தன்மீட்சி வாங்க
அன்புள்ள ஜெ!
மேலும் அன்புடன். உளவியல் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் படிகத்தெளிவான பதில்கள். மனதின் கசடுகளை நீக்கி தன்மீட்சி எனும் மாபெரும் நகர்வை நோக்கித் தங்களுடைய ‘தன்மீட்சி‘ தொகுப்பு என்னை கைபிடித்து அழைத்துச் செல்கிறது மெல்ல மெல்ல உறுதியாக.
பணம் மட்டுமே எல்லாம் என்ற நுகர்வு வெறி, உள்ளத்தின் அழகை வெடிவைத்து தகர்த்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அக அழகை மீட்டெடுக்க உதவுவதில் இந்த நூல் மிக முக்கிய பங்காற்றும் என நம்புகிறேன். தனித்தன்மை ஒரு அழகு. ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அழகுத் தன்மை மேலும் ஒளிர்ந்து வெளிவர இந்நூல் வழிகாட்டும்.
இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கேள்விகளிலும் பதில்களிலும் எனக்கானவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் வழி என் எண்ணங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். உதாரணமாக இலக்கியத்தின் மீதான ஈடுபாட்டால் மற்ற அலுவல்களில் காட்டிய சுணக்கத்தை உதறிவிட்டு இப்போது ஈடுபாட்டுடன் என் பிற அலுவல்களையும் கவனிக்கத்தொடங்கியிருக்கிறேன்.
‘சராசரி‘ அல்ல நான் என்ற எண்ணம் தலைதூக்க தொடங்கியிருக்கிறது. அதன் விளைவாக எல்லாவற்றையும் மனதிற்குள் அனுப்பிக்கொண்டிருந்த காது இப்போது தேவையானவற்றை மட்டும் தேர்வு செய்து அனுப்பத் தொடங்கியிருக்கிறது.
‘நேரமில்லை…இதற்கான நேரம் எனக்கு ஒதுக்கப்படவில்லை‘ என்ற தங்களின் உன்னதமான இந்ந வாக்கியத்தை மனது ஆழ்ந்து பிடித்துக்கொண்டுவிட்டது. மனச்சோர்வு வரும் நேரங்களில் மிக்க பயனளிக்கிறது. வெறும் புகழ்ச்சி என நினைக்கலாம். இல்லவே இல்லை. இந்நூல் முழுவதும் நம்பிக்கையின் வெளிச்சங்கள் பாய்ச்சப்பட்டிருக்கிறது. எவரும் தன்மீட்சி அடையலாம் – உணர்ந்து உள்வாங்கிக்கொண்டால். செயல்புரிவதன்வழி உண்மையான இனிமையை கண்டடைய உதவும் சாசனம். வயதால் நான் சற்று பின்தங்கி விட்டாலும் எண்ணங்கள் முழுவதும் இளமையின் மூச்சு ஓடிக் கொண்டிருப்பதால் ‘ எந்த காலத்திலும் எதையும் செய்யமுடியும். எதையும் தொடங்க முடியும்‘ என்ற தங்களின் கூற்றை மிகபலமாக பிடித்துக்கொண்டுவிட்டது மனது.
எனக்கு மேலும் பிடித்த வரிகள் சில:
‘ வாழ்க்கையின் போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை என்பது மிகச் சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம் பேரின் ஆசைகளும் வேகங்களும் முட்டிமோதும் ஒரு வெளி. தற்செயல்களினாலான மாபெரும் பின்னல். அதில் ஒருவர் செயல்படமுடியுமே ஒழிய விளைவைக் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. எதிர்பாராமைகள்தான் வாழ்க்கையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன‘
‘நீங்கள் எவர் என உணருங்கள். அந்த ஆணவம் உங்களை நிமிரச் செய்யட்டும்‘.
‘வாழ்க்கை என்பது ஏதோ ஒன்றை அடைவதற்காக வெல்வதற்காக நிகழ்வது என்ற எண்ணத்திலிருந்துதான் இத்தகைய பிரச்சனைகள் ( ஆர்வமின்மை, வேட்கையின்மை, எதிர்கால கனவின்மை போன்ற எண்ணங்கள்) ஆரம்பிக்கின்றன‘
‘ ஒருவர் தனக்கு எது முக்கியம் என உணர்கிறாரோ அதை செய்யமுடியும். பலசமயம் எளிய உலகியல் ஆசைகளால் அவர் தன்னைத் திசைதிருப்பிக் கொள்கிறார்.தன் அகத்துக்கு முக்கியமானதை அழித்துக்கொள்கிறார்‘.
‘குழந்தைகள் முன் நாம் இயல்பாக முழுமையாக நம்மை முன்வைத்தாலே போதுமானது‘
அறிவுத் திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல.சாதனைகள் செயல்முறையால் உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும் போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது‘
‘எந்த ஒரு தளத்திலும் செய்துப்பார்ப்பதே முக்கியமானது‘
‘ காலத்தின் முன் நான் என எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை தேவை‘
‘ உலகியலை கனவுகளுக்காக உதாசீனம் செய்தால் உலகியலுக்காக கனவுகளை கைவிடவேண்டியிருக்கும்‘
பரபரப்பான இக்காலச்சூழலில் மேற்படி எல்லோருக்குமான வெளிச்சத்தை தங்களின் எண்ணங்களின் வழி இடையறாது கொண்டுவரும் தங்களின் செயல்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன்.
Nights cannot grow darker after midnight.
அழகான தரமான தன்னறம் பதிப்பு. எண்ணங்கள் போல் எழுத்துக்களும் தெளிவாக அழகாக அச்சிடப்பட்டிருக்கிறது. தன்னறம் நூல்வெளி பதிப்பகத்தாருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
மிக்க அன்புடன்
பார்த்திபன்.ம.
காரைக்கால்