பேரன்பால் மெய்யுணரும் புரவிகள்- தங்கபாண்டியன்

வெண்முரசு நூல்கள் வாங்க

வெண்முரசு மின்னூல்கள் வாங்க 

அன்புள்ள ஆசிரியருக்கு,

மனித மன ஓட்டத்தின் நுட்பமான தருணங்களையும், மனிதமனம் எப்படி ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவிக்கொள்கிறது, எப்படி ஒன்றை மறைக்க இன்னொன்றை பயன்படுத்துகிறது, எப்படி எதிர்பாராத திருப்பம் அடைகிறது என்றும் எப்போதுமே சொல்ல விரும்புவீர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதைவிட சற்று மேலாகவே புரவி உளவியலை வெண்முரசில் சொல்லியிருப்பீர்கள்.

புரவிகளை நோக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு முறையும் அந்தத் திகைப்பை அடைவேன். அதற்குள் வாழ்வது எது? வலியும் நோயும் பசியும் இறப்பும் அதற்குமுண்டு. ஆனால் துயரில்லை, கவலையுமில்லை. மானுடரை விட தெய்வங்களுக்கு உகந்த ஊர்தியாக அது இருப்பது அதனால்தான் போலும். புரவிகள் வெளித் தெரிவதற்கு அஞ்சி உள்ளத்தால் பொத்திக் கொள்ளும் செயலை செய்வதே இல்லை. உள்ளத்தில் பிறரறியாது எதையும் கரந்து வைப்பதில்லை. அதேபோல் புரவி விழையாத எதையும் நம்மால் செய்யவைக்க முடிவதுமில்லை. அப்படி முயல்வது காரிருளுக்குள் மதவேழத்தை எதிர்கொள்வதுபோல. 

பணக்காரனையும் அரசியல்வாதியையும் பார்த்தவுடனே பம்முகிற, உயரதிகாரியிடம் இளிக்கிற, அசிங்கமாக வளைந்து நெளிகிற  பரிதாபத்திற்குரிய ஆத்மாக்கள் போல் குதிரைகள் இருப்பதில்லை. புரவிகள் நோயுற்று நொய்ந்திருக்கலாம். ஆனால் நிமிர்விலாத புரவியென ஏதுமில்லை. கால்மடித்து ஒருக்களித்துப் படுத்து தலைநிமிர்ந்து இளவெயில் காய்ந்து விழிமூடி அசைபோட்டுக்கொண்டிருக்கும் புரவியின் அழகுக்கு இணையேது. பேரரசர்கள் அரியணையில் அமர்கையில் மட்டுமே எழும் நிமிர்வு அது.

புரவியூர்தலின் சுவையை ஒரு துளியேனும் அறிந்தபின் அதை ஒழிவது இயலாது. 1993 ல் கல்லூரி படிப்புக்காக சென்னை சென்ற கறுத்த, மெலிந்த, எண்ணெய் வடியும் முகம் கொண்ட, பேச கூச்சப்படக்கூடிய, ஆங்கிலம் பேசத்தெரியாத, சரியாக உடுத்தத்தெரியாத கிராமியத்தன்மை மிக்க  நான் குதிரையேற்றப் பயிற்சி மூலம் மட்டுமே இரண்டாவது நானாக என்னை உருமாற்றிக் கொண்டேன். அதன்  வழியாகவே தாழ்வுணர்ச்சியின் சுமையால் கூன்விழுந்த கிராமத்துக்காரனை வென்றதாக இப்போது உணர்கிறேன்

எண்ணங்களை வெளிப்படுத்த முயலும் புரவிகளின் வால்கள் சுழன்றுகொண்டே இருக்கும். அவை உடல் எடைமாற்றியும் பொறுமையிழந்தும் அசையும்.  விலாநோக்கி கைநீட்டுவதை புரவிகள் விரும்புவதில்லை. அதை நோக்கி நீட்ட அது கனைத்தபடி கால்களை உதைத்து வால் சுழற்றி பின்னால் தாவும்.

விழுந்துவிடுவார்விரைந்து பின்னால் செல்லுங்கள்என்று சுதமர் நடுங்கும் குரலில் சொன்னார். “விழமாட்டார்என்றான் நகுலன். “சூதனே, அவருக்கு எட்டாண்டுப் பயிற்சிக்குப் பின்னரும் புரவிக்கலை சற்றும் தெரியாது. கடிவாளமும் குதிவளையமும் நிலைகொள்ளாதுஎன்றார் சுதமர். “ஆம், அறிவேன். ஆனால் புரவியிடம் சொல்லியிருக்கிறேன். அது அவரை காத்து அழைத்துச்சென்று மீளும்என்றான் நகுலன். அதனிடமே சொல்லமுடியுமா?” என்றார் சுதமர். “ஏன் உங்களிடம் சொல்லமுடிகிறதே?” என்றான் நகுலன்

கொட்டில்களில் நின்றுதூங்கியும் அசைபோட்டும் புல்மென்றும் கொண்டிருக்கும் புரவிகளில் பல குளம்புகளை மிதித்து ஓசையெழுப்பியும் அழிகளை காலால் தட்டியும் நீள்மூச்சு விட்டும் புரவியறிந்தவன் வருவதை அறிந்துகொண்டதை தெரிவிக்கும்.

நகுலன் நீள்முச்சுடன் அங்கிருந்த சிறிய கல்லொன்றில் அமர்ந்தான். தொலைவில் காரகன் மீண்டும் குரலெழுப்பியது. தன் ஒவ்வொரு அசைவையும் தனித்தனியாக அது அறிகிறது. இப்போது அதன் சிறிய செவிகள் குவிந்தும் மடிந்தும் ஒலிதேர்ந்துகொண்டிருக்கும். உருளைக்கல் விழிகள் அசைய வாய்திறந்து மூக்குத்துளைகள் அகன்று அசைய அவனை உணர்ந்துகொண்டிருக்கும். தன் உள்ளத்தின் ஒரு பகுதியை முழுமையாகவே அவனுக்கு அளித்திருக்கிறது. எங்கு எதை செய்துகொண்டிருந்தாலும் அவனுடன் பிரியாது இணைந்திருக்கிறது. புரவிகள் எப்போதும் அப்படித்தான். அவற்றால் எந்த உறவுகளையும் துண்டித்துக்கொள்ள இயலாது. அன்பின் வலையிலிருந்து விடுவித்துக்கொள்ளும் ஆற்றலுள்ள ஒரே உயிரினம் மானுடன்.

எங்களுடைய பயிற்சிக்காக அதிகாலையில் தீவுத்திடலை நோக்கி சீராக அணிவகுத்துச் செல்கையில் நோக்கும் மக்களின் விழிகள் கோல்டியைக் (அழகிய பெண்புரவி) கண்டு விரிவதை நான் ஒருபோதும் தவறவிடுவதில்லை. அப்போது என் உடல் மேலும் நிமிரும். நான்கு கால்கள் கொண்டவை எனினும் யானையும் பசுவும் எருமையும் அத்திரியும் கழுதையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது புரவி. பிற விலங்குகளின் தசைகள் முரசில் இழுத்துக் கட்டப்பட்ட தோல் போன்றவை. புரவியின் தசை வில்லில் முறுகி நின்றிருக்கும் நாண்குதிரை….காட்டின் தழல். 

பாஞ்சாலப் படை உபப்பிலாவ்யத்திற்கு வந்த பின்னர் நகுலன் மாதமிருமுறையேனும் அனிலையை நோக்க வருவான். முதல்நாள் நகுலன் அணுகியதுமே நெடுநாட்களாக அறிந்த ஒருவனை நோக்கி உளம்பாய்வதுபோல் அனிலை நிலையழிந்து கட்டுக்கயிற்றை இழுத்து உடல்திருப்பி மெய்விதிர்த்து கனைப்போசை எழுப்பியது. அவன் வந்து அதன் பிடரியில் கைவைத்ததும் திரும்பி தன் பெருந்தலையை அவன் தோள்மேல் வைத்து அழுத்தி அவன் மணம் முகர்ந்து மூச்செறிந்தது. ஒவ்வொரு முறையும் அவன் வருவதற்கு முன்னதாகவே, அன்று காலையிலேயே அது அவனுக்காக உளமொருங்கி நிலையழிந்து குளம்புமாற்றி மிதித்தும் தலைதாழ்த்தி மூச்சுசீறியும் பிடரிகுலைத்தும் காத்திருக்கும். நகுலன் வரும் நாள் அதற்குத் தெரியும் என பீலன் எண்ணிக்கொண்டதுண்டு. ஆனால் நகுலன் சீரான நாளிடையில் வருவதில்லை என்பதை பின்னர் நோக்கியபோது புரவி எப்படி அதை அறிகிறது என அவன் வியப்புறுவான்.” இதனை எங்கள் குதிரையேற்ற நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். சிலசமயங்களில் குதிரையை பார்க்காமலேயே என் உடலின் எல்லா மயிர்க்கால்களாலும் அதன் பார்வையை உணர்ந்தபடி இருந்திருக்கிறேன்.  

குதிரையால் மட்டுமே நிரப்பக்கூடிய வெற்றிடம் ஒன்று உள்ளது என்பது குதிரையேற்ற பயிற்சிகள் இல்லாத நாட்களில் எங்களால் உணரமுடிந்திருக்கிறது. மைதானத்தில் இறங்கியவுடன் அதுவரை இருந்த பதற்றமும் தவிப்பும் இல்லாமலாவதை உணர்வோம். புரவி ஒரு மவுனமான பிரார்த்தனை. வெறுமை வெளி நோக்கியது. துருத்தி நிற்பதன் துயரைக் கரைத்தழிக்கவும், கரைந்துபோதலின் துயரை மிஞ்சி மீளவும்.

புரவி மானுடரைப்போலவே எண்ணங்களாலானது. ஐயமும் தயக்கமும் ஆறாச் சினமும் கொண்டது. ஆனால் வஞ்சமற்றது, ஆகவே துயரற்றது. மறதி இல்லாதது, ஆகவே கடந்தகாலமற்றது. “புரவி பேணுபவன் ஒவ்வொரு கணமும் உணரவேண்டியது ஒன்றுண்டு, தன்னைவிட உடலால் உள்ளத்தால் உள்வாழ்வதனால் பலமடங்கு மேம்பட்ட ஒன்றுடன் அவன் உரையாடிக்கொண்டிருக்கிறான். பெருங்கனிவுடன் தன் மகவையென தன்னை ஊர்பவனை கொண்டு செல்லும். சமயங்களில் நடைதிகழா மைந்தன் என எண்ணி விளையாடும். ஆனால் ஆசிரியரே, நாம் புரவியைக் குறைத்து மதிப்பிட்டு அதை ஆள நினைக்கும்போது, அது நம் ஆழத்திலுறையும் ஆணவத்தையும் கீழ்மையையும் கருக்களாக்கி ஆட ஆரம்பித்துவிடும்.

ஆசிரியரே, புரவியூர்தல் பழக பழக ஆணவமும் பெருகத்தொடங்கியது. ஒவ்வொரு கணமும் என நான் என் ஆணவத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தேன். ஆனால் சில போட்டிகளில் தோல்வியடைந்தபின் காலவெள்ளத்தில் அவையெல்லாம் நீர்க்குமிழிகளே என உணர ஆரம்பித்தேன். நன்கு பழகியபின் புரவியூர்வது அனலெழுவதுபோல, இனிய நடனம்போல, ஒவ்வொரு அசைவும் தன் முழுமையில் நிகழ்ந்துகொண்டிருக்கும். அன்றுவரை நாம் அறியாத ஒரு மொழியில் பிறிதொரு உரையாடல் நிகழ்வதை அறியத்தொடங்குவோம்.

எத்துறையிலாயினும் அதில் பெருந்திறன் கொண்டவர்கள் சரியான மொழியாளுமையும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தங்கள் அகம் அடைவதையும் கை வனைவதையும் மொழியில் காட்ட அவர்களால் இயலும். எங்கள் பயிற்றுநர் ஓம்பிரகாஷ் போல.

இப்படியல்ல என்றாலும் கிட்டத்தட்ட இதையே நாங்கள் செய்ததாக வெண்முரசு வாசிக்கும்போதுதான் தெரியவந்தது, எங்கள் பயிற்றுநர் ஓம்பிரகாஷ் சொல்லித்தந்ததைப் போல.  “நான் உன்னை ஆளவில்லை. இனியவனே, நான் உன்னுடன் இணைகிறேன். நாம் முன்னரே அறிவோம். நீ என் பாதி. என் உடல் நீ. உன் உயிர் நான். நீ புல்லை உண்ணும்போது நான் சுவையை அறிகிறேன். உன் கால்களில் நான் அறிவதே மண். உன் பிடரிமயிரின் அலைவில் என் விரைவு. நீ என் பருவடிவம். நம் உள்ளங்கள் ஆரத்தழுவிக்கொண்டவை. இனியவனே, என்னை புரவி என்றுணர்க! உன்னை நான் நளன் என்று அறிவதைப்போல” புரவி விழியுருட்டிக்கொண்டே இருந்தது. நீள்மூச்செறிந்து கால்களால் நிலத்தை தட்டியது. ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக. 

“நடனம், போர், புரவியூர்தல் மூன்றும் ஒரு கலையின் மூன்று முகங்கள்தான். உடலை பயிற்றுவித்து முற்றிலும் நேர்நிலையும் சீரமைவும் கொள்ளச் செய்தல்” 

புரவியென்பது ஓட்டுபவன் உள்ளம் பருவடிவு கொண்டது. எதிரியின் விழிகளை நோக்குவது உன்னை அவன் நோக்கும் வாயில் திறப்பது. அவன் புரவியை நோக்கு, அது அனைத்தையும் கூறும். அவன் பதற்றத்தை, அச்சத்தை, வெறியை, விரைவை” என்ற உங்களின் சொற்களை நினைவு கூர்கிறேன்.

ஏழு வெண்புரவிகள் அரண்மனை முற்றத்தில் ஒருங்கி நின்றிருந்தன. அவை நளனின் மணத்தை நெடுந்தொலைவிலேயே உணர்ந்து கால்களால் கல்தரையை உதைத்தும் தலைகுனித்து பிடரி உலைய சீறியும் மெல்ல கனைத்தும் வரவேற்றன. அவற்றை அணுகி ஒவ்வொன்றாக கழுத்திலும் தலையிலும் தொட்டு சீராட்டி சிறுசொல் உசாவினான். புரவிகளுடன் உரையாடலில் இருப்பவன் அறிந்துகொள்ளும் உலகம் பிற அனைத்திலிருந்தும் விலகியது. உரையாடல் என்பது ஒரேசமயம் நம்மையும் நம்முடன் உரையாடுபவரையும் கண்டுபிடிக்கும் விளையாட்டு. பித்துகொண்டவர்களாக அவர்கள் புரவியைப்பற்றி மட்டுமே பேசுவர். புரவிகளுடன் வாழ்ந்து. புரவிகளை கனவு காண்பவர். அவர்களின் தெய்வங்களும் புரவி வடிவிலேயே அமைந்திருக்கும். 

மானுடன் பிரம்மத்தின் விழைவின் ஊன்வடிவு. புரவி அதன் விசையின் உயிர் கொண்ட உடல். புரவி வடிவிலேயே காற்று புவியில் தன்னை உடலென நிகழ்த்திப்பார்க்கிறது. புரவி மருத்துவன் காற்றுக்கு மருந்திடுபவன். புரவி விலங்குகளில் இளந்தளிர். மலர்களில் அது வைரம். 

இப்பெருவெளியில் ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டுள்ளது போலும். எனக்கு புரவியூர்தல் வாசிப்பால். நீங்கள் எப்போதும் சொல்வதுபோலத்தான் ஆசானே, “புரவி அறிவனவற்றை மானுடர் அறியவியலாது. விலங்குகள் கொள்ளும் அறிவை மானுடரால் விளக்கவே இயலாது. அவை பேரன்பால் மெய்யுணர்கின்றன”. நிபந்தனையற்ற அன்பை அளித்து புரவியை அறிந்த மானுடர்கள் மண்ணில் எங்கும் தோற்பதில்லை.  வெட்டவெளியில் விளையும் கனியொன்றில்லை. அந்த நாட்கள் அகத்திற்கினியவை, அந்தரங்கமானவை, அழகானவை, அவ்வறிதலால் பின்னாட்களும். வெண்முரசால் எந்நாளும். ஆம், அவ்வாறே!

பேரன்புடன்,

தங்கபாண்டியன்

[பி.கு: இதிலுள்ள பெரும்பாலான வரிகளும் கருத்துகளும் வெண்முரசில் இருந்து எடுக்கப்பட்டவை]

முந்தைய கட்டுரைதொடுதிரை- கல்பற்றா நாராயணன்
அடுத்த கட்டுரைஅப்பாவின் தாஜ்மகால், கடிதம்