உறையும் கணங்கள்- கடிதம்

மலர்த்துளி வாங்க

மாதுளை மலர்களின் தோட்டம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் பிறந்தநாள் பதிவை பார்த்ததும் ‘மலர்த்துளி’ புத்தகத்தை ஆர்டர் செய்துவிட்டு ஆவலுடன் காத்திருந்தேன். ‘கேளாச்சங்கீதம்’ தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு புதியவை.  

‘கொலைச்சோறு’ கதையில் ஒரு சிறுமி இளம் பெண்ணாக மாறும் தருணமும் அதன்பின் அவள் உரையாடும் முதல் ஆண் அவளில் ஏற்படுத்தும் தாக்கமும் மிக நுட்பமாக மனதில் சென்று சேர்ந்தது.

தொடர்ந்து அடுத்த நான்கு சிறுகதைகளை (கருவாலி, யமி, சுவை, பரிசு) ஒரே மூச்சாக வாசித்தேன். ஒவ்வொரு கதையிலும் காதலின் கணம் மிக இயல்பாக நிகழ்கிறது. ஆண் பெண்ணை கண்டடையும் கணம் என்று எழுதியிருந்தீர்கள். பெண் ஆணை கண்டு கொள்ளும் கணமாகவே எனக்கு தோன்றியது. அல்லது எது முதலில் நிகழ்ந்தது என்ற மாயமாகவே அது இருக்கிறது. அந்த புள்ளிதான் அதன் சுவாரசியமா?

இந்த ஐந்து கதைகளுக்கு பின்பு உடனே தோன்றியது ‘சொல்லச் சொல்ல அகலும் மாயமும் அதற்குத் தெரியும்’ என்ற முன்னுரை வரி தான். ஆனால் மெதுவாக அது காற்றிலும் மூச்சிலும் கலந்த இனிய வாசமாக புன்னகையை வரவழைத்துக்கொண்டே இருந்தது. 

‘பெருங்கை’ ஒரு முழுமையான நிறைவை அளிக்கக்கூடிய கதையாக இருந்தது. யானை வந்தாலே முழுமை தான். பாலத்தின் கற்களாய்  எடை கொண்டிருந்த அவன் மனதை பூ போல அலுங்காமல் சந்திரியிடம் தரும் தருணம் போதும்.

 ‘என்னை ஆள’ கதையில் அவன் மனதில் நிகழும் கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் ஆன போராட்டமும் அதன் இறுதியில் அந்த எடை தளர்ந்து, அவனது வாழ்க்கை துளிர்க்கும் நொடி இனிமையான தருணம்.

‘மலர்த்துளியில்’ மிக நுணுக்கமாக ஒரு தனி அறையை ஏங்கும் பெண்ணின் மனநிலை அதன் மறுபுறம் பெரிய வீட்டில் ஒரே ஆளாக வாழும் ஒருவனை நோக்கித் திரும்புகிறது.சுசீலாவுக்கும் ஜானகிக்குமான ஒப்பீடு ரசிக்கும்படியாக இருந்தது.

‘பரிசு’ ‘மலர்த்துளி’ ஆகிய இரண்டு கதைகளிலிலுமே பெண் ஏங்கும் ஒரு வாழ்க்கை ஆணை நோக்கி அவளை நகர்த்துவதாக இருக்கிறது. 

‘கள்வன்’ கதை பெரும் திகைப்பை அளித்தது. ஒரு பெண் இருவருடன் பழகுகிறாள் என்ற கதையை  எளிமையாக உதாசீனப்படுத்தி விடுவோம். ஆனால் இங்கு இருவரும் ஒருவர் தான். அம்பியும் ரெமோவும் போல. தற்போதைய ஆன்லைன் காலத்தில் இந்த கதை மிகவும் பொருத்தமானது. பெண்ணின் ஆணவத்தை கையாள ஆண் போடும் வேடங்கள் என இது ஒரு  விபரீத விளையாட்டாக இருக்கிறது.

இக்கதைகள் அனைத்தும் காதலின் தருணத்தை மட்டுமே பேசுகிறது. யதார்த்தத்தில் அதன் பிறகு என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ‘ஒரு மிக எளிய காதல் கதை’ யில் ஒரு நினைவாக சொல்லப்படும் காதல்  இந்த கேள்விக்கும் விடை அளிக்கிறது.

காதலின் தருணத்தில் வாழ்க்கை உறைந்து விடுகிறது. அதன் பிறகு நிகழ்வதெல்லாம் புகைப்படம் கண்டு அந்த தருணத்தை மீட்டிப் பார்க்கும் உணர்வுக்கு ஒப்பானது.

மிக்க நன்றி.

அன்புடன்,

தன்யா.

கோவை

முந்தைய கட்டுரைஎம். கோபாலகிருஷ்ணனுக்கு கண்ணதாசன் விருது
அடுத்த கட்டுரைஆலயக்கலை, சிற்பக்கூடம்- கடிதம்