குரு நித்யா காவிய முகாம் – கடிதம்

அன்புள்ள ஜெ!

சிறப்பான அமர்வுகளுடனும் ஆரோக்கியமான விவாதங்களுடனும் இனிமையையும் உற்காசகத்தையும் மேலும் வாசிப்பை நோக்கி நகர்வதற்கான உந்துவிசையையும் அளித்தது மே 12, 13, 14 ஆகிய நாட்களில் நடந்த நித்யா காவிய முகாம்.

ஆழ்வார் பாசுரங்களுடன் ஆரம்பித்து தருமரின் உரைவீச்சுடன் நிறைவுற்றது. தங்களால் ஒருங்கிணைக்கப்படும் எந்த நிகழ்வும் இறுதி நாளன்று ‘ என்ன அதற்குள் முடிந்துவிட்டது’ என்ற உணர்வும் பிரிவின் துயரும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஏற்படுத்திவிடுகிறது. எல்லா உரைகளும் விவாதங்களும் ஏனோதானோ என இல்லாமல் மிகச்செறிவாக இருந்தன.

அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்களின் பங்கேற்றல் புதிதாக எழுத இருப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் இளம்படைப்பாளிகளுக்கும் ஊக்கமளிக்கும். இளைஞர்களின் பெருமளவு பங்கேற்பு மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அறிவார்ந்த ஒருவர் நல்லெண்ணங்களுடன் வழிகாட்டும்போது அறிவு செறிவூட்டப்படுவதில் எனக்கு வியப்பேதும் இல்லை. மேலும் விவாதங்களில் தவறான புரிதல்களை நீங்களோ அல்லது ஏனைய பங்கேற்பாளர்களில் எவருமோ சுட்டிக்காட்டியபோது ஒரு நல்ல கூடுகையில் நாமும் பங்கேற்றோம் என்ற பேருவகை ஏற்படுகிறது. மேலும் அமர்வுகளுக்கு வெளியேயும் தங்களின் பேச்சு நிறைய தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது.

விவாத அமர்வுகளில் தொடுக்கப்பட்ட வினாக்களும் அதற்கான விரிவான பதில்களும் அருமை.

நன்று நனி சிறக்க! பொலிக!

மிக்க அன்புடன்

பார்த்திபன்.ம

காரைக்கால்.

முந்தைய கட்டுரைபறக்கும் நாட்கள்
அடுத்த கட்டுரைகுருகு, ப.சரவணன்