மாயக்கொந்தளிப்பு, கடிதங்கள்

மாயக்கொந்தளிப்பு: அழகிய மணவாளன்

அன்புள்ள ஜெ,

நீங்கள் என் கட்டுரையை பற்றி எழுதியது மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது. கதகளியை நான் அழகியல்ரீதியாக அறிந்துகொண்டது உங்களாலும்; எழுத்தாளர், நண்பர் அஜிதன் வழியாகத்தான். நாங்கள் பாலிவிஜயம் கதகளி பார்க்கும்போது அஜிதன் அதன் நுட்பங்களை சுட்டிக்காட்டியபடியே இருக்க சட்டென கதகளி எனக்கு அணுக்கமாக ஆன அந்த இரவு இன்றும் நினைவிலிருக்கிறது. அதைப்பற்றி விரிவாக கதகளி அனுபவம் என்ற கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த கட்டுரைக்கு எழுத்தாளர், நண்பர் விஷால்ராஜாவின் பங்களிப்பு முக்கியமானது. கதகளி சார்ந்து நான் பரவசத்துடன் அவரிடம் பேசினேன். அவருடன் உரையாட தொடங்கியதும் அவர் என்னால் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை அளித்தார். இந்த எழுத்துவடிவத்தை அவரிடம் பேசிப்பேசி தான் நான் உருவாக்கிக்கொண்டேன், அந்த கட்டுரையை வெவ்வேறு வடிவங்களில் திரும்பதிரும்ப எழுதி அவருக்கு அனுப்பினேன், ஒவ்வொன்றையும் வாசித்து விரிவாக்க வேண்டிய இடங்களை, மாற்றங்களை சொன்னார். உரைநடையை கச்சிதமாக ஆக்க வழிமுறைகள் சொன்னார். அவர் புனைவாசிரியர், அந்த நேரத்தை நான் மிகையாக எடுத்துக்கொள்கிறேன் என்ற குற்றவுணர்வு எனக்கு இருந்தது. அகழ் இதழின் ஆசிரியர், எழுத்தாளர் அனோஜனின் சில ஆலோசனைகளும் கட்டுரையை முழுமையாக்க உதவியது.

என் கலைசார்ந்த நுண்ணுணர்வின் அடிப்படைகளை வளர்த்துக்கொண்டது நண்பர் ஈரோடு கிருஷ்ணனிடம் தொடர்ச்சியாக பேசி, உரையாடியது வழியாகத்தான். கலை சார்ந்த அவருடைய வாசிப்பையும், எண்ணங்களையும், கேள்விகளையும் அவர் பரிசீலித்துப்பார்க்க சொன்னவைவற்றையும் ஏற்றும் மறுத்தும்தான் நான் என் கலை சார்ந்த நுண்ணுணர்வை வளர்த்துக்கொண்டேன். அதைவிட என் ஆளுமையில் இருந்த காரணமற்ற தயக்கங்களிலிருந்து, தாழ்மையுணர்ச்சியிலிருந்து வெளிவந்தது ஈரோடு கிருஷ்ணனின் வழிகாட்டுதலால்தான். ஒருவன் பயணம் செய்ய முடியும் என்ற சாத்தியத்தை அறிந்துகொண்டதே அவர் அழைத்துச்சென்ற பயணங்களிலிருந்துதான்.

என் கலை சார்ந்த பயணத்தில் பாரியும் உடனிருந்தான். அவனும் நானும் இணையாகவே உரையாடி கலையை அறிந்துகொண்டோம். நல்ல கதகளிகளையும், சரியாக அமையாத கதகளிகளை சேர்ந்தே பார்த்தோம்.

அன்புடன்

மணவாளன்.

*

அன்புள்ள ஜெ

மாயக்கொந்தளிப்பு அழகான கட்டுரை. ஒரு நல்ல இலக்கியப்படைப்பை வாசிப்பதுபோல அதை வாசித்தேன். நக்ரதுண்டி கதாபாத்திரம் கம்பனின் சூர்ப்பனகைக்குச் சமானமாக கதகளியில் விரித்தெடுக்கப்பட்டுள்ளது. அழகு – கொடூரம் என்னும் இரு எல்லைகளுக்கு ஒரே கதாபாத்திரம் செல்லும் தீவிரத்தை அழகாக, மிகச்சிறப்பான மொழியில் அழகிய மணவாளன் எழுதியிருக்கிறார். அண்மையில் வாசித்த மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று இது. நீங்கள் சொன்னதுபோல கட்டுரையே ஒரு கலையனுபவமாக அமைந்துள்ளது

இளம் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

எம்,ராஜசேகர்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு
அடுத்த கட்டுரைராஜா நினைவுகள்