அந்தகக்கவி வீரராகவ முதலியார் ‘கண்ட சுத்தி’ என்னும் திறமை பெற்றிருந்தார் என்ற குறிப்பு அபிதான சிந்தாமணியில் காணப்படுகிறது. ஒருவர் மனதில் உள்ளதை மற்றொருவர் தன் மனதால் கண்டுணர்ந்து சொல்வது ‘கண்ட சுத்தி’ அல்லது’ கண்ட சித்தி’ எனப்பட்டது. ஈழ மன்னனின் அவைக்குச் சென்றபோது அவனது மனதில் இருந்த இரு கேள்விகளுக்குத் தன் பாடல் மூலம் விடை கூறினார். மன்னன் தன் மனைவி தன் மீது ஊடல் கொண்டதற்கும், அரண்மனைச் சோலையில் கிளிகள் தன் கூட்டிலிருந்து வெளிவர மீண்டும் மீண்டும் முயன்று, மீண்டும் உள்ளே செல்வதற்குமான காரணத்தைத் தன் மனதில் யோசித்துக் கொண்டிருந்தான். அதை தன் கண்ட சுத்தியால் உணர்ந்து ஒரு பாடலைப் பாடி அவனது ஐயத்தைப் போக்கினார் என்று அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது.