‘கவிதைகள்’ சதீஷ்குமார் சீனிவாசன் சிறப்பிதழ்
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு
(சதீஷ்குமார் சீனிவாசனின் உன்னை கைவிடவே விரும்புகிறேன் கவிதை தொகுப்பை முன்வைத்து)
திருப்பூர் பற்றிய கவிதை
வேலை ஆரம்பம் காலை – 8:30
காலை தேநீர் இடைவேளை – 10:30
மதிய உணவு இடைவேளை – 12:30
மாலை தேநீர் இடைவேளை – 3:15
வேலை நிறைவுறும் நேரம் – 5:00
அரசாங்க வழிகாட்டுதலின்படி
ஐந்து மணிக்குப்பிறகு வேலை செய்ய மாட்டோம்
ஆனால் 8:30 வரை வேலை செய்வோம்
அரசாங்கம் வழங்கிய கூடுதலான சலுகையின் தயவால்
8:00 – 8:30 க்குள்
சில காதல்கள் துளிர்க்கும்
சில காதல்கள் உடையும்
சில காதல்கள் முலை கசக்கும்
முத்தமிடும்
நள்ளிரவு வேலையெனில்
அபூர்வமாய் சில கலவிகள் நிகழ வாய்க்கும்
இதற்கிடையில்
மெதுவடை தேநீர் போன்ற சமூகக் கூடல் நிகழ்வுகள்
அவ்வப்போது
சூப்ரவைசர் செல்லமாக வசைபாடுவார்
ஓனர் வந்தால் ஒருமாதிரி வேசைத்தனமாய்
நெளிவோம்
சனிக்கிழமை இரவு சம்பளம்
ஞாயிறு மட்டும் 5:00 மணிவரை வேலை
அரசு வழிகாட்டுதலின்படி
மற்றபடி அதே சோறு அதே லைன் வீடு
ஹவுஸ் ஓனர் எனும் மிகக்குட்டியான
மன்னர்களும் ராணிகளும்
ஆட்டுக்கால் சூப்
பிராய்லர் சில்லி
அரசாங்க மதுபானக்கடை
மட்டரக மது
கொடியில் உலரும் உள்ளாடைகளின்
சின்ன சின்ன கிளர்ச்சிகள்
பாலிமர் நியூசின் நாரகாசமான ஒலியுடன்
புலரும் காலை
ஆண்கள் கசப்புடன் எழுவார்கள்
பெண்கள் மிகுந்த கசப்புடன் எழுவார்கள்
பாத்திரம் கழுவ துணி தோய்க்க
தெருக்குழாய் நீருக்காக மந்திர உச்சாடனமற்ற நவீன
தவமிருப்பார்கள்
எல்லா பாலினத்தவரும்
கழிவறைக்கான காத்திருப்பில்
அரைகுறை ஆடை விலகிய
பெண்டிரை ஆண்களும்
பாதி வெற்றுடல் மேனி ஆண்களைப் பெண்களும்
பார்ப்பார்கள் பார்க்காததுபோல் ரசிப்பார்கள்
பிறகு
ஒரு வாளி அருவியில் ஆனந்தக் குளியல்
இப்படியாக ஒரு நாள் துளிர்க்கும்
நிற்க
மீண்டும் முதலிலிருந்து படிக்கவும்
கவிதை முற்றும்
உன்னை கைவிடவே விரும்புகிறேன் கவிதை தொகுப்பின் வெவ்வேறு கவிதைகளின் உணர்வுகளின் முகப்பு வாசலாக மேற்காணும் கவிதையை கொள்ளலாம். கவிதையெனும் பறவை பறத்தலெனும் கவித்துவத்தை அடையும் போதே முழுமை பெறுகிறது. ஆனால் பறத்தலை உணர பறவையில் இருந்து தொடங்குவதும் ஒரு வழி. திருப்பூர் பற்றிய கவிதை அழுத்தமாக கிளையில் அமர்ந்திருக்கிறது. அதன் பறத்தலை மெல்ல மெல்ல இத்தொகுதியின் கவிதைகளில் தென்பட்டு மறைந்து சிலவற்றில் உச்சம் கொள்கிறது.
இக்கவிதைக்கு பின்புலமாக இருப்பது சதீஷ்குமார் சீனிவாசனின் திருப்பூர் வாழ்க்கைப் புலம். கவிஞன் தான் வாழும் லௌகீக உலகில் இருந்து மேலெழும் போதே சிறப்புறுகிறான். ஆனால் அவனது பேசுப்பொருளின் தளத்தை நிர்மாணிப்பது அவன் கால்கள் படிந்துள்ள உலகியல் வாழ்க்கை.
உலகமயமாக்கலுக்கு பின் நவீன தொழிற்சாலைகளில் பணிசெய்து பிழைத்தி கிடப்பதே வாழ்க்கை என்றும் இன்பம் என்றும் உணர்பவர்களின் வாழ்வில் இருந்து எழுந்ததே திருப்பூர் பற்றிய கவிதை. இந்த சுழற்சியில் இருந்து மீள துடிக்கும் ஒருவளின் அக உத்வேகமாக வினோதக் கனவை வாசிக்கலாம்.
வினோதக் கனவு
அவளது கனவு மிகவும் வினோதமானது நம்மால் அதை
நம்பக்கூட முடியாது
அவளது ஒரே கனவு
மாபெரும் குளியலறை ஒன்றை உருவாக்குவதுதான்
இந்தக் கனவு எப்போது நிகழத் தொடங்கியதென
உங்களையும்
என்னையும் போலவே
அவளுக்கும் தெரியாது
அதுவொரு அசரீரி போல
அவளது மனச்செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
முதல் முறை ஒரு வனப்பகுதிக்கு
சுற்றுலா சென்றுவிட்டு வந்தவள்
குளியலறையின் நீர்த்தொட்டியைக் காட்டாறாகவும்
அதில் நீர்ருந்தும் யானைக் கூட்டங்களையும் தான் கற்பனை
செய்யத் தொடங்கினாள்
பிறகொரு முறை
தன் காதலனுடன் கடல் பார்த்துவிட்டுத்
திரும்பியவள்
குளியலறை நீர்த்தொட்டியை
சின்னதொரு கடலாக
நினைக்கத் தொடங்கினாள்
சமயங்களில் டால்பின்களுடனும் திமிங்கலங்களுடனும்
நீந்தியபடி கொஞ்சியபடி விளையாடவும் செய்தாள்
ஆமைகளும் நண்டுகளும் அவள் தேகத்தில் ஊர்ந்தபோது
கூசித்தான் போனாள்
மற்றொருமுறை
மலைப்பிரதேசமொன்றிற்குச் சென்று வந்தவள்
குளியலறையில் ஒட்டப்பட்டிருந்த வால்பேப்பர் மலைச்
சித்திரத்திலிருந்து
வேங்கை ஒன்று தன்னையே உற்றுப்பார்ப்பதைக்
கண்டுகொண்டாள்
அந்தக் கண்கள் எத்தனையோ யுகங்களாய்
தன்னைப் பின்தொடரும் வேட்கையின் உஷ்ணம் பொருந்திய
அதே கண்கள்தான்
எனப் புரிந்தபோது நடுநடுங்கிப் போனாள்
மழை நாளொன்றில்
நனைந்தபடி வீடுவந்தவள்
குளியலறை ஷவரில் பெரும் மழையின்
ஓயாத சப்தங்களைக் கேட்கத் துவங்கினாள்
குளியலறையின் சுதந்திரத்தை
அவளது எந்த நிபந்தனையுமற்ற பிரியங்கள் கூட தந்ததில்லை
என சொன்னபோது
அவளது குரல் ஒரு சுரங்க அடிமையின் கன்றிப்போன
குரலாக இருந்தது.
அந்தக் கனவைத் தன் தந்தையிடம் சொன்னபோது
அவர் இவளை வெளியில் எங்கேயும்
செல்லாதே
அதுதான் உன் பிரச்சினை என்றார்.
அந்தக் கனவை தன் நண்பர்களிடம்
அவள் சொன்னபோது
உன்னைப் பார்க்கப் பயமாக இருக்கிறது
இனி எங்களுடன் பேசாதே என்றார்கள்
அந்தக் கனவைத் தன் காதலர்களில்
ஒரு காதலனிடம் அவள் சொன்னபோது
நான் நிறைவேற்றுகிறேன் என்றான் அவன்
அவன் சொன்ன எதையுமே இதுவரை
செய்ததில்லை என்றாலும்
அப்படிச் செய்வதாகச் சொன்னதே
அவன் மீதான காதலைப் பெருக்கியது
அவளுக்கு இந்த உலகத்தில்
வேறு கனவுகளே இல்லை
நமக்கு அது எத்தனை
வினோதமாக இருந்தாலும்
இங்கே குளியலறை அவளுக்கான தன்னந்தனியான சுதந்திரங்கள் கொண்ட அகமாக மாறுகிறது. ஒரு படிமமாக உருக்கொள்கிறது. அந்த சிறிய உலகத்தில் கனவுகள் தந்தையால் மறுக்கப்படுகின்றன. நண்பர்களால் பயந்து விலக்கப்படுகின்றன. காதலனால் ஏமாற்றப்படுகிறது. ஆயினும் அங்கு மட்டுமே விடுதலையை உணர்கிறாள். அன்பு என்பதும் கணக்குகளுக்குள் அடைப்பட்ட உலகத்தில் அது மட்டுமே இன்பம் கொள்ள வைக்கிறது.
பிறகேன்
அன்பு எதையும் எதிர்பார்க்காதது
என்றுதானே சொன்னீர்கள் ?
பின்பு
நள்ளிரவின்
மௌனத்தில்
ஏன் இப்படி விசும்பிக் கொண்டிருக்கிறீர்கள்
கீழ்நடுத்தர, நடுத்தர குடும்பங்களில் அன்பின் மகத்துவம் ஓராயிரம் சொற்களில் கைவிலங்கு போல நம் கழுத்தில் மாலையாக அணிவிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. அந்த மாலைகள் மறைந்து போகையில் கண்ணீர்கள் ஏன் சொட்டுகின்றன ? எப்போதும் அங்கே யாரும் அப்படி கேட்பதில்லை. மீண்டும் அது முழங்கப்படும். இந்த இரட்டை நிலையின் தவிப்பு மட்டுமே ஆன ஒரு கவிதை.
அன்பு அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
என்பது வள்ளுவனின் வாக்கு. அந்த அன்பு இங்கே மாறி மாறி ரத்தம் வர சொறிந்து கொள்வதில் துளிர்த்து இனிக்கிறது. நம் குடும்பங்களில் சரிபாதிக்கு நிகரான இணையர் இருப்பது அப்படித்தானே!!
மாறி மாறி
முதலில் நாங்களிருவரும்
சொற்களின் பாவனைகளை
சொற்களைக் கொண்டே கலைக்கத் துவங்கினோம்
பாவனைகள் கழன்று விழ கழன்று விழ
புராதன வன நினைவுகள் விழித்துக் கொண்டன
ஒரு சமயம் அவள் மான்
நான் வேங்கை
ஒரு சமயம் நான் மான்
அவள் புலி
மாறி மாறி
சலிக்காத ஆட்டமொன்றின் தாயங்களை இருவரும்
சேர்ந்துருட்டத் துவங்கினோம்
தோற்கிறது ஜெயிக்கிறது
சிரிப்பு அழுகை
ஆத்திரம் வெறிக்கூச்சல்
வேட்கை தகிப்பு
மாறி மாறி
இந்த ஆட்டம் முடியப்போவதில்லை
இது சக ஆட்டக்காரருக்கும் தெரியும்
எனக்குத் தெரிந்தது போலவே
ஒரு மழைநாளில் நாங்களிருவரும்
ஆட்டத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு
ஒரு தேநீர் குடிக்கப் போவோம்
எங்களுடன் நாங்களே ஆடிய ஆட்டங்களில் ஏற்பட்ட
காயங்களை திறந்து காட்டுவோம்
அக்காயங்களுக்கு மருந்திடுவோம்
சரியாகிவிடும்
சரியாகிவிடும் என
மாறி மாறி சொல்லிக்கொள்வோம்
இந்த மழைக்கு இந்தத் தேநீர்
அமிர்தம் என்போம்
அந்தக் கூற்றை
ஆமாம் ஆமாம் என ஆமோதிப்போம்
பின் மழை நின்றவுடன்
ஆட்டக்களத்திற்குத் திரும்புவோம்
ஒரு இலையைக் கிள்ளுவது போல
பரஸ்பரம்
ஒருவர் தலையை இன்னொருவர் கிள்ளி
தாயங்களாக்கி உருட்டி
கிள்ளப்பட்ட தலைகளிலிருந்து
ஆளுக்கொரு கண்களைப் பிடுங்கி
பகடைகளாக்கி
ஏணிப்படிகளுக்கும்
பாம்புகளின் வாய்களுக்கும்
மேலும் கீழுமாய்
கீழும் மேலுமாய் முடிவில்லாமல்
நகர்த்தி நகர்த்தி விளையாடுவோம்
மாறி மாறி
இந்த தலைக்கொய்யும் தாயங்களில் அன்பின் அடிப்படை தோற்றம் காமத்தின் கட்டரங்கமே என்பது வெளிப்படை. அங்கே பொழிந்து வற்றும் ஒரு மழை இப்படியாக செல்கிறது…
வன தேகம்
பெரும் வனமென என் இச்சையின்
வெளியெங்கும் பாவிக்கிடக்கிறது
உன் தாபத்தின் தேகங்கள்
நான் வேட்கையின் மழையாகி
அவ் வனவெளியில் இடையறாது பொழிகிறேன்
மின்னலொளியும் புக இயலாத
அடர் மழையாய்
சற்று நேரம்தான்
உன் நிலம் எல்லாவற்றையும் பருகித் தீர்க்கிறது
பருகித் தீர்த்த அகங்காரத்தில்
உன் தாபத்தின் தேகங்கள்
எக்காளமிடுகின்றன
இவ்வளவுதானாவென
இன்னும் மீதமிருக்கிறதாவென
ஏக்கமும் நிறைவின்மையும் தவிப்புமான கூடல்களின் சந்திப்பில் தங்கள் தாகம் தணித்து கொள்கின்றன இச்சையின் மான்கள். அவை வனங்களில் என்றும் இருப்பவை. அது நோக்கி சுட்டி எழுகிறது ஜென்மங்களின் மீட்சி எனும் பின்வரும் கவிதை.
ஜென்ம மீட்சி
உன் பசிய முலையின் காம்புச்சியில்
தாபத்தின் பெருமழை
என் நாபிச்சுழியினுள்
ஊற்றெடுக்கிறது வேட்கையின் காட்டாறு
நம் உவர் தீர்த்தத்தில்
ஜென்மங்களின் தாகம் தணிந்து
வனம் மீள்கின்றன இச்சையின் மான்கள்
அவற்றின் தாகமடக்கும் தீர்த்தம் உவர்ப்பது. இச்சையின் கண்களில் குளிர்ச்சி தரவும், உடல்களுக்கு நா வறட்டலை தரவுமே செய்கின்றன. அதை பேசி செல்கிறது வேறொரு கடல் என்ற கவிதை. இந்த ஆட்டத்தில் இருந்து பிறந்தெழுந்து பறத்தலாக மட்டுமே தன்னை காட்டும் கவிதை நீ மற்றும் நான்.
நீ மற்றும் நான்
நீ ஆம்பலிலை
நானதில் வழிந்தோடும் எத்தனையோ திவலைகளில் ஒரு
திவலை
நீ தரு
நான் உன்னில் துளிர்த்து
பச்சையத்தில் ஒளிர்ந்து
பழுப்பேறி அகாலத்தில் உதிரும்
எவ்வளவோ இலைகளில் ஓர் இலை
நீ வான்
நான் உன்னில் அலைந்து
தடயமற்று மறையும் கோடிப் பறவைகளில்
ஒரு பறவை
நீ அண்டவெளி
நானதில் எரிந்துதிரும் எண்ணிறந்த
மீன்களில் ஒரு மீன்
நீ கடல்
நானதில் ஜனித்து
அலைந்தலைந்தோய்ந்து மரிக்கும்
கோடி கோடி அலைகளில் ஓரலை
நீ காளி
நானுன் கழுத்தில் முண்டமற்று
விழிதிறந்து கிடக்கும் தலைகளில்
ஒரு தலை
காமத்தில் இருந்து தொடங்கி இக்கவிதை விரித்து செல்வது ஒரு வாசிப்பு கோணம். அது கூடலாக இருக்கலாம். அல்லது காமத்தின் பல்வேறு ரூபங்களான வாழ்வாக இருக்கலாம். மொத்த வாழ்விலும் நாம் எதிர்க்கொள்ளும் விஷயங்களின் மேலான ஒன்றாக விரிவதாலேயே இத்தொகுப்பின் மிகச்சிறப்பான கவிதையாக அமைகிறது. மனிதன் எளியவன். அவன் எதிர்க்கொள்ளும் ஒவ்வொன்றும் அணுக அணுக அண்டமென விரிந்து காளியென தலை கேட்கும் தெய்வங்கள்.
உச்சத்தில் இருந்து மீண்டும் தன் வாழ்வின் பேசுபொருள் உலகிற்குள் நுழைந்து மானுட உறவினில் எழும் இரட்டை நிலையை என்றென்றைக்குமாக விரிக்கிறது ஒரு பழைய படிமத்தை உடைத்தல் கவிதை.
ஒரு பழைய படிமத்தை உடைத்தல்
என் தேவதைகளுக்கு சிறகுகளில்லை
தலையில் பூக்களாலான கீரிடங்களில்லை
வெண்ணிற பரிசுத்த ஆடைகளை
அவை அணிந்திருப்பதுமில்லை
அவை ஆகாயங்களிலிருந்து
பொத்தென குதித்தவைகளும் அல்ல
ஞானச்செருக்கின் ஒளிவட்டம்
அவர்களின் சிரசுக்குப் பின்னே ஒளிர்வதில்லை
அவற்றின் கரங்களில்
எந்த மாயக் கோல்களும் இருப்பதில்லை
அவற்றின் பாதங்கள் பூவை விட
மென்மையானவைகளும் அல்ல
அவை பாவங்களை மன்னிக்கும்
புனித ஆத்மாக்களும் அல்ல
என் தேவதைகள் மூத்திரம் பெய்யும்
அவர்களின் அபானவாயு துர்வாடை வீசும்
அக்குள்களில் திட்டுத் திட்டாய் அழுக்குகளின் மெலிதான
தடங்களிலிருக்கும்
கற்றை முடிகளை சிலுப்பினால்
பேன்கள் உதிரும்
துரோகம் செய்வார்கள்
நள்ளிரவில் தன் காதலர்களின் பொருட்டு
தலையில் கல்லைப் போட்டு சாகடிப்பார்கள்
நான் இல்லாதபோது
பிறன் மனையாளனுடன் கூடிக் களிப்பார்கள்
மகா முட்டாள்களாக இருப்பார்கள்
கால்களில் பித்தவெடிப்பு இருக்கும்
திருடவும் செய்வார்கள்
அவர்களின் ஆடைகளில்
வேர்வையில் கவுச்சி எப்போதும் கமழும்
என் பாவங்களுக்கு என் பாவங்களைவிட
அதிகமான தண்டனைகளை
நியாயமற்று வழங்குவார்கள்
என் தேவதைகளில் ஒரு தேவதை
இப்போதென் வலது கையின்
இரத்தநாளமொன்றை அறுத்து
குருதியைக் குடித்துக் கொண்டிருக்கிறது
சந்தேகமாக இருந்தால்
என் அறைக்கு வந்து பாருங்கள்
கவிதையில் வரும் தேவதைகள் புவியில் கால்பதிந்து குருதி உண்ணுபவர்கள். அவர்களை விரும்புவதே சாமன்யனின் சொர்க்கம்.
இவர்களும் அப்படிப்பட்ட தேவர்கள் தானே. அதன் தவிப்பை சொல்ல துவங்குகிறது உன்னை கைவிடவே விரும்புகிறேன்.
உன்னை கைவிடவே விரும்புகிறேன்
நீ செய்தது
அத்தனை பெரிய துரோகமில்லை
நீ கையளித்தது
அத்தனை பெரிய அவமானமும் இல்லை
ஆனால்
நான் எல்லாவற்றையும்
ஊதிப்பெருக்கிக் கொள்கிறேன்
உன் புறக்கணிப்பின் ஒரே ஒரு சொல்லை
ஆயிரமாயிரம் சொற்களாய்
நீட்டித்துக் கொள்கிறேன்
நீ எதேச்சையாய் நிகழ்த்துபவைகளை
எனக்கெதிரான மாபெரும் சதித்திட்டங்களாக
அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்
என் வெறுப்பின் மேகங்களை உன்னில்
பொழிய விடுகிறேன்
எனக்கு உன்னைக் கைவிட வேண்டும்
அதன் நிமித்தம் எதுவும் செய்யலாமென்ற உன்மத்தம்
அப்படிப் பெருகுகிறது
கைக்கொள்ள முடியாத ஒன்றின் நிழலில்
பைத்தியம் போல அமர்ந்திருக்க யாருக்குத்தான் பிடிக்கும் ?
அடைய முடியாத ஒன்றைப் பின்தொடர்வது
அவ்வளவு கசப்பாக இருக்கிறது
எத்தனை உபாசித்தாலும் அவர்களது தேவதைகள் அப்பால் நிற்பவை தானே அன்றி இப்பால் நகர்ந்து இனிமை சேர்ப்பவை அல்ல. அந்த இனிமையும் அழகும் எல்லாம் எப்போதோ எங்கோ ஒருமுறை காணக்கிடைக்கும் அழகாக இருக்கும் கவியுலகே சதீஷ்குமாரின் இத்தொகுப்பு கவிதைகள்
யாருக்கும்
அவளுக்கு 40 வயது இருக்கும்
மிகவும் அழகாக இருந்தாள்
அவளிடம் இதை சொன்னபோது
அவள் உண்மையாகவேவா ? என சந்தேகத்துடன் கேட்டாள்
நான் மீண்டும் “ஆமாம் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்”
என்றதும் அவள் முன்னைவிட
அவ்வளவு அழகாக மாறிப்போனாள்
அழகாய் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது ?
ஆனால்
எப்போதுமே அழகாக இருக்கும்
ஒருவரைக் கூட நான் இதுவரை பார்த்ததே இல்லை
நண்பன் ஒருவன் சிகரெட் குடிக்கும்போது மட்டும் அழகாய் இருப்பான்
தோழி ஒருத்தி பொய் சொல்லும்போது மட்டும் அழகாயிருப்பாள்
என் காதலிகளில் ஒருத்தி
நான் கவிதை படிப்பதைக் கேட்கும்போது மட்டும்
அவ்வளவு அழகாயிருப்பாள்
அப்பா சவப்பெட்டியில்
கிடத்தப் பட்டபோதுதான் முதன் முதலா அழகாத் தெரிந்தான்
அம்மா தூங்கும்போது மட்டும்
ஒரு குழந்தையைபோல் அழகாக இருப்பாள்
வாடிக்கையாகப்போகும் வேசி ஒருத்தி
உச்சத்தின்போது மட்டும்
ஒரு அல்லிமலர் போல் அலர்ந்து
அழகாக இருப்பாள்
மழைக்காலங்களில் மட்டுமே
அழகாக இருக்கும் ஒரு வங்கி ஊழியன் இருக்கிறான்
கடவுள்கள் ஒரே நிலையில் இருப்பதால்
அவர்களின் அழகுகளைப்
பார்க்க முடிந்ததே இல்லை
உண்மையிலேயே
யாருக்கும் எப்போதாவதுதான் வாய்க்கிறது
அழகாக இருப்பதற்கு
எப்போதோ நினைத்து பார்த்து இனிக்கும் கணங்களை சொல்கிறது நினைவின் குளிர். அந்த குளிர் தண்மையா வெம்மையா என்பது அவரவர் வாசிப்பு. அதுவும் வெம்மையுடன் கசிவதென்றே என்னால் கொள்ள இயல்கிறது.
நினைவின் குளிர்
இலையுதிர்கால மரம் போல்
உதிர்கிறது காலம்
இதில்
மிஞ்சுவதென்னவோ
தளிராய் இருக்கையில்
நுனியில் திரண்ட பனித்துளிகளின்
குளிர்ந்த நினைவுகள் மட்டுமே
அந்த நினைவுகளின் குளிரில் துணையின்றி தனித்தமரும் மனம் ஒன்றின் குரலாகவே நான் மட்டும்தான் ஒலிக்கிறது.
நான் மட்டும்தான்
நீயில்லாத இந்தக் காலத்தின் உலகம்
அப்படியேதான் இருக்கிறது
ஒரு மணற் துகள் கூட
தன் நிலையழியாமல் வழக்கம் போலே இருக்கிறது
நான்தான்
நீயில்லாததைக் குறித்து
எப்படி எப்படியோ
எண்ணிக்கொள்கிறேன்.
சில கவிதைகள் தான் சொல்ல வரும் தூய உணர்வால் மட்டுமே நிற்பவை. இது அதிலொன்று. நிலையழியாது வாழும் மணற்துகளாக அவனும் மாறும் கணம் அங்கே ஒரு கொத்து ரோஜா மலர்களை வைப்போம்.
பெயர்கள்
உன் பெயருள்ள இன்னொருவனைப்
பார்க்க நேர்ந்தபோது
உன் ஞாபகம் எப்படியோ வந்து தொலைந்ததைக் குறித்து
உன்னிடம் சொல்ல வேண்டும்
நேரமிருக்கும்போது இதற்கு பதிலளி
‘ஒரு பெயர் வெறும் பெயராக மட்டுமே
ஏன் இருப்பதில்லை ?’
நம் பெயர்கள்
நமக்குத் தெரிந்த எத்தனையோ பெயர்களில்
ஒரு பெயராக மாறும் போது
நம்மைப் புதைத்த இடத்தில்
ஒரு கொத்து ரோஜா மலர்களை வைப்போம்
அங்கே எமக்கொரு நற்கனவுகள் வருவதாக என்ற ஏக்கமிகு வேண்டுதலாக ஒலிக்கிறது இக்கவிதை.
நற்கனவுகள் வருவதாக
சந்தோஷம் என்றால்
என்ன அக்கா
உனக்கு பிடித்தவர்களோடு
நரகத்தில் இருப்பது
துயரம் எனில் எது அக்கா
சொர்க்கத்தில் தனித்திருத்தல்
இசை யாது அக்கா
உன்னை ஆற்றுபடுத்தும் ஒலி
உன் குரல் ஏன் உடைகிறது அக்கா
உன் பட்டாம்பூச்சிகளின் சடலங்களின் மேல்
அமர்ந்திருப்பதால்
ஏனக்கா உன் பட்டாம்பூச்சிகள் இறந்தன
தெரியவில்லை யதேட்சையாய் பார்த்தபோது
சட்டகத்தில் பாடம் செய்யப்பட்டவை போல்
இறந்து கிடந்தன அவை
குட்நைட் அக்கா
நற்கனவுகள் வருவதாகுக
குட்நைட்
நற்கனவுகள் வருவதாகுக
உன்னை கைவிடவே விரும்புகிறேன் தொகுப்பின் இக்கவிதைகளை வாசிக்கையில் ஏற்படும் சுவை நெல்லிக்காய் தின்பதே. கசந்து கசந்து சென்று அடித்தொண்டையில் உமிழ்நீர் சுரக்கையில் லேசாக வரும் மென் இனிப்பு போன்றதே. இத்தொகுப்பில் பறக்க எத்தனித்தவற்றையும் பறந்தவற்றையும் இணைத்து ஒரு கவியுலகை எனக்கென சமைத்தெடுத்ததே இது.
2023 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் இளங்கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அன்புடன்
சக்திவேல்