சோழர் வரலாறு, கல்கி , குடவாயில் பாலசுப்ரமணியம்

சோழர் வரலாறு பற்றி பொதுசூழலில் ஒரு விவாதம் நிகழ பொன்னியின் செல்வன் படம் காரணமாயியிருக்கிறது. பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் புனைவுகளின் முதன்மையான நன்மை என்பது அது பொதுவாசகர்கள், இளைய தலைமுறையினர் நடுவே வரலாற்றை அறிவதற்கான ஆர்வத்தைத் தூண்டி மெய்யான வரலாறு அறியும் முயற்சியை நோக்கிக் கொண்டுசெல்லும் என்பதுதான். இந்தியிலும் தெலுங்கிலும், கன்னடத்திலும் மலையாளத்திலும் பொன்னியின் செல்வன் நாவலும், அதன் சுருக்கமான வடிவங்களும் ஏராளமாக இந்த ஆண்டில் வெளியாகியுள்ளன. இணையாகவே சோழர் வரலாற்றுச் சுருக்கங்களும் வெளியாகியுள்ளன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் சோழர் வரலாறு பற்றி மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கண்டேன்.

கல்கி.சாண்டில்யன் போன்றோர் எழுதும் வரலாற்றுப் படைப்புகள் ‘வரலாற்றுக் கற்பனாவாத நாவல்கள்’ என வகைப்படுத்தப்படுகின்றன. (Historical Romance) வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டட் டூமா போன்றவர்கள் எழுதியவை இவ்வகை படைப்புகள். இவை வரலாற்றுமாந்தர்களை சற்று மிகைப்படுத்துபவை. சாகசம், மர்மம், காதல், தியாகம் ஆகியவற்றை மையப்பேசுபொருளாகக் கொண்டவை. வரலாற்றை யதார்த்தமாக அணுகும் படைப்புகளே வரலாற்றுநாவல்கள் எனப்படுகின்றன. (Historical Novel) வெங்கடேச ஐயங்காரின் சிக்கவீர ராஜேந்திரன், பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் போன்றவை இவ்வகைப் படைப்புகள்.

வரலாற்று யதார்த்தத்தை முன்வைக்கும் நாவல்கள் பெரும்பாலும் வணிகரீதியாக வெற்றி பெறுவதில்லை. அவற்றை ஒட்டி அமையும் படங்களும் வெற்றிபெறுவதில்லை. உலகின் மகத்தான யதார்த்த வரலாற்று நாவலான டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ பலமுறை படமாக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்தது. ஆனால வால்டர் ஸ்காட் நாவல்களும், அலக்ஸாண்டர் டூமா நாவல்களும் படமாக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் மகத்தான வெற்றி அடைந்தவை. அவை மெய்யான வரலாற்றை நோக்கி அடுத்த தலைமுறையை வழிநடத்திச் சென்றன. பொன்னியின் செல்வனின் வரலாற்றுப் பங்களிப்பும் அதுவே என நினைக்கிறேன்.

மெய்யான வரலாற்றை அறிய விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் என இன்றுள்ள முதன்மையான சோழ வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியம் எழுதிய இம்மூன்று கட்டுரைகளைச் சொல்லமுடியும். வரலாற்றை அவர்களிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை 1

உடையார்குடி கல்வெட்டு – ஒரு மீள்பார்வை – 2

உடையார்குடிக் கல்வெட்டு – ஒரு மீள்பார்வை 3 

குடவாயில் பாலசுப்ரமணியம் அறிமுகம்

எளிமையான அறிமுகக் கட்டுரை இது. இதில் அவர் சொல்லும் சில செய்திகளை வரலாற்றார்வமுள்ளவர்கள் கவனிக்கவேண்டும்.

இரண்டு சாசனங்களின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் எழுதப்பட்டுள்ளது. ஒன்று, திருவாலங்குடி செப்பேட்டில் உள்ள சாசனம். அதில் அருண்மொழி தேவர் அரசனாகவேண்டும் என மக்கள் விரும்பியதாகவும், ஆனால் அவர் மதுராந்தகரை அரசராக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு, உடையார்குடி கல்வெட்டு. அதில் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட செய்தி உள்ளது.

சோழர் வரலாறு உட்பட இந்திய வரலாறு என்பதே மிகமிகக் குறைவான உதிரிச்செய்திகளின் அடிப்படையில் வரலாற்றாய்வாளர்கள் ஊகித்து எழுதுவது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். மறைமுகமான வரலாற்றுச் சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. நேரடியாக வரலாற்றை நாள், பெயர்களுடன் குறிப்பிடும் வழக்கம் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு முன் இருந்ததில்லை.

உடையார்குடிக் கல்வெட்டு பற்றி பேராசிரியர் சொல்லும் செய்திகள் இவை

அ. உடையார்குடிக் கல்வெட்டில் ராஜராஜசோழனின் பெயர் இல்லை. கோ ராஜகேசரிவர்மர்’ என்ற பெயரே உள்ளது. அது ராஜராஜன் என ஊகிக்கப்படுகிறது.

ஆ. அக்கல்வெட்டு நேரடியாக ஆதித்தகரிகாலன் கொல்லப்பட்டதைப் பற்றியோ, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டதைப் பற்றியோ சொல்லவில்லை.  அது ஒரு நிலம் பற்றிய சாசனம் மட்டுமே.

இ. வெண்ணையூருடையார் பரதன் எனும் வியாழ கஜ மல்லன்என்பவன் இரண்டே முக்கால் வேலி ஒரு மா நிலத்தையும், அகமனை ஆறையும்  ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையோரிடமிருந்து வாங்கினான். அவன் அதை இக்கல்வெட்டில் பதிவுசெய்திருக்கிறான். அந்நிலத்தின் வரலாற்றைச் சொல்லும்போது அது  ஆதித்தகரிகாலனைக் கொன்றவர்களிடமிருந்து மகாசபையால் கைப்பற்றப்பட்ட நிலம் என்று குறிப்பிடப்படுகிறது, அவ்வளவுதான்.

ஈ. எவரிடமிருந்து நிலம் மகாசபையால் கைப்பற்றப்பட்டது என்று சொல்லும்போது ஆதித்த கரிகாலனை கொன்றவர்களின் பெயர்கள் வருகின்றன. சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாத ராஜன்,  பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜந் மற்றும் உடன்பிறந்தவர்கள் அவர்கள். பிரமாதிராஜன் உள்ளிட்ட பட்டங்களால் இவர்கள் பிராமணர்கள் என தெரிகிறது.

உ. ஆனால் இந்தப் பிராமணர்கள் வேள்விசெய்யும் பிராமணர்கள் அல்ல. அரச அலுவலர்கள். இந்தப் பட்டங்கள் அரச அலுவலர்களுக்கு சோழர்காலத்தில் அளிக்கப்படுபவை. ஆகவே கொலையில் தொடர்புள்ள இவர்கள் அன்றைய அரச உயரதிகாரிகளாக இருந்தவர்கள்.

ஊ. இவர்களில் ரேவதாச கிராமவித்தன் என்பவனின் நிலம்தான் கைப்பற்றப்பட்டு பின்னர் மகாசபையால் விற்கப்படுகிறது. ஆனால் அவன் கொலையுடன் தொடர்புடையவன் அல்ல என கல்வெட்டு சொல்கிறது. அவன் அந்த கொலையாளிகளின் வம்சத்தைச் சேர்ந்தவன், அவ்வளவுதான்.

எ. இவ்வாறு இந்த நிலத்தை விற்று அந்தப் பணத்தை மகாசபை எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆணையை ராஜராஜசோழன் தன் இரண்டாம் ஆட்சியாண்டில் விடுத்திருப்பதை இக்கல்வெட்டு சொல்கிறது. மன்னனின் ஆணைப்படி அந்த விற்பனையை நிறைவேற்றியவர்கள் கொட்டையூர் பிரம்மஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகிய இருவரும். அவர்களும் பிராம்ணர்களே. பிரம்மஸ்ரீராஜன், பட்டன் ஆகிய பெயர்கள் பிராமணர்களை தெளிவாகவே சுட்டுபவை.

ஏ. உடையார்குடி கல்வெட்டை வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தியவர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி.

உடையார்குடிக் கல்வெட்டை ஒட்டி உருவான ஊகங்களையும், அவற்றை ஒட்டி உருவான நாவல்களையும் பற்றி பேராசிரியர் சொல்வன இவை:

அ. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி உடையார்குடிக் கல்வெட்டு நேரடியாகவே ராஜராஜசோழனால் அளிக்கப்பட்ட அரசாணை என எடுத்துக் கொண்டார். ஆதித்த கரிகாலனைக் கொன்ற கொலையாளிகள் உத்தமசோழன் (அல்லது மதுராந்தகன்) ஆட்சிக்காலத்தில் தண்டிக்கப்படவில்லை, அவர்களை ராஜராஜ சோழன் சொத்துக்களை பிடுங்கி விட்டு நாடுகடத்தினான் என்று ஊகிக்கிறார். பதினாறாண்டுக்காலம் கொலையாளிகள் தண்டிக்கப்படாததனால் மதுராந்தகன் கொலையாளிகளை பாதுகாத்திருக்கக் கூடும், மதுராந்தகனே கொலைக்குப்பின்னால் இருந்திருக்கக் கூடும் என ஊகிக்கிறார்

ஆ. ஆர்.வி.சீனிவாசன் என்னும் ஆய்வாளர் குந்தவையும், ராஜராஜசோழனும்தான் ஆதித்த கரிகாலனின் கொலைக்கு காரணமானவர்கள் என்று ஊகித்து எழுதியிருக்கிறார்.

இ. கல்கி ஆதித்தகரிகாலனை சோழநாட்டில் ஊடுருவி இருந்த பாண்டிய ஆபத்துதவிகள் கொன்றிருக்கலாம் என ஊகிக்கிறார்

உ. பாலகுமாரன் அவருடைய கடிகை என்னும் நாவலில் மதுராந்தகனே கொலைகாரன் என ஊகிக்கிறார்.

இந்த ஊகங்கள் ஒவ்வொன்றாக ஆராயும் குடவாயில் பாலசுப்ரமணியன் வந்தடையும் முடிவுகள் இவை.

அ. இந்தக் கல்வெட்டு ராஜராஜசோழனின் நேரடிக் கல்வெட்டு அல்ல. அது ஒரு கிராமசபையின் கல்வெட்டு. அது நிலப்பரிமாற்றம் பற்றிய ஆவணம். அந்த ஆவணத்தில் நிலத்தின் வரலாறு சொல்லப்படும்போது அது கொலைசெய்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. அக்கல்வெட்டை ராஜராஜசோழனின் நேரடிக்கல்வெட்டு என எடுத்துக்கொண்டதுதான் முந்தைய ஆய்வாளர்கள் செய்த பிழை.

ஆ. அவ்வாறு எடுத்துக் கொண்டதனால்தான் மதுராந்தகன் என்னும் உத்தமசோழன் குற்றவாளி என்றும், ராஜராஜனும் உடந்தை என்றும் ஊகித்தனர். அதற்கு ஆதாரமே இல்லை

இ. குற்றவாளிகள் மதுராந்தகன் என்னும் உத்தமசோழன் ஆட்சிக்காலத்திலேயே தண்டிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் கொல்லப்படவில்லை, நாடுகடத்தப்பட்டார்கள் என்பதற்கும் ஆதாரமில்லை. ஒருவேளை அவர்கள் தப்பியோடியிருக்கலாம்.

ஈ. அக்குற்றவாளிகள் மட்டுமல்ல அவர்களின் வம்சமே, தாயாதிகள் உட்பட அனைவருமே தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அந்நிலங்கள் பல ஆண்டுகளுக்குப்பின் இன்னொருவரால் வாங்கப்பட்டதைத்தான் உடையார்குடி கல்வெட்டு சொல்கிறது.

ஈ. ஆதித்த கரிகாலன் பாண்டிய ஒற்றர்களால் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு என பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் கருதுகிறார். ஏனென்றால்  ஆதித்த கரிகாலன் வீரபாண்டியன் தலையை வெட்டி ஒரு கழியில் வைத்து தஞ்சாவூர் அரண்மனை முன் நாட்டினான் என விழுப்புரம் மாவட்டம் எசாலம் என்னும் ஊரில் கிடைத்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது அக்காலத்தைய போர்நெறிகளுக்கு மிக மிக எதிரான ஒரு கொடுஞ்செயல்.இந்த நெறிமீறலுக்கு பழிவாங்கவே ஆதித்தகரிகாலன் கொலைசெய்யப்பட்டிருப்பான் என பேராசிரியர் கருதுகிறார்.

u.  பாண்டியர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாமென சொல்லப்படுவது ஏனென்றால் குறிப்பிடப்படும் பட்டங்களில் சில பாண்டிய அதிகாரிகளுக்கு வழங்கப்படுபவை. ஆகவே அது ஒரு பெரிய அரசியல் சதியாக இருந்திருக்கலாம். அதில் சம்பந்தப்பட்டவர்களின் நிலங்களைப் பற்றியே உடையார்குடி கல்வெட்டு சொல்கிறது.

பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் மதுராந்தகன் பற்றிச் சொல்வதையும் கவனிக்கவேண்டும்.

அ. மதுராந்தகன் என்ற பேரில் அறியப்பட்ட கண்டராதித்தரின் மகனாகிய இளவரசர் சுந்தர சோழரின் ஆட்சிக்காலத்திலேயே அரசியல்நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போதே ஆலயப்பணிகளைச் செய்திருக்கிறார். பின்னர் உத்தமசோழன் என்றபேரில் மன்னரானார். அப்போது சிவநெறிச்செல்வராக திகழ்ந்தார். பல ஆலயங்களை கட்டினார். நல்லாட்சி வழங்கினார். அவர்மேல் ராஜராஜசோழன் நன்மதிப்பு கொண்டிருந்தார். ராஜராஜசோழன் தன் மகனுக்கு போட்ட பெயர் மதுராந்தகன் என்பதுதான். அந்த மதுராந்தகனே பின்னர் ராஜேந்திர சோழன் என்ற பேரில் சோழ மன்னரானார். கங்கைகொண்டசோழபுரத்தை அமைத்தார்.

ஆ. அப்படிப்பட்ட மதுராந்தகன் என்னும் உத்தமசோழர் ஆதித்த கரிகாலன் கொலையில் பங்குள்ளவர் என்று சொல்வது அபத்தமான ஊகம். கல்வெட்டுகளைக்கொண்டு பிழையாக செய்யப்பட்ட கணிப்பு அது.

*

வரலாற்றை அதை மெய்யாகவே வாழ்நாள் முழுக்க ஆய்வுசெய்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது நாம் செய்யவேகூடாத சில உண்டு. நமது சொந்த விருப்புவெறுப்புகளுக்கேற்ப முடிவுகளுக்குச் செல்லக்கூடாது. நமக்கு வசதியானபடி எளிமையாக்கிக் கொள்ளக்கூடாது. எந்த வாதங்களிலும் மெய்யான வரலாற்றாசிரியர்களை மேற்கோள்காட்டி, அவர்களின் பார்வையின் அடிப்படையிலேயே நாம் ஏதாவது சொல்லவேண்டும்.

பொன்னியின் செல்வன் நாவல் தமிழகத்தில் வரலாற்றாய்வில் மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டி ஒரு காலகட்டத்தையே தொடங்கிவைத்தது என பேராசிரியர் கருதுகிறார். அதைப்போலவே பொன்னியின்செல்வன் திரைப்படமும் ஓரு மெய்யான வரலாற்றார்வத்தை இளைய தலைமுறையினரிடம் உருவாக்கினால் நன்று

முந்தைய கட்டுரைந. சஞ்சீவி
அடுத்த கட்டுரைஅன்னை மகளாக… கடிதம்