புவி எனும் கலைக்கூடம்

இனிய ஜெயம்

சில நாட்கள் முன்பு மனுஷ்ய புத்திரன் கவனிக்காமல் விட்டு செல்லரித்த தனது நூலகத்தின் புத்தகங்களை குப்பையில் கொண்டு போடும் காட்சியை வேதனையுடன் பகிர்ந்திருந்தார்

இதை விட வேதனை வாடகை வீட்டில் உள்ள என்னை போன்ற ஒருவன் பராமரிக்கும் நூலக நிலை. பெரும்பாலும் புத்தகத்தை மூட்டையாக கண்டவுடன் வீட்டு ஓனர் இது என்ன குப்பை என்று எந்த தயக்கமும் இல்லாமல் கேட்ப்பார். ஒழுகாத வாடகை வீடு என்ற ஒன்று சாமானியன் உலகத்தில் உண்டா என்று தெரியவில்லை. ஈரம் கசியும் தரை, ஓதம் ஒழுகும் சுவர்கள், கரையான் வந்து பற்றும் பலகைகள், கவனமாக பராமரித்தும் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை என்னில் கொஞ்சத்தை காவு கொடுப்பேன். குப்பையில் அவை கிடப்பது எனக்கு காண சகியாது என்பதால் நானே அவற்றை கொளுத்தி விடுவேன்.

இம்முறை மனுஷ்ய புத்திரன் பகிர்ந்திருந்த அந்த புகைப்படங்களை தொடர்ந்து, மெல்லிய பதற்றம் மீதூர அலமாரியில் நீண்ட நாள் புரட்டாமல் கை வாகுக்கு வெளியே வைத்திருந்த நூல்களை மீண்டும் எடுத்து புரட்டிப் பார்த்தேன். யாவையும் நலம். அந்த பணியில் யான் ஆர்தஸ் புகைப்பட நூலான எர்த் ஃபிரம் அபோவ் நூல் கையில் கிடைக்க அதை மீண்டும் புரட்டிப் பார்த்தேன்.

யான் ஆர்தஸ் 1946 இல் பிறந்தவர். பிரெஞ்சு காரர். சூழலியல் செயல்பாட்டாளர். புகைப்பட கலைஞர். ஆவண திரைப்பட இயக்குநர். தனது 30 ஆவது வயதில் மானுடவியல் ஆய்வு ஒன்றின் பொருட்டு ஆப்ரிக்காவில் 4 வருடம் பணி செய்யும் போது, பலூன் வழியே வானில் மிதந்து சூழல்கள் குறித்து ஆய்வு செய்யும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்க, அது கிட்டத்தட்ட அவரது உள்முக பார்வையையே மாற்றி அமைத்தது. Earth from above எனும் அழகிய சூழலியல் ஆவனப் படம் செய்வது வரை அது அவரை கொண்டு வந்து விட்டது.

அதை தொடர்ந்து யுனெஸ்கோ அவருக்கு நிதி அளித்து பூமியின் நிலையை வானில் சுற்றி வந்து அவதானித்து சூழல் சீர்கேட்டின் அளவை அவதானித்து பதிவு செய்யும் பணியை அளித்தது.

அதன் தொடர்ச்சியாக the home, planet ocean, the human போன்ற ஆவண படங்களை இயக்கினார். தற்போது ஏப்ரல் 22 புவி நாள் இன் ஆக்கபூர்வமான சூழலியல் செயல்பாடுகளுக்கான ஐ நா சிறப்பு தூதுவராக இருக்கிறார்.

Earth from above பணிகளின் பகுதியாக யான் வானிலிருந்து புவியை எடுத்த தேர்வு செய்த புகைப்படங்களை தொகுத்து ஒரு புகைப்பட நூல் வெளியிட்டார். உலகெங்கும் பெரு விற்பனை கண்ட அதன் முதல் பதிப்பின் ஒரு பிரதியை புதுவை சண்டே மார்க்கெட்டில் வாங்கி இருக்கிறேன். பின்னர் அதன் புதிய பதிப்புகள் விரிவாக்கம் கண்டு வந்தன.

இன்று இவற்றை மீண்டும் புரட்டிப் பார்க்கையில் துக்கம் கலந்த மெல்லிய ஏக்கம் வந்து தொண்டை குழியை கவ்வுகிறது. தனது கிட்டத்தட்ட அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு நூலில் நாம் இங்கே இருக்கிறோம் என்பதும், இந்த பூமி இங்கே இவ்விதம் உள்ளது என்பதும் எத்தனை அபூர்வத்திலும் அபூர்வம் என்று அறிவியல் பூர்வமாக விளக்கி இருப்பார். அதையெல்லாம் வாசித்த பிறகு, அருகர்களின் பாதை நந்தி கிரி, கிர்னார் போன்ற சிகர முனைகளில் நின்று பூமியை பார்த்த பிறகு, இந்த புகைப்பட தொகுப்பு எனக்கு மேலும் அணுக்கம் கொள்கிறது.

சில தியான மரபுகளில் இயற்கையை தியானித்தல் என்பதும் ஒரு பகுதி. 360 பாகை சூழ்ந்த இயற்கையில் மனிதனால்  180 பாகை மட்டுமே பார்க்க முடியும். அதையும்  குறிப்பிட்ட மையங்களில் பார்வை குவியாதுஒரே பார்வைஎன பார்த்து விட முடியாது. இந்த எல்லைக்கு உட்பட்டு உண்டானதே இயற்கையை அவதானிக்கும் தியானம். தொடர் சாதகம் வழியே வெகு சிலர் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே பரிவர்த்தனையை நிகழ்த்தும் கர்ம இயந்திரங்களின் செயல்பாட்டில் இருந்து வெளியேறி கர்ம இயந்திரங்களை இயக்கும் ஞான இயந்திரங்கள் வழியே இயற்கையை தீண்டி, தானும் அந்த இயற்கையும் வேறில்லை எனும் நிலையில் கடலில் துளி போலும் கரைந்து போவர்

ஒரு சிறந்த நிலக்காட்சி ஓவியமோ, புகைப்படமோ அதை பார்ப்பவரை ரசிப்பவரை அந்த சாதகரின் நிலைக்கு உயர்த்துகிறது. ஒரு சிறந்த நிலக்காட்சி புகைப்படம் என்பது அதை அக்கணம் புகைப்பட கருவி வழியே பார்ப்பவருக்கு கிட்டத்தட்ட அது ஒரு ஜென் தருணம். அவனது ப்ரக்ஞயில் நிகழ்ந்த ஆத்மீக மின்னல் தொடுகை அது. அதை படமாக பார்ப்பவர் (வெகு சிலர்) நிலையும் அதேதான்

பழங்குடி பாறை ஓவியங்களில் சிக்சாக் கோடுகள் போன்ற வித விதமான சீர்மை கொண்ட வடிவ கோடுகளை காணலாம். அவை எல்லாமே தியானத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையில் சாதகர் காணக்கூடியவை என்பதை தியான அனுபவம் உள்ளவர் அறிவர். புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட வகையில் தொகுக்கப்படும் நிலக்காட்சியும் இந்த சீர்மை pattern பேட்டர்ன் னும் இணைந்தே கலானுபவதை உருவாக்குகின்றன

உலகம் யாவையும் கதையில் காரி டேவிஸ் வானில் இருந்து பூமியை பாப்பார். அப்போது அவர் அடைந்ததை கொஞ்சமேனும் இந்த earth from above புகைப்பட நூல் வழியே ஒருவர் உணர இயலும். திரும்ப பெற இயலாத அழிவின் ஆற்றல் அனைத்தையும் இந்த அழகின் மீது பிரயோகித்து விட்டோம். எத்தனை அழகியது நமது பூமி

பின்னிணைப்பு: 1

யான் ஆர்தஸ் இயக்கிய கடல் சூழலியல் அழிவுகள் குறித்த ஆவணம்.

பின்னிணைப்பு: 2

யான் ஆர்தஸ் இயக்கிய home.

யான் ஆர்தஸ் இயக்கிய home.
பின்னிணைப்பு: 3
யானின் இந்த அதிகாரபூர்வ தளத்தில் அவர் பூமியை வானிலிருந்து எடுத்த புகைப்படங்கள் பல உயர் தரத்தில் காண கிடைக்கிறது. பூமி எனும் கலைக்கூடம் வழங்கும் இணையற்ற அழகை ரசிக்கலாம். கணினிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடலூர் சீனு
முந்தைய கட்டுரைஒரு முன்பாதை- கடிதம்
அடுத்த கட்டுரைகுரு நித்யா ஆய்வரங்கு- கடிதம்