எனது இந்தியா, சாவும் பிறப்பும்

அன்புள்ள ஜெ,

நலம் தானே?

ஞாயிற்றுக்கிழமை ஒரு நூலகத்தில் சும்மா ஒரு நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கனையாழியின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று கண்ணில் சிக்கியது. அறிந்த பெயர் ஏதேனும் இருக்கிறதா என புரட்டினேன். அந்தத் தொகுப்பில்தான் நதி கதை இருக்கிறது. கூடவே ஒரு ஆச்சரியம் நீங்கள் எழுதிய ‘ஹம்பி’ கதையும் இருந்தது. அந்தக் கதையை ஏதேனும் காரணத்தினால் ‘ஜெயமோகன் சிறுகதைகள்’ தொகுப்பில் சேர்க்கவில்லை போலும். தட்டச்சு செய்து இக்கடித்துடன் இணைத்துள்ளேன்.

காசர்கோட்டின் ரயில் தண்டவாளத்திற்குச் செல்லும் வழியில் ஒளியே உடலான புழுவைக் கண்ட தருணத்தின் இன்னொரு வடிவம் என இக்கதை தோன்றியது. அன்று நீங்கள் பெற்றுக் கொண்ட ஒளியும் மானுடம் மீதான நம்பிக்கையும் தமிழ்ச்சூழலில் இன்று நிகழ்த்தியுள்ள விளைவை யாருக்கும் விளக்கத் தேவையில்லை. நன்றி.

அன்புடன்,

யஸோ.

அன்புள்ள யசோ

பலகதைகள் இப்படி அக்காலத்தில் எழுதப்பட்டு முழுமை கைவரவில்லை என பின்னர் தொகுப்புகளில் என்னால் சேர்க்கப்படவில்லை. இக்கதையை இப்போது காண்கையில் ஒரு மகிழ்ச்சி. 25 வயதில் எடுக்கப்பட்ட என் புகைப்படத்தை காணும் நிறைவு

1985ல் என் 24 ஆவது வயதில் நான் ஹம்பி சென்றேன். அதற்கு முன்னரே இரண்டு நாடோடிப் பயணங்களில் இந்தியப்பெருநிலத்தைப் பார்த்துவிட்டிருந்தேன். நான் கண்ட அந்த இந்தியா இன்றில்லை. அன்றிருந்த பிச்சைக்காரர்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டிருக்கின்றனர் – துறவிகள் மட்டுமே மிச்சமிருக்கிறார்கள். கடும் பட்டினி எங்குமில்லை. பசியில் பரிதவிக்கும் குழந்தைகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டிருக்கிறது. அன்றைய இந்தியா இடிபாடுகளில் வசிக்கும் மக்களாலானதாக இருந்தது. இன்று 70 சதவீதம் தங்குமிடப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகப் படுகிறது- குறிப்பாக கிராமங்களில்.

நான் அன்றுகண்ட ஹம்பியும் இன்றில்லை. அது அன்று சுற்றுலாப்பயணிகளே வராத ஒரு பாழ்நிலம். இடிபாடுகள், புழுதி, அமைதி, தனிமை. போதையடிமைகளான ஹிப்பிளை மட்டுமே பார்க்கமுடியும்.  இன்று அது ஒரு சுற்றுலாமையம்.

நான் அன்று கண்ட இந்தியாவின் குறியீட்டு வடிவென தோன்றிய ஹம்பி என்னை உலுக்கியது. நான் ஹம்பி பற்றி பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கதைகளையும் அன்று எழுதினேன். அதிலொன்று இக்கதை. கதையாக என்னுடைய ஒரு தொடக்ககால முயற்சி. ஆனால் இதில் இறந்தகாலம் ஒரு மட்கும் சடலமாகவோ உயிர்தேடும் குழந்தையாகவோ எப்படியோ என்னுள் படிவதை என்னால் இன்று காணமுடிகிறது. என் பிற்கால எழுத்துக்களுக்கான ஒரு சுட்டியாக இதை வாசிக்கலாம்

ஜெ

*

ஹம்பி

இடிந்துபோன கோபுரத்தில் துருத்திக் கொண்டு நின்ற கல்லில் காகம் ஒன்று சிறகுகளுக்குள் முகம் புதைத்து அமர்ந்திருந்தது. நேர் கீழே நான். எனக்கு முன்னால் சின்னாபின்னமாகக் கிடந்தது ஹம்பியின் இறந்த காலம்.

கண் எட்டும் தூரம் வரை இடிந்த கோட்டைகள். உடைந்துபோன ஸ்தூபிகள். சிதிலமாகக் கிடக்கும் கோயில்கள், பிரம்மாண்டமான கோபுரங்களின் இடிபாடுகள்.

தூசி அலை அலையாகத் தெரிந்தது. மேலே சூரியன் ஜ்வலித்தான். ஒற்றையடிப் பாதை பாத ஸ்பரிசம் மறந்து துயின்றது.

எனக்கு தாகமாக இருந்தது. ஆனால், எங்கு நீர் கிடைக்குமென்று தோன்றவில்லை. அச்சுதராயர் ஆலயம், விட்டலஸ்வாமி ஆலயம், தீபஸ்தம்பம் என்று பெயர் பலகைகள் அறிமுகப்படுத்தி வைத்த கற்குவியல்கள் முழுக்க என் களைப்பிற்கு முன் முக்கியத்துவம் இழந்து என் தாகமே என்னை ஆண்டது.

வெயிலில் என் தலை நரம்புகள் விண் விண்ணென்று தெரித்தன. அதிக வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல காட்சிகள் சோபை இழந்தன. கால்களில் வலிமை தேய்ந்து போவதை உணர்ந்தேன்.

இனி எத்தனை தூரம்! இனி எங்கு ஓய்வெடுப்பது? ஒரு டம்ளர் குளிர்ந்த மோர்? மோரா! சிரிப்பு வருகிறது. தண்ணீர் போதும். அழுக்குத் தண்ணீராக இருந்தால்கூடப் பரவாயில்லை. ஒரு குளிர் மரநிழல் – ஒரு டம்ளர் ஆறுதல்…

ஆனால், பாலைவனமாக இறக்கமற்று விரிந்து கிடந்தது இறந்தகாலம்.

துதிக்கை உடைந்துபோன யானைச் சிலை ஒன்று கரிந்துபோன புல்லில் குப்புறக் கவிழ்ந்து படுத்திருந்தது. யானையின் நெற்றிப்பட்டம் இடுப்புச் சங்கிலி எல்லாமே அதி நுட்பமான கலையழகுடன் மிளிர்ந்தன. முகர்ந்து பார்த்தால் அந்தக் கலைஞனின் விரல் நுனிக் குருதி அதில் மணக்கக் கூடும்.

ஓங்கி உயர்ந்திருந்த சுதை ஸ்தூபியின் மேல் மண்டபம் உடைந்திருந்தது. சுற்றிலும் முட்புதர் மண்டியிருந்தது. பிரம்மாண்டமான கோபுரம் ஒன்றின் அஸ்திவாரம் அனாதையாக வெயிலில் காய்ந்தது. அறிவிப்புப் பலகை சிரிப்பு மூட்டியது. ராஜகோபுரம்.

தாகம் இப்பொழுது தொண்டையில் இருந்து பரவி உடலை முழுக்கக் கவ்வியது. என் விரல் நுனிகளில்கூடத் தாகம். நான் நினைத்த இடத்தில் என் காலடிகள் விழவில்லை. நான் நெற்றியைத் துடைத்தேன். வியர்வைகூட உப்புப் படிந்து உலர்ந்துவிட்டது. மூச்சு உலை துருத்திபோலச் சீறியது.

தொலைதூரத்தில் புத்தம் புதிய கான்கிரீட் கட்டிடம் ஒன்று தெரிந்தது. மஞ்சள் டிஸ்டெம்பர் பூசின கட்டிடம் பூட்டியிருந்தது. தொல்பொருள் இலாகாக்காரர்களின் கட்டிடம். அது ஒரு பெரிய அசட்டுத்தனமாக, அசட்டுத்தனத்தின் திடவடிவமாக இடிபாடுகளின் இடையே தனித்து நின்றது. வெட்கப்படுவதுபோல.

மண்ணுக்குச் சாம்பல் நிறம். இந்த விஜயநகரம் ஐநூறு வருடம் முன்பு தீ வைக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டதாமே அந்தச் சாம்பலாக இருக்குமோ? அல்லது லட்சக்கணக்கில் பிணங்களைச் சுட்டுக் குவித்திருப்பார்கள். அந்தச் சாம்பல். இங்கெல்லாம் தோண்டத் தோண்ட எலும்புகள் கிடைக்குமாம். புன்னகை பூக்கும் மண்டை ஓடுகளும்.

சிறிய மண்டபம் ஒன்று இடிந்து சரிந்து நின்றது. அதன் முன் நீண்ட மழமழவென்று கல் பாவப்பட்ட திண்ணை. அமர்ந்தேன். கால்கள் வழியாக ஒரு சிலிர்ப்பு ஓடியது. தாகம்கூட ஒரு வினாடி மறைந்து போனது.

மண்டபத்தின் உள்ளே அரை இருட்டு. தரை முழுக்கத் தூசு விரிக்கப்பட்டிருந்தது. உட்கார்ந்தபடி விழி விரியப் பார்த்தபோது நடுங்க வைக்கும் சக்தியாக ஹம்பியின் இடிபாடுகள் என் கண் முன் விரிந்து நின்றன.

எத்தனை கோட்டைகள், யானைக் கொட்டில்கள், எத்தனை ஆயிரம் மண்டபங்கள்! எல்லாம் இடிந்து சரிந்து, பொலிவிழந்து மாபெரும் கற்கள் அபாயகரமாக இளகி நின்றன. எங்கும் பூமியை மறைத்தபடி கற்குவியல்கள். இனி இங்கு ஒரு தேவதாரு முளைக்காது. ஒரு மல்லிகை மணக்காது. நெருஞ்சி வளரும். நாயுருவி கற்குவியல்களை பாசத்துடன் தழுவிக்கொள்ளும். இடிப்பாடுகளின் இடையே அவற்றின் சிருஷ்டியாக முட்புதர்கள் மண்டும்.

காலியான சினிமா தியேட்டர் போல இருந்தது மனம். காட்சி முடிந்துவிட்டது. சூனியம் நிறைகிறது.

ஒரு முனகல்.

கேட்டதா, என் பிரமையா?

மறுபடியும்.

என் உடல் முழுக்கச் சிலிர்ப்பு. மனம் திடீரென்று தடதடத்தது. வியர்வை குளிர்ந்தது.

கனமான மௌனம் இடிபாடுகளைப் போர்த்தியிருந்தது. நான் வந்த அரைமணிநேரத்தில் அந்த மௌனம் பழகி அதன் ஒரு பகுதியாக நானும் மாறிவிட்டேன். இப்போது ஒரு ஒலி அது என் குடல்களில் பனித்துளிகளை நிறைத்தது.

இறந்த காலத்திற்கு உயிர் வந்து இப்போது முனகலாக அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதா என்ன? லட்சம் லட்சம் கணங்கள் விழுந்து புதைந்த இம்மண்ணில் எத்தனை ஆயிரம் குறைக்கனவுகள் தேங்கி நிற்கின்றனவோ, யார் கண்டது?

ஓடிவிட வேண்டும் என்று என் எல்லா புலன்களும் ஆணையிட்டன. எனினும் நான் ஓடவில்லை.

நிதானப்படுத்திக் கொள்ள சிறிது நேரம் பிடித்தது.

பிறகு மெல்ல திண்ணைமேல் ஏறினேன். மறுபடி மறுபடி அந்த முனகல் கேட்டது.

யாராவது ஹிப்பியாக இருக்குமோ? இது ஹிப்பிகள் கஞ்சாவின் போதையில் மிதந்து பறக்கும் இடம் என்று சொன்னார்களே! கமலாபூர் சந்திப்பில் தலைகலைந்த உடைந்து போன உடலும் மரணம் தேங்கி நிற்கும் கண்களும் உள்ள ஹிப்பிகளைக் கண்டேன். அவர்களின் அலைவரிசையோடு ஹம்பி ஒத்துப் போகிறது. இடிபாடுகளை அவர்கள் நேசிக்கிறார்கள். தன் மனதின் இருண்ட அறைகளுக்குள் தட்டுத் தடுமாறி பயணம் செய்வது போலவே அவர்கள் இடிபாடுகளின் இருண்ட மூலைகளைத் தேடுகிறார்கள். காதலிக்கிறார்கள்.

இருள் என் கண்களை அறிமுகம் செய்துகொள்ளச் சிறிது நேரம் பிடித்தது. உண்மையில் அது இருள் அல்ல. நான் வந்த பாதையின் அமித வெளிச்சம் அந்த நிழலை இருட்டாக்கியிருந்தது.

துழாவினேன். அந்த மூலையை அடைந்ததும் என் கண்களில் ஏதோ வீசி எறியப்பட்டதுபோல உணர்ந்தேன்.

ஒரு நாய் செத்து கிடந்தது.

அது ஒரு நாய். செத்து இரண்டு மூன்று நாள் ஆகியிருக்கக் கூடும். வாயில் மண் நிறைந்திருந்தது. அதன் உடல் தரையைத் தொடும் எல்லைகளை கரையான்போல ஏதோ மண்ணால் மூடியிருந்தது.

அதன் அருகே ஒரு குட்டி நாய் செத்துக் கிடந்தது. அதனருகே இன்னொன்று. அது சாகவில்லைபோலத் தோன்றியது. அதிலிந்துதான் அந்த முனகல் வருகிறது என்று தோன்றியது.

அருகே போனேன்.

அது மிகப் பிரயாசைப்பட்டுத் தலையைச் சரித்துப் பார்த்தது.

அதன் காது சற்று மடிந்தது. ம்ம்ம்ங் என்று தீனமான முனகல் அதன் வயிற்றுக்குள்ளிருந்து கேட்டது. தூசியில் விழுந்திருந்த அதன் வால் மெல்ல ஆடியது. வாயின் உலர்ந்த தரை வழியாக சிவந்த புழு போல நாவு வெளிவந்து ஆடியது.

அதன் கண்களில் அன்பும் எதிர்பார்ப்பும் குடியேறியது.

நீ இதற்கு முன் எப்போது மனிதனைப் பார்த்தாய் ஏ புதிய பிரஜையே? நீ பிறந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காதே? நான் நேசிக்கப்படத் தகுதியானவனென்று எந்த உள்ளுணர்வு உணக்குக் கூறுகிறது?

அதைத் தொட எனக்கு அருவருப்பாக இருந்தது. குமட்டும் நாற்றம் அதனிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அதன் உடல் முழுக்க சிறு ஈக்கள் போல ஒரு வித கிருமி அடர்ந்திருந்தது. அந்த தீன விழிகள் என்னிடம் கூறின: ‘தாகம்’.

ஆனால், அந்தப் பார்வையை நான் தவிர்த்தேன்.

ஒரு நிமிடம் அப்படியே நின்றேன். பிறகு திரும்பி நடந்தேன். வெளி வாசலை அடைந்ததும் திரும்பிப் பார்த்தேன். அது தலையைத் திருப்பி விழிகளை என் மேல் பதித்தபடி படுத்திருந்தது. கண்கள் மெதுவாக ஜொலித்தன. கேட்டன; ‘தாகம்’.

நான் வெளியே இறங்கினேன். எனக்கு மூச்சுத் திணறியது. எல்லையில்லாத சூனியத்தில் மனம் தவித்தது. இடிந்து சரிந்து விழியெட்டும் தூரம் வரை கிடந்த பழைய விஜயநகரில் நான் ஒரு கதியற்ற ஆவிபோல் நடந்தேன்.

ஒரு பேரிரைச்சலோடு தாகம் என்னைத் தழுவிக் கொண்டது. வெயிலில் பாதை தகித்தது. தாகம் என் கண்களில் மின்மினி காட்டியது, தாகம்.

*

கணையாழி, ஜூலை 1987.

முந்தைய கட்டுரைமாயதேவன்
அடுத்த கட்டுரைகாண்டீபனை கைது செய்த காதலி- நிர்மல்