உரையாடும் வழி, கடிதம்

தன்மீட்சி வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபகாலமாக உங்களது எழுத்துக்களை வாசித்து வருகிறேன்.  இதுவரை நான் படித்த உங்களது எல்லா எழுத்துக்களிலும் என்னுடைய வாழ்விற்கு, செயல்பாட்டிற்கு உதவும் வகையில் ஏதோ ஒரு விஷயம் இருப்பதை என்னால் கண்டடைய முடிகிறது. தற்போது  தன்னறம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள தன் மீட்சி புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஓஷோவின் சிந்தனைகளில் பெரும்பாலும் ஈர்க்கப்பட்டு இருந்த நான் ( நீங்கள் சொன்னது போல ஓஷோ என்னை, என் பார்வையை உடைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருந்தார், உண்மையில் அவர்தான் உடைத்தார்)  நடைமுறையில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை ஓஷோ சொல்லிவிட்டாரே என்பதற்காக, அது சரியாகத்தான் இருக்கும் ஆனால் நான் ஏன் அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறேன் மற்றும்  சில இடங்களில் நான் எங்கேயோ தேங்கி நிற்கிறேன் என்பது போன்ற வினாக்களுடன் இருந்தேன்.  உங்களது ஓஷோ பற்றிய மரபும் மீறலும் என்ற உரையாடலை கேட்டதிலிருந்து எனக்கு சில புரிதல்கள் உருவானதை உணர முடிகிறது.  இப்போது ஓஷோ உடன் உரையாட ஆரம்பித்திருக்கிறேன்.

எனக்கும் ஆசிரியருக்கும் உண்டான உறவு சற்று வித்தியாசமாகவே இருந்து வந்துள்ளது.  முதலில், ஆசிரியர் சொல்வது அனைத்தும் சரிதான் என்று ஏற்றுக் கொள்கிறேன்.  அவருடைய கருத்திற்கு எனக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அவருடன் உரையாட தயங்கியே இருந்திருக்கிறேன்.  எனக்கு துணையாக ஒருவர் உடன் வந்தால் மட்டுமே ஆசிரியருடன் உரையாடுகிறேன் (ஓஷோவிற்கு நீங்கள் வந்தது போல).  அதற்குக் காரணமாக நான் எண்ணுவது,

  1. என்னறிவோ எனக்குத் தெரிந்தது மட்டும்தான், ஆசிரியர் நம்மையும் தாண்டி நன்கு அறிந்தவர்,
  2. ஒருவேளை அந்த மாற்றுக் கருத்து என் அகங்காரத்தின் விளைவோ.

என்னை கட்டமைத்துக் கொள்ள, என் தன்னறத்தை கண்டடைய  ஆசிரியரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி.

வீ. இரவிக்குமார்.

அன்புள்ள ரவிக்குமார்

பொதுவாக நாம் மாற்றுக்கருத்து கொண்டிருந்தாலும் அதை மொழியாக, ஒரு தர்க்கவடிவமாக ஆக்க பயிலாதவர்களாக இருப்போம். இன்னொருவர் மொழியில், தர்க்கத்துடன் அதைச் சொல்லும்போது ‘ஆம். இதைத்தான் நான் சொல்லவந்தேன்’ என எண்ணுவோம். இது ஓர் ஆரம்பநிலை.

சிந்தனைக்கான பயிற்சியை அடைவதுதான் அதைக் கடக்கும் வழி. அதற்கு உகந்தவர்களுடனான விவாதங்கள் உதவும்

ஜெ

முந்தைய கட்டுரைகவிஞனும் ஞானியும்
அடுத்த கட்டுரைபாதிகளின் கவி – ரம்யா