடுத்து மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.
முன்னர் விஜயகுமார் எழுதி சிலைத்திருடன் என்றொரு நூல் வெளியானது. கலைப்பொருள் விற்பனை நிறுவனங்கள், கடத்தல் குழுக்கள் இவற்றின் உலகளாவிய வலை குறித்து பேசிய நூல். அந்த வலையில் சிக்கி வெளிநாடு சென்றுவிட்ட இந்திய சிற்பம் ஒன்றை, அது எவ்விதம் அங்கு சென்றது என்பதை துப்பறியும் நூலின் சுவாரஸ்யத்துடன் முன்வைப்பது. பாருங்க ஜீ, வெளிநாட்டு ஜீ எல்லோரும் நம்ம பாரதச் செல்வ ஜீ யை எப்டி கொள்ளை அடிக்கிறாங்கனு தெரிஞ்சிக்கங்க ஜீ என்று ஜீக்கள் எல்லோரும் அந்த நூலை. மாறி மாறி பரிந்துரைத்துக் கொண்டார்கள். நூல் வெளிநாட்டு சிலை கடத்தல் வழக்கு ஒன்றில் நல்ல விளைவுகளை உருவாக்கியது. இந்திய பிரதமரே அந்த வெளிநாட்டுக்கு நேரில் சென்று சிலையை இந்தியாவுக்கு கொண்டு வந்தார். ஜீ க்கள் எல்லோரும் சாமி வந்து ஆடினர். வெகு சில நாட்களிலேயே இந்திய கலை பொருட்கள் இந்தியாவை விட்டு எல்லை கடக்க இயலாது நிறுத்தி வைத்திருந்த எல்லா சட்ட பாதுகாப்புகளையும் இலகு ஆக்கியது மத்திய அரசு. அதன் பிறகே ஜீ கள் உள்ளே இறங்கி இருந்த சாமி மலையேறியது.
இரண்டாம் உலக போருக்கு பிறகு உலக அரங்கில் சில மாறுதல்கள் நிகழ நேரடியாக இனி கொள்ளையடிக்க காலனியாதிக்க நாடுகளால் இயலாது எனும் நிலை. ஆனால் அந்தப் பணியை சிலைத் திருடன் நூல் பேசும் வலை செவ்வனே செய்து மூன்றாம் உலக நாடுகளின் செல்வங்களை தொடர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னர் பார்த்த சாகச படம் ஒன்று. ஜான் ஃப்ராங்கன் ஹைமர் இயக்கி 1964 இல் வெளியான தி ட்ரெயின் என்ற கருப்பு வெள்ளை பிரெஞ்சு திரைப்படம். பிரான்சில் இரண்டாம் உலக போரின் இறுதி தினங்கள். விடிந்தால் ஜெர்மன் வீழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்து விடும் நிலை. ஒரு ஜெர்மன் ராணுவ அதிகாரி பிரான்சின் முக்கிய ஓவியங்கள் அனைத்தையும் கொள்ளையிட்டு தன்னுடன் புகை வண்டியில் ஏற்றி, சக ஜெர்மானிய வீரர்கள், பணய கைதிகளுடன் பிரெஞ்சு எல்லை தாண்டி ஜெர்மனிக்குள் புக விரைகிறார். அதில் பிரெஞ்சு கலை பொக்கிஷங்கள் இருப்பது தெரியாமல் அதில் குண்டு போட விரையும் பிரெஞ்சு விமான படை, ஒரு இரவு நெடுக பாடுபட்டு பிரெஞ்சு புரட்சி குழு ஒன்று அதை முறியடிக்கும் சாகச கதை. அருமையான இரவு நேர ஒளிப்பதிவு, (நிஜ) ரயில்கள் மோதிக் கொள்ளும் பிரம்மாண்டம் என இறுதி வரை விறுவிறுப்பாக பயணிக்கும் படம். படத்தின் இறுதியில் பிக்காஸோ ஓவியங்கள் உட்பட பல முக்கிய ஓவியங்கள் சிதறி கிடக்கும். ஜெர்மன் அதிகாரி பிரஞ்சு கதாநாயகனை வந்தேறிக்கான கெட்ட வார்த்தை சொல்லி அழைத்து ” இது எல்லாத்தையும் பார்ரா. இது உங்ககிட்ட இருக்க என்ன தகுதிடா இருக்கு உங்க கிட்ட? இதெல்லாம் ஜெர்மனில இருக்க வேண்டியதுடா” என்பார். பிரான்சின் பல செல்வங்கள் இதே மமதையுடன் நெப்போலியனால் கொள்ளையடித்து அங்கே கொண்டு வரப்பட்டது என்பதும் வரலாறு. அப்படி நெப்போலியன் கொள்ளையிட்டு தனது படுக்கையறையில் வைத்து, அவன் கண் விழிக்கும் தருணம் காணும் முதல் முகமாக ஐந்து வருடம் இருந்தவள் மோனா லிசா.
மோனா லிசாவின் வரலாறு அவளை சுற்றிய நிகழ்வுகள் அனைத்தும் இன்று முழுக்கவே பல நூறு நூல்கள், செய்திப் படங்கள் வழியே ஆவணப்படுத்தப்பட்டு விட்டது. அதில் நிறைய எழுதப்பட்ட சம்பவம் 1911 இல் லூவரில் இருந்து காணாமல் போய் இரண்டு வருடம் கழித்து இத்தாலியில் மோனா லிசா தோன்றிய சம்பவம். இந்த மாயப் புன்னகை, அந்த இரண்டு ஆண்டுகளை அது நிகழ்ந்த நூறு ஆண்டுகளுக்கு பிறகு தாமோதர் எனும் ஊடக ஆளுமையால் அந்த சம்பவத்தை நெருங்கி அறியும் அவரது ஆர்வத்தை பின்தொடர்ந்து விரியும் குறுநாவல்.
இத்தாலியில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் அன்றாட கூலி வின்சென்சோ பரூஜா. அவனை நோக்கி எறியப்படும் வந்தேறி குறித்த ஒரு இழி சொல். பல முறை அவன் கேட்டதுதான். பாறையை பிளக்க சின்ன சின்ன ஓட்டையை அதில் வரிசையாக போடுவார்கள். அதில் ஏதோ ஒரு ஓட்டை அந்த பாறையை பிளக்கும் இறுதி ஓட்டையாக அமைவதை போல, அன்று பெருஜா வில் விழுந்த அந்த சொல் அமைந்து விடுகிறது. இருங்கடா ஒத்தை இத்தாலியன் மொத்த பிரான்ஸையும் எப்படி கதற வைக்கிறேன் பாருங்கள் என்று கருவிய படி பெரிய திட்டமிடல் ஏதும் இன்றி, லூவரில் நுழைந்து வெகு எளிதாக (கோட்டுக்குள் மறைக்க கைக்கு வசதியாக இருந்த ஒரே காரணத்தால்) மோனா லிசா ஓவியத்தை திருடி சென்று விடுகிறான். மறுநாள் செய்தித் தாள் காணும் வரை அவனுக்கு அந்த ஓவியத்தின் கலை மதிப்பு விலை மதிப்பு எதுவுமே தெரியாது. அதன் பிறகும் அதன் வீச்சு அவனுக்குப் புரியவில்லை. பிரான்ஸ் கொந்தளிக்கிறது என்ற வகையில் மட்டுமே அவனது மகிழ்ச்சி இருந்தது. மொத்த புலனாய்வும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நிகழ்ந்தும் எல்லாம் கைவிட்ட நிலையில், இனி மோனா லிசாவை மறந்து விட வேண்டியதுதான் என்று உலகே முடிவு எடுக்க துணிந்து விட்ட சமயத்தில், பெருஜா இத்தாலியில் அவளை விற்க முயன்ற வகையில் சிக்கி, மோனா லிசா மீண்டும் உலகின் பார்வைக்கு வருகிறாள்.
உலகே அறிந்த பேசிப் பேசி ஓய்ந்துவிட்ட இந்த பிரபல திருட்டு சம்பவத்தில் ஒரு இலக்கியவாதியை ஈர்க்கும் தருணங்களை அறிந்து அதை தாமோதர் எனும் பாத்திரம் வழியே, பெருஜா வின் நாட்குறிப்புகள், அந்த திருட்டை துப்பறிந்து தோற்ற லே லெபைன்னின் வெளியாகாத நூலின் கைப்பிரதி இவை வழியே அவற்றைத் திறந்து பார்க்கிறார் எம்.கோபால கிருஷ்ணன். எளிய துப்பறியும் நாவல்களின் வடிவிலும் உணர்வு நிலையிலும் எனும் பாவனையில் அமைந்த இந்த 80 பக்க செறிவான குறுநாவல் திறந்து காட்டும் சில அடுக்குகள் அபாரமானது. அவற்றில் மிக முக்கியமானது என்று கீழ்கண்ட ஐந்தை சொல்வேன்.
முதலாவது லெபைன்னின் குற்ற உளவியல் அறிவு அவரைக் கைவிடும் இரண்டு தருணம். முதலாவது ஓவியத்தின் சட்டகம் மிக கவனமாக கழற்றி எடுக்கப்பட்ட விதத்தை வைத்து, இந்த ஓவியத்தை திருடியவன் இத்தகு கலைப்பொருட்களை திருடும் உலக வலை ஏதோ ஒன்றின் உறுப்பினன் அவன் என யூகித்து அந்த திசையில் தேடுதலை அவர் துவங்கியது. ஆனால் நிலவரவம் அவர் எதிர்பாராதது பெருஜா தான் பிழைத்து கிடக்க, செய்ய தெரிந்து வைத்திருக்கும் பல வேலைகளில் ஒன்று சிறப்பாக ஓவிய புகைப்பட சட்டகங்கள் செய்வது. அத்தகு பணி ஒன்றுக்காக லூவர்க்கு சில முறை சென்றிருக்கிறான். அடுத்து லெபைன் பெருஜா வை நெருங்கியும் அவனை அவர் தவற விடும் காரணம். அவனை பார்க்கும் எவருக்கும் இவனா என்றே முதலில் தோன்றும். ஏனெனில் அவன் கலாச்சாரமற்ற பாமரன். அடுத்து அவனது அறை. குப்பையான அவனது அறையின் கழுவாத எச்சில் தட்டுகள் கிடக்கும் உணவு மேஜையின் விரிப்பின் கீழேதான் மோனா லிசா இருந்தாள். அவள் மதிப்பு அறிந்த திருடன் சாமர்த்தியமாக திட்டமிட்டு இப்படி செய்திருந்தான் என்றால் அவனது ஏதேனும் நடத்தை வழியே அவன் நிச்சயம் சிக்கி இருப்பான். பெருஜா இயல்பிலேயே பாமரன். பாமரத்தனமாக அவன் மறைத்து வைத்த ஓவியத்தை, அவனது பாமரத்தனமே திரையாகி காவலரின் துப்பறியும் அறிவை மூடி விடுகிறது.
இரண்டாவதாக ஒரு கலைப்பொருள் மீது மாஸ் சைக்காலஜி யின் எதிர்வினை. அவளைப் பார்த்துப் பார்த்து பித்தேறி தான் பார்த்த இறுதி காட்சி அவள் புன்னகையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று, அவளை பார்த்த வண்ணமே தற்கொலை செய்து கொள்கிறார்கள் பலர். அவள் மீது இயற்றப்பட்ட கவிகள் இசைக் கோலங்கள் காதல் கடிதங்கள் பற்பல. பிரான்சின் மனசாட்சியை தொட முயலும் எவரும் அவளையே இலக்காகி தாக்குகிறார்கள். லூவரில் அவள் இல்லாத வெற்று சுவரை, அவள் இருந்து போன இடத்தை மக்கள் முன்னிலும் திரண்டு வந்து பார்க்கிறார்கள் இரண்டு வருடம். இத்தாலியில் அவள் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்ட அறை ஒரு தேவாலயம் போல சுற்றுலா தலம் ஆகிறது. மீண்டு வந்த மோனா லிசாவை இத்தாலியே வைத்துக்கொள்ள எல்லா நியாயங்களும் இருந்தும், அதை இத்தாலி தனது பரிசாக மீண்டும் பாரிசுக்கே தரும் தருணம். இப்படி பல.
மூன்றாவதாக மகள் செலஸ்டினா வின் அப்பா மீதான வெறுப்பு. உள்ளே பொங்கும் பாசம். பெருஜா வை தனது ஒரு வயதிலேயே இழந்தவள் அவள். அவள் மோனா லிசா குறித்து தாமோதர் வசம் வெளியிடும் பொறாமைச் சொற்கள். அவளைக் காட்டிலும் அவள் அப்பா வசம் நெடு நாள் இருந்தவள் மோனா லிசா தானே.
நான்காவதாக கலையறியா பாமரன் பெருஜா மெல்ல மெல்ல மோனா லிசா வை கண்டடைந்து அவள் மேல் தீவிர பித்து கொள்ளும் தருணம். கூட்டத்தில் தனித்து நின்று இவளையா இவளையா நான் என் மடத்தனத்தால் இழந்தேன் என்று ஏங்குகிறான். மெல்ல மெல்ல விகாசம் கொள்கிறான். அத்தனை பேர் கண்கள் வழியாகவும் அகம் வழியாகவும் திரண்டு எழும் மோனா லிசாவின் புன்னகை எதுவோ புன்னகை என்று எழுவது எதுவோ அதை அறிகிறான். இவள் மானுடத்தின் சொத்து அல்லவா இவளையா நான் திருடினேன் என விம்முகிறான். நாவலுக்குள் எந்த உணர்ச்சி மிகையும் இன்றி, அதிராத வர்ணனை மொழியில் எழும் மிக வலிமையான இடம் இது.
ஐந்தாவதாக வரலாற்று சுழிப்புகள் மீது இந்த மோனா லிசா நிகழ்த்தும் பகடி. ஐந்து வருடம் ஒருவன் படுக்கையறையை அவள் அலங்கரிக்க வேண்டும் என்றால் அவன் வரலாற்று நாயகனாக இருக்க வேண்டும், படை நடத்த வேண்டும், படையினர் உயிர்களை கொட்டி நிறுத்திய பாதை வழியாகவே அவள் நெப்போலியன் படுக்கை அறைக்கு செல்கிறாள். அத்தகையவள் ஊர் பேர் அறியா ஒரு சாமானிய பாமரன் வசம் அவனது ஏழ்மையிலும் குப்பையிலும் சும்மா அவனுடன் இரண்டு வருடம் இருந்திருக்கிறாள். இது என்ன வகையான நியதி?
ஒவ்வொரு முறையும் எம். கோபால க்ரிஷ்ணன் அண்ணனை கை குலுக்கும்போதும் இதையெல்லாம் சொல்ல வாயெடுப்பேன். வழக்கம் போல வேறு எதுவோ பேசி முடித்து விடுவேன். சொல் எதற்கு. அது காற்றில் போகும். இதோ இப்போது இதை உங்களுக்கு எழுதி விட்டேன். தமிழில் இப்படி வேறு நாவல்கள் உண்டா தெரியவில்லை. அழகிய தருணங்கள் கொண்ட வாசிபின்பம் கூடிய குறுநாவல்.