பத்தொன்பதாம் நூற்றாண்டு மறக்கப்பட்ட பெண் இலக்கியமேதைகள் -கடிதம்

பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி

நிலவறை மனிதனின் அன்னை – சைதன்யா

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜார்ஜ் சாண்ட் பற்றி சைதன்யாவின் நீலி இதழ் கட்டுரையும், அதன் விவாதமும் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் விழாவில் “Discovering Russia’s nineteenth century women writers” என்ற தலைப்பில் நிகழ்ந்த உரை ஒன்றிற்கு போகும் வாய்ப்பு அமைந்தது. அந்த உரையை, பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி கட்டுரையின்  ரஷ்ய அலகு என்றே சொல்வேன். உரையை நிகழ்த்திய டாக்டர். அன்னா பர்மன், ஸ்லாவிய நாடுகளின் இலக்கியம் மற்றும் பண்பாட்டினை ஆய்வுகளமாக கொண்டவர். எவ்டோக்கியா ரோஸ்டாப்சினா, கரோலீனா பாவ்லோவ்னா, எவ்ஜீனியா டூர், மற்றும் க்வோஷ்சின்ஸ்கயா சகோதரிகள் பற்றிய ஒரு பார்வையை இந்த உரை அளித்தது.

எவ்டோக்கியா ரோஸ்டாப்சினா (Evdokiia Rostopchina 1811-1858)

எவ்டோக்கியா சிறு வயதில் தாயை இழந்தவர். தாய் வழி பாட்டனால் வளர்க்கப்பட்ட அவர் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர், சிறந்த கவிஞர். புகழ் பெற்ற விருந்தோம்பினி (saloniste), அவர் முன்னடத்திய இலக்கிய விருந்தோம்பல் அமர்வுகள் பல முக்கிய இலக்கியவாதிகள் கூடியவை. அவருடைய கவிதைகள் புஷ்கின் போன்ற தேர்ந்த கவிஞர்களின் பெருமதிப்பற்குட்பட்டது. புஷ்கின் எதிர்பாராமல் இறந்த பொழுது, பாதியில் விடப்பட்ட அவரது கவிதை தொகுப்பை முழுமை செய்ய அதே காலத்தின் இன்னொரு புகழ் பெற்ற கவிஞரான லர்மொண்டோவிடம் (Lermonto) கொடுக்கப்படப்படவில்லை. மாறாக, அது எவ்டோக்கியாவிடம் கொடுக்கப்பட்டது. இது நிறையவே விவாதங்களையும், கேள்விகளையும் எழுப்பியது. இந்த சர்ச்சைகளை பற்றி எவ்டோக்கியா எழுதிய கவிதையின் கடைசி வரிகள் கீழே,

இந்த பணியை நிறைவேற்றுவது எனக்கானதல்ல
எண்ணிய உயரம் எட்டுவது  எனக்கானதல்ல
உயிர்ப்புள்ள பாடல்களின் முகவரிகள்
எனக்கு கொடுக்கபடுவதல்ல
உலகியல் விஷயங்கள்
என்னால் எட்டப்படுபவையல்ல
நான் ஒரு பெண்
என்னுள் எழும் எண்ணங்களும் எனக்கான எழுச்சிகளும்
சற்றே அடக்கத்துடனேயே இருக்க முடியும்..

டாக்டர். பர்மன் இந்த கவிதையை விவரிக்கும் பொழுது, ருஷ்ய மூலத்தில் இந்த கவிதையில் சற்றே குறும்பும், புஷ்கினை விட சற்றே உயரம் செல்ல முடியும் என்ற வகையில் சிலேடையாய் அவர் எழுதியிருப்பதாகவும் ஆங்கில மொழியாக்கத்தில் அது அவ்வளவு கைகூடவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

கரோலீனா பாவ்லோவா (Karolina Pavlova 1807-1893)

இவரும் பன்மொழி தேர்ச்சி பெற்றவர். மணவாழ்க்கை துன்பமாக அமைந்தது. அவருடைய இணையர் குற்ற தண்டனையாக நாடு கடத்தப்பட்டபோது அவரும் உடன் செல்ல நேர்ந்தது. வறுமையிலும், தனிமையிலும் ரஷ்யா மீள முடியாமலேயே இறந்தார்.

தேர்ந்த கவிஞர். ஆனால் அவரின் கவிதையை காட்டிலும், அவரது நாவல் ஒன்று மிக கூர்மையானது என டாக்டர். பர்மன் மதிப்பிடுகிறார். இரட்டை வாழ்க்கை (A double life – trnsl. Barabar Heldt) அடிப்படையில் Pride and Prejudice போன்ற கதை தோற்றம் கொண்டது: புறம் பேச்சுகளை மிகையாக கொண்டது, அதன் அடியில் கூரான சமூக விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ஆனால் இதை ஒரு முக்கிய இலக்கிய நூலாய் ஆக்குவது இதில் ஏறக்குறைய தனி நாவல் ஒத்து வரும் ஒரு கனவு வாழ்க்கை. இந்த நாவலின் செசிலி ஒரு ‘கரை படாத மங்கை’ தாயின் வற்புறுத்தலில் ஏனென்று அறியாத ஒரு மணவாழ்வு அமைய பெற்றவள். அதிலிருந்து வெளிவர அவள் கொண்டிருப்பது அவளது கனவுலகம் மட்டுமே. அதை அவள் கூர் தீட்டுகிறாள்; ஞானம் என்பது என்ன, அதை எங்கு, எப்படி அடைவது; ஒருவரின் மெய்யான வாழ்க்கை எங்கே இருக்கிறது, எதிர் இருக்கும் தொட்டறியும் உலகிலா, அல்லத்து ஆழறியும் கணத்திலா போன்ற வினாக்களில் அவள் சிந்தனை வளர்க்கிறாள். நிகழுலகில் வலம் வரும்போதும் அவள் மனம் அங்கே கனவுலகிலேயே உலவுகிறது.

நாளையின் இழப்பகள் என்னை மிரட்டடும்
உள்ளத்தின் கனவுகள் அனுதினம் தேயட்டும்
இளமையின் ஒளிமிக்க கொடைகளுக்காக
இந்த கலுழும் துயரை ஏற்கிறேன்

கைபடும் புதையலை மாறி மாறி
கடலின் ஆழிருளுக்குள் விட்டெறிகிறேன்
ஆனால் புயலுடன் வாதித்து
சிறு புதையலையேனும் மீட்க முடிந்தவரே
ஆசீர்வதிக்கபட்டவர்

என்ற வரிகளுடன் இந்நாவல் முடிகிறது. இந்த நூல் தத்துவார்த்த தேடல் கொண்டது, அதனாலேயே முக்கியமானதும் கூட.

எவ்ஜீனியா டூர் (Evgeniia Tur 1815-1892)

1840கள், 50களின் புகழ் பெற்ற விருந்தோம்பினி. பெண் எழுத்தாளர் என்றே தன்னை உரக்க அறிவித்துக்கொண்டவர். இவர் பதிப்பகம் ஒன்றை நிறுவி, நடத்தி வந்தார். அந்த காரணத்தினாலேயே 60-80களின் ஏறக்குறைய எல்லா கருத்து மோதல்களுக்கும் நடுநிலையான அணுகுமுறையை எடுத்து எழுத்தாளர்களுக்கு மத்தியில் சமரசங்களை ஏற்படுத்தியுள்ளார். அவரது கணவர் நாடு கடத்தப்பட்ட போதும் தான் ரஷ்யாவிலேயே இருந்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவர் பதிப்பாளர் என்பதே.

ஆன்டோனீனா (Antonina, transl Michael R. Katz) அவருடைய முக்கியமான நாவல். Jane Eyre போன்ற நாவல் கட்டமைப்பு கொண்டது. அவரது நூல்களின் முக்கிய கதாபாத்திரங்கள் பெண்களாகவே உள்ளனர். அவரது கதைகள் பெண்களின் பார்வையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. இவான் துர்கனேவ் இவருக்கு சமகாலத்தவர். இவர்கள் இருவரின் எழுத்திலும் பெண் பாத்திர உருவகங்கள், தன்மை, மற்றும் பார்வை நிகரனானாவையாக ஒன்றை ஒன்று தொடற்பவையாக கருதப்பட்டன.

க்வோஷ்சின்ஸ்கயா சகோதரிகள் (Khvoshchinskaya)

நடேஷ்டா (Nadezhda 1821-1889), சோஃபியா (Sofia 1824-1865), ப்ரஸ்கோவியா (Praskovia 1828-1916) ஆகிய மூவரும் க்வோஷ்சின்ஸ்கயா சகோதரிகள், எழுத்தாளர்கள்.

நடேஷ்டா நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் என ஏறக்குறைய 100 ஆக்கங்களை கொடுத்தவர். மேலும் நூற்றக்கும் மேற்பட்ட கவிதைகள், மற்றும் ஐம்பத்திற்கும் மேற்பட்ட மொழியாக்கங்களையும், பல கட்டுரைகளையும் எழுதியவர். ஒரு கட்டத்தில் அவருடைய எழுத்திற்கான சன்மானம் ரஷ்யாவின் முதல் மூன்று இடங்களில் இருந்துள்ளது. இவருடைய எழுத்து அக்காலகட்டத்தின் பிரதிபலிப்பாக உயர்குடி சமூகம், அடிமைகள், class, ஆண்-பெண் உறவுகளினூடாக நிகழும் மாற்றங்கள், மனித அறம் போன்ற நிலைபாடுகளை முன்னெடுத்து சென்றுள்ளது. The boarding school girl (transl Karen  Rosneck) மட்டுமே இப்போது ஆங்கிலத்தில் கிடைக்கும் ஒரே மொழிபெயற்பு. நகைச்சுவையும், முரண் நிறைந்த மனிதர்களும் கொண்டது இவர் படைப்புகள். ஏறக்குறைய ஆண்களையே தனது முக்கிய கதாபாத்தரங்களாக கொண்டுள்ளார். Kristovsky என்ற புனை பெயரிலேயே தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார். தான் பெண் என்பது தெரியக்கூடாது என்பதில் தீவிர உறுதியுடன் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், Kristovsky என்ற இன்னொரு ஆண் எழுத்தாளரின் படைப்பாக அவரது நூல்கள் அறியப்பட்டுள்ளன (இன்று வரை அது கொஞ்சம் தொடர்கிறது என்கிறார் டாக்டர். பர்மன்) அந்த தீர்க்க அவர் Krestovsky என்ற பெயரோடு ‘என்ற புனைபெயர்’ என்று பொருள்படும் சந்தி சேர்த்து பயன்படுத்தியுள்ளார். தன்னை ஒரு எழுத்தாளராக, தன் எழுத்துகளின் மூலம் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்பியுள்ளார். She didn’t even want to be known as a person, just as a writer, என்கிறார் டாக்டர் பர்மன். தன்னுடைய சரிதம் என ஒன்று வெளிவர அவருக்கு விருப்பம் இல்லை. ‘என்னை யாரும் அறிய தேவை இல்லை, என எழுது அதற்கு போதும், என்னை பற்றி நான் சுயசரிதை எழுத்தபோவதில்லை, வேறெவரும் எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை’ என்று தன் பதிப்பாசிரியாரிடம் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், கிரேஸ்டாவ்ஸ்கி என்ற ஆண் பெயரால், ஒரு நீண்டநாள் வாசகி தான் அவரை மணக்க வேண்டும் என்று விரும்புகிறார். பதிப்பாசிரியர் செய்வது அறியாது போயிருக்கிறார். (திட்டவட்டமாக யாரிடமும் தான் பெண் என்பதை சொல்லக்கூடாது என்ற நிபந்தனை)

தன் வாழ்நாளில் அவரது இளைய சகோதரி சோஃபியா தான் அவருக்கு நெருங்கிய தோழியாக இருந்துள்ளார். அவரும் ஒரு எழுத்தாளர். Country folk, city folk (trans. Nora Seligman Favorov) அவருடைய முக்கிய நூல். நகரத்திலிருந்து சிற்றூர் குடிபெயர்ந்து ஆனால் தன்னை சுற்றியுள்ள அம்மக்களை ஏளனமாக பார்க்கும் பார்வையை நிறைய பகடி செய்யும் அங்கத நூல். இதன் அங்கத தன்மை மென்மையானது. இளமையில் மறைந்து போனவர். இவரது மறைவு நடேஷ்டாவை மிகவும் பாதித்துள்ளது.

இவர்களிலிருந்து சற்றே விலகி ஒரு தனியரவாகவே அறியப்பட்டுள்ளார் ப்ரஸ்கோவியா. சில சிறுகதைகளை எழுதியவர். ஆனால் இவரது memoirs மூலமாகவே நடேஷ்டாவை பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கிறது, சோஃபியா பற்றியும். தனது தமக்கைகள் இருவரும் ஒரு அணியாகவே இருந்தனர் என்று இவர் குறிப்பிடுகிறார். நடேஷ்டா மறைந்த சில வருடங்கள் கழித்து, அவர் பற்றி வந்த ஒரு செய்தி இவருக்கு உவப்பாக இல்லாமல் ஆகி, ஆனால் அதே சமயம் தன்னை பற்றி சரிதை எழுத ஒப்பாத சகோதரியின் விருப்பத்தையும் நிறைவேற்ற, “என் குடும்ப கதை” என்ற அளவில் ஒரு நினைவுக்குறிப்பை தனது நூல் ஒன்றின் முன்னுரையில் இணைத்துள்ளார். அது மட்டும் இல்லாவிடில் நடேஷ்டாவை பற்றி அவ்வளவு எளிதில் அறிந்திருக்க முடியாது என்று பர்மன் கருதுகிறார்.

ஒரு ஆய்வாளர், தான் ஆராயும் ஒரு எழுத்தாளரின் மீது கொண்ட நம்பிக்கையும், பற்றும், எவ்வளவு தூரம் அவரை இட்டுச் செல்கிறது என்ற வியப்பு வராமல் இல்லை. செகாவ் மிகவும் மதித்த எழுத்தளரில் ஒருவர், பாவல் த்ரெத்யகோவ் நிறுவிய ரஷ்யாவின் கலாச்சார படிமங்எள் என்ற ஓவிய வரிசையில் இடம்பெற்றவர். மொழிபெயர்ப்பில் மட்டுமே அவருடைய பங்கு பெருங்கொடை, ஆனால் அவரை உலகம் இன்று அறியவில்லை. இந்த சீற்றம் தான் டாக்டர். பர்மனை இவ்வளவு தூரம் கூட்டி வந்திருக்கிறது. ஒவ்வொரு நீலி இதழிலும் கடந்த கால பெண் எழுத்தாளர்களை வெளிச்சத்திற்கு கூட்டி வந்து ஆதங்கமாய் அவர்கள் பற்றி எழுதும் ரம்யாவை ஒரு 100 முறையாவது நினைத்துக்கொண்டேன். அவர் பணி தொடர்க, அதற்கான அங்கீகாரமும், திடமும், மன உறுதியும், துணையும், மகிழ்வும் அவருக்கு கிடைக்கட்டும்!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியத்தில் ஏறக்குறைய பதினைந்து சதவிகிதம் எழுத்தாளர்கள் பெண்கள். விருந்தோம்பினிகளாக, எழுத்தாளர்களாக, மொழிபெயர்ப்பாளர்களாக, கவிஞர்களாக, அவர்களின் பங்களிப்பு ஏராளம். புகழும், தக்க வெகுமதியும், மதிப்பும் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். பிறகு எப்படி இருபதாம் நூற்றாண்டில் இவர்கள் நினைவில் இல்லாமல் போனார்கள்?

  • போல்ஷவிக் அரசு 20 ஆம் நூற்றாண்டில் 57 எழுத்தாளர்களின் ஆக்கங்களை நாட்டுடைமை ஆக்கியது – இவர்கள் அனைவரும் ஆண்கள். அப்போதிருந்த நிலையில் இவர்களது எழுத்து மட்டுமே மொழிபெயர்க்க பட்டுள்ளது – முக்கியமாக ஆங்கிலத்தில். இது ஒரு மிகப்பெரிய காரணம். மொழிப்பெயர்ப்பு இல்லாத பொது, பொதுவிலும் அது மறந்து போகிறது..
  • நிறைய புகழ் பெற்ற ஆண் எழுத்தளர்களுக்கு தத்தம் மனைவி பதிப்பில், திருத்தி கொடுப்பதில், அவர்களது social வாழ்க்கையை நிலையாய் வைக்க உதவியுள்ளனர். இது ஏறக்குறைய எந்த பெண் எழுத்தாளருக்கும் வாய்க்கவில்லை.
  • இது தாண்டி, நடேஷ்டாவை போல பொது வாழ்வு என்ற ஒன்றே வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளியவர்களை கண்டுபிடிப்பதே சவால்.

இதை தவிர திரட்ட முடிந்த குட்டிச்செய்திகள்:

  • ஜார்ஜ் சாண்ட் விமர்சனம் என்பது மிக முக்கியமானதாக கருதப்பட்டுள்ளது. பாதி கடிதங்களில் அவர் ஒரு நூலை பற்றி வைத்த கருத்துகளே விவாதிக்கப்பட்டுள்ளன.
  • ஆண் புனைப்பெயரில் எழுதி அவர்களின் பெண் கதாபாத்திரங்களுக்காக மெச்சப்பட்டு, இதுவன்றோ பெண்ணிய எழுத்து என்று பெயர் வாங்கியவர்கள், பெண் என்று அறியப்பட்டதும் வேறேனும் காரணம் காட்டி பட்டியலில் இருந்து வீசப்படுவது சாதாரணமாய் நடந்துள்ளது. (நடேஷ்டாவை புரிந்து கொள்ள முடிகிறது)
  • பெண் எழுத்தாளர்கள் பலரும் (நடேஷ்டா போல) இலக்கிய விமர்சகர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களது கருத்துகள் தொடர்ந்து வாசிக்கபட்டு பெரும் மதிப்பும் கொண்டிருந்தது.

இந்த கடைசிச் செய்தியை கேட்ட பொது, பெண்கள் எப்படி பெண்களை விமர்சித்து கொண்டார்கள்? அவர்களும் பெண் எழுதாளர்கள் என்றால் அதற்கு வேறு அளவுகோல் வைத்திருந்தார்களா? என்று நான் கேட்டதற்கு, அவர்களின் பெண் கதாபாத்திர படைப்புகளை சக பெண் எழுத்தாளர்கள் மிகவும் கூர்ந்து கவனித்து விமர்சித்து உள்ளனர் என்ற பதில் கிடைத்தது.

உரையின் பின் நான் மின்னஞ்சலில் கேட்ட வினாக்களுக்கும் பொறுமையாய் விடையளித்தார்.

இதை தொடர்ந்து நடேஷ்டாவை பற்றி மட்டும் லண்டனில் ஒரு உரை நிகழ்ந்தது, போக முடியவில்லை. ஆனால் யுட்யூப் வலையேற்றம் செய்வதாய் சொன்னார். இன்னும் கேட்க வேண்டும். ஆனால் நடேஷ்டாவை பற்றிய கூரிய பார்வை பெரும் முன், இந்த உரையை பற்றிய எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். இதோ, இப்போதுதான் அனுப்புகிறேன். அந்த உரையும் கேட்ட பின்பு எண்ணங்களை தொகுத்து மீண்டும் எழுதி அனுப்புகிறேன்.

அன்புடன்,

மதுமிதா

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம்

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி, விவாதம்- சக்திவேல்

ஜார்ச் சாண்ட்,தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்

முந்தைய கட்டுரைமீன்விழி திருமணம் – கடிதம்
அடுத்த கட்டுரைமெல்லத்திறக்கும் கதவு -கடிதம்