யோகம் – சங்கல்பத்தின் பெரு நதி- கடிதம்

‘யோகம் ஒன்றே நம்மை மீட்கும் வழி’ என முதல்கட்ட வகுப்பில் குரு சௌந்தர் சொன்னார். ‘எங்கிருந்து எங்கு மீள்வதற்கு?’ என்ற கேள்வி எழுவதற்கும், அதற்கான பதிலை அறிவதற்குமுண்டான தகுதியை தான், அடிப்படை பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதன் வழியாகவே பெற்றிருக்கிறேன் என்பதை இரண்டாம் கட்ட வகுப்பில் அறிந்தேன்.

கடந்த நான்கு மாதங்களில் 60 நாட்கள் பயிற்சிகளோடு கொண்டிருந்த தொடர்பின் மூலம் என் அன்றாட உடல் உபாதைகளாக இருந்த சைனஸ், தலைவலி, செரிமான கோளாறுகளில் இருந்து விடுபட்டிருக்கிறேன். இடையிடையே அலுவல் பணி, பயணம், மருத்துவ ரீதியான நாட்களில் பயிற்சி செய்ய முடியாமல் போயிருக்கிறது. அதற்காக, இயல்பாக எழ வேண்டிய குற்றவுணர்வோ, வருத்தமோ எனக்கு ஏற்படவில்லை. காரணம், இவையெல்லாம் ஏற்பட கூடாதென்று துவக்கத்திலேயே குரு அறிவுறுத்தியிருந்தார். குற்றவுணர்வு எங்கும் சிறு அளவேனும் இடைவெளியை உருவாக்கும். அவரவர் மனநிலையை பொறுத்து அந்த இடைவெளி வளரவும் கூடும்.

யோகம் என்னை நலமாக, ஆரோக்கியமாக, சமநிலையுடன் வைத்திருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது மட்டுமே யோகத்துடன் தொடர்பில் இருப்பதற்கான ஆதாரப்புள்ளி. பிற பயிற்சிகளைப் போல ஒற்றைப்படையான வாய்ப்புகளுக்கு மாறாக, பன்மைத்துவ சாத்தியங்களை யோகம் அளிக்கிறது. உடலுக்கு, மூச்சுக்கு, மனதுக்கு என தனித்தனியாக அளிக்கப்பட்ட பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றையாவது அன்றாடம் செய்வதன் மூலம் யோகத்துடன் தொடர்பிலேயே இருக்கிறோம் என்கிற எண்ணம் வலுப்பெறும். கொஞ்சம் கொஞ்சமாக யோகம் மனதுக்குள் ஒரு தொன்மமாக உருவெடுக்கும். பின்னர் யோகமே நம்மை வழிநடத்தும். அதுவே இரண்டாம் கட்ட பயிற்சிக்கான அழைப்புக்கு உடன்பட உந்திற்று.

“முதல்கட்ட அடிப்படை பயிற்சிகளின் மூலம் என் அவதானிப்பு உணர்வு கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் கோபம் வந்தால் எதையேனும் உடைத்து விட்டு, யாரையேனும் காயப்படுத்திவிட்டு சில கணங்களுக்கு பின்னரே என்ன நடந்திருக்கிறது என்ற பிரக்ஞை ஏற்படும். இப்போது கோபம் வரும் போதே, ‘என்ன செய்கிறாய் நீ?’ என்று என்னுள்ளே இருந்து ஒரு குரல் என்னை கேள்வி கேட்கிறது” என குருவிடம் சொன்னேன்.

குரு மௌனமாக புன்னகைத்து சொன்னார், “யோகத்தின் ஒட்டுமொத்த நோக்கமே அது தான். புற உடலையும், அக உடலையும் அவதானிக்க துவங்கி அதன் வழியாக மனதையும், சித்தத்தையும் அவதானிக்க முடியும். அதுவே பின்னர் ஆனந்தநிலையுள்ள மனிதனாக நம்மை மாற்றும்”

மொத்தமாக யோகத்தின் மூலம் உடல், உள ஆற்றலை பெருக்கவும், பெருகிய ஆற்றலை சேமிக்கவும், சேமித்த ஆற்றலை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்குமுண்டான பயிற்சிகளை இரண்டாம் கட்ட வகுப்பில் குரு பயிற்றுவித்தார். ஒவ்வொரு சாதனாவையும் வெறும் பயிற்சியாக கற்பிக்காமல், அதனதன் வரலாற்று, தத்துவ பின்னணியோடு சேர்த்து நவீன அறிவியல் ஆய்வுகளையும் முன்வைத்தே கற்பித்தார். இப்படி கற்கும் ஒரு கல்வியின் மீது எக்காலமும் சந்தேகமும், அலட்சியமும் எழாது. சந்தேகமும், அலட்சியமும் இல்லாத ஒரு கல்வி ஆயுளுக்கும் உடனிருக்கும். உள்ளிருந்து அதனருளால் இயக்கும்.

“எவ்வளவு நேரம் விழித்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. விழித்திருக்கும் நேரம் முழுவதும் எவ்வளவு தீவிரத்துடன் இருக்கிறோம் என்பதே முக்கியம். இளையராஜா மற்றும் என்னைப் போன்றோர் அப்படி தீவிரமாக இருப்பதன் மூலமே படைப்பூக்கத்துடன் இருக்கிறோம்” என ஒரு நேர்காணலில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்னை அலைக்கழித்தன. குருவிடம் இதைப்பற்றி கேட்டேன். “இரு விதமான வழிகளில் அந்த சாத்தியங்களை சென்றடையலாம். எதைச் செய்தாலும் முழு அவதானிப்புடன், எவ்வித கவனச்சிதறலும் இல்லாமல் குறைந்தபட்சம் 2.40 மணி நேரமாவது உளஊன்றுதலுடன் செய்ய வேண்டும். அப்படி செய்து செய்து பழக்கப்பட்ட மனதால் மட்டுமே தீவிரத்துடன் இயங்கவும், எப்போதும் படைப்பியல்புடனும் இருக்க முடியும். கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், விஞ்ஞானிகள் கண்டடைந்த இது ஒரு வழி. இன்னொரு வழி யோகம். முதல் வழி, ஒரு செயலை சரியாய் செய்வதன் மூலம் யோகியாக இருப்பது. இரண்டாம் வழி, யோகியாக மாறுவதன் மூலம் ஒரு செயலை சரியாய் செய்வது. இரண்டும் ஒரே இலக்கின் இரு பாதைகளே” என விளக்கினார்.

முதல்கட்ட வகுப்பில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே இரண்டாம் கட்ட வகுப்பில் பங்கேற்றோம். எனவே குருவுடன் உரையாடுவதற்கான நேரம் அதிகம் வாய்த்தன. உரையாட உரையாட குரு நெருங்கி வந்தார், அருகமர்ந்தார். பயிற்சிக்கு அப்பால் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் விடுகதைகள், பாட்டுக்கு பாட்டு விளையாடியது என எங்களோடு எவ்வித விலக்கமுமின்றி முழு கொண்டாட்ட மனநிலையிலேயே குரு பங்குகொண்டார். எப்படி இவரால் ஒரே நேரத்தில் குருவாகவும், குழந்தையாகவும் இருக்க முடிகிறது என யோசித்தேன். குழந்தையாக இருக்க முடிவதால் தான் இவர் குருவாக இருக்கிறார் என மூளையின் இருட்குகைக்குள் ஒரு கைவிளக்கு தானாக பற்றிய போது சிரித்துக்கொண்டேன்.

உண்மையில் உடலாகவும், உளமாகவும் மீண்டும் குழந்தையாக மாறுவதற்கான பயிற்சியை தான் குரு யோகம் வழியாக அளித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கையில் அது பிறிதொன்றிலா பாதுகாப்பு உணர்வை அளித்தது.

இரண்டாம் கட்ட பயிற்சியில் முக்கியமானதென குரு கற்பித்தவற்றில் ஒன்று – சங்கல்ப யோக நித்ரா. இது சாதனா மூலம் நாம் பெருக்கும் ஆற்றலை சரியாக பயன்படுத்திக்கொள்வதற்கான பயிற்சி. பெருக்கிய ஆற்றல் நமக்கும், உலகுக்கும் என்னவாக பயன்பட வேண்டும் என நாமே முடிவு செய்வதற்கான வாய்ப்பை அளிக்கும். யோக நித்திரையின் போது நாம் எடுக்கும் சங்கல்பம் நிச்சயம் நிறைவேறும் என குரு ஆசியளித்தார். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் யோகி சத்தியானந்தர் போன்றோர், யோகம் உலகுக்கு பயன்பட வேண்டும் என நினைத்து எடுத்த சங்கல்பம் எனும் பெரு நதியின் ஒழுக்கில் இன்று சிறு துளியாக நாமும் இணைந்திருப்பதை உணர்கையில் இதுவரை ஒட்டிக்கொண்டிருந்த ‘சராசரிகள்’ மொத்தமும் கழன்று விழுந்து உடைந்து நொறுங்கும் சப்தம் எழுகிறது. பறந்தெழும் சிறு இறகென சித்தம் நித்ய வனக் காட்டினுள் உலவத்துவங்குகிறது.

வெற்றி.

முதல்கட்ட வகுப்பு குறித்த என் கடிதம். தங்கள் நினைவூட்டலுக்காக.

யோகம் – நல்லூழ் விளைவு

முந்தைய கட்டுரைபேய், மனப்பிறழ்வு – கடிதம்
அடுத்த கட்டுரைகுருகு – வளவதுரையன்