மலம் என்ற ஊடகம் – ஜெயராம்
அன்புள்ள ஜெ
ஜெயராமின் மலம் என்ற ஊடகம் கட்டுரையை குருகு இதழில் வாசித்த பின்னர் அவருடன் சில நாட்கள் உரையாடினேன். இன்று தளத்தில் சுட்டியை பார்த்தவுடன் உங்களுக்கு எழுத வேண்டும் என தோன்றியது.
பியாரோ மன்சோனி என்ற கலைஞனை அறிமுகப்படுத்தி ஒரு சிறிய சரியான சீண்டலுடன் தொடங்கும் கட்டுரை வரலாற்றின் வழியாகவும் மானுட இயல்புகளின் வழியாகவும் தான் எடுத்து கொண்ட கருத்தை தெளிவாக வரையறுத்து அடிப்படை கேள்விகளை உருவாக்கி விடுகிறது. மலத்தை குழந்தைகள் கையாள்வது குறித்த அவதானிப்பு புத்தம் புதியதும் கூரியதுமாகும். அதனுடன் பியரோ மன்சோனி என்ற கலைஞனையும் பைத்தியக்காரன மனோநிலையையும் இணைத்து அவர் விளக்குவது அக்கருத்தை முற்றிலுமாக ஏற்க செய்கிறது. மொத்த கட்டுரையையும் வாசித்த பின்னர் கலையில் என்றால் என்ன என்னும் கேள்வி அலையாக எழுந்து நிற்கிறது.
அந்த கேள்விக்கு இப்படி விடை சொல்லி பார்க்கலாம் என முயன்றேன். சற்று பைத்தியக்காரத்தனமாக எண்ணமே தான். ஜெயராம் அண்ணா ஒரு கட்டத்தில் என்ன சொல்கிறாய் புரியும்படி சொல்லுங்கள் என்று கேட்டே விட்டார். உங்களிடமாவது புரியும்படி சொல்கிறேனா என்று பார்ப்போம். அதாவது குழந்தை உணவு உண்ணுகிறது, மலம் கழிக்கிறது. குழந்தையின் அறிவுக்கு தர்க்கப்படுத்தி உணவு உண்ணுவதால் மலம் கழிகிறது என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் ஆழம் அறியும். கழிக்கப்பட்ட மலத்திலிருந்து தான் காணப்பட்ட உலகத்தை உருவாக்க முனைகிறது. இங்கே இணைப்பாக பொதுவாக குழந்தைகள் ஆரம்பத்தில் உலகமே ஒரு உண்ணும் பொருள் என்று நினைக்கின்றன என்பதை கருத்தில் கொள்வோம். அடுத்து கலைஞர்களின் கலை செயல்பாட்டிற்கு வருவோம். கலைஞர் ஒரு அனுபவத்தை எதிர்கொள்கிறான். அது வயிற்று சோற்றை போல உள்ளத்திற்கு ஊக்கம் கொடுக்கிறது. பின்னர் காலம் கடந்த பின்னர் அவ்வனுபவம் மறைந்து – சோறு தின்ற சுகம் கரைந்து – மலம் போல நினைவுகள் மட்டுமே கையில் கிடைக்கின்றன. இப்போது கையில் கிடைக்கும் நினைவுகளை வைத்து அவை உருவாக்கிய அனுபவங்களை மீண்டும் புதிதாக உருவாக்க நினைக்கிறான். ஒவ்வொரு கலைஞனும் தனக்கேயுரிய வெவ்வேறு ஊடகம் ஒன்றை தேர்ந்தெடுக்கிறான். ஆக இந்த இடத்தில் நினைவுகளை மலத்துக்கு இணையாக்கி வைத்தேன். இது கொச்சைப்படுத்தல் போலவே தோன்றலாம். நான் என்ன சொல்கிறேன் என்றால் மலம் கழிக்காமல் வாழ முடியாது. சோறு போலவே அதுவும் முக்கியம். நினைவுகள் இல்லாமல் வாழமுடியாது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் முழுக்க அதை தூக்கி செல்லவும் முடியாது. எனவே மலத்தை மண்ணிட்டு மூடுவது போல பெரும்பாலான நினைவுகளை குழி தோண்டி புதைத்து விட்டு முளைத்து விதைகளை கையில் வைத்து செலவு செய்கிறோம். கலைஞர்கள் அதை படைப்பூக்கமிக்க வகையில் முற்றிலும் வேறொன்றாக மாற்றி விடுகிறார்கள்.
இப்போது ஓரளவு சரியாக சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுந்து நிற்கிறது. சரி நீ சொல்வது போல் வைத்து கொண்டால் கூட எந்த கலைஞனும் அவன் காணும் உலகத்தை அப்படியே உருவாக்க விரும்புவதில்லையே ? ஆம் எனினும் இங்கே முற்றிலும் இல்லாத ஒன்றை உருவாக்கப்படுவது கலையென ஏற்று கொள்ளப்படுவதில்லை. அவன் செய்வதெல்லாம் இருப்பவற்றை கற்பனையால் செறிவாக்கி அர்த்தமுள்ள இணைவை தானே! மறுபக்கம் மலத்தை தொடும் குழந்தை அப்படியாக நினைக்கிறது என்று கேட்டால் ஜெயராம் அவர்கள் சொல்வது போல வளரும் குழந்தை வேறொரு ஊடகத்தை தேர்ந்தெடுத்து கொள்கிறது போல் கலைஞனும் செய்கிறான் என்று நினைக்கிறேன்.
இந்த சிந்தனையே ஒருவகை கோளாறு கொண்டதாக இருப்பதாகவே படுகிறது. எனக்கு தோன்றிவிட்டது என்பதனாலேயே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற பதட்டமாக இருக்கலாம். இதை பார்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜெ ?
அடுத்து இக்கட்டுரையை தொட்டு இன்னொரு விஷயத்தையும் பேச வேண்டும். கட்டுரையின் பிற்பகுதியில் நுகர்வு கலச்சாரத்தின் பாதிப்புகளால் இன்று பிரம்மாண்டமான கலைப்படைப்புகளை உருவாக்குவதில் சிக்கல்களை பேசுகிறார். அதை வெல்லும் வழியாக குறுகிய நேர படைப்புகளை கலைஞர்கள் கையாளும் முறைகளை விவரிக்கிறார். இந்த பகுதியை அண்மையில் நீங்கள் ராஜமாணிக்கம் அவர்களின் பொறியாளர் சங்க தலைமை ஏற்பு விழாவில் பேசிய விஸ்வகர்மா மயன் சிற்பி உருவகத்துடன் இணைத்து பார்க்க முடியுமா என யோசித்தேன். அந்த உரையில் எளிமையான காலங்கடந்து நிற்கும் படைப்புகளை உருவாக்கும் முறைக்கு விஸ்வர்மாவையும் அதற்கு உதாரணமாக அமராவதியும் அளகாபுரியும் இருக்கிறது என்றும் காலத்தை எதிர்த்து ஒரு அறைகூவலாக பெரும் படைப்புகளை உருவாக்கும் முறைக்கும் மயனையும் அதற்கு உதாரணமாக அசுர நகரங்களும் மனிதர்களின் நகரங்களும் இருக்கின்றன என்றீர்கள். புராணங்கள் மயனால் கட்டப்பட்ட கோட்டைகள் அனைத்தும் அழிவதையே காட்டுகின்றன என்று கூறினீர்கள். சிங்கப்பூரில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரும் கட்டிடங்கள் இடித்து கட்டப்படுவதை எடுத்துகாட்டி இது மயன்களின் காலம் என்று சொன்னீர்கள்.
ஜெயராம் அவர்கள் குறிப்பிடும் கலைஞர்களை விஸ்வகர்மாக்கள் என்று குறிப்பிட முடியுமா என கேட்டு கொண்டு அவரிடம் சொன்னேன். அப்படி குறிப்பிடுவது பொருத்தமில்லாததாக தனக்குப்படுவதாகவும் ஏனெனில் விஸ்வகர்மா செய்பவை அழிவற்றவை என்று குறிப்பிடுகின்றன. இவர்கள் செய்வது அப்படியல்ல. எனவே இக்கட்டுரையுடன் ஜெ கூறிய உருவகம் பொருந்தவில்லை என்று விளக்கினார்.
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது கட்டுரைக்கு வெளியில் இணையாக ஒரு சிந்தனை எழுந்து வந்தது. அதை நீங்கள் சொன்ன உருவகத்துடன் கூறினால் குழப்பமே எஞ்சுகிறது. விஸ்வகர்மா மயன் உருவகத்தை உடன் இணைக்காமல் தனியாக பார்த்தால் முக்கியமானதாகப்படுகிறது என்று ஜெயராம் அண்ணா அடையாளப்படுத்தி காட்டினார். அது என்னவெனில் வரலாற்றை பழங்காலம் முதல் இன்றுவரை ஓட்டி பார்க்கையில் அதன் வளர்ச்சியில் ஒரு மாற்றம் தெரிகிறது. பழங்காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஏதோ ஒருவகையில் பண்பாட்டுடனும் மதம் மற்றும் ஆன்மீகத்துடனும் இணைக்கப்பட்டிருந்தன. என் எளிய அறிவில் இரு உதாரணங்களை சொல்லி பார்க்கிறேன். எகிப்திய பரோக்களின் அரண்மனையை விட மறு உலக வாயிலாக கருதப்பட்ட பிரமீடுகள் பிரம்மாண்டமானவையும் உறுதியானவையும் ஆகும். ராஜராஜனின் அரண்மனையை விட தஞ்சை பெரிய கோவில் வானளாவிய கலை சிறப்புமிக்கதுமாகும். ஆனால் இந்த அம்சம் நூற்றாண்டுகள் செல்லச்செல்ல பிரம்மாண்ட தன்மையும் நுட்பமும் அதிகமும் உலகியல் பயன்பாடு மிக்க அரண்மனைகளுக்கு இடம் பெயர்கிறது. இன்று அது நுகர்வின் மையமாக விளங்கும் புர்ஜ் கலிப்பாவாக வானோங்கி நிற்கிறது எனலாம்.
அப்புறம் உங்கள் உருவகத்திற்கு வருவோம். ஜெயராம் அண்ணா தன் கட்டுரையுடன் இந்த உருவகத்தை இணைக்க வேண்டாம் என்று சொன்னதுடன் உங்களுடைய உருவகத்திலேயே ஒரு பிரச்சனை இருப்பதாக கூறினார். அதாவது விஸ்வகர்மா கட்டிய அமராவதியும் அளகாபுரியும் பொன் மணியும் இழைத்து உருவாக்கப்பட்டவை என்று தான் குறிப்பிடுகின்றன. அவற்றை எப்படி எளிமையானவை என்று எடுத்து கொள்ள இயலும் ? மேலும் எளிமையான ஒன்று காலத்தால் அழியாத ஒன்று என்றால் என்ன ?
வெண்முரசு நூல்கள் வாங்க
இந்த கேள்வி உங்கள் பார்வைகளையும் படைப்புகளையும் குறித்து சற்று சிந்திக்க செய்தது. என்னை பொருத்தவரை ஒரு நல்ல படைப்பாளி கருத்திலிருந்து படைப்பிற்கு செல்வதில்லை. மாறாக படைப்பிலிருந்து கருத்துகளை அடைகிறார். எனவே உங்களுடைய பார்வைக்கான வெண்முரசில் இருப்பதாக நினைக்கிறேன். குறிப்பாக கிராதம் அத்தியாயம் 25. அவ்வத்தியாயத்தில் இடம்பெறும் பின்வரும் பகுதிகள்,
“அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்தேன். வேதத்தின் அச்சொல்லை மட்டுமே இங்கு நான் ஓதிக்கொண்டிருக்கிறேன். அச்சொல்லாக நிறைந்துள்ளது இக்காடு” என்றார் சௌம்யர். அர்ஜுனன் நீள்மூச்சுடன் உடல் எளிதாக்கி புரண்டு படுத்தான். அவன்மேல் பனிக்கால நிலவு செம்பொன்னொளியுடன் நின்றது. “அச்சொல் எது?” என்று அவன் கேட்டான். “ஹிரண்ய” என்றார் சௌம்யர். “பொன் எனும் சொல். வேதம் பிரம்மத்தையும் கூழாங்கல்லையும் அனலையும் இளந்தளிரையும் அதைக்கொண்டே குறிக்கிறது.”
*
விழிப்பு வந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது. தன்னைச்சூழ்ந்த பொன்னொளியைக் கண்டு திகைத்தபடி எழுந்தான். சூழ்ந்திருந்த அத்தனை மலைகளும் பொற்கூம்புகளாக ஒளிவிட்டன. முகில்கள் பொற்சுடர்களாக எரிந்தன. அவன் நின்றிருந்த மண்ணும் அருகிருந்த சேறும் கூழாங்கற்களும் பொன்னென்றாகிவிட்டிருந்தன. அவன் மெல்ல நடந்து அச்சுனையை அணுகினான். அது பொன்னுருகி ததும்பியது.
அவன் அதனருகே நின்று குனிந்து நோக்கினான். உள்ளே பொன்மலைகள் எழுந்த ஒரு வெளி தெரிந்தது. அதை ஊடுருவிச்சென்றது பொன்னாலான பாதை ஒன்று. அவன் கால்கள் நடுங்கின. தன் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே குதித்துவிடுவோம் என அவன் அஞ்சினான். ஆனால் பின்னகரக்கூடவில்லை. பொன் அவன் சித்தத்தை நிறைத்தது. அனைத்து எண்ணங்களும் பொன்னென்றாயின.
அவன் விழிகளை மூடித்திறந்தான். நீரில் எழுந்த அவன் பாவை அவனை விழி மூடாது நோக்கியது. “விலகு… நான் உன்பாவை” என்றது. “தன் பாவைகளால்தான் ஒவ்வொருவரும் ஆழங்களுக்குள் கவரப்படுகிறார்கள்.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “பொன்னொளிர் பாவை! இதுநாள் வரை எங்கிருந்தது இது?” அது சிரித்தது. “நான் நீ….” அவன் பின்னகர விரும்பினான். ஆனால் அப்புன்னகை அவனை கவ்வி வைத்திருந்தது. “நீ விலகு என்கிறாய். ஆனால் என்னை ஈர்க்கிறாய்.” அது நகைத்தது. “ஆடிப்பாவைகள் அனைத்துமே அப்படித்தான்.”
அவன் இருமுறை தள்ளாடினான். விலகு விலகு. இதுவே தருணம். விலகிவிடு. அவ்வெச்சரிக்கை ஒலியே அவனைச் சீண்டி முன் செலுத்தியது. எம்பி அந்நீரில் பாய்ந்தான். நீர் என அவனை அள்ளி அணைத்து குளிரக்குளிர இறுக்கி உள்ளிழுத்துக்கொண்டது அது. பின்னர் அவன் இருபக்கமும் பொன்னிற அலைகளாக மலைகளை காணத்தொடங்கினான். எரிந்தபடி பொன்முகில்கள் நெளிந்தன. பொன்னாலான பாதை சுருளவிழ்ந்து நீண்டு அவனை கொண்டுசென்றது.
இந்த பயணம் ஒருபுறம் குழந்தைகளின் கனவுக்குரிய மிகுபுனைவு தன்மையை கொண்டிருந்தாலும் அர்ஜுனனின் பயணம் இயற்கையில் அமைந்த பொற்தருணத்தின் ஊடாக அகப்பயணம் என்பது குறிப்புணர்த்தப்பட்டு விடுகிறது. இதன் அடிப்படையில் விஸ்வகர்மா என நீங்கள் குறிக்கையில் இயற்கையில் அமைந்த பொற்தருணத்தை குறிப்பிடுகிறீர்கள் என புரிந்து கொண்டதாக விளக்கினேன். இருப்பினும் அழிவற்ற தன்மையை சொல்கிறாரே அதற்கு என்ன சொல்வது என்றார் ஓவியர் அண்ணா. அப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை. நம் இருவரில் முதலில் யார் ஜெ வை சந்தித்தாலும் கேட்டு தெரிந்து கொண்டு பிறருக்கு பகிர்வோம் என முடிவு செய்து உரையாடலை நிறைவு செய்தோம். இப்போது ஒரு பதில் தோன்றுகிறது. பொதுவாக அழிவற்ற ஒன்று எளிமையானதாக நம்முன் வர இயலாது என்ற கற்பிதம் சமூகத்தால் வழங்கப்படுகிறது. இக்கருத்து நம் ஆணவத்தை நிறைவு செய்வதால் ஆழப்பதிந்து விடுகிறது. ஆனால் இயற்கையின் மகத்தான விஷயங்கள் அனைத்தும் நம்முன் மிக எளிய உருவில் அல்லவா வந்து நிற்கிறது. உதாரணத்திற்கு மாலை கதிரணைதலை எடுத்து கொள்வோம். ஒவ்வொரு மாலை கதிரணைவின் ரேகையும் என் வீட்டு முற்றத்தில் இருந்து பார்க்கையில் என்னை நிறைவுற செய்பவை. நாளொரு மேனி என புதிய வண்ணங்களுடன் பொலிவது. அது எனக்கு மட்டுமே உரியதல்ல, உயிர் குலம் அனைத்திற்கும் வழங்கப்படுகிறது. தன்னளவில் மகத்தானது. ஆனால் அது என்றும் வரும் எப்போதும் இருக்கும் என்ற எளிமையினாலேயே மனிதர்களால் புறந்தள்ளப்படுவது.
இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை தான் நீங்கள் வழங்குவீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்தை சொன்னால் உங்களுக்கும் படைப்புகளுக்கும் உள்ள உறவை அறிய வாசகர்களாகிய எங்களுக்கு ஒரு வாசல் திறக்கும்.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள சக்திவேல்
ஒரு படைப்பின் மீதான வாசகனின் எண்ணங்கள் முற்றிலும் அவனுக்குரியவை. அவனுடைய பயணம். அதில் ஆசிரியர் கருத்து கூற ஏதுமில்லை.