தமிழ்விக்கி பணி தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இக்கலைக்களஞ்சியப் பயணத்தின் வழி தமிழ் இலக்கியப் பரப்பின் விரிவைப் பார்க்க முடிந்தது. இப்பணியில் முதன்மையாக நாங்கள் தொகுத்தது தமிழறிஞர்களை. இலக்கியத்தில் அவர்களின் பங்களிப்பு பிரமிக்கச்செய்வதாக இருந்தது. நாற்பது தமிழறிஞர்களின் பதிவு முடிந்தபோது இதில் ஒரு பெண் கூட இல்லையே என்ற எண்ணம் வந்தது. தமிழ் இலக்கியத்திலும் இத்தகைய போக்கைக் காண நேர்ந்தது. இந்த சமயத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அரவிந்த் சுவாமிநாதனின் “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் பெண்ணெழுத்து” என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அது விடுதலைக்கு முந்தைய பெண் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுக்கு தொடக்கமாக இருந்தது. ஆனால் அதிலிருந்து ஒரு எழுத்தாளர் கூட நம் விமர்சன மரபு தொகுத்த நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை.
இன்றை ஒரு எழுத்தாளராக உள் நுழையும் ஒரு பெண்ணுக்கு நவீனத்தமிழ் இலக்கிய மரபில் ஒரு முன்னோடியாக பெண் இல்லை என்பது ஆச்சரியத்தையே அளிக்கிறது. ஏன் இல்லை என்ற கேள்வியும் எழுகிறது.
ஒருவேளை பெண்கள் அதிகமாக எழுதவில்லையா? என்ற கோணத்தில் ஆராயும் நோக்கில் தமிழ்விக்கியில் ”தமிழ்ப்பெண் எழுத்தாளர்கள்” என்ற தலைப்பில் பெண் எழுத்தாளர்களை தொகுத்துப் பார்த்தோம். விடுதலைக்கு முந்தைய காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் 534 என அரவிந்த் சுவாமிநாதன், இ.ரெ. மிதிலா போன்ற ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அதிலிருந்து ஒரு பத்து பெண்கள் கூட தொடர்ந்து தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்படவில்லை என்பது ஆச்சர்யமளித்தது.
இங்கு நான் சங்ககாலம் தொடங்கி பக்தி இலக்கிய காலம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சங்க காலத்திலும் நானூறுக்கும் மேற்பட்ட புலவர்களில் நாற்பது பெண் புலவர்களே இருந்தனர். பக்தி இலக்கிய காலத்திலும் கூட நான்கு பெண் கவிஞர்களே முக்கியமாக சூழலில் பேசப்பட்டவர்கள்.
தமிழ் நவீன இலக்கியம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஆரம்பிக்கிறது. சிறுகதைகள் என்ற மேற்கின் வடிவத்துக்குள் அடைக்க ஏதுவாக அமைந்த நம் வாய்மொழிக்கதைகள், புராணம் போன்றவற்றை தொகுக்கும் பணி நிகழ்ந்தது. அதன்பின் புனைவுகளை அதனுள் திணித்து புனைவுக் கதைகள் எழுதும் போக்கு உருவாக ஆரம்பித்தது. அதன்பின் மெல்ல மேற்குலகின் சிறுகதை வடிவத்தை இலக்கணமாகக் கொண்டு சிறுகதை எழுதும் போக்கு அதிகரித்தது. தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் என 1915இல் விவேகபோதினியில் எழுதிய வா.வே.சு. ஐயர் என தமிழறிஞர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் அதற்கும் முன்பே 1913இல் அதே விவேகபோதினி இதழில் அம்மணி அம்மாளும், 1911இல் வி.விசாலாட்சி அம்மாளும் எழுதியதாக முனைவர் இரெ. மிதிலா குறிப்பிடுகிறார்.
இத்தரவுகளின் வழி நான் சொல்ல விரும்புவது. ஆண்கள் எழுத ஆரம்பிக்கும் போதே பெண்களும் எழுத ஆரம்பித்துவிட்டனர் என்பதைத்தான். அதிக எண்ணிக்கையிலும் பெண்கள் எழுதினர். படித்த, உயர் குடியைச் சேர்ந்த பெண்களால் மட்டுமே எழுத முடிந்தது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் ஆண் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை மிக விரைவாக அவர்கள் சாதியம் சார்ந்த பாகுபாடுகளை அரசியல், சமூகக் காரணிகளால் கடக்க முடிந்து எழுத வாய்ப்பமைந்தது. ஆனால் சாதியம் சார்ந்து அடித்தளத்தில் இருக்கும் பெண்கள் எழுதவர மிகவும் அதிக காலம் எடுத்தது.
*
இரண்டாவது கேள்வியாக, “அதிக எண்ணிக்கையில் ஒரு வேளை எழுதியிருந்தாலும் தரமாக எழுதவில்லையாதலால் கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்பட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
இலக்கியப் படைப்புகளில் தரம் என்பது எதை வைத்து நிர்ணயம் செய்கிறோம்? இப்படைப்பு தரம் என இலக்கிய விமர்சகர்களாலும், வாசகர்களாலும் எழுத்தின் வழியாக, வாய்மொழியாக கவனப்படுத்தப்படுவதால் தொடர்ந்து இலக்கியப்பரப்பில் அப்படைப்பு கவனம் பெறுகிறது. தொடர்ந்து அடுத்தகட்ட விமர்சகர்களால் கவனத்திற்குள்ளாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.
பொதுவாக விமர்சகர்களின் அளவுகோலாக மொழி, மொழி நடை, வடிவம், பேசுபொருள், தரிசனம், அழகியல், கலை நிகழ்ந்துள்ளதா போன்றவை பார்க்கப்படுகின்றன. மேலும் இந்த இலக்கிய காலகட்டத்தில் நவீனத்துவம், பின் நவீனத்துவம், எதார்த்தவாதம், இயல்புவாதம், முற்போக்கு இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், சிறுபான்மை எழுத்து, ஈழ இலக்கியம் என பல அலைகள் எழுந்து வந்தன. ஒவ்வொன்றூம் ஒவ்வொரு குறிப்பிட்ட அழகியல் கூறுகளுடன் தன்னை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை முன்வைத்தன. பெரும்பான்மையான விமர்சனக் கருவிகளை பின் நவீனத்துவம் என்ற அலை கலைத்துப்போட்டது எனலாம்.
நவீன இலக்கியம் ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து இன்று வரை நம் விமர்சன மரபும், தீவிர இலக்கிய வாசகப்பரப்பும் முன்வைத்துள்ள இலக்கிய முன்னோடிகள் நிரையை நாம் ஏன் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
விரும்பியோ விரும்பாமலேயோ நாம் தனியனாக பரிதவிக்கும் காலகட்டத்தை நோக்கி வந்து சேர்ந்திருக்கிறோம். ஒரு தனியன் தன்னை எதனுடன் தொடர்புறுத்திக் கொள்ள விரும்புவதில்லை. இந்த நீண்ட மரபில் தான் ஒரு கூறு என்பதை அவன் பலவகைகளில் உதிர்த்துவிடுவதையே விரும்புகிறான். மொழியே இலக்கியத்திற்கு ஒரு கருவி எனும் பட்சத்தில் சுருங்கி உலகலாவிய தன்மையை கோரி நிற்கிறது.
இன்றைய வாசகனுக்கு கதை என்ற அம்சமே தன்னளவில் அதன் இலக்கணங்களைக் கடந்து போதுமானதாக உள்ளது. ஒரு படைப்பில் கலை நிகழ்ந்துள்ளதா என்பதே எல்லா கருவிகளையும் தாண்டி இனி முக்கியமாக அமையும் என்று நினைக்கிறேன். படைப்பு அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறதா, என்றுளதை, எல்லோருக்குமானதை உள்ளார்ந்து பேசுகிறதா என்பதே எக்காலமும் தாண்டி பேசப்படும் ஒன்றாக அமையும். கம்பனும் டால்ஸ்டாயும் அதனாலேயே செவ்வியல் இலக்கியவாதிகளாக அறியப்படுகிறார்கள். கலையின் உச்ச சாத்தியமான ஒன்று இதுவாகவே இருக்க முடியும். பிறவை யாவும் அவற்றிற்கான முயற்சிகளாகவே கால ஓட்டத்தில் மறக்கப்படும்.
*
இந்தவகையில் நவீன இலக்கிய காலகட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. 1930கள் நவீன இலக்கியத்தின் முக்கியமான காலகட்டம். மணிக்கொடி இதழின் வழியாக தீவிர இலக்கியம் வளர்ந்தது. அதற்கு முன்னைய காலகட்டத்தில் விகடன், கல்கி ஒரு புறமும், கலைமகள், பாரதமணி, சக்தி ஒருபுறமும் என இலக்கியம் வளர்ந்தது. ஆனால் மணிக்கொடி வழியாகத்தான் புதுமைப்பித்தன், கு.ப.ரா, நா. பிச்சமூர்த்தி போன்ற நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் எழுந்து வந்தனர். இக்காலகட்டத்தில் ராஜம்கிருஷ்ணன், ஆர். சூடாமணி, அநுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்களும் மணிக்கொடியில் எழுதினர். ஆனால் இவர்களும் தொடர்ந்து முன்னோடிகள் என்ற நிரையில் வைக்கப்படவில்லை.
இக்காலகட்டத்தில் கலைமகள் குடும்ப இதழாக ஆனது. மிகப்பெரும் பெண் எழுத்தாளர் நிரை ஒன்று கலைமகள் வழி உருவானது. ஆனாலும் குடும்ப இதழ் என்ற வரையறைக்குட்பட்டு எழுதும் போக்கே பெண்களுக்கு வாய்த்தது.
மணிக்கொடி, எழுத்து, கசடதபற என தீவிர இலக்கிய இதழ்களின் வழி இயங்கிய இலக்கியத்தில் பெண்களின் படைப்புகள் நிராகரிக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. அப்படி அனுமதிக்கப்பட்டவர்களும் கூட ஆண்கள் மதித்த பேசுபொருளை இலக்கியத்தில் பேசுபவர்களாக இருந்திருக்கலாம் என்ற ஐயமே எழுகிறது. மிகவும் கராறான விமர்சனம், வம்புச் சண்டைகளால் பெண்கள் ஒரு வேளை ஆண்கள் அதிகம் புழங்கிய இதழ்களில் எழுதாமலிருந்திருக்கலாம். சமீபத்தில் நீலி மின்னிதழில் கி.சரஸ்வதியம்மாளில் ஒளியும் நிழலும் நாவலுக்கு வெங்கட்சாமிநாதன் எழுதிய மதிப்புரையை மீள் பிரசுரம் செய்தோம். அந்தக் கட்டுரை சரஸ்வதி அம்மாளின் நாவலைப் பற்றிய விமர்சனக் கட்டுரையா அல்லது க.நா.சு வை திட்டுவதற்காக எழுதப்பட்ட கட்டுரையா என்றே வாசிக்கும் போது கேள்வி எழுந்தது. பின்னும் புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற விமர்சனம் சார்ந்த வசைச் சொற்கள் இலக்கிய உலகில் பிரபலம். முன்னோடிகளைக் குறை சொல்லவில்லை. ஆனால் இந்தச் சூழல் மரபிலிருந்து கட்டுப்பாடுகளிலிருந்து குடும்பத்திலிருந்து எழுதிய உயர்குடிப் பெண்களுக்கு ஒவ்வாததாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனவே தங்களுக்கு வசதியான கலைமகள் மற்றும் பிற இதழ்களில் அவர்கள் தங்கள் எழுத்துக்களை தொடர்ந்திருக்கலாம். அதன் வரையறைகளுக்கு உட்பட்டு எழுதியும் கலை செய்ய முடிந்த விந்தியா, சரோஜா ராமமூர்த்தி போன்றோரை நீலி வழியாக அறிமுகம் செய்துள்ளோம். மேலும் அவ்வாறான எழுத்தாளர்களை நீலி தொடர்ந்து அறிமுகப்படுத்தும்.
*
மீண்டும் முதலிலிருந்து இலக்கிய முன்னோடிகளை மதிப்பிட இலக்கியப்பரப்பை இரு பெரும் கூறாக பிரிக்க விரும்புகிறேன். ஒன்று ”ஆண் தன்மை” (Masculine energy) எழுத்து, இன்னொன்று ”பெண் தன்மை” (feminine energy) எழுத்து. உயிரியல், உளவியல், தத்துவம், சமூகவியல், அரசியல் என பல தளங்களில் இந்த பகுப்பாய்வை நாம் நிகழ்த்திப் பார்க்கலாம்.
இங்கு ஆண்தன்மை என்பதை ”ஆதிமனிதன் வழி ஆண்தன்மை என்பது வெளியேறுபவன், அலைபவன், விரிபவன், வேட்டையாடுபவன், பாதுகாப்பவன், கொடுப்பவன், விழைபவன் எனக் கொள்ளலாம்; எதிர் நிலையிலிருந்து நேர்நிலை நோக்கி/ஒளி நோக்கி செல்பவன்; இருப்பிலிருந்து பிரபஞ்சம் வரை விரிந்து ஆய்ந்து தன் தேடலுக்கான விடையை அடைய முற்படுபவன்; மயக்கங்களில்லாமல் அப்பட்டத்தை, எதார்த்தத்தை பேசுபொருளாகக் கொண்டவன்; உணர்வுகளை விட அறிவை முன் நிறுத்துபவன்” என வரையறுக்கலாம்.
பெண் தன்மை என்பதை ”ஆதித்தாய் வழியாக பெண் சுருங்குபவள், அரவணைப்பவள், பகிர்ந்தளிப்பவள்; நான்கு சுவருக்குள் தன் பிரபஞ்சத்தை விரிப்பவள்; இருப்பிலிருந்து சுருங்கி சிறியவைகளில் பிரபஞ்சத்தின் தரிசனத்தை அடைபவள்; ஒளியிலிருந்து, நேர் நிலையிலிருந்து தொடங்குபவள்; பக்தியும், பிரேமையும், ஒப்புக்கொடுத்தலும் தன் குணங்களாகக் கொண்டவள்; அறிவை விட மெல்லுணர்வுகளுக்கு இடம் கொடுப்பவள்” என வரையறுக்கலாம்.
இந்த கூறுபாடும் சிந்தனையும் புதியதல்ல. காலனிய இந்தியாவில் ‘பெண்மை’ என்பது மறுவரையறை செய்யப்பட வேண்டிய முக்கியக் கருத்தாக்கமாகவும், தந்தைமைவழி ஆணாதிக்கத்தைத் தகவமைக்கவும் வேண்டியிருந்ததைப் பற்றி ஆ.இரா. வெங்கடாசலபதி குறிப்பிடுகிறார். இன்றைய நவீன காலத்தில் “ஆண்மை” என்ற வரையறைகள் ஓர் ஆணுக்கே சுமையாக இருப்பதைப் பற்றியும் அக்கறை கொண்டிருக்கிறோம். போலவே பெண்மை என்பது இருதரப்புக்கும் இருக்கக்கூடிய பொதுவான அம்சம் என்றும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்காக வரையறுக்கப்பட்ட பொது வரையறைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள குரல் கொடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். இது இலக்கியத்திலும் இன்னும் தீவிரமாக பிரதிபளிக்கும் காலத்தில் இருக்கிறோம்.
இங்கு வெண்முரசிலிருந்து இரு வரிகளைச் சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக முழுமையான காமம் என்பது ஓர் ஆண் ஆணாகி பெண்ணையும், பெண்ணாகி பெண்ணிலிருக்கும் ஆணையும் அடைவதன் வழியாகவே அடைய இயலும் என்பது. இரண்டாவதாக ஆண் அலைந்து திரிந்து சென்று அடையும் தரிசனத்தை பெண் அடுப்பங்கரையில் அமர்ந்து கொண்டே அடையலாம் என்பது. எழுத்தாளன் இரண்டுமாகவும் அமைந்து கலையின் உச்சப் புள்ளியைத் தொடலாம்.
ஒரு பிரகடனமாகவே நான் சொல்லவிரும்புவது ஆண் என்பதை ஆண் தன்மையுடனோ, பெண் என்பதை பெண் தன்மையுடனோ தொடர்புறுத்திக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையைத்தான். ஒரு பெண் இலக்கியத்தில் தன் ஒட்டுமொத்த படைப்புலகம் முழுக்க ஆண் தன்மையையோ அல்லது பெண் தன்மையையோ அல்லது இரண்டையுமோ வெளிப்படுத்தலாம். ஒரு படைப்பில் மட்டும் ஒரு கூறு அதிகமாக வெளிப்படலாம்.
இந்த இரு கூறும் சமன்வயமாவது செவ்வியல் படைப்பாளனின் படைப்புகளில் மட்டுமே காண முடிகிறது. உதாரணமாக கம்பனை, டால்ஸ்டாயை சொல்லலாம். ஆண் தன்மையையும் பெண் தன்மையையும் தங்கு தடையின்றி காட்டாற்று வெள்ளம்போல அலைந்து ஒவ்வொன்றின் ஆழத்தை முழுமையாகத் தொடுவது செவ்வியல் படைப்பாளர்களால் மட்டுமே சாத்தியமாகிறது.
இந்த எண்ணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்த போது சைதன்யா இவ்வாறு சொன்னார். ”அதனால் தான் டால்ஸ்டாயை நாம் ஒருபடி மேல் வைக்கிறோம். அனாகரினினா மாதிரியான படைப்பை ஒரு போதும் தஸ்தாவெஸ்கியால் எழுதிவிட முடியாது. ஆனால் கலையின் உச்சத்தை தஸ்தாவெஸ்கி ஆண் தன்மையின் அப்பட்டங்களை விசாரணை செய்து அதன் வழியே சென்றடைந்தார்” என்றார். இந்த ஒரு கருத்தையே கூட டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கியின் படைப்புகளை ஒப்பு நோக்கும் கருவியாகப் பயன்படுத்தலாம். டால்ஸ்டாயை, செவ்விலக்கியவாதிகளை நாம் ஏன் ஒருபடி மேல் வைக்கிறோம் என்பதற்கான உதாரணம் மட்டுமே இது.
இந்த ஒரு வரையறையைக் கொண்டு மீள நாம் நவீனத்தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் மதிப்பிடலாம். இதன் மூலம் காலத்தில் அமிழ்ந்த ஆண், பெண் எழுத்தாளர்கள் இருவரையும் தமிழ் இலக்கியத்தில் மீள அறிமுகப்படுத்தலாம்.
இவற்றையெல்லாம் கொண்டு தமிழ் இலக்கியத்தில் ஒட்டுமொத்த பெண் எழுத்தாளர்களின் நிரையை ஆராய்ந்தால் அவர்கள் தன்னை ஆழமாக, அப்பட்டமாக ஆராயவில்லையோ எனத் தோன்றுகிறது. விடுதலைக்கு முன் எழுத ஆரம்பித்த பெண்களின் நிரை ஒன்று இந்த ஆண் மையச் சூழலால் உருவாக்கப்பட்ட விமர்சனச் சூழலால் தங்களின் முழுமையை அடைய முடியவில்லை என்று தோன்றுகிறது. இங்கிருந்து ஒரு ஆஷாபூர்ணாதேவி உருவாகாததற்கு இதுவும் ஒரு காரணம்.
மேலும் பெண்கள் சமூக, அரசியல் சார்ந்த கூறுகளை பாவனைகளாகக் கொண்டிருந்தனர். பெண்ணியம், உடலரசியல் போன்ற கருத்துவாதங்கள் எல்லாம் அரசியல்-சமூக தளங்களில் தரமான வாதங்களாக, கட்டுரைகளாக முன்வைக்கப்பட வேண்டியவை. இந்த கருத்துக்களை இலக்கியத்தியத்தில் பேசியதால் மட்டுமே அது பெண்ணிய எழுத்து பெண்ணெழுத்து என்ற மயக்கத்தை அவர்கள் சூடிக் கொண்டார்களோ என்றும் தோன்றுகிறது.
தொண்ணூறுகளில் எழுந்து வந்த பெண்ணிய அலையின் வழி இலக்கியத்தில் கலை நிகழ்ந்ததா? கலையின் உச்ச சாத்தியத்தை அதைப் பேசியவர்கள் அடைந்தார்களா என்ற கேள்வி எழுகிறது. எங்கோ ஒரு தொடர்ச்சி அறுபட்டுவிட்டது போல தோன்றுகிறது. பெண் தன்மை என்ற கூறு விமர்சன மரபால் கவனப்படுத்தப்படாததால் இந்தத் தொடர்ச்சி அறுபட்டது எனலாம். இந்த அலைகள், கருத்து மோதல்கள், விமர்சனங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மெய்த்தேடல் கொண்டு கலை சமைத்த உலக, தமிழ்ப் பெண் எழுத்தாளர்களை கவனப்படுத்தும் முயற்சியை நண்பர்கள் நீலி வழியாக செய்கிறோம்.
இன்று பெண்களிலிருந்து செவ்வியல் படைப்புகளை கொடுக்க வல்ல சூழல் சாத்தியமாகியுள்ளது. கலை நிர்வாணமாக, அப்பட்டமாக உண்மையை மட்டும் சூடிக் கொண்டு முன் நிற்கிறது. இன்னும் கூட உடல், காமம், உணர்ச்சி, உறவுச்சிக்கல் சார்ந்தவற்றின் மேற்பரப்பில் நின்று கொண்டிராமல் அதன் வழியாகவும், அதற்கு அப்பாலும் சென்று கலையின் உச்ச சாத்தியமான தருணத்தை அடையும் காலம் கனிந்துள்ளது.
கலை நித்தியமானது, மாறாத்தன்மையது, என்றுமுளது.
-ரம்யா
(குரு நித்யா காவிய முகாம் 2023ல் பேசியது)