மதி வழிப்பயணம்- “ஜீன் மெஷின்” நூலை முன்வைத்து

அன்புள்ள ஜெ.சார்

கடந்த 15வருடங்களில் உங்களுடனான, அருகாமையும்,நட்பும், ஒரு நல்லூழ் என்பேன். அதற்கு இணையாகவே, இங்கே  பெற்ற நண்பர்களும். இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்சப் குழுமம்எங்கள் குழுமம் தான்என்றே வீட்டில் அடிக்கடி சொல்வேன். நண்பர்கள் பல்வேறு  நாடுகளில் இருப்பதால் எல்லா நேரத்திலும் அறிவார்ந்த உரையாடல்கள், மகிழ்ச்சி  பொங்க நடந்தபடியே இருக்கும். அப்படித்தான் முக்கியமான நூல்கள் பலவும் அறிமுகம் ஆனது.இந்த குழுமத்தின் விஞ்ஞானிகள் சிலரால் பாராட்டப்பட்ட நூல்களில் முக்கியமான ஒன்றுஜீன் மெஷின்”  சமீபத்தில் ஜெர்மனில் முனைவர் பட்டம் பெற்ற நண்பர் செந்தில் குமார் தேவன். இந்த நூலைப்பற்றி சொல்கையில்.

இது வெங்கியின்புறப்பாடுஎன புகழ்ந்துள்ளார்.ரைபோசோம் என்பது அனைத்து உயிர்களிலுமிருக்கும், உயிர் சமிக்கையைபிரித்து பொருள்கொள்ளும் ஒரு மையச்செயல்பாட்டு சாதனம். ரைபோசோம்களையும், புரோட்டீன் தயாரிப்பில் அவற்றின் பங்களிப்பையும் கண்டுபிடித்தது இன்றைய உயிரியல் கண்டுபிடிப்புகளின் உச்சம் என்றே கூறலாம்அதன் செயல்பாடுகளை தெரிந்து கொள்வது, டி.என்.ஏவின் வரலாற்றை தெரிந்து கொள்வது போன்றே முக்கியமானது.

ஒரு ஜீன் என்பது நீண்ட DNA மூலக்கூறு கொண்ட தொடரமைப்பு இந்த தொடரில் ஒரு செல்லின் செயல்பாட்டிற்கான ஒரு புரோட்டினை எவ்விதம்,எப்போது உருவாக்கவேண்டும் என்ற குறிப்புச் செய்தி அமைந்திருக்கும். உயிரின் உடலில் நிகழும் பல்லாயிரக்கணக்கான செயல்களையும் புரோட்டீன்களே நிகழ்த்துகின்றன. தசைகளின் இயக்கம்,ஒளியுணர்வு, தொடு உணர்ச்சி, வெப்பமறிதல் போன்ற செயல் பாடுகளுக்கும் அவையே காரணம்.

இந்த நூல் முழுவதும் பேசப்படுவது, ரைபோரோம் கண்டுபிடிப்பில் ,உயிரியல் உலகம் ஐம்பது ஆண்டுகளாக நிகழ்த்திய பயணங்கள், ஆய்வுகள், சோதனைகள், வெற்றி, தோல்விகள், அரசியல்கள், போட்டிகள் என பல்வேறு  பாதைகளில்  பயணித்து  படிப்படியாக நோபல் பரிசு எனும் உச்சத்தை தொடுகிறது.இதில் வெங்கி ராமகிருஷ்ணன் ஒரு தேர்ந்த கதை சொல்லி போல ,சுவாரசியமாகவும், போலி பாவனைகள் எதுவுமின்றியும்தன் அனுபவங்களையும்மனதில் தோன்றியதை ஒளிவு மறைவுமின்றியும் முன்வைக்கிறார்.

இந்த ஆய்வுப்பயணத்தில் இருபது நீண்ட வருடங்களாக தன்னுடன் பணியில் உதவி புரிந்தவர்கள், போட்டியாளர்கள், புரவலர்கள், என அனைவரையும் குறிப்பிட்ட து மட்டுமன்றி, ஒவ்வொருவரின் பங்களிப்பு பற்றி ஒரு வரியாவது எழுதி இருக்கிறார் என்பது. பெரும்பாலும் இது போன்ற போட்டியுள்ள துறைகளில் நிகழாத ஒன்று

இந்த நூல் சாமான்ய வாசகருக்கு வைத்திருக்கும் சவால் என்பது, அதன் இயற்பியல்உயிரியல்வேதியல்களின் சூத்திரங்கள் அடங்கிய பகுதிகள் தான்உதாரணமாக அமினோ அமிலங்களை கொண்டு வரும் tRNA  மற்றும் அமிலங்களின் குறிப்பை உணரும் mRNA போன்ற பகுதிகளும்நமது ஜீன்களுக்கும், புரோட்டீனுக்கும் இடையிலான இணைப்பு பாலமாக விளங்கும் ரைபோசோம்களை அறிவதற்கான சூத்திரங்கள், அட்டவணைகள்,அதற்கேயுரிய கலைச்சொற்கள். என்கிற மிக நீண்ட பகுதி.

தன் குடும்பவாழ்க்கை சார்ந்த பகுதியில், உணர்ச்சிகளை கலக்காமல், அவர் எடுத்த முடிவுகள், குடும்ப அமைப்பு தனது பணிக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது போன்ற விசயங்களை முன்வைக்கிறார்மனித இனத்தின் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் பற்றி நூல் முழுவதும் பேசப்படுகிறதுஉதாரணமாக

மனித வரலாற்றில் பலவற்றையும் வெறுமனே கண்களால் மட்டுமே பார்த்து பழகிய நமக்கு தடாலடியாக முன்னேற்றம் பெறுகிறது. 1600களின் மையக்காலத்தில் டட்சு நாட்டின் லினன் துணி வியாபாரியாகிய ஆண்டனி லீயூவன்ஹூக், துணியிழைகளின் தரத்தினை அறிய துணியினை மிக நுட்பமாக காண முற்பட்டார். இதற்கென பலவகை லென்சுகளை பயன்படுத்தி அக்காலத்தி  சக்திவாய்ந்த நுண்ணோக்கியை கண்டு பிடித்தார். அதை பயன்படுத்தி , குளத்துநீர், பற்களின் பரப்பிலிருந்து சுரண்டி எடுக்கபட்ட அழுக்கு, என பலவற்றையும் ஆய்வு செய்தார். அவற்றல் மிகச்சிறிய உயிர்கள் வாழ்வதை கண்டார்அவற்றை  “நுண் விலங்குகள்” (Animalcules) என்றார். அவைகளே இன்று நுண்ணுயிர்கள் என்றுஅழைக்கபடுகின்றன

என்று தொடங்கி 2000வரையான நுண்ணோக்கிகளின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் குறிப்பிடுகிறார்.

1970களில் தொடங்கிய ரைபோசோம் ஆராய்ச்சிக்கு 1999 ல் தான் தரவுகளும், படிகங்களும் கிடைக்க தொடங்குகிறது. அங்கிருந்து ரைபோசோம் குதிரை பந்தயம் தொடங்கி, மூன்று முக்கியமான வல்லுனர்களான டாம் ஸ்டீய்ட்ஸ், ஆடா யோனத், துடன் இனைந்து 2006 ல் வெங்கி ராமகிருஷ்ணன் தனது நோபல் பரிசை பெறுவதில் முடிகிறது.

ரைபோசோம் அரசியல்எனும்  அத்தியாயத்தில்  அறிவியல் துறையில் பயிலும் ஒவ்வொரு இளைஞருக்கும் தான் நோபல் பரிசு பெற வேண்டும் என கற்பனைக் கனவு இருக்கும். தான் என்றும் புகழுக்கு உரியவர் எனும் எண்ணம் இருக்கும்.  என்று தொடங்கிஆல்பிரட் நோபல் 1901ல் தற்செயலாக நோபல் பரிசை நிறுவியது முதல்அதை வென்ற அறிவியலின் ஜாம்பவான்களான ஐன்ஸ்டீன், கியூரி, டிராக், ரூதர்போர்டு, மோர்கன் போன்றவர்கள் வரிசையில் தன்னை வைத்துப்பார்த்து வியக்கிறார்.  

அதே வேளையில், நோபல் பரிசலித்தலில் கண்மூடித்தனமான தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, உருளைப் புழுக்களால் புற்றுநோய்தோன்றுகிறது என்று கூறிய ஜோஹன்னஸ்க்கு பரிசு கிடைத்ததையும்.

புற்றுநோய்க்கு  சரியான காரணத்தை  கண்டறிந்தயோமாகிவா கட்சுபுரோஎன்பவருக்கு நோபல் பரிந்துரை செய்யப்பட்டும், பரிசளிக்கப்படவில்லை. என்று ஆதாரங்களுடன் நிரூறுபிக்கிறார்.   சமாதானத்திற்கான நோபல் பரிசை அராபட்டிற்கும், கிசிங்கருக்கும் வழங்கியதை சுட்டிக்காட்டி மஹாத்மா காந்திக்கு வழங்காததை நோபல் குழுவின் போதாமை என்றே கருதுகிறார்.

மேலும் சுவாரசியமாக, நோபல் பரிசுக்கு போட்டியாக, ” திருப்புமுனை விருது” (breakthrough prize).  என்பதை யூரிமில்னர் எனும் இயற்பியலாளர், துணிகர முதலீட்டாளர், பில்லியனர், ஒருவர் தோற்றுவிக்கிறார். நோபல் பரிசைக்காட்டிலும் எட்டு முதல் பத்து மடங்கு பண மதிப்பு கொண்டது  இந்த விருது. ஸ்டீபன் ஹாக்கிங் ஸ் போன்ற மதி நுட்பம் வாய்ந்தவர்களுக்கு இது கிடைத்துள்ளது. எனினும் நோபலுக்கென்று தனி வரலாறும், அடையாளமும், மக்களின் உணர்வுகளும் உண்டு. ஆகவே மற்ற விருதுகளை விட நோபலுக்கே கடுமையான போட்டியும்,திறமையும் தேவைப்படுகிறது. என்கிறார்

இந்நூலின் முக்கியமான மற்றொரு அம்சம், வெங்கி மேற்கொண்டமேற்தட்டுபயணங்கள் ,உலக வரைபடம் முழுவதிலும் அவர் சென்ற நாடுகளை  பென்சிலால் கோடுகள்  போட்டால்உலக வரைபடத்தை ஒரு குழந்தை தாறுமாறாக எல்லா பகுதியையும் கிறுக்கியது போல இருக்கும், அத்தனை நாடுகளை, நகரங்களை, இடங்களை சொல்கிறார். (ஆச்சரியமாக நோபலுக்கு பின்னர் தான் இந்தியா பற்றிய சிறு குறிப்பே வருகிறது)

ஒருவழியாக இருபது வருட ஆய்வும், உழைப்பும் அங்கீகரிக்கப்பட்ட நாள்  ஸ்வீடனிலிருந்து வெங்கிக்கு ஒரு தொலைபேசி வருகிறது.” நீங்கள் இந்த ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசை பெறுகிறீர்கள்டாம் ஸ்டீயிட்ஸ், ஆடா யோனத்ஆகியோருடன் இணைந்துரைபோசோம் அமைப்பு,மற்றும் செயல்களை கண்டு பிடித்ததற்க்காக பெறுகிறீர்கள்” எனும் பகுதி நூலை ஒரு நாவல் போல வாசித்து வரும் நமக்கு ஒரு நற்செய்தி, மொத்த நூலும் இந்த தருணத்திற்க்காகவே திரண்டு வந்து இங்கே கூர்கொண்டு நிற்கிறது எனும் நிறைவு.

தேர்வுக்குழுவில் இருக்கும்மான்ஸ்என்பவருடன் வெங்கிக்கு ஏற்கனவே ஒத்துவரவில்லை. மான்ஸ் நினைத்திருந்தால்வெங்கி ஓரங்கட்டப்பட்டிருக்கலாம்.எனினும் மான்ஸின் நேர்மையை குறித்து கூறுகையில்இவரைப்போன்றவர்களின் நேர்மையால் தான் அனைத்து மாற்று கருத்துகளுக்கு இடையிலும், நோபல் மிகுந்த மரியாதைக்குரிய விருதாக மதிக்கப்படுகிறது.

வெங்கியின் பின்னுரை விருதுக்கு பின்னர் நிகழ்ந்த காட்சிகள் அவருடைய குரலில் சிறு எரிச்சலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டுமென நான் நினைத்திருந்தாலும், இந்த திடீர் வெளிச்சம். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை என எல்லா இடங்களிலும் அறிவியல் தொடர்பில்லாத, பலவற்றை பற்றியும் கூட ஒரு மதத்தலைவர் போல கருத்து கூற வேண்டியிருந்ததுஒரு இந்திய பத்திரிக்கை நேர்காணலில்ஒருவர் எந்நாட்டை சேர்ந்தவர் என்பது பிறப்பால் ஏற்படும் ஒரு தற்செயல் நிகழ்வுஎன்ற கூறினேன். எனினும் இந்திய அரசு மிக உயரிய விருதை அளித்ததுநான் தேசியம், இனம் போன்றவை விரும்புபவன் இல்லை.

என்றும். கணிதமேதை ராமானுஜம், சந்திரசேகர் போன்றோரை என் நாயகர்களாக நினைக்கும் அதே அளவிற்கே மேரி கியூரி, பெய்ன்மேன் போன்றவர்களையும் எண்ணுகிறேன்இதே புகழ் வெளிச்சம் மற்ற இருவருக்கும் இருந்ததை சுட்டிக்காட்டி, அதனால் ஏர்படும் கவனச்சிதறல்கள், கொண்டாட்டங்கள், பத்திரிகை பேட்டிகள் என சொல்லிச்செல்கையில். ஆடா யோனத் நோபல் விருதின் துணிச்சலில்பாலஸ்தீனிய அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்என்ற கூறியதை சொல்லி சிரிக்கிறார்.

இது ஒரு துறைசார் நூல் தான் எனினும். வாசித்து முடிக்கையில். உங்களுடைய கீதை உரையில்பிரம்ம சூத்திரமும் கீதைக்கு இணையான தத்துவ தரிசனம் கொண்ட நூல் தான், எனினும் அதன் கதை சொல்லும் தன்மையால், கதைகளத்தால் கீதை முக்கியமான நூலாகிறதுஎன்ற நீங்கள் சொன்னது நினைவில் எழுந்தது. இந்த நூலின் முக்கியத்துவம் என்பது அதன் கதை சொல்லும் விதத்தால், உயிர்ப்புடன் ஒவ்வொரு அத்யாயதிலும் வெங்கியுடன் நாமும் செய்யும் அகப்பயணத்தால்அவரது ஆய்வுக்கூடத்தில் 30sஅலகுகள  கொண்ட அமைப்பில் ரைபோசோம் கண்டுபிடித்து நடனமிடும் நாளில் நாமும் அவருடன் கைகோர்த்து ஆடும் நடனத்தால். என நூல் முழுவதும் நமக்கும் சரிபாதி பயணம் இருக்கிறது.

இதை மிகத்துல்லியமாக மொழி பெயர்த்திருக்கும். .சற்குணம் ஸ்டீவன் அவர்கள் ஒரு இடத்தில் கூட தொய்வோ/மொழிப்போதாமையோ இன்றி சரளமாக வாசிக்கும்படியும், துணைக்குறிப்புகளுடனும் செய்திருக்கிறார்.

இணையத்தில் கடந்த சில மாதங்களாக வெங்கியின் காணொளிகளை பார்க்கிறேன்அறிவியல் மேல் அவர் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையும் , “சூடோ சயின்ஸ்என குற்றம் சாட்டும் போலி அறிவியலையும் நாம் யாரும் மறுக்கவே முடியாது.

சௌந்தர்

சத்யானந்த யோக மையம் சென்னை

முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் ஒளிர்ந்த காந்தியப் பேரொளி- அரவிந்தன் கண்ணையன்
அடுத்த கட்டுரைஇறுதியாத்திரை, ஒரு சித்திரம்