தமிழ்ச்சூழலில் பெண்களுக்கான இதழ்கள் இரண்டு வகை. சமையல், பக்தி, பொழுதுபோக்கு, வெற்றிபெற்ற பெண்களின் வாழ்க்கை என செல்லும் மங்கையர் மலர் வகை. அவையே மைய ஓட்டம். இன்னொருவகை பெண்ணியம்பேசும் இதழ்கள். அவை பெண்ணியத்தின் அரசியலை மட்டுமே முன்வைப்பவை. அரசியலின் ஒரு பகுதியாகவே இலக்கியத்தை அணுகுபவை. பெண்ணியக்கொள்கைகளிலேயே கலகம், எதிர்ப்பு ஆகியவற்றை சார்ந்த ஒரே ஒரு தரப்பை மட்டுமே முன்வைப்பவை. அதன் வழியாக ஏற்கனவே இங்கே இருந்துகொண்டிருக்கும் இடதுசாரி அரசியலின் ஒரு துணைக்கொள்கையாக பெண்ணியத்தை மாற்றிக்கொள்பவை.
நீலி இதழ் பெண்ணிய இதழல்ல, பெண்களுக்கான இதழ். பெண்களைப் பற்றியது. இன்று, இன்னமும்கூட அதன் இடமும் பணியும் உணரப்படவில்லை. எதிர்காலத்தில் அதன் இடம் மதிக்கப்படும். ஒரு முழுமையான தொகுப்பாகவே எல்லா இதழ்களும் வெளியாகின்றன. தமிழ்ப் பெண்ணெழுத்தாளர்களின் படைப்புகள் மீதான ஆய்வுகள், மறைந்த பெண் எழுத்தாளர்களை மீட்டுக் கொண்டு வருவது, உலக இலக்கியத்தின் முக்கியமான பெண்படைப்பாளிகளை தமிழுக்கு அறிமுகம் செய்வது, பெண்களின் ஆன்மிகம் மற்றும் அழகியல் பற்றிய விவாதங்கள் என நீலி இதழின் கட்டுரைகளின் விரிவு பிரமிக்கச்செய்வதாக உள்ளது
நீலி இதழ் மே 2023 ல் செல்மா லாகர்லெவ் படைப்புகள் பற்றி பாலாஜி பிருத்விராஜ் எழுதிய கட்டுரையும், எலெனா ஃப்ரான்டே பற்றி விக்னேஷ் ஹரிஹரனின் கட்டுரையும் தமிழில் அதிகம் பேசப்படாத அந்த பேரிலக்கியவாதிகள் பற்றிய ஆய்வுகள். அம்பையின் படைப்புலகம் பற்றி கமலதேவியின் கட்டுரை, லதா படைப்புலகம் பற்றி ம.நவீன் கட்டுரையும் இன்றைய பெண் எழுத்தாளர்கள் மீதான ஆய்வுகள். அனார் இன்றைய பெண் கவிஞர்களை அறிமுகம் செய்கிறார். மொழியாக்கம் பற்றிய சுசித்ராவின் நீண்ட பேட்டி இடம்பெற்றுள்ளது.
சைதன்யாவின் கட்டுரை பெண்ணின் தனித்தன்மை கொண்ட ஆன்மிகத்தேடல் மீது மத்திய கால ஐரோப்பா நிகழ்த்திய ஒடுக்குமுறையையும், அதை மீறி அந்த ஆன்மிகம் தன் இலக்கியம் வழியாக நிலைகொண்டதையும் பேசுகிறது. சாம்ராஜ் ஆர்.வி. ரமணியின் ஆவணப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.