கற்றலை அளிப்பது

அன்புள்ள ஜெ,

பல ஆண்டு தேடலுக்குப் பின், என் வாழ்க்கை துணையை சிறு மாதங்களுக்கு முன்னே கண்டறிந்தேன். அவருக்கு உங்கள் எழுத்துக்களும், கதைகளும்அதில் இருக்கும் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவங்களும் மிகவும் பிடிக்கும். அவர் என் வாழ்வில் வந்த பின் தமிழில் இருந்த நாட்டம் உயிர்ப்பித்து எழுந்தது. அவர் உங்கள் எழுத்துக்களையும் கதைகளையும் சிந்தனைகளையும் பேசாத நாட்களே இல்லை. இன்று காலை தங்களின் சமீப வெளியீடுசலிப்பு, மீள்வுபற்றி அவர் பகிர்ந்தார்.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக நான் விண்வெளித் துறையில் பயிலும் இளைஞர்களுக்கு கற்றலுக்கான தளம் உருவாக்க முயன்று வருகிறேன். இந்த முயற்சியின் மூலம் தாங்கள் கூறிய கருத்துக்களை நானும் உணர்ந்தேன். ‘இல்லைஎன்று சொல்பவர்கள் இல்லை என்றே சொல்லி கொண்டு இருக்கிறார்கள். எவ்வித உதவி அளிக்க முயற்சி எடுப்பினும் இந்த வர்க்க மக்களை சென்றடைய முடியவில்லை.

அவர்கள் கற்றல் என்ற முயற்சியில் ஈடுபாடு காட்டவில்லை. இணைய தளங்களின் மூலம் பொருள் நிபுணர்களை அழைத்து அவர்களுக்கு கற்றலுக்கு வாய்ப்பு கொடுக்க எண்ணினோம். ஆனால் சால்ஜாப்புகள் சொல்லி வராதவர்கள் தான் அதிகம். அவர்களை என்செய்வினும் அணுகவும் முடியவில்லை, ஊக்குவிக்கவும் இயலவில்லை. எங்கள் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் ஏன் என்று தெரிந்து கொண்டோம். மக்கள் அணுகுமுறை அறிந்து கொண்டோம். தூங்குபவரை போல் நடிப்பவர்களை எங்ஙனம் எழுப்ப முடியும்?  

அவர்களின் மனப்போக்கை மாற்ற வழி தேடிக் கொண்டிருக்கிறோம். ‘தான் மாற வேண்டும்என்று ஏதேனும் ஒரு மூளையில் ஆசை இருந்தால் அதை எவ்வாறு தூண்டி விடுவது என்று யோசனை செய்து கொண்டிருக்கிறோம். முடிந்த வரை முயல விருக்கிறோம்.

உங்களுடைய இந்தப் பதிப்பு மிகவும் எளிமையான முறையில் எங்களின் எண்ணங்களையும், இதில் உள்ள நுணுக்கமான மனப்போக்கையும் எடுத்துரைத்திருந்தது. ஆகவே இக்கடிதம் எழுத விழைந்தேன். தங்களின் அனுபவத்தில் எங்களுக்கு ஏதேனும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் தமிழில் கடிதம் எழுதி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. பிழை ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்

இப்படிக்கு,

. சிந்து 

அன்புள்ள சிந்து

இங்கே நாம் அளிக்கவேண்டியது கல்வியை அல்ல, கற்றலை.

உண்மையில் ஊக்கமின்மை என்பதே சிக்கல். ஊக்கமின்மைக்கான காரணங்கள் பல. பொருளாதார ரீதியாக மிகச்சாதாரணப் பின்புலத்தில் இருந்து வருபவர்களில் ஒரு சிறு சதவீதம்பேர் அசாதாரணமான ஊக்கத்துடன் உள்ளனர். அவர்கள் வெல்லவும்கூடும். எஞ்சியோருக்கு தீவிரமே இருப்பதில்லை. உண்மையில் தீவிரம் தேவை என்பதே தெரிவதில்லை. அவர்களில் மிகமிகச் சிலர்தான் எழுத்துவாசிப்புக்கு வருகிறார்கள். அவர்களிடம் தீவிரமென்றால் என்ன என்று சொல்லிக்கொடுக்க நான் முயல்கிறேன். அவ்வளவுதான்.

நாங்கள் கல்வியுதவிகள் செய்யும்போது ஒன்று கவனித்தோம். தீவிரம் இல்லாதவர்களுக்கு செய்யப்படும் உதவிகள் அவர்களுக்குத் தீங்கையே இழைக்கின்றன. அவர்கள்  எல்லாமே வெளியே இருந்து வரும் உதவியால் நிகழவேண்டுமென எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் குறைய ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் உதவிகள் போதவில்லை என குறை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். தமிழகத்தில் கல்வியுதவி பெறுபவர்களின் உதவி போதுமான அளவு இல்லை என குறை சொல்லாதவர்கள் குறைவு.

இங்கே இளைஞர்களைப் பார்க்கையில் எழும் பதற்றம் சாதாரணமானது அல்ல. நண்பர் ஒருவர் ஒரு வேலைக்கு ஆள் எடுத்தார். குறித்த நேரத்தில் வருபவர்களில் இருந்து மேற்கொண்டு தேர்வு செய்யவிருப்பதாகச் சொன்னார். எல்லாரும்தான் அப்படி வருவார்கள் என நான் சொன்னேன். ஆனால் குறித்த நேரத்தில் வந்தவர்கள் பாதிப்பேர்தான். பலர் ஒருமணி நேரம்கூட பிந்தி வந்தனர். மறுநாள் போனில் கூப்பிட்டு வரலாமா என்று கேட்டவர்கள்கூட உண்டு. இந்திய இளைஞர்களில் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள கூகிளில் தேடுபவர்கள் மிகமிகக் குறைவு. (இந்தியாவில் போர்ன் மட்டுமே கூகிளில் தேடப்படுகிறது என ஒரு நையாண்டியை ஒரு பேராசிரியர் சொன்னார்)

அவர்களுக்கு தேவையானது முயற்சிக்கான ஊக்கம். முயற்சி செய்வதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு. முறையாக எப்படி முயல்வது என்பதற்கான அடிப்படைப் பயிற்சி. அது இங்கே மிகக்குறைவாக உள்ளது. எனக்கு ஓர் ஆசிரியராக எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் மேல் ஒரு ஏளனம் இருந்தது. அவர்கள் மிக எளிமைப்படுத்துகிறார்கள், திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் என நினைப்பேன். ஆனால் அவர்களைப் போன்றவர்களுக்குத் தமிழ்ச்சூழலில் எவ்வளவு பெரிய இடமுள்ளது என்பதை இப்போது உணர்கிறேன். 

ஏனென்றால் அவர்கள் இந்தமுயற்சியின் தேவைஎன்னும் கருத்தைத்தான் மீளமீளச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியமென்னவென்றால் வைரமுத்து தன் கவிதைகள் வழியாக பெரிய அளவில் இதே பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். வைரமுத்துவின் வெற்றித்தமிழர் பேரவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த என் நண்பர் மரபின்மைந்தன் முத்தையா நம்பிக்கை என்ற பெயரில் ஓர் இதழே இதற்காக நிகழ்த்துகிறார். 

பொருளியலில் கீழ்நிலையில் இருப்பவர்கள் ஒருவகை தளர்வான வாழ்க்கைமுறையை கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமே செய்யாமல் பல மாதங்களை அவர்களால் கடத்த முடியும். நாம் எந்த கிராமத்திற்குச் சென்றாலும் அதைக் காணலாம். இப்போது ஒரு சிறு கிராமத்தில் நிறைய நேரத்தைச் செலவழிப்பவனாதலால் இதை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒன்றுமே நிகழாமல் நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன கிராமங்களில்

அங்கே பிறப்வர்களின் பொதுச்சூழலே அப்படி இருப்பதனால் அதில் பிறந்து வளர்ந்த அனைவரிடமும் அச்சூழலின் செல்வாக்கு இருக்கும். அது ஈ அரக்கில் மாட்டிக்கொண்டிருப்பதுபோல.  அறுத்து எடுத்துக்கொண்டு நம்மை விடுதலை செய்தாகவேண்டும். அதில் சிக்கியிருப்பதை அவர் உணர்வதுமில்லை. இயல்பாக இருப்பதாக எண்ணியிருப்பார். அவருடைய அந்த ஊக்கமற்ற நிலையை அவருக்கு உணர்த்துவது மிக அவசியமான ஒன்று

நடுத்தரவர்க்கத்தவராகிய நாம் அவர்களின் வாழ்க்கையை இரண்டு வகையில் மிகைப்படுத்திரொமாண்டிசைஸ்செய்திருக்கிறோம். ஒன்று, அவர்கள் வறுமையில் கூட  பரபரப்பில்லாமல் நிறைவாக இருக்கிறார்கள் என்னும் என்ணம். இரண்டு, அவர்கள் கொடிய வறுமையில் உணவுக்கே திண்டாடிக்கொண்டு நரகத்தில் இருக்கிறார்கள் என்னும் எண்ணம். இரண்டுமே பிழை. இரண்டுமே நம் நிலைமையை ஒட்டி நாம் உருவாக்கிக் கொள்பவை. நாம் பரபரப்பாக அலைந்துகொண்டிருக்கிறோம் என்னும் எண்ணம் அவர்கள் நிதானமாக இருப்பதாக எண்ண வைக்கிறது. அவர்களின் வறுமையை மிகையாக்கி, நாம் இருக்கும் நிலையை எண்ணி ஆறுதல்கொள்ள இரண்டாவது எண்ணம் தேவையாகிறது நமக்கு.

உண்மையில் கிராமங்களில்தாளமுடியாதவறுமை எல்லாம் இன்றில்லை. சாப்பாடு அனைவருக்கும் உள்ளது. இல்லம் உள்ளது.  மருத்துவம், கல்வி ஆகியவை அடிப்படைநிலையில் இலவசமாகவே கிடைக்கின்றன. குடிப்பவர்கள் மட்டுமே பணத்துக்கான பரிதவிப்பில் இருக்கிறார்கள். ஆகவே ஒன்றுமே செய்யாமலிருந்தாலும் வாழ்க்கை ஒருமாதிரி ஓடிவிடும். 

அதேசமயம் அவர்கள் நிதானமான, எளிய வாழ்க்கையில் திளைத்துக்கொண்டும் இருக்கவில்லை. உலகியல் மகிழ்ச்சி என்பது செயல்நிலையிலேயே கைகூடும். அகத்தே செயல் அல்லது புறச்செயல் அதற்குத்தேவை. ஓர் இயற்கைச்சூழலில் நாம்ஒன்றுமே செய்யாமல்இருக்கும்போது உண்மையில் மனம் கற்பனைகளில் விரிந்து இன்பத்தை உருவாக்கிக் கொள்கிறது. அது ஒரு செயல். அதற்கு கலைகளில் ஈடுபாடும், இயற்கையை கவித்துவமாக அறியும் நுண்ணுணர்வும் தேவை. அவையில்லாதவர்கள் சும்மா இருந்தால் மகிழ்வதில்லை. அவர்கள் சலிப்பையே அடைகிறார்கள்.

செயலின்மை ஒரு வகையான சேறு. அது மனிதனை அமிழ்த்தி வைத்துக்கொள்ளும். மனம் செயலற்றுக் கிடக்கையில் மகிழ்ச்சி  என்பது இருக்காது. ஆனால் அப்போது துயரம் எடை கூடிக்கொண்டே இருக்கும். செயல்வழியாக அமையும் நேர்நிலையான உளச்செயல் இல்லாத நிலையில் துயரை, கசப்பை பெருக்கிக்கொண்டு அந்த வெறுமையை நிரப்பிக்கொள்கிறார்கள். நான்  கிராமங்களில் சும்மா இருப்பவர்களை பார்க்கிறேன். மிக எளிய பிரச்சினைகளை பேசிப்பேசி பெருக்கி பூசல்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலான நேரம் பூசல், மனக்கசப்பு, வசை. எஞ்சிய நேரம் துயர்களையும் இடர்களையும் பேசிப்பேசி பெருக்கி புலம்புதல், சலித்துக்கொள்ளுதல்.

உடலுழைப்புத் தொழிலாளர்களைப் பார்த்தால் தெரியும். அவர்கள் கையில் காசில்லாமல் இருந்தால்கூட பலசமயம் வேலைக்குச் செல்லாமல் அப்படியே இருந்துவிடுவார்கள். எதற்காகவாவது முன்பணம் வாங்கினால் அதைச் செலவழித்துக்கொண்டு நாட்களை ஓட்டிவிடுவார்கள். அந்த முன்பணம் அப்படியே போய்விடும். வேலையும் நடக்காது, திரும்பவும் கிடைக்காது. அவர்கள் ஏமாற்றவில்லை. அவர்கள் இருக்கும் செயலின்மைநிலை அவர்களை அப்படி ஆக்குகிறது.

நம் கிராமங்களில், அடித்தட்டு வாழ்க்கையிலுள்ள இந்த செயலின்மை என்பது நம் சென்றகால நிலவுடைமைக்கால மனநிலையின் நீட்சி. அன்று ஒவ்வொன்றும் அறுதியாக வகுக்கப்பட்டிருந்தது. அதைச் செய்து அப்படியே வாழ்ந்து மறைந்தால் போதும். உயிரோடிருந்தாலே அது வாழ்க்கைதான். அப்படித்தான் நம் சமூகம் ஆயிரமாண்டுகளாக தேங்கிக்கிடந்தது. அந்த தேக்கநிலையை உருவாக்கிய சேறு நம் கிராமங்களில் இன்றும் எஞ்சியிருக்கிறது.

இன்னொருவகை செயலின்மை நம் நடுத்தர, உயர்நடுத்தர குடிகளில் பிறந்த இளைஞர்களுக்கு உள்ளது. அவர்களின் குடும்பங்கள் அவர்களை அரசகுமாரர்களை போல பேணி வளர்க்கிறார்கள். புகழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களை அரிய ரத்தினங்களென பெற்றோர் நினைக்கிறார்கள். காரணம் நம்முடைய சிறுகுடும்ப அமைப்பு. சென்ற தலைமுறையில் குழந்தைகள் கவனிப்பாரன்றி இருந்தன. இப்போது மிகையாகக் கவனிக்கப்படுகின்றன.

இந்த இரண்டாம்வகை இளைஞர்கள் மிகையான தன்னம்பிக்கை, அதன் விளைவான அலட்சியம், எதையுமே கற்றுக்கொள்ளாமலிருக்கும் மழுங்கல் ஆகியவற்றை அடைந்துவிடுகிறார்கள். அவர்களிடமும் ஆழமான செயலின்மை உள்ளது.

இவர்களைதிருத்தமுடியுமா? அனேகமாக முடியாது. அது நம் காலகட்டத்தின் பொதுச்சிக்கல். வரலாற்றுச்சூழல் உருவாக்கும் மாற்றமே அவர்களை மாற்றும். அவர்களில் ஒரு சிறிய சாராருக்கு உண்மையில் தாங்களிருக்கும் செயலின்மையின் சேறு பற்றி தெரியாது. சிலருக்கு தெரிந்தும் வெளியேற வழி தெரியாது. அவர்களுக்கு மட்டுமே உதவமுடியும். அவ்வாறு உதவ ஓர் அமைப்போ வழிகாட்டியோ முற்றிலும் இல்லை என்று ஆகிவிடக்கூடாது. அதற்கு நாம் ஏதாவது செய்யலாம். அவ்வளவு மட்டுமே செய்யமுடியும்.

பேசுவதும், கற்பனைசெய்வதும் எளிது. களத்திலிறங்கினால் பெரும் சலிப்புதான் வரும். நம் செயலின் சாத்தியங்கள்- விளைவுகள் சார்ந்து ஓர் மானசீகமான எல்லையை வகுத்துக்கொண்டால் அதை தவிர்க்கலாம்.

ஜெ

தன்னைக் கடத்தல் வாங்க

தன் மீட்சி வாங்க 

முந்தைய கட்டுரைநளினி சாஸ்திரி
அடுத்த கட்டுரைஅமெரிக்காவில் ஒளிர்ந்த காந்தியப் பேரொளி- அரவிந்தன் கண்ணையன்