பொன்னியின் செல்வன் 2 வெளிவந்ததும் பலவகையான கடிதங்கள். பல விமர்சனங்களை அனுப்பியிருந்தனர். எந்த சினிமாக்காரரையும்போல நானும் தேர்ந்தெடுத்த சில விமர்சனங்களைத் தவிர எஞ்சியவற்றை படிப்பதில்லை.
டிவிட்டரில் முகம் தெரியாத ஏராளமான ரசிகர்கள் கூர்மையான வசனங்களில் ஒவ்வொரு கதைமாந்தரும் வெளிப்படுவதை பாராட்டியிருந்தார்கள். குறிப்பாக வேற்றுமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வசனங்களை அங்குள்ளோர் பெரிதும் பாராட்டியிருந்தனர். தமிழ் விமர்சகர்கள் எவரும் ஒருவரியும் பாராட்டாகச் சொல்லப்போவதில்லை, எதிர்மறையாகவோ கேலியாகவோ சிலர் எழுதுவார்கள்.
இங்கே சினிமா விமர்சனம் என்பது இரண்டாம்நிலை எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக ஆசைப்படும் இதழாளர்களால்தான் அதிகமும் செய்யப்படுகிறது. அவர்களுக்கு பொதுவே என் மேல் நல்லெண்ணம் இல்லை. (நான் செய்த இலக்கிய விமர்சனங்களுக்குப்பின் அப்படி ஒரு நல்லெண்ணம் இருந்தால்தான் அது ஆச்சரியம்) அண்மையில் ‘இலகு ரக’ அரசியல்வாதிகளும் முழுநேர சினிமா விமர்சகர்களாக ஆகியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் சினிமா பஞ்சாயத்துக்கு அமர்கிறார்கள்.
அத்துடன் வசனத்துக்கான பாராட்டுக்கள் இந்தப்படத்திற்கு அதிகம் வராது. இது காட்சிகளாலான படம். வசனங்கள் காட்சியழகை மறைப்பவை. பேசும் கதாபாத்திரங்கள் இருந்தால் அந்த காட்சியின் ஒளியை, சட்டகத்தை ரசிகர்கள் கவனிக்கவே மாட்டார்கள். ஆகவே சுருக்கமான, தேவையான சொற்கள் மட்டுமே அடங்கிய வசனங்கள்தான் உள்ளன. ஏறத்தாழ புதுக்கவிதையின் இலக்கணம்.
நான் வசனகர்த்தாதான், ஆனால் சினிமா வசனத்தாலானது என நம்புபவன் அல்ல. சினிமாவை விட்டு உந்தி நிற்கும் வசனங்களை எழுதுவதுமில்லை. என் வசனங்கள் நினைவில் நீடிக்கும், ஆனால் கொஞ்சகாலம் ஆகும். நான் கடவுள், அங்காடித்தெரு படங்களுடன் வந்த மற்ற படங்கள் எவையென்றே இன்று எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் ‘தீயிலே என்னடா சுத்தமும் அசுத்தமும்’ ‘விற்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ ‘யானை வாழுற காட்டிலேதா எறும்பும் வாழுது’ போன்ற வரிகள் இன்று பழமொழிகளாகவே ஆகிவிட்டன.
சினிமாக்களில் கதைக்கட்டமைப்பில், கதாபாத்திர அமைப்பில் என் பங்களிப்பும் பெரிதாக வெளித்தெரியாது. சினிமா என் தொழில். இதில் பணம், அதை அளிக்கும் மதிப்பு தவிர எதையுமே நான் எதிர்பார்ப்பதுமில்லை. ஆகவே முதல் மூன்று படங்களுக்குப்பின் விமர்சனங்களை பெரும்பாலும் வாசிப்பதில்லை. 16 ஆண்டுகளில் என் சினிமாக்கள் பற்றி வந்த விமர்சனங்களில் மிகமிகச் சிலவற்றையே வாசித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த டிவிட் பாராட்டுக்கள் கொஞ்சம் உற்சாகத்தை அளித்தன.
பெரும்பாலும் சினிமா வெளியாகும் நாளில் தீவிரமான வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அதில் மூழ்கியிருப்பேன். அந்த சினிமாவையே பல நாட்கள் கழித்துத்தான் பார்ப்பேன். இன்று இன்னொரு சினிமாவுக்கான வேலையாக மிக அவசரமாகச் சென்னை வந்தேன். இரு சந்திப்புகள். மூன்று காணொளிப் பேட்டிகள். அவ்வளவுதான் நாள் கடந்துவிட்டது. பொன்னியின் செல்வனை நானும் கடந்துவிட்டேன். இன்று மணி ரத்னத்திடம் ஐந்து நிமிடம் பேசினேன். அவர் சிரித்ததில் இருந்த உற்சாகம் நிறைவளித்தது. சினிமாவில் உள்ள அழகிய தருணங்களில் ஒன்று இது. இந்த நாளுக்கு இது போதும்
*
கேள்விகள் பற்றி…
இக்குறிப்பை புனைவுக்கலை, திரைக்கலை ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே எழுதுகிறேன். எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் ஏற்கனவே எல்லாமறிந்தவர்களாக எண்ணிக்கொள்பவர்களுக்காக அல்ல.
பொன்னியின் செல்வனில் சில மாற்றங்கள் இருப்பதையே பலர் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.அவை ஒரு நாவல் சினிமாவாக ஆகும்போது தேவையானவை. அவற்றைச் செய்யவே எழுத்தாளன் திரைக்கதைக்குத் தேவையாகிறான்.
ஏன் மணிமேகலை முதலியோர் இல்லை?
ஒரு சினிமா அதன் உச்சத்திருப்பக் காட்சிக்குப் பின் நேராக இறுதியுச்சம் (கிளைமாக்ஸ்) நோக்கித்தான் செல்லமுடியும். அதுவரை போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கவேண்டும். கதாபாத்திரங்களுக்கெல்லாம் ஒரு உச்சகட்டமும் முடிவும் தேவை. ஆகவே மேலும் புதிய முடிச்சுகளை, புதிய பிரச்சினைகளை, புதிய கதைகளை அது எடுத்துக்கொள்ள முடியாது.
நாவலுக்கும் இது நிபந்தனையே. ஆனால் பழைய நாவல்கள், குறிப்பாகத் தொடர்கதைகளாக வெளிவந்தவை இவற்றை கவனத்தில் கொள்ளவில்லை. அன்றைய வாசகர்களுக்கும் அது சிக்கலாகப் படவில்லை. அன்று தமிழில் மொத்தமே மூன்று வார இதழ்களிலாக ஏழு புனைவுகளே வாசிக்கக்கிடைத்தன என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்.
ஆதித் தகரிகாலன் கொலைதான் பொன்னியின் செல்வனின் உச்சத் திருப்பம். அதன்பின் எஞ்சியிருப்பது ஏறத்தாழ ஒருமணி நேரம். அதாவது முப்பது அல்லது முப்பத்தைந்து காட்சிகள். அந்த நேரத்தில் மணிமேகலையின் காதல், கந்தமாறனின் வாழ்க்கை என புதிய கதைகளைச் சொல்ல முடியாது. அவர்களில் நாவலில் துணைக்கதாபாத்திரங்கள்தான். அருண்மொழி- வானதி காதலுக்கே பெரிய அளவில் இடமிருக்கமுடியாது. வானதி மையக்கருவுடன் நேரடியாக தொடர்பில்லா துணைக்கதாபாத்திரம்தான். ஒரு சினிமா ’கிளைமாக்ஸை’ ஒட்டி துணைக்கதாபாத்திரங்கள் வழியாக திசைதிரும்ப முடியாது. இப்போது அவர்கள் எங்கே என்று கேட்பவர்களே, அவர்களின் கதைகள் வந்திருந்தால் ’படம் கிளைமாக்ஸ் முன்னாடி கன்னாபின்னான்னு ஓடுது, கதை இழுக்குது’ என்று சொல்லியிருப்பார்கள்.
மையக்கதை அருண்மொழி – ஆதித்த கரிகாலன் – நந்தினி சார்ந்ததுதான். படம் அவர்களை மையமாக்கி ஓடி உச்சம்நோக்கிச் செல்கிறது. ஒரு கட்டத்தில் குந்தவை, பழுவேட்டையரையர் உட்பட அனைவருமே கொஞ்சம் அகன்று அந்த மையம் மட்டுமே முன்னகரும். எந்த தொழிலறிந்த திரைக்கதையாளனும் இதையே செய்வான்.
ஆனால் படத்தில் இடம்பெற்ற அத்தனை கதாபாத்திரத்திற்கும் ஓர் உச்சதருணம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவர்கூட அந்தரத்தில் விடப்படவில்லை. ஒரு முடிச்சுகூட கவனிக்காமல் விடப்படவில்லை. ஒரு சிக்கல்கூட கைவிடப்படவில்லை. இடைவேளைக்குப்பின் போர் எல்லாம் போக கதைசொல்ல கிடைப்பது 45 நிமிடங்கள் மட்டும்தான். அதற்குள் இத்தனை விஷயங்கள் சொல்லப்படவேண்டியிருக்கிறது. ஒரு பெரிய படத்தின் முதன்மைச் சவாலே அந்த முழுமை தான். அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏன் கூத்திகன் போன்ற புதிய கதாபாத்திரங்கள் உள்ளன?
ஒரு வரலாற்றுப்படம் போர் நிகழாமல் உச்சம் கொள்ள முடியாது. போர் என்பது ஒரு காட்சிவிருந்து. அதற்காகவே இளைஞர் அரங்குக்கு வருகிறார்கள். போரில்தான் கதாபாத்திரங்கள் தீவிரமாக வெளிப்பட முடியும். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் நேரடியாகப் போர் இல்லை. போரைப்பற்றிய பேச்சுகளே உள்ளன. ஆகவே உண்மை வரலாற்றில் மேலும் இருபதாண்டுகள் கடந்து சோழம் மீது படைகொண்டு வந்த ராஷ்ட்ரகூட மன்னன் கூத்திகன் இப்படத்தில் உச்சத்தில் படைகொண்டு வருகிறான். அதற்கான காரணம் முதல் படம் தொடங்கும்போதே சொல்லப்பட்டுவிட்டது. ஆகவே அந்தக்கதையும் ஒட்டவைத்ததுபோல் இல்லை.அருண்மொழிக்கு ஆதித்த கரிகாலன் மிச்சம்விட்டுச்சென்ற கடமை அது. அதையே அவன் முடிக்கிறான்.
மேலும் ஒன்றுண்டு. நாவலில் உள்ளதுபோல சிற்றரசர்களும், குடிகளும் அளித்த அரசை அருண்மொழி மதுராந்தகனுக்கு அளித்தால் அதில் அவனுடைய மாண்பென ஏதுமில்லை. இப்படத்தைப் பொறுத்தவரை அருண்மொழியே போரில் சோழநாட்டை வென்று அடைகிறான். அவன் வென்ற நாடு எல்லா நியாயப்படியும் அவனுக்கு முற்றிலும் உரியது, அதை மதுராந்தகனுக்கு அளிக்கையில்தான் அவனுடைய முழுமையான தியாகமும் மேன்மையும் வெளிப்படுகிறது. ஆகவேதான் போர்.
அந்த போரை அருண்மொழிக்கும் பழுவேட்டரையருக்கும் இடையே நடப்பதாக அமைக்க முடியாது. அருண்மொழி சோழ வீரர்களை போரில் கொல்வதுபோல காட்ட முடியாது. ஆகவேதான் கூத்திகன் படைகொண்டு வருகிறான்.
நாவலில் மதுராந்தகன் ஏன் மன்னன் ஆகிறான்? ஏன் சேந்தன் அமுதன் மன்னன் என காட்டப்படவில்லை?
நாவலிலுள்ள இளவரசர் ஆள்மாறாட்டம் என்னும் கரு சினிமாவில் இல்லை. அதற்கும் காரணம் ஒன்றே. அது நாவலின் மையம் அல்ல. அது ஒரு துணைக்கரு. ஒரு சினிமா கிளைமாக்ஸில் துணைக்கருக்களை நோக்கிச் செல்லமுடியாது. அருண்மொழி என்ன ஆனான், நந்தினி என்ன ஆனாள் என்பதே படம்.
அந்த ஆள்மாறாட்டக்கதையை கல்கி ஏன் கொண்டுவந்தார்? நாவலின் கதையில் முன்பு அதற்கான எந்த உணர்த்துதல்களும் இல்லை. ஏனென்றால் பொன்னியின் செல்வன் தொடர்கதை அடைந்த பெருவெற்றியால் அதை நிறுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. கல்கி சதாசிவம் மேலும் நீட்ட தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் பல பிழைகள் அமைந்ததாகவும், அதை திருத்த முடியவில்லை என்றும் கல்கி சொல்லியிருக்கிறார். நீட்டும்பொருட்டு சேந்தன் அமுதன் – மதுராந்தகன் ஆள்மாறாட்டக்கதை கொண்டுவரப்பட்டது.
அந்த ஆள்மாறாட்டக் கதை அலக்ஸாண்டர் டூமாவின் The Man in the Iron Mask போன்ற நாவல்களின் செல்வாக்கில் எழுதப்பட்டது. அந்நாவல் பலமுறை புகழ்பெற்ற சினிமாக்களாக வந்துள்ளது. அதைத் தழுவி நாடோடிமன்னன், உத்தமபுத்திரன் போன்ற படங்கள் வந்துவிட்டன. அதைப் பகடி செய்யும் இருபத்துமூன்றாம் புலிகேசி படமும் வந்துவிட்டது. சமூகக்கதைகளாகவும் அந்தக்கதை வெளிவந்துவிட்டது. அந்த ஆள்மாறாட்டக் கதையை இன்று படத்தின் உச்சமாக அமைக்க முடியாது. மேலும் கதைநாயகன் அருண்மொழிதான். உச்சம் அவனிலேயே நிகழவேண்டும். சினிமா சட்டென்று இன்னொருவரின் கதையாக ஆகமுடியாது.
ஆள்மாறாட்டத்தை கல்கி கொண்டுவந்தமைக்கு பலகாரணங்களுண்டு. அவர் நாவலில் மதுராந்தகனை கொடும் வில்லனாகவும் தகுதியற்றவனாகவும் காட்டிவிட்டார். கடைசியில் மணிமுடியை அவருக்கே அளிப்பது அபத்தம் என சொல்லப்பட்டது. ஆகவே அவர் சட்டென்று, சேந்தன் அமுதனை அரசனாக காட்டுகிறார். ஆனால் வரலாற்றிலுள்ள உத்தமசோழனின் கதாபாத்திரத்திற்கும் சேந்தன் அமுதனுக்கும் சம்பந்தமில்லை. பூகட்டுபவன் நேரடியாக அரசனாவது எல்லாம் கொஞ்சம் குழந்தைக்கதை. அதை உலகமெங்கும் உள்ள ரசிகர்களை ஏற்கவைப்பது இந்தக்காலத்தில் நடக்காது.
ஆனால் நாவலில் கல்கிக்கு இன்னொரு குழப்பம் வந்தது. அருண்மொழி மேல் காதல்கொண்ட பூங்குழலி கடைசியில் அவனுக்கு அண்ணியாகிறாள். அது இன்னும் சங்கடமானது. நாவலில் பலநூறு பக்கங்கள் நடுவே உள்ளன. வாசகர்கள் கவனிக்கவில்லை. சினிமாவில் பத்து நிமிடங்களுக்குள் இந்த மாற்றம் நிகழும் என்றால் அது ஒவ்வாமையை உருவாக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த சினிமாவில் மதுராந்தகன் கெட்டவனாக காட்டப்படவில்லை. ஆகவேதான் வில்லன் நடிகர் அல்லாமல் கொஞ்சம் சாத்வீகமான ரகுமான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதிலுள்ள மதுராந்தகன் பிடிவாதமான ஒரு பழமைவாத சைவநம்பிக்கை (சைவப்புறச் சமயங்களில் ஒன்று) கொண்டவனாகவும், எந்த அரசகுமாரனுக்கும் உரிய அதிகார ஆசை கொண்டவனாகவுமே காட்டப்பட்டுள்ளான். ஆகவே அவன் மணிமுடி சூடுவதில் பிழையில்லை.
இப்படத்தில் எங்கும் சேந்தன் அமுதன் இளவரசனாக காட்டப்படவில்லை. மதுராந்தகன் உண்மையில் பாண்டியவாரிசு, அது அரண்மனையில் எவருக்குமே தெரியாது என்பதெல்லாம் கூட கல்கி வைத்த கடைசிக்கண அவசரமான ‘டிவிஸ்டுகள்’ . அவற்றை சினிமாவில் வைத்தால் நாவல் வாசித்த சிலர் தவிர எஞ்சியோர் ஒவ்வாமையே கொள்வார்கள். அதெல்லாம் இப்படத்தில் இல்லை. இதில் மதுராந்தகன் தகுதி கொண்ட அரசகுமாரனேதான்.
உத்தமசோழன் தமிழகத்தில் தாந்த்ரீகசைவம் வளர வழிவகுத்தான். உத்தமசோழனுக்குப்பின் அரசனான ராஜராஜ சோழன் தாந்த்ரீக அடிப்படை கொண்ட சைவ புறச்சமயங்களை ஏறத்தாழ அழித்து ஆகமமுறையிலான மையச் சைவத்தை நிறுவினான் என்பது வரலாறு.
நாவலில் இல்லாத புதிய காட்சிகள் ஏன்?
அருண்மொழி, குந்தவை, ஆதித்த கரிகாலன் ஆகிய மையக் கதாபாத்திரங்கள் சந்திப்பது என்பது நாவலில் இல்லை. ஆனால் அது சினிமாவுக்கு தேவை. சினிமாவுக்கு உணர்ச்சிநாடகத் தன்மையே பலம். அடுக்கடுக்காக நாடகீய காட்சிகள் வேண்டும். ஆனால் நாடகம்போல் இல்லாமல் சினிமாவாக, காட்சிகள் வழியாக காட்டப்படவேண்டும். மையக்கதாபாத்திரங்கள் சந்திக்கும்போதுதான் நாடகீயத்தன்மை உருவாகும்.
ஆனால் நாவலில் அந்த நாடகீயத்தன்மையை தவிர்க்கலாம், ஒத்திப்போடலாம். ஏனென்றால் நாடகீய உச்சங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவற்றின் உச்சநிலைகளை மட்டுமே வெளிப்படுத்தும். முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அக்காட்சி அதற்குரிய நீளம் கொண்டதல்ல. ஆகவே நாவலாசிரியர்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாக முழுமையாக அகவெளிப்பாடு கொள்வதாக எழுதுவார்கள். எண்ணங்கள், நீண்ட தன்னுரைகள், உரையாடல்கள் வழியாக அது நிகழும். கதாபாத்திரங்கள் சந்திப்பதை கூடுமானவரை தள்ளிப்போடுவார்கள். அது சினிமாவுக்கு சரிவராது. சினிமாவுக்கு இருப்பதே சில நிமிடங்கள்தான்.
சென்ற பகுதியில் ஆதித்தகரிகாலன் – நந்தினி சந்திப்பு அத்தகையது. இந்த பகுதியிலும் அத்தகைய காட்சிகள் உள்ளன. நாவலுக்கும் சினிமாவுக்குமான வேறுபாடுதான் அவற்றை தேவையாக்குகிறது.
சினிமாவை, நாவலை புரிந்துகொள்ள விழையும் அடுத்த தலைமுறையினர் இவற்றை யோசிக்கலாம். இன்னும் என்னென்ன செய்யலாம் என்றுகூட யோசிக்கலாம். எழுதிக்கூட பார்க்கலாம்.
ஆதித்தகரிகாலனை கொன்றது யார்?
கடைசியாக, எஞ்சும் கேள்வி. ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? இன்று ஒரே நாளில் இருவர் தொலைக்காட்சிக்காகக் கேட்டனர். ஒருவர் ‘ஏன் சார் நந்தினி ஆதித்த கரிகலானை கொன்னாங்க?’ என்றார். நான் மறுக்கவில்லை. “ஆமா, அப்டிக் கொல்றதா காட்டினா என்ன தப்பு?” என்றேன். ஆதித்த கரிகாலனின் நிறைவு அவள் கையால் கொல்லப்படுவதுதானே? அது அவனுடைய காதல் அவன் நெஞ்சில் கத்தியாக இறங்குவதுதானே?
இன்னொருவர் கேட்டார். “அவனேதானே சார் குத்திக்கிட்டான்?” நான் மறுக்கவில்லை. “ஆமா, அப்டித்தானே இருக்க முடியும்? அவன் பல ஆண்டுகளா அந்த உச்சம் நோக்கித்தானே வந்திட்டிருந்தான்?”
இரண்டுமே சரிதான். ஆனால் அதை கல்கி ஒரு அதிகாரப்போட்டியில் நிகழ்ந்த கொலையாக காட்ட விரும்பவில்லை. அது ஒர் அதிதீவிரமான, சிக்கலான உறவின் உச்சமாகவே காட்ட விரும்பியிருந்தார். அந்நாவலின் உள்ளுறை அதுதான். அதுதான் சினிமாவிலும் நாடகீயமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அடிப்படையில் ஒரு நாவலை எப்படி புரிந்துகொள்வது என்பதில்தான் அதன் சினிமாவடிவின் கட்டமைப்பு உள்ளது. சினிமாவாக ஆக்கப்பட்ட டாக்டர் ஷிவாகோ போன்ற நாவல்களை ஒட்டி இதை யோசிக்கலாம். பொன்னியின் செல்வன் அடிப்படையில் ஒரு காவியக்காதலாகவே மணி ரத்னத்தால் உள்வாங்கப்பட்டுள்ளது. நெஞ்சில் தீயாக எரியும் ஒரு காதல். ஒரு பெருங்கருணையாளனின் குற்றவுணர்ச்சியும் அதனுடன் சேர்ந்துகொள்கையில் அது உயிர்கொல்லும் நோய். அது அவர்கள் இருவர் நடுவே தொடங்கி அவர்கள் இருவர் நடுவேதான் முடிய முடியும்.
*
பொன்னியின் செல்வன் 1 சார்ந்து நடந்த விவாதங்களை தொகுத்து நூலாக்கியிருக்கிறேன். வரலாறு, நாவல், சினிமா ஆகியவறை அறிய விரும்புபவர்களுக்காக.