மதுத்துளிகளின் கனவு- கடிதம்

மலர்த்துளி வாங்க

ஜெயமோகன் அவர்களுக்கு,

மலர்த்துளி சிறுகதைத் தொகுப்பினை கையில் வாங்கியவுடன் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். முகமும் உள்ளமும் இந்த நிமிடம் வரை புன்னகைத்துக்கொண்டே இருக்கிறது. பெண்ணின்பால் கொள்ளும் காதலைவிட அக்காதல் ஊறிய உள்ளம் அள்ளிக்கொள்ளும் நுண்மைகள் இனிமையானவை. மிக மெல்லிய இமையசைவு போன்ற அவ்வுணர்வுகளை உருப்பெருக்கி கொண்டு காட்டுகின்றன இக்கதைகள் ஒவ்வொன்றும்.

தன் உள்ளத்திற்குள் நுழைந்துவிட்ட ஒரு பெண்ணை ஆண் கவனிக்கத்துவங்குகிறான். அவள் அசைவுகளில், பாவனைகளில், உச்சரிப்புகளில், ஆடைத்தேர்வுகளில் பெருக்கெடுக்கும் இயல்புகள் அவன் மனதை நிறைக்கிறது. காதல் எனும் பெருமழைக்கு முன் வரும் இந்த முதற்துளிகள் தரும் பேரின்பம் ஒரு ஆணின் வாழ்க்கையையே கந்தர்வனுக்கு நிகராக்குகிறது. அதையே இக்கதைகள் சொல்வதாகப்பட்டது. அடையப்பெற்ற காதல் அதன்பின் கொள்ளும் பரிணாமம் எதுவாக இருப்பினும் அதன் பொற்காலம் என்பது அடைவதற்கு முன்னர்தான் என்றும் தோன்றுகிறது.

உருவத்தில் ஒடுங்கி, தாழ்வுணர்ச்சியால் தன்னாழத்தில் புதையுண்டு போயிருந்தவளை சற்றே சீண்டிவிட்டு நஞ்சை சுரக்கவைத்தவனுக்கு அதன்பின் கிடைத்தது காதலெனும் அமுது. நஞ்சில்லையெனில் அமுதிற்கு ஏது சுவை. அதை அவன் அறிந்திருந்தான்.

காதல் பரிசு காதலின் சின்னமாக இருக்கலாம். அல்லது அழகியல் ரசனை கொண்டதாக இருக்கலாம். ஆனால் அவள் துயர் நீக்கும் எளிய கருவியாக இருப்பது அவளை எண்ணும்போதெல்லாம் அத்துயரன்றி அவனால் வேறெதையும் எண்ண முடியாத தவிப்பை காட்டுகிறது.

குரலைக் கேட்டு முகத்தை ஊகித்துக்கொண்டவனுக்கு கற்பனையும் நிஜமும் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டு அதிர்ச்சியூட்டுகிறது. பின்பு அவன் உள்ளத்தில் ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டு முழுமையடைகிறது. நிஜம் கற்பனையை ஆளத்துவங்குகிறது.

எளிய சொற்கள் சில நாவுகளில் புரண்டு வெளிவருகையில் கொஞ்சலாகி விடும். அதிலும் கொஞ்சலான சொற்களே அத்தகைய நாவினால் உச்சரிக்கப்பட்டால், அது கிறங்கடித்துவிடும். ராமச்சந்திரனுக்கு செல்லாக்குட்டி என்றே சொல்லே சுழலாக மாறி அவனை உள்ளிழுத்துக்கொள்கிறது. மீண்டும் மீண்டும் அவள் நாவினால் அதையே உச்சரிக்கச் சொல்லி கேட்கிறான். பரவசமடைந்து கொள்கிறான். அதை அவளும் உணர்ந்துகொள்வது அவன் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதாகிறது.

தன் கால்கொலுசிலிருந்து விழுந்த ஒரு மணித்துகளை மலர்த்துளி என அருகிலிருக்கும் அவன் அறைக்குள் அவள் சுண்டியெறிகிறாள். அன்று மாலை வந்து அதைக்காணப்போகும் அவன் ஒரு காதல் பித்தனாக மாறக்கூடும் என்பது இன்னொரு கதைக்கான துவக்கம். 

ஒவ்வொரு ஆணின் உள்ளத்திலும் என்றும் இறவாமல் வாழும் காதலனை மகிழ்வித்துவிட்டது இந்தக்கதைகள் ஒவ்வொன்றும். மழைப்பாடலில் பீஷ்மரும் சுபலரும் மது அருந்துகையில் ஒரு வரி எழுதியிருப்பீர்கள். “இனிய மது”. “ஆம். இளமையில் நாமறிந்த அனைத்துக்கன்னியரும் ஒன்று திரண்டு நம்முன் வந்துவிடுகிறார்கள்” என்று. அதை மது இல்லாமலேயே நிகழ்த்திவிட்டது இக்கதைகள்.

நன்றி.

பூபதி துரைசாமி

முந்தைய கட்டுரைஆயுதமாதல்
அடுத்த கட்டுரைதொழிற்சங்கம், ஒரு கடிதம்