அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
80 களின் இறுதியில் நான் பள்ளி இறுதி முடித்திருந்தேன். மேலே கல்லூரிப் படிப்பை தொடர வீட்டில் அனுமதி இல்லை. எங்கள் குடும்பங்களில் பெண்களை பத்தாவதுக்கு மேல் படிக்க பொதுவாக அனுமதிப்பதில்லை. கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் பொறுப்பு தீர்ந்து நிம்மதியாக இருப்பார்கள், மேலும் கல்லூரிக்கு அனுப்பினால் வேற்று சாதி பையன்களோடு காதல் வர வாய்ப்பு இருக்கிறது என்றும் உறுதியாக நம்பினார்கள். சாதிக்கலப்பென்னும் அறப்பிழை நடக்காமல் கவனமாக இருந்தார்கள்.
நானும் அக்காவும் ஒரே வகுப்பில் தான் படித்து வந்தோம் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளின் 12 வது பரீட்சைக்கு எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வால்பாறையில் ஒரு சினிமா தியேட்டர் ஓனர் வீட்டில் வாங்கிக்கொண்டு போய் பெண் பிடித்திருக்கிறதென்றும் தகவல் வந்திருந்தது. அக்காவுக்கு economics படிக்கவேண்டும் Indian economic service எழுத வேண்டும் என்றெல்லாம் கனவு. ஒரே அழுகையாக அழுதுகொண்டிருந்தாள்.
அப்போதுதான் அப்பா ஒரு வீட்டை கட்டி இருந்தார் என்பதாலும், தெய்வாதீனமாக வால்பாறைக்காரர்கள் அதிகம் சீர் கேட்டதாலும் எங்கள் இருவரையும் வீட்டுக்கு வெகு அருகில், கொல்லைப்பக்கம் என்றே சொல்லிவிடலாம் அத்தனை அருகில் இருந்த இருந்த கல்லூரியில் அப்போதைக்கு படிக்க அனுமதித்தார்கள். வருஷத்துக்கே 1000க்கும் குறைவாகவே செலவாகும் என்று அப்பா விசாரித்து வந்திருந்தார்.
12 வது மதிப்பெண் பட்டியலுடன் கல்லூரிக்கு நாங்கள் இருவரும் வந்தபோது ஒரு சிறிய வரிசையில் மாணவ மாணவிகள் நின்று கொண்டிருந்தார்கள். அதில் இணைந்து கொண்டோம். ஒருவர் வந்து ஆர்ட்ஸ் சயின்ஸ் என்று அதை இரு வரிசையாக்கினார். எங்களை தவிர பிறர் குடும்பத்தினருடன் வந்திருந்தார்கள்.
என்னை அறிவியல் வரிசையில் நிற்க வைத்தவரே மதிப்பெண் பட்டியலை வாங்கி பார்த்துவிட்டு பயாலஜியில் தான் ஓரளவுக்கு மார்க் இருக்கு. தமிழ், பாட்டனி, ஜூவாலஜி இதில் உனக்கு எது வேணும்ன்னு சொல்லு? என்றார். பாட்டனியை குறித்து அத்தனை தெரியாது எனினும் தமிழ் சேர்ந்து கொள்ளலாமா என்று நினைக்க நினைக்கவே உள்ளிருந்து எதுவோ தள்ளிவிட்டது போல ’’பாட்டனி’’ என்றேன் அக்கா எகனாமிக்ஸ்.. அவரே விண்ணப்பத்தை பூர்த்திசெய்து ’’போய் பாட்டனி டிபார்ட்மெண்டில் கையெழுத்து வாங்கிட்டு வா’’ என்றார்.
கல்லூரிச் சூழலே புதிது அதிலும் பையன்கள் வேறு திரிந்து கொண்டிருந்தார்கள். நான் படித்ததெல்லாம் பெண்கள் பள்ளியில். அதிகம் வெளியில் போகவர அனுமதியில்லாத குடும்ப பின்னணி என்பதால் பயந்து மூச்சுத் திணறி அலைந்து தாவரவியல் துறையை கண்டுபிடித்தேன்.
ஏராளமான அறைகள் இருந்தன, எங்கு போய் கையெழுத்து, யாரிடம் வாங்குவது என்றும் தெரியவில்லை. ஒரு அறைவாசலில் பெற்றோர்கள் நின்றார்கள் நானும் அவர்கள் பின்னால் நின்று கொண்டேன்.
மிகப்பெரிய அறை அது வாசலில் நினறவளை உள்ளிருந்து ’வா’ என்று கனத்த குரல் ஒன்று அழைத்தது. தயங்கியபடி சென்றேன். பெரிய பளபளக்கும் மர மேசையின் பின்னே நல்ல பருமனும் அதற்கேற்ற உயரமுமாக கண்களை மிக பெரிதாக்கி காட்டிய தடித்த கண்ணாடி போட்டுக் கொண்டிருந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது தோற்றம் அச்சுறுத்தியது
என் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுவிட்டு என்னைப் பற்றி விசாரித்தார். ’’நல்லா படிக்கணும் பயப்படக்கூடாது படிப்பை மட்டும் விட்டுரக்கூடாது’’ என்றவர் எதிர்பாராமல் ’’கையை கொண்டா’’ என்றார். பயத்தில் வியர்த்து குளிர்ந்திருந்த கையை காட்டினேன். அதை பிடித்து ரேகை பார்த்து ’’ம் நல்லா படிப்பே. கடல் கடந்து போவே, கொஞ்சம் கஷ்டமெல்லாம் வரும், அது இருக்கறதுதான் இல்லையா” என்றார். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நின்றேன்.
அவர்தான் துறையின் முதல் தலைவர் முனைவர் சங்கரன், நன்னீரியல் வல்லுநர், அவரை கல்லூரி நிறுவனர் திரு மகாலிங்கம் சென்னைக்கே நேரில் சென்று அழைத்து வந்து இந்த பணியிலமர்த்தினார். அந்த சமயத்தில் பொள்ளாச்சியிலேயெ அவர் ஒருவர்தான் முனைவர் பட்டம் கொண்டிருந்தவர் என்பதையெல்லாம் பிறகு தெரிந்து கொண்டேன்.
ஆசிரியர் சங்கரன் பல நீர்நிலைகளுக்கு எங்களை அழைத்துச் சென்று பல முக்கியமான பாசிகளை அடையாளம் காட்டி கற்பித்திருக்கிறார், மற்றுமோர் ஆசிரியர் திரு சண்முக சுந்தரம் என்பவரும் பெரும்பாலும் பயணங்களில் எங்களுக்கு தாவரவியலை கற்றுக்கொடுத்தார்.
அவருடன் சென்றுதான் தொட்டபெட்டாவிலிருந்து மலைச்சரிவெங்கும் மலர்ந்து நிறைந்திருந்த நீலகுறிஞ்சிகளை, சிண்ட்ரெல்லா ஸ்லிப்பர் மலர்களை, மருத மரத்தின் முதலைப்பட்டைகளை முதன்முதலாக பார்த்தேன். அவர்தான் பெருமழைக்காலமொன்றில் அட்டைகள் ஊறி மேலேறும் மெர்க்காரா வனப்பகுதியில் தார்ப்பாலின் மூடுதுணிகளுடன் எங்களை 1 வாரம் அழைத்து சென்று வன மரங்களை அடையாளம் காட்டி கற்றுக்கொடுத்தார்.
அங்கே நான் இளங்கலை தாவரவியல் படித்து முடிக்கையில் முதுகலை படிக்கும் வாய்ப்பு மூர்க்கமாக வீட்டினரால் மறுக்கப்பட்டிருந்தது ஆனால் திரு சண்முக சுந்தரம் என்னை கோவை பல்கலையில் இணைந்து படிக்க சொன்னார். அப்போது கோவைக்கு எங்கள் குடும்ப பெண்கள் படிக்க செல்வதும் விடுதியில் தங்குவதும் சாமி கண்ணை குத்தும் செயல்களில் முதன்மையானதாக இருந்தது. அவரே வீட்டுக்கு வந்து அப்பாவிடம் பேசி ’’பெரியவளுக்கு கல்யாணம் பண்ண இன்னும் ரெண்டு வருஷம் ஆகும் இல்லையா அது வரைக்கும் லோகமாதேவி படிக்கட்டும், நல்லா படிக்குதுங்க ஏன் வேண்டாங்கறீங்க அவளுக்கு படிக்ணும்னு ஆர்வமிருக்கு’’ என வற்புறுத்தினார். இன்று வரை அவரை எண்ணிக் கொள்ளாத ஒரு நாள் கூட எனக்கில்லை.
அப்போதுதான் பாரதியார் பல்கலையில் முதன் முதலாக முதுகலை படிப்புகளை துவங்கினார்கள், நானும் விண்ணப்பித்திருந்தேன், 42 பேர் நேர்முகத்தேர்வில், 5 இடங்கள் மட்டுமே ஒரு வகுப்பில். எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை எனினும் தாவரவியல் தெரிந்திருந்தது, நானும் ஐந்து மாணவர்களும் தேர்வானோம்.
துறையில் அப்போது கடற்பாசிகள் குறித்தும் பழங்குடியினர் உண்ணும் பயறு வகைகள் பற்றியும் ஆய்வுகள் நடந்துகொண்டிருந்தது. ஆய்வுசெய்யும் அக்காக்களுக்கும் அண்ணண்களுக்கும் எடுபிடிவேலைகளை ராத்திரி பகல் பாராமல் செய்வேன். நான் அங்கே சேர்ந்த ஒரு மாதத்தில் ராஜாராம் என்பவரின் முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு நடைபெற்றது முனைவர் பட்டமென்று ஒன்றிருப்பதை அப்போதுதான் அறிந்தேன்.
அதில் துணைவேந்தரும் கலந்துகொண்டார். ராஜாராம் தன் ஆய்வை விளக்கி, கேள்விகளுக்கு பதில் சொல்லியதும் அவர் இனி டாக்டர் என்று அழைக்கப்படுவார் என்று அறிவித்து எல்லோரும் கைதட்டியதும் எனக்கு மலைப்பாக இருந்தது. டாக்டர் என்னும் விளி என்னை அத்தனை வசீகரித்தது. இப்படி அறிவியல் படித்தும் டாக்டர் பட்டம் பெறலாம் என்னும் விஷயம் அப்போதிருந்து சுரம் போல என்னை பிடித்துக்கொண்டது
பின்னர் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு வீட்டில் நானே பயத்தை காட்டிக்கொள்ளாமல் எப்படியோ போராடி அனுமதி வாங்கினேன். 3 வருடங்கள் தினமும் கோத்தகிரி வனக்கல்லூரிக்கு பொள்ளாச்சியிலிருந்து சென்று முனைவர் பட்ட ஆய்வை முடித்தேன். 26 வயது எனக்கு அப்போது.
கிருஷி விஞ்ஞான் கேந்திராவின் கஷ்டமான பரீட்சையெழுதி ஹைதராபாத் சணல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி பதவியை நானே முனைந்து பெற்றிருந்தும் ’’நம்ம பொண்ணுங்கெல்லாம் அத்தனை தூரம் கல்யாணத்துக்கு முன்னாடி போனா எப்படிங்க’’ எனும் கேள்வியை எதிர்கொண்ட அப்பா அதை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் நான் படித்த அதே வீட்டு கொல்லையில் இருக்கும் கல்லூரியின் செயலாளரும் எங்கள் உறவினருமானவரிடம் என்னை அழைதுச்சென்றதும் அவர் ’’அண்ணா நாளைக்கு வந்து சேர்ந்துரட்டும் சங்கரன் போறாரு அவர் இடம் காலி இப்போ’’ என்றார். எனது 6 ஆய்வுக்கட்டுரைகள் லண்டனில் அப்போது வெளியாகி இருந்ததை கல்லூரியே கொண்டாடியது கல்லூரியின் முதல் பெண்முனைவரும் நான்தான்.
திரு சங்கரன் என்னை அவருடன் வகுப்புக்கு அழைத்து செல்வார் அவர் படம் வரைந்தால் நான் விவரிக்க வேண்டும், அல்லது நான் விவரிக்க அவர் படம் வரைவார்.
திரு சண்முக சுந்தரம் அவர்களும் என் வகுப்பிறகு பிறகு அவர் வகுப்பிருக்கும்படி பார்த்துக் கொண்டு நான் எழுதியவற்றை கரும்பலகையில் அழிக்காமல் வைத்திருக்கச்சொல்லி அதில் தவறுகள் இருப்பின் மிக கடுமையாக கண்டித்து கண்ணீர் விடக்கூட செய்திருக்கிறார்.
ஆனால் அவர்கள் இருவரையும் நான் எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இப்படி எத்தனை பேருக்கு கற்பித்தல் கற்பிக்க பட்டிருக்கும்?
1999ல் துறையில் எல்லா தகுதிகளும் இருக்கும் எனக்கான அரசு வேலை வாய்ப்பு வந்தது. ஆனால் அச்சமயத்தில் என்னால் உன்னதமென்றும், சாதி மற்றும் குடும்பதிற்கு இழுக்கென்றும் நம்பப்பட்ட ஒரு விஷயத்தினால் நான் அவ்வேலையை ராஜிநாமா செய்யுமம்படி நிர்பந்திக்கப்பட்டு அப்படியே செய்தேன். பின்னர் ஒரு பாலைவனத்தில் 6 வருடங்கள் மீண்டும் இரு மகன்களுடன் இந்தியா திரும்பி, அதே துறையில் அதேவேலையில் இணைந்தேன்.
22 நீண்ட வருடங்களும் பத்திருபது நூல்நிரைகளாவது எழுதலாமென்னும் அளவுக்கான கஷ்டப்பாடுகளுக்கும் பிறகு இன்று அந்த துறையின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறேன். இத்தனை வருடங்களில் நான் தாவரவியலை கற்றுக்கொடுத்ததை காட்டிலும் கற்றுக்கொண்டதே அதிகம், இன்னும் கற்றுக்கொள்ளவிருக்கிறேன்.
இன்று வரையிலும் ஒரே ஒரு நாள் கூட கல்லூரிக்கோ வகுப்பிற்கோ தாமதமாக வந்தது இல்லை. கற்பித்தலின், ஆசிரியத்தின் அறமென்று ஒன்றிருக்குமானால் அதில் நான் ஒருபோதும் பிழைத்ததில்லை. இன்றும் வகுப்பிற்கு செல்லுமுன்பாக பாடங்களை மனதில் சரி பார்த்துவிட்டு படம் வரைந்து பார்த்துவிட்டு புதிதாக சொல்ல ஏதேனும் கற்றுக் கொண்டுதான் செல்கிறேன். பாரதியார் பல்கலையில் இருந்து இன்று வரை பழங்குடித்தாவரவியலில் ஆய்வுகளை தொடர்கிறேன்.
உங்கள் எழுத்துக்களை உறுதியாக பிடித்துக்கொண்டு, முன்னைக்காட்டிலும் துணிவுள்ளவளாக இருக்கிறேன். நான் எப்போதும் உங்களின் வாசகியாகவும், ஆசிரியராகவும், அன்னையாகவும், எனது நல்லாசிரியர்களின் மாணவியாகவுமே என்னை முன்னிறுத்திக்கொள்கிறேன்.
பேராசிரியர்களுக்கான அறையிலிருந்து திரு.சங்கரன் அமர்ந்திருந்த அதே அறைக்கு இன்று வந்து அமர்ந்தேன். கல்லூரி வேலை நேரம் முடிந்ததும் மேசையில் இருந்த கணினியில் NHM செயலியை தரவிறக்கினேன்.
உங்கள் தளத்தை திறந்து புனைவுக் களியாட்டு கதைகளில் ஒன்றான எதோ ஒரு கதையை வாசிக்க நினைத்தேன். சிறகு கதையை சொடுக்கித் திறந்து வாசித்தேன்.
புத்தம் புதிதாக சங்குவை கதைசொல்லியை ஆனந்தவல்லியை வாசித்தேன். சாரைப்பாம்பு போல தோன்றிய ஆனால் உண்மையில் நாகமான, சில முயற்சியிலேயே சைக்கிள் கற்றுக்கொண்டு சங்குவின் காலில் வடிந்த ரத்தத்தை கூட கண்டுகொள்ளாமல் நீலப்பறவை போல சிறகுவிரித்தபடி சைக்கிள் ஓட்டிய, அப்போதே செகண்ட் ஹாண்ட் சைக்கிள் வாங்கிக்கொண்டு கல்லூரிக்கும் அதிலேயே சென்ற, சங்குவையே அழவைத்த, PDO வாக பணிபுரியும், லஞ்சம் வாங்காத சங்குவிற்கு தேவைப்பட்ட காரியம் செய்துகொடுத்த கண்ணாடியெல்லாம் போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்தவல்லி அத்தனை பிரியமானவளாகி இருந்தாள்.
பணிமூப்பில் அடைந்திருக்கும் இடம்தான் இது எனினும் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை செய்யவும் அதிகம் பயணங்கள் அழைத்துச்செல்வதுமாக ஒரு சில முக்கிய மாற்றங்கள் துறையில் செய்யவிருக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களை வேண்டுகிறேன்.
அன்புடன்
லோகமாதேவி
சிறகு கதை
அன்புள்ள லோகமாதேவி
இன்று ஒரு பேராசிரியராக மட்டுமல்லாமல் ஓர் எழுத்தாளராகவும் ஆகியிருக்கிறீர்கள். தாவரவியல் பற்றிய தமிழர்களின் புரிதலில் ஒரு பங்களிப்பை ஆற்றுகிறீர்கள். தியடோர் பாஸ்கரனுக்கு இன்று தொடர்ச்சி என்றால் நீங்கள்தான். உங்கள் நூல்கள் வரவிருக்கின்றன. ஒருவேளை எல்லாம் இங்கே இப்படி வந்து சேர்வதற்கான பயணம்தானோ என்னவோ?
ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். உலகமெங்கும் இன்று அறிவியலோ சமூகவியலோ இலக்கியக் கோட்பாடோ, சுவாரசியமில்லாத எழுத்துக்கு இடமில்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. எந்த எழுத்தும் அந்த தளத்தில் அடிப்படை ஆர்வமுள்ள ஒருவரை வாசிக்கவைப்பதாகவே இருந்தாகவேண்டும். அதை மட்டும் பற்றிக்கொள்க.
ஜெ