கதையும் வாழ்வும் -கடிதம்

எழுகதிர் வாங்க 

எழுகதிர் மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

கவனிக்கப்படாத ஒரு அதிசயமென உங்களது இந்த பதில் கடிதம் இத்தனை நாட்களாக என் இன்பாக்ஸ் ல் தூங்கிக் கொண்டிருந்தது. இன்று தான் கவனித்தேன். இத்தனை நாட்களாக பார்க்காததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு பதில் எழுதுவீர்கள் என்றோ அந்தக் கடிதத்தை முதலில் கருத்தில் எடுத்துக் கொள்வீர்கள் என்றோ கூட நான் நினைக்கவில்லை. அது முழுக்க முழுக்க ஏதோவொரு வேகத்தில் எழுதியது. எனக்கு பதில் எழுதியமைக்கு மிக்க நன்றிகள்.
இன்று உங்களுடன் ஒன்றை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். 20 நாட்களுக்கு முன்னதாக எனக்கு வேலையின் காரணமாக கொஞ்சம் மன அழுத்தம் இருந்தது. அதைப்பற்றி எழுத்தாளர் செல்வேந்திரன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் என்னைப் போன்று அவர் உங்களுக்கு கடிதம் எழுதியதை பற்றி சொல்லி தான் என்னிடம் பேச தொடங்கினார்.
அவர் கூறிய சில முறைகளை நான் பயின்று கொண்டிருக்கிறேன். அதன் தாக்கத்தைப் பற்றி சில மாதங்கள் கழித்து அவரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
செல்வந்தரின் அண்ணன் சொன்னதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், என் வேலைக்காக பிறருடைய பாராட்டை எதிர்பார்ப்பதை நிறுத்திவிட்டு நான் என்னை பாராட்டிக் கொள்கிற வேலைகளை செய்ய சொன்னார்.
நான் அதுபோல என்ன வேலை செய்தேன் என யோசித்துப் பார்க்கின்ற போது, நான் நண்பர்களிடம் கதை சொல்வது எனக்கு பிடித்திருந்தது. அதனால் எனக்கு பிடித்த கதைகளை  podcast  வடிவில் சொல்லலாம் என முடிவு செய்து என்னுடைய முதல் podcast ஐ நேற்று பதிவு செய்தேன். என் முதல் episode ல் உங்கள் கதையை தான் சொல்லி இருக்கிறேன். வெண்முரசில் இருந்து ஒரு துளியை எடுத்துக் கொண்டேன்.
உங்களிடம் இதை சொல்ல வேண்டுமென தோன்றியது.
அன்புடன்,
சபரிராஜ் பேச்சிமுத்து
அன்புள்ள சபரி
ஆர்வமூட்டும் ஒன்றைச் செய்ய ஆரம்பித்திருப்பது நல்லது. அது அளிக்கும் நிறைவே விடுதலை. ஆனால் அதை உங்களுக்கே உரிய முறையில் எப்படி மேம்படுத்திக்கொள்ள முடியும், எப்படி தனித்தன்மை கொண்டதாக ஆக்கிக்கொள்ள முடியும் என யோசிக்கவும். அது அனைவரும் செய்யும் ஒன்றை நீங்களும் செய்வதாக அமையக்கூடாது
ஜெ
முந்தைய கட்டுரைசந்திப்புகள், பயிற்சிகள் -கடிதம்
அடுத்த கட்டுரைபா.கேசவன்