நான்காவது கொலை வாசிப்பு

நான்காவது கொலை மின்னூல் வாங்க

நான்காவது கொலை வாங்க

இனிய ஜெயம்

மாயப்புன்னகை முடித்து அப்படியே கைவாட்டத்தில் அடுத்த புத்தகமாக இருந்த நான்காவது கொலை நாவலை வாசித்தேன். முன்னர் வாசித்தது. இப்போது வாசிக்கையிலும் பக்கங்கள் தோறும் புன்னகை எழ வைக்கும் தருணங்கள் அவ்வாறே அதே புன்னகையை கிளர்த்தியது.

எழுத்துத் கலையில் ஒரு பகுதியாக தொழில்நுட்பதேர்ச்சியும் இருக்கிறது. அந்த தொழில்நுட்பத்தை மட்டும் பிரித்தெடுத்து, கேளிக்கை இலக்கியமும் தீவிர இலக்கியமும் அந்த தொழிநுட்பத்தின் அடிப்படையில் மாறி மாறி ஒன்றன் மீது ஒன்று நிகழ்த்திக்கொள்ளும் விமர்சனப் பகடி மீது நிகழும் முற்றிலும் கேலிக்கூத்தான நாவல். இதன் ஒரு பகுதியாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சூப்பர் மேன் படங்கள் போன்றவற்றின் திரை கதைகளும் நாவலுக்குள் சல்லி சல்லியாக நொறுக்கப்படுகிறது

கோவளத்தில் ஒரு உயர்தர விடுதியில்  நடக்கும் மூன்று கொலைகளை தொடர்ந்து அதை துப்பறிந்து மர்மத்தை விலக்க, பத்திரிக்கை பகுதியில் இருந்து திகம்பர சாமியார் தொட்டு, சாம்பு, அப்புசாமி, சங்கர்லால் தொடர்ந்து கணேஷ் வசந்த் வரை பலர் உள்ளே வந்துஇந்த பிரதியில்மாட்டிக் கொள்கிறார்கள். ஷார்லக் ஹோம்ஸ் பாடு இன்னும் திண்டாட்டம். கோணங்கியின் பிதிரா நிலத்தை உயிர்ப் பீதியோடு கடந்து வந்து விஷ்ணுபுரத்துக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியாக சாகச வீரர் ஜேம்ஸ் பாண்ட் கொலையாளியை கண்டு பிடிக்கும் முயற்சியில் பாகங்கள் கழற்றப்பட்ட சூப்பர் மேன், பேரீச்சம்பழத்துக்கு இரும்புக்கையை இழந்த மாயாவி வரிசையோடு, நாகர் கோவிலில் அதுவும் பார்வதி புறத்தில் அதிலும் குறிப்பாக சாரதா நகர் 93 ஆம் எண் வீட்டில் வந்து சிக்கிக் கொள்கிறார். தொடர் கொலைகளின் காரணம் என்ன? கொலையாளி பிடிப்பட்டானா? சாகச நாயகர்கள் அனைவருக்கும் விடுதலை கிடைத்ததா என்பதை வாசகர்கள் இந்த போஸ்ட்மார்டன் உட்டாலக்கடியை ( தில் இருந்தால்)   வாசித்து  அறியலாம்.

சுஜாதா முதல் தேவன் சங்கர்லால் பாக்கியம் ராமசாமி ஆர்தர் கேனான் டாயில் என வெவ்வேறு மொழிப் பிராந்தியம்  அடுத்தடுத்து உள்ளே புகுந்து ஏழாம் அத்யாயம் வருகையில் வெவ்வேறு ஸ்டேஷன் ஒலி பரப்பபை ஒரே ரேடியோவில் கேட்டது போல தலையே சுற்றி விட்டதுபாஸ் இது கால்குலேட்டர் கேஸ் எனும் வசந்த் துவங்கி, உள்ளே மெட்றாஸ் பாஷயில் எரிந்து விழும் சங்கர்லால் தொட்டு, இப்படி மொழியாக்க தமிழ்ல பேசும்படிக்கு சீரழிஞ்சு போனேனே என விம்மும் வாட்சன் வரை எத்தனை எத்தனை மொழி வேறுபாடுகள். அதில் ஃபாண்ட் மாறி ஜனு கினு &$ என்றெல்லாம் நிகழும் குழப்பம் வேறு. இதையெல்லாம்தான் ஒரு காலத்தில் விறுவிறுப்பு தாங்காமல் ஓடி ஓடி வாசித்திருக்கிறேன் என்று நினைக்கும்போது பப்பி ஷேம் ஆ இருக்கு

எனக்கு பிடித்தது ஜெயமோகன் மீதான கணேஷ் இன் புலம்பல். ஆத்மீக துயரம் பாழடஞ்ச கோயில்னு இறக்கி விடாம அந்தாள் நம்மளை இங்க விட்டு வெச்சிருக்கானே அப்டின்னு சந்தோஷ படு என்று சொல்லி கணேஷ் அடையும் ஆருதல். அந்த ஆருதலும் ஷர்லாக் ஜோடிக்கு இல்லை. அவர்கள் விஷ்ணுபுரம் கோயிலுக்குள்ளேயே சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.

முற்றாத தேங்காயில் செய்த சட்னி போல வெலவெலத்து போகும் நாயர், தலையில் துப்பாக்கியால் சுட்டு செத்து போகும் மூளை இல்லாத நாயர் என சுவாரஸ்ய தருணங்களுடன் நகரும் இந்த அபத்த சூழல் உச்சம் பெறுவது ஜேம்ஸ் பாண்ட் என்டர் ஆனதும்தான். கடவுள் சொந்தமாக பிளாட் போட்டு விற்கும் கேரள நிலம்  ஷ்ர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்ட் இருவரையும் கிட்டத்தட்ட பாலியல் தொழில் புரோக்கர் போல (இங்கிலிஷ் அங்கிள்)ஆக்கி விடுகிறது. தாளவே இயலாத கேலிக்கூத்துகளின் முடிவில் ( என்னய்யா பெரிய இரும்பு கைய்யி இங்க சாரு நிவேதிதான்னு ஒருத்தர்கிட்ட எட்டு மணி நேரம் வேலை… ) எல்லோரும் தோற்கும் இடத்தில் இறுதியாக ஜேம்ஸ் பாண்ட் வென்று ஒரு வழியாக அந்த கொலையாளியை கண்டே பிடித்து விடுக்கிறார். அப்போது (ம்) அந்தக் கொலையாளி கொலைவெறியுடன் எழுதிக்கொண்டு இருக்கிறார். பதினாலாவது அத்தியாயத்தில் இந்த நாவல் முடிந்து விடும், அதன் பிறகு எல்லோருக்கும் விடுதலை என்று ஜேம்ஸ்பாண்ட் துப்பறிந்து கண்டு பிடித்து வைத்திருந்த உண்மை மீது எழுத்தாளர் ஈவு இரக்கமே இன்றி குண்டு போடுகிறார். “பதினாலு அத்யாயம் அப்டிங்கறது சரிதான் ஆனால் இப்பதான் முதல் அத்தியாயத்தின் பதினாலாம் பகுதியை முடிச்சிறுக்கேன். இப்படி இன்னும் ஒரு ஆயிரத்து நானூறு பக்கம் …” என்று எழுத்ததாளர் சொல்லக் கேட்டு ஜேம்ஸ் கதறி அழுது விடுகிறார்

வாசகன் கடந்து வந்த மொழிப் பிராந்தியம் மீது சிரிக்க சிரிக்க ஒரு குறுக்கு வெட்டுப் பயணத்தை நிகழ்த்தும் இந்த நாவலில், முதலில் வாசித்த அன்று இல்லாமல் இன்று நான் காணும் ஒரு மெல்லிய இடர் ஒன்று உண்டு. 2000 கு பிறகு வாசிப்பு உலகுக்குள் நுழைந்து தீவிர இலக்கியத்துக்கு வந்து இந்த நூலை தொடும் ஒருவர் பெரும்பாலும் இதில் உள்ள பாத்திரங்களில் சுஜாதாவை தவிர எவரையும் படித்திருக்க வாய்ப்பு இல்லை. நானே இளம் வாசகர் ஒருவருக்கு கேனான் டாயில் குறித்து அறிமுகம் செய்திருக்கிறேன். இன்னொருவருக்கு பரத் சுசீலா குறித்து. சாம்பு, சங்கர்லால் அப்புசாமி போன்ற பாத்திரங்கள்தோன்றும்சில கதைகளையாவது வாசித்திருந்தால் மட்டுமே அந்த கதாபாத்திரங்கள் என்ன விதத்தில் இங்கே இந்த நாவலில் அபத்தத்துக்கு உள்ளாகிறதோ அதை ரசிக்க முடியும். மற்றபடிக்கு இவ்வளவு சுவாரஸ்யமான page turner அபத்தக் களஞ்சியம் வேறு வாசித்த நினைவு இல்லை. மற்றப்படிக்கு இந்த புத்தகத்துக்கு அடுத்ததாக க சீ சிவகுமாரின் ஆதிமங்கலத்து விசேஷங்கள் கிடக்கிறது. அடுத்து அதைத்தான் வாசிக்கப் போகிறேனா அல்லது வேறு எதாவதா என்பதை இன்று இரவின் மனநிலையே தீர்மானிக்கும்.

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைராஜா – கடிதம்
அடுத்த கட்டுரைவீ.செல்வராஜ்