நாரத ராமாயணம், வாசிப்பு

வணக்கம் ஜெயமோகன் சார்,

ராமாயணம் அனைவருக்கும் போலவே எனக்கும் மிகச்சிறிய வயதிலேயே அறிமுகமாகியதுஎன்னுடைய சித்தப்பா , எப்போதும் வீட்டில் யாரிடம் பேசினாலும்வெடிய வெடிய ராமாயணம் கேட்டுவெடிஞ்சு எந்திருச்சு சீதைக்கு ராமன் சித்தப்பனாமா  என்று கூறுவார்.எனக்கு இருந்த சித்தப்பா அவர் தான். சீதைக்கும் , ராமனுக்கும் அவர் தான் சித்தப்பா என்றால் சீதையும் , ராமனும்  எனக்கு அக்கா , அண்ணனாகத்தான்  இருக்க முடியும் என்று  நினைத்தேன் நான்.அம்மாவிடம் சென்று சீதை யார் என்று கேட்டேன்.சீதையின் கதையை சொல்லி அம்மா அழுதாள். கஷ்டம் தாங்க முடியாம பூமிக்குள்ள போயிட்டா மகராசி என்றார் அம்மா. பாட்டி இறந்தபோது மண்ணுக்குள் புதைத்தது நியாபகம் இருந்தது எனக்குசீதை என்னுடைய சொந்த அக்கா என்று நம்பி சீதையை நினைத்து தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன்.

யாரிடமும் எதையும் தெளிவாக கேட்காமல் நானே அனைத்தையும் கற்பனை செய்து விட்டேன்.பாட்டிக்கு வருஷாந்திரம் கும்பிடும் போது யாருக்கும் தெரியாமல் சீதா அக்காவுக்கும் சேர்த்து சாமி கும்பிட்டேன்.வளர வளர ராமாயணம் என்ற கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்றும் என்னுடைய சித்தப்பா சீதைக்கும்ராமனுக்கும் சித்தப்பா இல்லை என்றும் தெரிந்து கொண்டேன்

ஆனாலும் ராமாயணத்தை படிக்கும் போதோ, சினிமாவாக பார்க்கும் போதோ கண்ணீர் இல்லாமல் முடித்ததில்லை.ராமாயணத்தை கடவுள் பக்தியாகவும், சீதையின் துக்கமாகவும் உருவகித்திருந்ததை புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம்  மாற்றி விட்டது.ராமாயணத்தை முதன்முதலில் பாராயணம் செய்தது ராமனும் , அனுமனும் தான் என்று  பகடிகளுக்கு குறைவே இல்லாமல் செய்திருந்தார் புதுமைபித்தன்முழுவதுமாக படித்து முடித்தபின் இந்திய வரலாறு சுதந்திரத்திற்கு முன் என்பது அனைவரின் மனதிலும் வந்து விடுமாறு அனைத்து சம்பவங்களையும் எழுதியிருப்பார்.

துக்கத்தையும், கண்ணீரையும் பகடியாகவே சொல்லியிருப்பார்.நாரத ராமாயணம் எனக்கு நல்ல ஆத்மார்த்தமான புன்னகையை கொடுத்த புத்தகமாக இருந்தது

நாரத ராமாயணம் ஒலி வடிவில்

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

முந்தைய கட்டுரைஅமாவாசை இரவில் நெல்லிக்காய் தின்பவன்
அடுத்த கட்டுரைபிஸ்கி, ஒரு கண்டடைதல்.