அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5

சிங்காரவேலர்

அயோத்திதாசரின் பார்வையின் தனித்தன்மை

ஒரு உவமை சொல்லலாம். ஒரு தட்டில் பாதி இட்லிகளை இட்லிஉப்புமா ஆக்கி, அந்த உப்புமாவைத் திரும்ப இட்லியாக்கி , அதையும் அந்தத் தட்டில் மிச்சமிருந்த இட்லியையும் ஒப்பிட்டால் எப்படி இருக்கும்? தெரியவில்லை. இட்லி உப்புமாவுக்கு நாக்கு பழகிப்போனவர்களுக்கு இரண்டாவது வடிவம் இன்னும் சுவையாகக்கூட இருக்கும். அயோத்திதாசரின் பௌத்தம் பற்றிய கருத்துக்களையும் தமிழகத்தில் அவருடைய சமகாலத்தில் பிறர் பௌத்தம் பற்றி எழுதியவற்றையும் இப்படித்தான் ஒப்பிடத்தோன்றுகிறது.

தமிழகத்தில்  பௌத்தம் பற்றி எழுதியவர்கள் ஏற்கனவே சொன்னதுபோல ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் பௌத்தம் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் உகந்ததை எடுத்துக்கொண்டார்கள். புதைபொருட்சான்றுகள் வழியாக வரலாற்றை உருவாக்குவதுபோல பௌத்தம்பற்றிய மூலநூல்கள் மற்றும் வழிநூல்களை வாசித்து அதிலிருந்து பௌத்தத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.  தங்களைச் சுற்றித் தொல்தடங்களாகவும் பண்பாட்டுக்கூறுகளாகவும் இலக்கியச் சான்றுகளாகவும் இருந்த பௌத்தத்தை அந்நூல்களைக்கொண்டு புரிந்துகொள்ள முயன்றார்கள்.

மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. தமிழறிஞர்கள் பௌத்தத்தை செவ்வியலில் தேடினார்கள். திருவிக முதல் மயிலை சீனி வெங்கடசாமி வரை அனைவருமே தமிழிலக்கியத்தின் செவ்வியல்பரப்பில் பௌத்தத்தைத் தேடித்தொகுக்கமுயல்வதைக் காணலாம். காரணம் பௌத்ததின் தத்துவார்த்தமான மையம் மட்டுமே அவர்களுக்கு நூல்கள் வழியாக வந்து சேர்ந்தது. அதை செவ்வியலிலேயே காணமுடியும். பௌத்தத்தைத் தமிழுடன் இணைத்து அதையும் ஒரு அவைதிக தரப்பாக, தங்கள் புதிய சைவத்தின் சோதரனாக நிறுத்தும் விருப்பும் இருந்திருக்கலாம்.

எண்ணூறுகளின் இறுதியில் சென்னையையும் இலங்கையையும் மையமாகக் கொண்டு ஒரு பௌத்தமீட்பியக்கம் நடந்தபோது அதில் நேரடியாகத் தொடர்புகொண்டவர்களாக மூவரை ஆய்வாளர்கள் ஞான அலாய்சியஸ் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அயோத்திதாச பண்டிதர், பி.லட்சுமிநரசு, சிங்காரவேலர். இவர்கள் மூவரின் இயல்புகளும் வேறுவேறானவை. ஆகவே இவர்கள் உணர்ந்த பௌத்தமும் வேறுபட்டிருந்தது. இவர்களில் சிங்காரவேலர் லட்சுமிநரசு இருவரையும் அன்றைய ஐரோப்பிய முற்போக்குச் சிந்தனைத்தளத்தைச் சேர்ந்த இருதரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்று சொல்லலாம்.

சிங்காரவேலர் மார்க்ஸிய ஈடுபாடுள்ளவராக இருந்தார். பொதுவுடைமைச்சிந்தனையைத் தமிழில் அறிமுகம்செய்தவர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.  அவர் கண்ட பௌத்தம் ஒரு நாத்திகவாதம். பௌதிகவாத உலகநோக்கு கொண்டது. லட்சுமி நரசுவை எளிமையாகச் சொல்வதாக இருந்தால் அன்றைய சுதந்திர தாராளவாத [லிபரல்] சிந்தனையாளர் என்று சொல்லலாம். ஆகவே அவர் பௌத்தத்தைச் சென்ற யுகத்தில் இருந்து சமகாலத்துக்கு வந்த ஒரு சிந்தனைத்தொகுதியாகக் கண்டார். அதில் நவீன காலகட்டத்திற்குப் பொருந்துவதாக உள்ள பகுதிகளை எடுத்துக்கொள்வதும் தேவையற்றவற்றைத் தவிர்ப்பதும் இன்றியமையாதனவற்றை மறுவிளக்கம் கொடுத்துக்கொள்வதும் அவரது வழியாக இருந்தது.

லட்சுமிநரசு பௌத்தத்தை அன்றைய ஐரோப்பாவின் உயர்லட்சியங்களாக இருந்த மானுடசமத்துவம், மனிதாபிமானம், தர்க்கபூர்வ அறிவியல்நோக்கு ஆகியவற்றின் தொகையாக விளங்கிக்கொண்டார். நாகரீகத்தின் அடிப்படைகளாக லட்சுமிநரசு இரு விழுமியங்களை கண்டார்.அறிவு , அறம். இவ்விரண்டும் முழுமையடைந்த நிலையையே பௌத்தம் போதி என்று சொல்கிறது என்று அவர் விளக்கினார். பிற தீர்க்கதரிசிகள் தங்கள் உன்னதநிலையை அறிக்கையிட்டு மானுடத்திற்கு அறிவுரையும் கட்டளையும் வழங்குகையில் புத்தர் தான் அடைந்த முழுமைநிலையைப் பிறரும் அடைவதற்கான வழிகளையே சொல்கிறார் என்கிறார் லட்சுமிநரசு.[The Essence of Buddhism].

பௌத்தம் முன்வைக்கும் அடிப்படைக் கருதுகோள்களில் அனாத்மவாதம் [சாரமின்மை] அநித்தவாதம் [நிலையின்மை] ஆகியவை நவீன அறிவியலுடன் ஒத்துப்போகின்றவை என்பதைச் சுட்டிக்காட்டும் லட்சுமிநரசு பௌத்தத்தில் அவருக்கு அறிவுபூர்வமாகத் தோன்றாத அம்சமாகிய மறுபிறப்பு-கர்மவினை நீட்சி என்பதை வசதியாக செயல்களின்விளைவுகள் பிறரில் தொடரும் தன்மை என விளங்கிக்கொள்கிறார். லட்சுமிநரசுவுக்கு ஒரு மதம் நவீன மனிதனுக்கு அளிக்கக்கூடிய முதற் பங்களிப்பு என்பது அறவியலே என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே அவர் பௌத்த்த்தின் எட்டுக்கூறுப்பாதையை [அட்டாங்கமார்க்கம்] முக்கியமாக முன்வைக்கிறார்.

அயோத்திதாசர் பௌத்தத்தை அடித்தள மக்களின் விடுதலைக்கான வழியாகக் கண்டார் என்று ஞான அலாய்சியஸ் குறிப்பிடுகிறார்.அதை ராஜ் கௌதமனும் வழிமொழிகிறார். அதை ’ஈடுபடுத்திக்கொண்ட பௌத்தம்’  [Engaged Buddhism] என்று குறிப்பிடுகிறார். இதை அரசியல் பௌத்தம் என்றோ,போராடும்பௌத்தம் என்றோ கூறமுடியும். இந்த பௌத்தம் பதினெட்டாம் நூற்றாண்டுவாக்கில் கீழைநாடுகளில் சமூகசீர்திருத்தம் மற்றும் சமூகசேவைக்காக உருவான பௌத்த சீர்திருத்த இயக்கங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்தது என்றும் இதுவே பின்னர் அம்பேத்காரால் நவயானம் என்று சொல்லப்பட்டது என்றும் சொல்கிறார்.

ஞான அலாய்சியஸ் பௌத்தம் மீட்கப்பட்ட பின் ஏற்கப்பட்டதில் இரு போக்குகளைக் காண்கிறார். ஒன்று,கல்வித்துறைசார்ந்த போக்கு. லட்சுமிநரசு போன்றோரின் அணுகுமுறைகளையும் அதையொட்டி தமிழ் அறிவுத்துறையில் உ.வெ.சா முதல் மயிலை சீனிவெங்கடசாமி வரை நிகழ்ந்த ஏற்பையும் இவ்வாறு கூறலாம். இன்னொன்று மக்கள் போராட்டத்துக்காக பௌத்தத்தை ஏற்றுக்கொள்வது.   அதுவே அயோத்திதாசரின் வழிமுறை என்கிறார். அவ்வகையில் இந்தியாவில் பௌத்தத்தை அடித்தளமக்களின் மீட்புக்கான மதமாக முன்வைத்த முன்னோடிச்சிந்தனையாளர் அயோத்திதாசரே என்கிறார்.

அவ்வகையில் பார்த்தால் பின்னர் இந்தியா முழுக்க உருவான மூன்று வகையான சமூகப்போராட்ட இயக்கங்களிலும் பரவலாகக் காணப்படும் மூன்று சிந்தனை வடிவங்களை இம்மூவரிலும் நாம் கண்டடைய முடியும். சிங்காரவேலரை மார்க்ஸியர்களென்றும் லட்சுமிநரசுவை முற்போக்குதாராளவாதிகள் என்றும் அயோத்திதாசரை விளிம்புநிலைப்போராளிகள் என்றும் சொல்லலாம். இந்தக் கச்சிதமான தொடக்கம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது மிகமிக ஆச்சரியமானது. ஆனால் தமிழக சிந்தனைவரலாறு எழுதப்படும்போது இந்தத் தொடக்கப்புள்ளிகள் சமீபகாலம் வரை அதிகம் பேசப்படவில்லை என்பதும் இவர்களைக் கிட்டத்தட்டத் தவிர்த்தே வரலாறுகள் எழுதப்பட்டன என்பதும் மேலும் ஆச்சரியமானது.

அயோத்திதாசருடன் ஒப்பிடப்பட்ட அந்த மூன்று முன்னோடிகளில் பிற இருவருக்கும் அயோத்திதாசருக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாட்டைச்சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அயோத்திதாசர் அவர்களைப்போல ஐரோப்பியநோக்கு கொண்டவராக இல்லை. அவர்களிருவரையும் ஐரோப்பாவின் இரு முற்போக்கு சிந்தனைமரபுகளில் பொருத்திப்பார்க்கையில் அயோத்திதாசரை அப்படிச் செய்யமுடிவதில்லை. அவரது தத்துவமும் மதமும் அவரது சொந்தப் பின்னணியில் இருந்து வந்தவை

என்னுடைய அரசியல்நோக்குக்கும் என் சிந்தனைப்போக்குக்கும் நான் லட்சுமிநரசுவையே மிக அண்மையானவராக எண்ணுவேன். உண்மையில் அவரது நூல்களை வாசிக்கையில் எனக்கு அவரில் இருந்து ஏதும் முரண்படுவதற்கில்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது. நவீன வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் லட்சுமிநரசு அல்லது சிங்காரவேலரின் தரப்பைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். பண்டிதரின் கருத்துக்களும் ஆய்வுக்கோணமும் அன்னியமானதாகவும் கச்சாவானதாகவுமே அவர்களுக்குப் படும்

காரணம் நாமெல்லாம் ஐரோப்பியக் கல்வியின் வழியாக ஐரோப்பிய ஆய்வுமுறைக்கு மிகவும்பழகிப்போனவர்களாக இருக்கிறோமென்பதே. பண்டிதரின் உலகுக்குள் செல்ல நாம் நம்முடைய இந்த பார்வைமேல் ஓர் ஐயம் கொள்ளவேண்டியிருக்கிறது. இதைக் கொஞ்சம் விலக்கிவிட்டு அதற்குள் செல்லவேண்டியிருக்கிறது. நான் லட்சுமிநரசுவைப் பொருத்தமானவராக உணரும்போதே ஐரோப்பியச்சார்புள்ளவர் என்றும் புரிந்துகொள்கிறேன். பண்டிதருடன் எனக்கிருக்கும் எல்லா தூரங்களுடன் அவரை இந்திய-தமிழ் தொல்மரபுசார்ந்தவர் என்று புரிந்துகொள்கிறேன்.

அயோத்திதாசர் 1890 வாக்கில் அவரே ஆல்காட்டைச் சந்தித்து பௌத்த விகாரை ஒன்றை அமைக்க உதவி கோரினார். அவ்வாறுதான் அவருக்கும் ஆல்காட்டுக்கும் உறவே உருவாகிறது. ஆல்காட்டிடமிருந்து அவர் பௌத்ததை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவர் ஆல்காட்டால் பௌத்ததுக்கு மாற்றப்படவுமில்லை. ஆல்காட் ,மேடம் பிளவாட்ஸ்கி, தர்ம்பலாலா ஆகியோர் சென்னை மையமாக்கி நடத்திய தலித் மக்களுக்கான இலவசப்பள்ளிகள் மூலம் அவர் ஆல்காட்டை அறிமுகம்செய்துகொண்டார். அவரிடமிருந்த பௌத்தம் சார்ந்த புரிதல் எத்தகையது?

அயோத்திதாசரின் எழுத்துக்களின் தொகைநூலில் அதற்கான பதில் உள்ளது. ஒரு விரிவான ஆய்வுக்கான களம் அது.  இரண்டு கூறுகளாக அதைப் பகுத்துச் சொல்லலாம். ஒன்று, பண்டைய நூல்களைப் பொருள்கொள்வது. இரண்டு, இணையான புராணிகங்களை உருவாக்குவது. இவ்விரு தளங்களிலும் அயோத்திதாசர் உருவாக்கியிருக்கும் திறப்புகளைக்கொண்டே அவரது முக்கியத்துவத்தை நான் மதிப்பிடுகிறேன். அவரை முன்னோடிச்சிந்தனையாளர் என்று சொல்வதும் அதனாலேயே.

அயோத்திதாசரின் மரபு

சில ஒப்புமைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் குருவாக நான் நினைக்கும் நித்ய சைதன்ய யதி ஈழவச் சாதியைச் சேர்ந்தவர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தீண்டக்கூடாத சாதியாகக் கருதப்பட்டவர்கள் அவர்கள். நித்யாவின் குடும்ப வரலாற்றிலும் ஈழவர்களின் வரலாற்றிலும் ஆர்வமூட்டும் இரு அடிப்படை விஷயங்கள் உள்ளன. அவை பௌத்தமும் வைத்தியமும் என்று சொல்லலாம்.

ஈழவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்பாலான இடங்களில் அடித்தள உழைப்புச்சூழலில் கடுமையான வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்ந்தார்கள். தெருக்களிலும் சாலைகளிலும் நடமாடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தமையால் வணிகம்செய்யும் வாய்ப்புகள் இல்லாமலிருந்தது. நில உடைமை மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் நித்யாவின் குடும்பம் ஒரு நிலக்கிழார்குடும்பம்,  குடும்பம் என்றால் இங்கே தாய்வழிக்குடும்பம் என்று பொருள்.

எப்படி என்றால் அவர்கள் முக்கியமான ஆயுர்வேத வைத்தியர்கள் என்பதே. நெடுங்காலமாகவே கேரளத்தில் வைத்தியச்சாதி என்றால் அது ஈழவர்கள்தான். வைத்தியர்கள் என்றேகூட சில இடங்களில் அவர்களின் சாதி சுட்டப்படுகிறது. இன்றும் கேரள ஆயுர்வேத வைத்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஈழவர்கள். பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாயர்கள் , கோயில்பணிசெய்யும் சாதிகள் மற்றும் பிராமணர்கள் வைத்தியத்துக்குள் வந்தார்கள். அவர்களுக்கு அரசர்குலங்களிலும் பிராமணபிரபு குடும்பங்களிலும் வரவேற்பிருந்தமையால் அவர்கள் சீக்கிரமாகவே முக்கியமான மருத்துவர்களாக ஆனார்கள். இன்று கேரள ஆயுர்வேதத்தில் உள்ள உயர்சாதி ஆதிக்கம் அவ்வாறு உருவானதாகும்

கொச்சி திருவிதாங்கூர் போன்ற பிராமணமயமாக்கப்பட்ட குறுநாடுகளில் ஈழவ வைத்தியர்கள் முக்கியத்துவமிழந்து கிராமிய வைத்தியர்களாக ஒடுங்கினாலும்கூட பந்தளம் போன்ற சின்னஞ்சிறு நாடுகளில் மரபார்ந்த ஈழவ மருத்துவ குலங்கள் செல்வாக்குடன் இருந்தன. கோழிக்கோட்டுக்கு வடக்கிலும் மூர்க்கோத்து வீடு போன்ற முக்கியமான ஈழவ மருத்துவவீடுகள் இருந்தன. பந்தளத்தில் இருந்த நித்யாவின் இல்லமும் அதில் ஒன்று. அவர்கள் இல்லத்தில் நெடுங்காலமாகவே கல்விமரபு ஒன்று இருந்தது. அது சம்ஸ்கிருதம், ஆயுர்வேதம் ஆகியவற்றுடன் இணைந்தது. அது அவர்களுக்கு ஒரு மேலாதிக்கத்தை அளித்தது.

முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் உண்டு, தீண்டாமைக்கு ஆளான ஈழவச் சாதியிலேயே அன்று மிகமுக்கியமான சமஸ்கிருத அறிஞர்கள் இருந்தார்கள். பாரதியார்கூட அப்படி ஒருவரைச் சந்தித்ததைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆயுர்வேதமும் சமஸ்கிருதமும் பிரிக்கமுடியாததாக அப்போது இருந்ததே அதற்குக் காரணம்.

ஆனால் சமஸ்கிருதம் மட்டுமல்ல ஈழவர்களின் மொழி. நித்யாவின் குடும்பவீட்டில்தான் கேரளத்தில் கிடைத்த பாலி மொழியைச்சேர்ந்த முக்கியமான புராதன ஓலைச்சுவடிகள் இருந்தன. ஈழவர்களில் இல்லங்களில்தான் பாலிமொழிச்சுவடிகள் அனைத்துமே கிடைத்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டவேண்டும்.பாலி ஒரு வகை சிறப்புச் சம்ஸ்கிருதமாக கற்கப்பட்டது அதாவது மருத்துவமும் பௌத்தமும் ஒன்றாகவே அவர்களிடம் இருந்திருக்கிறது.

எப்படி? இந்தியாவின் ‘மிஷனரி’ மதங்களான சமணமும் பௌத்தமும் கல்வி,மருத்துவம் இரண்டையும்தான் தங்களுடைய சேவையாகக் கொண்டிருந்தன என நமக்குத்தெரியும். இந்தியாவெங்கும் வணிகப்பாதைகள் வழியாகச் சென்று பரவிய இவ்விரு ‘சிரமண’ மதங்களும் கல்வி,மருத்துவம் இரண்டின் வழியாகவே இந்தியாவின் வேறுபட்ட இனக்குழுக்களுடன் தொடர்பையும் உரையாடலையும் உருவாக்கின. ஆயுர்வேதமருத்துவம் இந்தியா முழுக்கப் பரவியதில் சமணர்களுக்குரிய பங்களிப்பு மிக முக்கியமானது. அதேபோல சமஸ்கிருதத்தின் பரவலாக்கத்திலும் அவர்களுக்கு பங்களிப்புண்டு.

தமிழிலக்கிய மரபை எடுத்துப்பார்த்தால் சமண-பௌத்த மதங்களே நீதிநூல்களையும் இலக்கணநூல்களையும் உருவாக்கின. ஆரம்பகால மருத்துவநூல்களும் அவர்களால் உருவாக்கப்பட்டவை என்று கூறலாம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஏலாதி,திரிகடுகம் போன்ற பல நூல்கள் மருத்துவத்தையும் நீதியையும் இணைத்துக்கொண்டவை.

சமண-பௌத்த மதங்களால் விரிவாக பரப்பப்பட்ட ஆயுர்வேத வைத்தியம் பின்னர் தமிழகத்தின் நாட்டார் வைத்திய முறைகளுடன் பிணைந்து சித்த வைத்தியமாக ஆகியதென்பதே நாம் ஊகிக்கக்கூடிய வரலாறு.சமண-பௌத்த மதங்கள் முன்வைத்த மருத்துவத்தின் அடிப்படைவிதிகள் சார்ந்தே ஆயுர்வேதமென அதைச் சொல்கிறோம். அதில் இந்தியாவின் நூற்றுக்கணக்கான நாட்டார் வைத்தியமுறைகள் சென்று கலந்திருக்கக்கூடும். அவ்வாறுதான அந்த வைத்தியமரபு பிரம்மாண்டமான வடிவம் கொண்டிருக்கமுடியும்.

நமக்குத் தமிழில் இன்று கிடைக்கும் மருத்துவநூல்கள் அனைத்தையுமே மொழியை வைத்துப்பார்த்தால் காலத்தால் மிகப்பிந்தியவையாக, அதிகபட்சம் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்னே செல்லாதவையாகக் காணலாம். சொல்லப்போனால் மொழிசார்ந்து தெள்ளத்தெளிவாகவே ஒரு காலவரம்பு கண்ணுக்குப்படுகிறது.

அதை ஒரு மொழிவிளிம்பு என்று சொல்வேன். தமிழ்ப்பண்பாட்டின் மிக முக்கியமான ஓர் அம்சம் இது. நமது வைத்திய ரசவாத நூல்கள் எவையும், நம்முடைய மாற்றுஅறிவுமரபைச்சேர்ந்த எந்த நூலும், இந்த மொழிவிளிம்பை தான்டி பின்னால் செல்வதேயில்லை.

இந்த வரம்புக்கு அப்பால் இங்கே இருந்த மருத்துவ நூல்கள் எவை? மருத்துவக்கல்வி எது?

அதற்கான பதில் மருத்துவர்கள் யார் என்பதே. ஆயுர்வேதம் அதன் அமைப்பினாலேயே இயற்கையுடன் நேரடித்தொடர்பு கொண்ட, அலைந்து திரிந்து மூலிகைகளை சேர்க்கக்கூடியவர்களான, சாதியினரிடமே புழங்கமுடியும். அதன் கோட்பாட்டாளர்களாக வேண்டுமென்றால் உயர்சாதியினர் இருக்கமுடியும். தமிழகத்தின் அண்மைக்கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால்கூட மருத்துவர்களாக இருந்தவர்கள் நாவிதர்களே. மருத்துவர் என்ற அடைமொழி சாதிப்பெயராகவே சுட்டப்பட்ட காலமும் உண்டு.

நாம் காணும் அந்தக் காலவரம்பிற்குப்பின்னர் தமிழின் மருத்துவநூல்கள் புதிதாக எழுதப்பட்டன என்றே நான் நினைக்கிறேன். அதற்கு முன்னாலிருந்த மருத்துவமரபுக்கும் இதற்கும் இடையே ஒரு நீண்ட கால இடைவெளி இருந்திருக்கலாம். தொடர்ச்சி அறுபட்டிருக்கலாம். ஏன்?

நண்பர் இளங்கோ கல்லானை அவர்கள் ஒருமுறை ஒரு ஜெர்மானியப் பெண் ஆய்வாளரை [Lara Rau] எனக்கு அறிமுகம் செய்தார். அப்பெண்ணுக்கு அவர் ஆய்வுக்காகத் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவந்தார். அவர் சித்தமருத்துவம் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார். அவரது ஆய்வின்போது அவர் அறிந்ததாக இரு அவதானிப்புகளை அவர் சொன்னார். ஒன்று, தமிழின் முக்கியமான வேளாள சித்தமருத்துவக்குடும்பங்களில் எவருக்கும் மருத்துவத்தின் அடிப்ப்டைவிதிகளைப் பற்றிய அறிதல் இல்லை. இரண்டு, அவர்கள் தங்கள் அறிவுக்கு அடிப்படையாகக் கொண்ட நூல்களை முன்னோர் எவரிடமாவது யாரோ ஒரு சித்தர் கொடுத்ததாகச் சொன்னார்கள்.

அதாவது ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கிடைத்த உதிரி நூல்களில் இருந்து மீட்டு எழுதப்பட்ட அறிவைக்கொண்டு கட்டமைக்கப்பட்டதே சித்த மருத்துவம் என்பது. மருத்துவர்களான நாவிதர்களிடமிருந்து ‘கைப்பற்றப்பட்டது’ அந்த மரபு என்று அந்த ஆய்வாளர் சொன்னார். ஆகவே அதன் தொடக்கத்தைப்பற்றி அவர்கள் இருபதாம்நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கதைகளை, அதாவது லெமூரியா போன்ற புனைவுகளை, முன்வைத்தார்கள் என்றார். [லாரா ரௌ ஒட்டுமொத்த சித்தமருத்துவத்தையே ஒரு பெரிய மோசடி  என்று சொல்வதற்கான காரணமாகச் சொன்னது இதுதான்]

நான் குறிப்பிட்ட அந்தக் காலவரம்புக்கு/மொழிவிளிம்புக்கு முன்னால் வைத்தியம் தலித்துக்களிடம் , குறிப்பாகப் பறையர்களிடம் , இருந்திருக்கலாம். அவர்களின் வீழ்ச்சியை ஒட்டி அது மறைந்திருக்கலாம். மறைந்த வைத்தியமரபு ஒரு முந்நூறு வருட இடைவெளிக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டு இன்றைய சித்தவைத்தியமாக உருவாகியிருக்கலாம்.

பறையர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்ற ஊகத்துடன் இது இணைந்து போகிறது. பௌத்த-சமண மரபின் வீழ்ச்சி, பறையர்களின் வீழ்ச்சி, மருத்துவத்தின் வீழ்ச்சி எல்லாமே கிட்டத்தட்ட சமமான காலகட்டத்தில் நடந்திருக்கக்கூடும். அதாவது பிற்கால சோழ பாண்டியர்களின் காலகட்டத்தில்

இப்படி வைத்துக்கொண்டால் அயோத்திதாசப்பண்டிதரின் அறிவார்த்தத்தில் உள்ள இரு விஷயங்களை நாம் சிறப்பாக இணைத்துப்பார்க்கலாம். ஒன்று அவர் வைத்தியர். இரண்டு பூர்வபௌத்தர். அவரது குடும்பத்திற்கு என ஒரு அறிவார்ந்த பாரம்பரியம் இருக்கிறது- நித்யாவின் குடும்பத்திற்கு நிகராகவே. அதன் இரு அம்சங்களாக பௌத்தமும் மருத்துவமும் இருந்திருக்கிறது.

இன்றும் நம்முடைய பழைய மருத்துவ ஏடுகளில் கணிசமானவை பொருள்கொள்ளப்படாதவையாக உள்ளன என்று சொல்லப்படுகிறது. சேமிக்கப்படாத ஏட்டுச்சுவடிகளின் தொகையும் சிறிதல்ல. நானே குமரிமாவட்டத்தில் இன்னும் என்ன ஏது என்று தெரியாத சுவடிகளை அ.கா.பெருமாள் போன்றவர்களின் சேமிப்புகளில் கண்டிருக்கிறேன்.

இச்சுவடிகள் விஷயத்தில் ஒரு முக்கியமான அம்சம் கணக்கில் கொள்ளப்படவேண்டும். அதாவது சுவடிகளில் உள்ள பண்டைய ஞானம் இரு பெரும்பிரிவாகப் பிரிக்கத்தக்கது. அன்றைய பொதுச்சமூகத்தின் அங்கீகாரம்பெற்ற நூல்கள். அங்கீகாரம் பெறாத ரகசிய நூல்கள். அங்கீகாரம்பெற்ற நூல்கள் என்றால் செவ்விலக்கியங்களையும் பக்திசார்ந்த மதநூல்களையும் சொல்லலாம். அவையெல்லாமே அனேகமாக அச்சேறியுள்ளன. அங்கீகாரம் பெறாத நூல்கள் என்றால்   மந்திரவாத நூல்கள், சிலவகை வைத்தியநூல்கள், சிலவகை சிற்ப சாஸ்திர நூல்கள் ஆகியவை.

இவையெல்லாமே தாந்த்ரீகத்துடன் தொடர்புள்ளவை. தாந்த்ரீகம் முன்வைத்த தரிசனத்தை எவ்வகையிலோ பிரதிபலிப்பவை. பக்திக் காலகட்டத்தில் பொதுவெளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட தாந்த்ரீகம் கூடவே இவற்றையும் வெளியே கொண்டுசென்றது. ஆகவே இவை குருமரபாகவே கற்கப்பட்டன. மரபு அறுபட்டால் அதன்பின் சுவடிகளைப் பொருள்கொள்ள வசதியில்லை.

நாம் நம் பழைய நூல்களைப் பொருள்கொள்வதற்கு ஒரு பொதுப்போக்கு ஒன்று மெல்லமெல்ல உருவாகி வந்தது. அது நம் செவ்விலக்கியங்களையும் மத இலக்கியங்களையும் பொருள்கொள்வதற்கு உதவியது. அது நூல்களால் திரட்டப்பட்ட பொதுஞானம் சார்ந்தது. அந்த ஞானம் தமிழின் பொதுஞானமாக இருக்கிறது. போதாத இடங்களில் அது இந்தியப்பொதுஞானத்தை எடுத்துக்கொள்கிறது.  அல்லது மேலைநாட்டு ஆய்வுகளைநோக்கிச் செல்கிறது.

உதாரணமாக, உவேசா அவர்கள் எப்படி செவ்வியல்நூல்களுக்குப் பொருள்கொள்கிறார் என்பதைக் காணலாம். ‘மூவாமுதலா உலகம்’ என்று சீவகசிந்தாமணியில் கண்டதும் அவர் ஆச்சரியமடைகிறார். உலகம் தோன்றி அழிவது என்பதே அவரது சைவமரபு அவருக்குக் கற்பித்த ஞானம். பிறப்பும் இறப்புமில்லாத உலகம் என்ற கருத்து எங்கே இருந்து வருவது? தமிழ்ஞானத்தொகை அதற்கு பதில் வழங்காதபோது சமஸ்கிருத மரபை நோக்கிச்செல்கிறார். அதிலும் பதில் இல்லாமலானபோது மேலை ஆய்வாளர்கள் வழியாக சமண மெய்யியலைக் கற்க ஆரம்பிக்கிறார்.

இந்தப் பொதுப்போக்கால் நம்முடைய புராதன ஞானத்தில் கணிசமான ஒரு பகுதியைப் பொருள்கொள்ளமுடியவில்லை என்பதன் ஆதாரமே நம்முடைய ஆவணச்சேமிப்புகளில் தேங்கிக்கிடக்கும் சுவடிகள் காட்டுவது. மேலும் பொருள்கொண்ட நூல்களிலேயே ஒரு முகத்தை மட்டுமே நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் எல்லை என்னவென்றால் அதை நமக்குத்தேடிக்கொடுக்கும் கருவி ஐரோப்பிய ஆய்வுமுறைமை என்பதுதான். அந்த எல்லைக்குள் நின்றுகொண்டே நாம் நம் மரபை அறிந்திருக்கிறோம்.

இந்த மையப்பாதைக்குச் சமானமாக இன்னொரு பாதை நம்முடைய பழையநூல்களைப் பொருள்கொள்வதற்காக இருந்தது என நினைக்கிறேன். அது நான் ஏற்கனவே சொன்ன அந்தக் காலவிளிம்பில் மையத்தில் இருந்து அறுபட்டு விலகிச்சென்றது. அதை தமிழ்ப்பண்பாட்டின் மறைக்கப்பட்ட அல்லது தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பின் பார்வையாக எடுத்துக்கொள்ளலாம். அதையே அயோத்திதாசர் முன்வைக்கிறார்.

அயோத்திதாசர் நீதிநூல்களையும், இலக்கண நூல்களையும் வாசிப்பதற்கு ஒரு முறைமையை வைத்திருக்கிறார். இது அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? உதாரணமாக அவர் திருக்குறளுக்கு அளிக்கும் பொருள் முழுக்க முழுக்க பௌத்தம்சார்ந்த பொருள். திரிக்குறள் என்றே அவர் அதை பெயர் சொல்கிறார். அது அந்தரத்தில் இருந்து வந்த ஒரு தரப்பு அல்ல. அதற்கு ஒரு வழிமரபு இருந்திருக்கிறது. அது அவருடைய குலத்திற்குரியதாக இருக்கலாம். ஒருவேளை நான் முன்னர் குறிப்பிட்ட அந்தக் காலவிளிம்பில் அறுபட்டு அவர்களின் குலத்துக்குள் மட்டுமே புழங்கி வந்த ஒன்றாக இருக்கலாம்.

அவ்வாறு மிக அசலான ஒரு கோணம் அவரிடமிருந்து கிடைக்கிறது. அதை நாம் இரு வகைகளில் காண்கிறோம். ஒன்று உரைவழங்குதல், இரண்டு புராணம் அமைத்தல்.  அவ்விரண்டு முறைகளில் அவர் முன்வைக்கும் முடிவுகளும் அவரது முறைமையும் அவரது தனித்தன்மை என நினைக்கிறேன்.

 

[மேலும்]

 

 

 

 

 

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் -கடிதம்
அடுத்த கட்டுரைமனமே-கடிதங்கள்