ஒரு சொல்லுயிரி தந்த வாசிப்பு அனுபவம் – அமிர்தம் சூர்யா

குமரகுருபரன் விருது இந்த ஆண்டு சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகச்சிறந்த தேர்வு. நவீன கவிதை வெளியில் இயங்கும் யாரும் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு ஜெயமோகன் எழுதிய அவர் கவிதையை முன்வைத்து எழுதிய கட்டுரையை வாசித்திருந்தால் மனம் விட்டு பாராட்டியிருப்பார். அப்படியொரு பார்வை அவதானிப்பு. கவிதையின் இயங்குலகம் பற்றிய புரிதல். புதிய வாசகனுக்கு வழிநடத்தும் கைகாட்டி மரங்கள் எனலாம்.

சமீபத்தில் சதீஷ்குமார் சீனிவாசன் எழுதிய இரு கவிதைகள் குறித்து எனது அபிப்பிராயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த சமூக புது புத்தி சொல்லும் – தனிமனித பிரச்சனை, உளவியல் சிக்கல், மன இறுக்கம் இதையெல்லாம் எழுதாதவனை கவிஞனாக ஏற்க முடியாது. சமூகம் பிரச்சனை குறித்து என்ன எழுதினாய் என்று கேட்கும். ஒரு முறை ஜெயமோகன் சொன்னார். கவிஞன் நேரடி களப்பணியாளன் அல்ல அவன் எழுத்தின் மூலம் மொழியின் மூலம் அதையே தான் செய்கிறான். கோஷம் போடாததால் உனக்கு அது புரிவதில்லை. தமது வீட்டு அறைக்குள் எந்த சமூக தொடர்பும் இன்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி சமுக பொறுப்பற்றவனா? அவனும் கோஷம் போடவேண்டுமா? அவன் பணி சமூகத்துக்கானது இல்லையா என்று கேட்டார்.

அப்படியே ஒரு கவிஞன் சமூக பிரச்சனையை பிரச்சார நெடி இன்றி எழுதினாலும் அதை உள்வாங்கும் திறன் கருத்து கந்தசாமிகளுக்கு இருக்காது. ஆனால் குமரகுருபரன் விருது பெறும் சதீஷ்குமார் சீனிவாசன் சமூக பிரச்சனையை அல்லது அதன் மீதான எதிர்வினையை எழுதுவதிலும் கில்லாடி. கீழேஇருக்கும் கவிதை சிகரெட்டை முன்வைத்து எழுதிய கவிதை படியுங்கள், அதற்கு முன்…

நான் அதிகம் பழகிய இருவர். ஒருவர் சந்ரு மாஸ்டர். இன்னொருவர் பிரபஞ்சன் இருவரும் தொடர்ந்து சிகரெட் புகைப்பவர்கள். நான் இவர்களை சந்திக்க போனால் சட்டென ஒரு சிகரெட்டை எடுத்து நீட்டுவர். உண்மையில் சொன்னால் எனக்கு சரியா சிகரெட் பிடிக்க தெரியாது அதை விட அதில் ஒரு சுகம் இருப்பதாகவும் தெரியல. சீனியர் சிகரெட்டை கொடுக்கும் போது ச்சேச்சே நான் பிடிக்கமாட்டேன் பழக்கம் இல்லை என்றால் அது அவர்களை தரம் குறைப்பதாக ஆயிடுமேன்னு நானும் பற்றவைத்து அந்த புகையை இழுத்து தொண்டைக்குள் அனுப்பாமல் வாய்க்குள் வைத்திருந்து தேர்ந்த சிக்ரெட் கலைஞன் போல் பாவனை செய்து புகையை விடுவேன். ஒருவேளை சிகரெட் பிடிக்காதவனை நவீன கவிஞன் இல்லைன்னு சொல்லிடுவாங்களோன்னு ஒரு ஐயமும் ஓடும். சரி இந்த சிகரெட் கவிதைக்கு வருவோம்…

சதிஷ்குமார் சீனிவாசன் எழுதிய நாங்கள் பொறுக்கிகள் என்ற தலைப்பிலான கவிதையில் வரும் குரல் இது யாரின் குரல்? ஒரு விளிம்புநிலை மக்களின் பிரதிநிதிகளின் குரல். சிகரெட் எங்கு எந்த இடத்தில் பிடிக்கப்படுகிறது என்பதைக் கொண்டே பிடிப்பவனின் தரத்தை தீர்மானிக்கிறது அதிகாரம். காரிலிருந்து இறங்கி நகரும் ஒருவன் வெளியிடும் சிகரெட் புகையும் வியர்வை நெடி வீசும் ஒருவன் பிளாட்பாரத்திலிருந்து வெளியிடும் சிகரெட் புகையும் ஒன்றல்ல. அவன் ஸார், இவன் பொறுக்கி.

ஆனால் அந்த விளிம்பு மக்கள் தங்கள் சுதந்திரத்தின் குறியீடாக தங்களை ஆசுவாசப்படுத்தும் காரணியாக தங்கள் கோபத்தை மட்டுபடுத்தும் அல்லது தணிக்கும் சிகிச்சையாக சிகரெட் இருக்கிறது எனலாம்.

எந்த நேரமும் காவலர்களால் சாலையிலிருந்து விரட்டப்படலாம். வீட்டு முதலாளிகளால் வாடகை வீட்டிலிருந்து கூட. அட வாழ்க்கையிலிருந்து கூட விரட்டப்படலாம். நிச்சயமற்ற பயம் சூழ்ந்த வாழ்வில் அவர்களின் ஒரே ஆதரவு, ஆறுதல் சிகரெட் தான். காவலர்கள் இவர்களை பொறுக்கிகள் என்பதாக கவிதை முடியும்.

காவலர்கள் யார் போலீஸா அதுமட்டுமல்ல, இந்த சமூகத்தின் ஆதிக்க சாதி, அதிகார வர்க்கம் எல்லாம் காவலர்களின் குறியீடு தான். அந்த கவிதையில் ஒரு வரி வரும்

‘நாங்கள் ஒரு சாதாரண காதலைக்கூட சம்மதிக்கச் செய்யும் லாயக்கியற்றவர்கள்.’ அந்த லாயக்கை எது தரும் பொருளாதாரமா சாதியா என்பது விவாதத்துக்குரியது. கூடவே ஆணவ கொலையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த கவிதைக்கு இது கோனார் உரை தான். இது அவசியம் இல்லை என்றாலும் வெங்கட்சாமிநாதன் போல் என் ரசனை சார்ந்த வெளிப்பாடு இது தான்.

நாங்கள் பொறுக்கிகள்
இன்று காவலர்கள்
அப்படித்தான் சொன்னார்கள்

தெருவின் ஒரு ஓரத்தில்
சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தபோது
நாங்கள் பொறுக்கிகளாகியிருந்தோம்

எங்கள் சுதந்திரங்களில்
சிகரெட்டும் ஒன்று
எங்களுக்கு அரசியல் பிரமுகர்களை தெரியாது
பெரிய இடங்களின் எந்தத் தொடர்பும் கிடையாது
நாங்கள் ஒரு சாதாரண காதலைக்கூட
சம்மதிக்கச் செய்யும் லாயக்கயற்றவர்கள்
எங்கள் தரித்திரியங்கள்
எங்களையே கூச்சமடையச் செய்பவை
எங்கள் கனவுகள்
பதட்டங்களின்
துர்க்கனவுகளாக விரிந்தன
எந்நேரமும்
சாலைகளிலிருந்து
துரத்தப்படும் பதட்டம்
எந்நேரமும் வாடகை வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பதட்டம்
எந்நேரமும் யாராவது
வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள்
என்ற பதட்டம்
எங்களுக்கு இருந்த
ஒரே சுதந்திரம் சிகரெட் பிடிப்பது
எங்களுக்கிருந்த
ஒரே சொகுசு எங்களை நாங்களே அழித்துக்கொள்வது
நாங்கள் பொறுக்கிகள்
காவலர்கள் இன்று
அப்படித்தான் சொன்னார்கள்

*

நல்லவேளை சதிஷ்குமார் சீனிவாசன் சமூக பிரச்சனையை எழுதி பிரச்சார நெடியின்றி பிரக்ஞை பூர்வமாக ஆக சிறந்த கவிஞனாக தன்னை முன் நிறுத்தியுள்ளார்.

இன்னொரு கவிதை ‘தனதலகில் சூடி’ என்ற தலைப்பில். நண்பர்களே ஒரு மனிதனின் குறிப்பாக சமூகத்தில் நாடோடிதனம் கொண்ட அல்லது பொது புத்தியிலிருந்து விலகிய அல்லது சமூகம்போதித்த மதிப்பீடுகளை நிராகரித்த ஒருவன் யாராக இருக்க முடியும் எழுத்து கலைஞனாகத்தான் இருப்பான். அவன் பார்வையிலிருந்து இந்த கவிதையின் நுண்குரல் ஒலிக்கும். தத்துவ ஞானி ஜே.கே சொல்வார் ஜன்னலை திற காற்றும் வெளிச்சமும் இயல்பாய் உள்ளே வரட்டும். ரொம்ப எளிய ஆத்ம பயிற்சி இது ஜன்னல் என்பது எது என்பதிலிருந்தே உன் திறவுகள் திறக்கும். இந்த கவிதையும் நான் ஜன்னல்களை மூடுவதே இல்லை என்று தொடங்குகிறது. ஜன்னல் என்பது ஒரு அறிதல் கருவி. பறவை, காற்று எல்லாம் வாழ்வின் வினையால் கிடைக்கும் பொருள்கள் அல்லது வாழ்வை அவதானிக்கும் படிநிலைகள் எனலாம். காற்றுக்காக காத்திருந்தாலும் எந்த பறவையும் தன் அலகில் காற்றுக்களை சூடி வரவில்லை எனக்கு. ஆயினும் இன்னும் காத்திருக்கிறேன் எனக்கான காற்று வரும் என்று வீம்பில்… என்பதாய் முடியும் கவிதை இது.

சரி இந்த கவிதையில் கோடி காற்றுகள் என்று ஒரு வரி வரும். காற்று எப்போது பன்மை ஆனது. உலகம் என்பது ஒற்றை தன்மையானது அல்ல. அறிந்த உலகம் அறியாத உலகம், மூதாதையர் உலகம் ஆவிகளின் உலகம் இப்படி பல உலகங்களின் சேர்க்கை தான் நாம் பார்க்கும் உலகம். ஆக உலகங்கள் என்பதே சரி. இதுக்கு கூட யாராவது இலக்கணம் தெரியுமான்னு கேட்பாங்க. அதற்கு இன்னொரு பதில். தமிழ் மொழி என்று குறிப்பிடக் கூடாது தமிழ்மொழிகள் என்று தான் சொல்லவேண்டும் தமிழ் ஒரே மொழிஅல்ல சென்னை தமிழ், கொங்கு தமிழ், மதுரை தமிழ் என்று பல்வேறு வேறுபாட்டில் ஒலிப்பதால் தமிழ் மொழிகள் என்றுதான் சொல்லவேண்டும் என்று அ.மார்க்ஸ் ஒரு கூட்டத்தில் பேசியதை இங்கு நினைவு கூறுகிறேன். முடிக்கும் போது ஒரு சொல் வரும்… வீற்றிருந்தேன் என்று வரும். ஏன் உட்கார்ந்திருந்தேன், அமர்ந்திருந்தேன் சப்பணமிட்டிருந்தேன் குந்தியிருந்தேன் என்ற பதங்களை போடாமல் ஏன் வீற்றிருந்தேன்? வீம்பாக ஏதுமற்றவனாக இருந்தாலும் என் மனதில் நான் சிம்மாசனத்தில் தான் வீற்றிருக்கிறேன் என்கிற மனவெளிப்பாட்டின் சொல் அது. முக நூலில் ஒரு நண்பர் சதிஷ்குமார் சீனிவாசனை நீ ஒரு சொல்லுயிரி – என்று குறிப்பிட்டது மிக சரிதான். மிக சரியான சொல்லில் உயிர்வாழும் கவிஞன்… சரி

காற்று வரும் என இருந்துவிட்டேன்
ஜன்னல்களை
நான் மூடுவதே இல்லை

சாளர விளிம்பில்
அமரும்
எந்தப் பறவையும்
ஒருகொத்து காற்றை
தனதலகில் சூடி வரவில்லை
இதற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும்
செய்தாலும்
முழுதாக சூட முடியாத
கோடி அலகுகள்
கோடி காற்றுகள்
இருந்தும்
ஒரு வீம்பில்
காற்று வருமென வீற்றிருந்தேன்

நல்ல கவிதை வாசிப்பு இன்பத்தை தந்த இந்த பொழுதுக்கு நன்றி கவிஞனுக்கு வாழ்த்துக்கள் விழாவில் சந்திப்போம் நண்பரே

அமிர்தம் சூர்யா

முந்தைய கட்டுரைஇன்றைய முதற்பெருங்கலை
அடுத்த கட்டுரைகள்வன், காதல் – கடிதம்