போரும் அமைதியும், சினிமாவாக…

சோழர் வரலாறு, கல்கி , குடவாயில் பாலசுப்ரமணியம்

இனிய ஜெயம்

பொன்னியின் செல்வன் விவாதங்களின் பகுதியாக, திரைப்படமாக மாற்றம் பெறும் வரலாற்று நாவல்களில், வரலாற்று கற்பனாவாத நாவல்கள், வரலாற்று யதார்த்தவாத நாவல்கள் இவை படமாக்கம் பெறுகையில், இவை இரண்டில் எந்த வகைமைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனும் நிலைக்கு நீங்கள் சுட்டிய வார் அண்ட் பீஸ் எனும் யதார்த்தவாத வரலாற்று நாவலின் திரைவடிவங்களின் தோல்வி குறித்த உங்கள் அவதானத்துடன் நான் சற்றே மாறுபடுகிறேன்.  அவை எவையும் தோல்விப் படங்கள் அல்ல. முதலீட்டுக்கு மேலே நஷ்டம் என்று எதையும் உருவாக்காத படங்கள் அவை. அதனால்தான் அந்த நாவலை திரைப்படம் ஆக்கிப் பார்க்கும் முயற்சி மீண்டும் மீண்டும் என நான்கு முறை நிகழ்ந்தது. மாறாக அதன் முதல் வடிவம் பெரும் தோல்வியை சந்தித்திருந்தால் அடுத்த மூன்று வடிவங்களும் நிகழ்ந்தே இருக்காது. இவை போக உலகம் முழுக்க படமாக்கப்பட்ட யதார்த்தவாத வரலாற்று நாவல்களில், ஜப்பானின் மூன்று பாக தி ஹியூமன் கண்டிஷன் படம் துவங்கி கலையாகவும் வணிகமாகவும் வெற்றி பெற்ற பல படங்கள் உண்டு.

போரும் அமைதியும் நாவலின் முதல் மூன்று திரை வடிவங்களும் வெறும் 15 வருட இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. 1956 இல் வெளியான முதல் திரை வடிவம் அமெரிக்க இத்தாலி கூட்டு தயாரிப்பாக மூன்றரை மணிநேரம் ஓடக்கூடியது. இந்த நாவலை படமாக்கம் செய்ய வேண்டும் என்ற முயற்சி துவங்கிய உடனேயே எழுந்த முதல் சிக்கல் இதன் பட்ஜட். இந்த பட்ஜட்டை உலகம் முழுதும் உள்ள போரும் அமைதியும் வாசகர்கள், மற்றும் கலைப்பட ரசிகர்கள் இவர்களை மட்டுமே கொண்டு திரும்ப எடுக்க முடியாது என்பதே வணிக யதார்த்தம். வெகு மக்களை நோக்கிய  ஒரு திரைப்படம் சிக்கல்களின் துவக்கம், அதன் பின்னலும் தீவிரமும், அதன் தீர்வு என்று மட்டுமே பயணிக்க முடியும் இது மற்றொரு யதார்த்தம். இந்த இரண்டு யதார்த்தங்கள் மீது பயணித்து கலவையான விமர்சனங்களை அடைந்து, சில நல்ல விருதுகளுடன் போட்ட காசை மீட்டு அளித்தது அந்த முதல் படம்.

இந்த முதல் முயற்சி நிகழ்ந்ததன் அடிப்படை ஹாலிவூட் இன் நெடுங்கால கண்ணோட்டம். உலகம் முழுக்க அதன் கொடி பறக்க முதல் படியாக, எல்லா கண்டத்திலும் உள்ளே நுழைந்து நிலை கொள்ளும் வகையிலான ஆக்கங்களில் அது கவனம் செலுத்தியது. அதன் பகுதியாகவே அது இம்முயற்சியில் இறங்கியது. இந்த ஹாலிவூட் முயற்சிக்கு வலிமையான எதிர்வினையாக உருவானதே ரஷ்யா பிரம்மாண்ட பொருட் செலவில் நான்கு பாகங்கள் வழியே உருவாக்கிய இரண்டாவது வடிவம்.

1967 இல் நிகழ்ந்த இந்த ரஷ்ய முயற்சி உலக சினிமா வரலாற்றிலேயே மிக முக்கிய நிகழ்ச்சி என்று சொல்லலாம். போரும் அமைதியும் நாவல் அதன் முழு வீச்சில் திரைக்கு வர தேவையான பட்ஜட்டில் சமரசமே கூடாது என்பதில் ரஷ்யா தீர்மானமாக இருந்தது. 1966 இறுதியில் 4 மாத இடைவெளியில் முதல் இரண்டு பாகமும், 1967 இறுதியில் 4 மாத இடைவெளியில் அடுத்த இரண்டு பாகமும் வெளியானது. அன்று ஒரு நெகட்டிவ் இல் இருந்து ஒரு பாசிட்டிவ் எடுப்பது எத்தகு விஷயம் என்பது இன்று ஒருவர் அறிந்தால் மிகுந்த ஆச்சர்யம் கொள்வார். உலகின் முக்கிய பல மொழிகளில் டப்பிங் ஆகி பல ஆயிரம் ரீல் பெட்டிகள் உலகம் முழுக்க கொண்டு செல்ல ஆன கார்கோ செலவில் ஒரு பெரிய பட்ஜட் படத்தை அன்று எடுத்து விடலாம். இப்படி உலகம் முழுக்க சென்ற அந்த படத்தின் ஜெர்மன் வடிவை அதன் நான்கு பாகத்தையும் முழுதாக தொடர்ந்து சென்று பார்த்தவர்கள் எண்ணிக்கை அரை கோடி. உலகின் எல்லா கண்டத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணக்கில் அதுவரையிலான முன்னணி வசூல் நிலவரத்தில் முதல் 15 இடங்களில் ஏதேனும் ஒன்றில் அப்படம் நின்றது. வழக்கம் போல போட்ட பிரம்மாண்ட அளவிலான காசை திரும்ப தந்து, கலவையான விமர்சனங்களையும் நல்ல சில விருதுகளையும் அப்படம் வென்றது.

மூன்றாவது வடிவம் 1972 இல் பிபிசி எடுத்த தொலைக்காட்சி தொடர்.  திரைப்படம் என்பதை தாண்டி தொலைக்காட்சி என்பதன் வணிக கணக்குகள் அதன் வெற்றி தோல்விகள் இவற்றின் நிலையே வேறு. அந்த வகையில் இந்த முயற்சியும் நிறுவனத்துக்கு நஷ்டம் கொண்டு வராத முயற்சியே. இதில் பியர் ஆக நடித்திருந்தவர் ஆண்டனி ஹாப்கின்ஸ். பிரிட்டனின் முக்கிய விருதை இத்தொடரில் நடித்தமை கொண்டு ஹாப்கின்ஸ் வென்றார். தொடர் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

இந்த வரிசை போரும் அமைதியும் படங்களின் கடினச் சாவு ரசிகர்கள் பெரிதும் விரும்புவது இதன் பிபிசி தொடரான 2016 இல் வெளியான நான்காவது வடிவம். இலக்கியம் வாசகனுக்கு ஒரு மொழிக் கட்டுமானத்தை அளித்து அதிலிருந்து அவனை கற்பனையில் எழ வைக்கிறது. சினிமா ஒரு பார்வயாளனுக்கு காட்சிக்கட்டுமானம் ஒன்றை அளித்து அதிலிருந்து அவனை கற்பனையில் எழக் கோருகிறது. எனும் வகையில் இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான ஊடாட்ட வரிசையில், விமர்சகர்கள் இந்த நான்கு திரை வடிவங்களையும் ஒட்டுமொத்தமாக ஒரு பேரிலக்கியம் ஒன்று படமாவதில் உள்ள பரிணாம வளர்ச்சியாகவே, வெவ்வேறு திரைக்கதை சாத்தியங்கள் வழியே நாவலை வெவ்வேறு விதமாக அணுகி காட்சிப்படுத்தியவையாக, அந்த வகையில் இப்படி நிகழ்ந்த மிக மிக அபூர்வமான ஆவண மதிப்பும் கொண்ட பட வரிசைகள் என்றே இவற்றை மதிப்பிடுகிறார்கள். இந்த ஒட்டுமொத்த மதிப்பீட்டில் இந்த ஒவ்வொரு திரை வடிவம் சார்ந்தும் அதன் இயக்குனர்களின் திறன் குறித்து விரிவாகவே ரசனை மதிப்பீட்டு விமர்சனங்களும் நிகழ்ந்திருக்கின்றன.  2016 இன் திரை வடிவம் நீங்கலாக, முந்திய மூன்று வடிவங்கள் மீதும், இன்று இலக்கியமோ சினிமாவோ அது செயல்படும் விதம் என்ன என்றே அறியாத ஆசாமிகளால் பொ செ மீது வைக்கப்பட்ட அதே விமர்சனங்கள் போலவே அதே வகை ஆசாமிகளால் அன்றும் இதே வகை விமர்சனம் வைக்கப்பட்டு அவற்றுக்கு விரிவாக பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இன்று got நாவல் வரிசையை படிப்போர் என்று எவரையுமே நான் பார்த்தது இல்லை. மாறாகப் போன வாரம் கூட போரும் அமைதியும் நாவலை முதன் முறையாக வாசித்து விட்டு பேச வந்த வாசகியை சந்தித்திருக்கிறேன். Got படத் தொடரின் இடம் இன்று என்ன? மாறாக மேற்சொன்ன போரும் அமைதியும் நாவலும் அதன் நான்கு திரை வடிவங்களும் இன்று உலகின் மதிப்பு மிக்க கலைப்பண்பாட்டு அசைவின் ஒரு பகுதி. உங்களது தளத்தில் இந்த பகைபுலத்துடன்தான் போரும் அமைதியும் பட வரிசைகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே அவற்றின் பார்வையாளர்களின் ஒருவனான எனது விருப்பம் :).

கடலூர் சீனு

***

பின்னிணைப்புகள்:

1956 இல் வெளியான போரும் அமைதியும் படத்தின் முன்னோட்டம்.
1967 இல் வெளியான திரை வடிவம். முழுமையும். ஆங்கில துணை உரையுடன்.
1972 இல் வெளியான வடிவம். ஆங்கில துணை உரையுடன் முழுமையாக.
2016 இல் வெளியான வடிவத்தின் முன்னோட்டம்.
முந்தைய கட்டுரைமேடையுரைப் பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைஎன்.வி.கலைமணி