சாலமோனின் தோட்டம் – கடிதங்கள்

மலர்த்துளி வாங்க

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு,

மலர் துளி புத்தக அட்டை கொலுசை பார்த்ததுமே கை பரபரத்தது. உடனேயே ஆர்டர் செய்து விட்டேன்.இன்று மதியம் புத்தகம் வந்து சேர்ந்தது. ஒரே மூச்சாக படித்து முடித்து விட்டேன்.

12 கதைகளும்  வெவ்வேறு சூழலில் காதல் வயப்படுவது பற்றி. கடைசி கதையான “ஒரு மிக எளிய காதல் கதை”  மற்றும் மலர் துளி  தவிர மற்றது எல்லாம் கதை சொல்லி ஒரு ஆணின் பார்வையில் இருந்து. எதிலுமே காமமோ, தெய்வீக தன்மையோ இல்லாத எளிய இயல்பு காதல் கதைகள்.

கொலுசு,  வளையல், தயிர் கடையும் இயந்திரம் எனவே வெகு இயல்பாக அழகாகச் செல்கிறது.குரலைப் பார்த்து காதல் வயப்படுவது,  நிலைமையை பார்த்து என வெவ்வேறு நிகழ்வுகள்/ புள்ளிகள்.ஏற்கனவே  கேளா சங்கீதம் கதை படித்து இருந்தாலும், அதில் வந்த ஒரு வரி ” இவனுக்கு வெச்ச கைவிஷமாக இருந்திருக்காது . வேறு யாரோ, யாருக்கோ வைத்தது நடுவில் இவருக்கு வந்திருக்கலாம்.  Love potion மாற்றிக் கொடுத்து விடுவது என்பது மேலை இலக்கியங்களிலும் அதிகமாக காணப்படுகிறது ( Tristan and Isoholde)  ( Limerance  என்பது இப்பொழுது எல்லாம் ஒரு mental disorder ஆகவே  கருதப்படுகிறது. )

இன்றைய யுவன் யுவதிகளின் மன ஓட்டத்தை துல்லியமாக தொட்டு செல்லும் கதை ” கள்வன்” . ஆமா ஆமா இப்படித்தான் இருக்கிறார்கள் என்று மண்டையை ஆட்டிக் கொண்டே படித்தேன்.

நீங்கள் கூறியபடி 45 வயதுக்கு அப்புறம் காதல் கதைகள் எழுதுவது என்பது எவ்வித பூச்சு களும் இன்றி இயல்பான, நடைமுறையான, அழகான காதல் கதைகள்.

இக்கதைகளைப் படிப்பது மிக இனிய அனுபவமாக இருந்தது.

அன்புடன்,

மீனாட்சி

*

அன்புள்ள ஜெ

மலர்த்துளியில் இனி இரண்டு கதைகளே பாக்கி. இதுவரை நீங்கள் எழுதிய கதைகளில் இருந்து சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றன சில கதைகள். மலர்த்துளி, சுவை, என்னை ஆள, கள்வன் போன்ற கதைகள் முழுக்க முழுக்க நாம் காணும் அன்றாடம் சார்ந்தவை. டீடெயில் வழியாகச் செல்லும் கதைகள். ஒரு கணத்தை மட்டுமே சொல்பவை.

இந்தக் காதல்கதைகளில் நீங்கள் காதலின் பரவசத்தை பல வார்த்தைகளில் நுணுக்கமாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் காதலை மகத்துவப்படுத்தவில்லை. புனிதப்படுத்தவுமில்லை. அதை ஒரு இனிமையான கணம் மட்டுமாகவே இந்தக்கதைகள் சொல்கின்றன. அந்த நிதானம் முக்கியமான ஒரு கலையம்சமாக உள்ளது.

தொடக்கவரிகள் பைபிளில் உள்ளவை என நினைக்கிறேன். அவை அழகான பொருத்தமான ஒரு தொடக்கமாக உள்ளன. மாதுளை மலர்களுக்கு பெரிய மணமோ அழகோ கிடையாது. ஆனால் ஒரு தோட்டமாக அவை பூத்தால் நம்மைச் சூழ்ந்துவிரும் என்று நினைக்கிறேன். சாலமோன் இந்த பாடல்களை பாடியிருந்தால் அவர் பெரிய கவிஞர்.

எம். ராஜேந்திரன்

முந்தைய கட்டுரைசுப்ரமணிய ராஜு, ரம்யா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநளினி சாஸ்திரி