பொன்னியின் செல்வன் படத்தை இன்று மாலை 430 காட்சியாக வடபழனி ஃபாரம் மாலில் உள்ள ஐமாக்ஸ் திரையில் பார்த்தேன். ஜா.ராஜகோபாலன், சண்முகம், அன்பு ஹனீஃபா, செந்தில் ஆகியோர் உடன் வந்தனர். அகன்ற திரையில் விரிந்த காட்சிகளை காண்பது அரிய அனுபவம். முதன்முதலாக ஐமாக்ஸ் திரையில் ஒரு படத்தை அமெரிக்காவில் பார்த்தபோது உருவான பரவசம் நினைவில் நீடிக்கிறது. ஆனால் அண்மைக்காட்சிகளும், மிக அண்மைக்காட்சிகளும் (குளோஸப், டைட் குளோஸப்) அவ்வளவு பெரிய திரையில் பார்க்கும்போது அதைவிர பிரம்மாண்டமான அனுபவம் உருவாகுமென பொன்னியின் செல்வன்2 பார்க்கும் போது தோன்றியது.
‘சினிமா அண்மைக்காட்சிகளின் கலை’ என்பார்கள். ஆனால் மிகமிக கவனமாக பயன்படுத்தவேண்டியது அண்மைக்காட்சி. நடிகர்கள் உண்மையாக உளமுணர்ந்து நடிக்கவில்லை என்றால் அண்மைக்காட்சிகள் காட்டிக்கொடுத்துவிடும். மனிதக் கண்களை, முகத்தின் மெய்ப்பாடுகளை அவ்வளவு நெருக்கமாகப் பார்க்க சினிமாபோல வேறொரு வழியே இல்லை. நடிகர் மனதில் வேறொரு எண்ணம் ஓடினால், நடிகர் அண்மையிலுள்ள வேறெதைப்பற்றியாவது கொஞ்சம் கவனம் கொண்டிருந்தால் அண்மைக்காட்சி காட்டிக்கொடுத்துவிடும்.
ஆகவே பெரும்பாலான அவசர -வணிகப் படங்களில் அண்மைக்காட்சிகளை நீட்டிக்க மாட்டார்கள். இரண்டு நொடிகள் முதல் பத்து நொடிகள் வரையே பெரும்பாலும் அண்மைக்காட்சிகள் நீடிக்கும். பொன்னியின் செல்வன் மிக அதிகமாக அண்மைக்காட்சிகளை பயன்படுத்தியிருக்கும் படம். மிகநெடுநேரம் அண்மைக்காட்சிகள் ஓடுகின்றன. பெரும்பாலும் அனைவருக்குமே அண்மைக்காட்சிகள் உண்டு. அப்படி வைக்க இயக்குநர் நடிகர்களை நம்பவேண்டும், தன்னையும் நம்பவேண்டும். விக்ரம், ஐஸ்வர்யா ராய் இருவரின் அண்மைக்காட்சிகளாக ஓடும் அந்த சந்திப்புக் காட்சி ஓர் உச்சம்.
பொன்னியின் செல்வனில் முழுமையாக எந்தப்பாட்டும் இல்லை. பாடல்காட்சியே இல்லை. ஆனால் பாடல்கள் பின்னணியிசையாகவே ஒலிப்பது ஓர் அபாரமாக அனுபவத்தை அளிக்கிறது. படம் ஒரு இசைநாடகத்தன்மையின் உச்சங்களை பாடல்கள் வழியாக அடைகிறது. பாடல்கள் படத்தில் பெரும்பாலும் தேவையற்ற இணைப்பாகவே இருக்கும். அரிதாக ஒரு சூழலை காட்டவோ, ஒரு படிப்படியான மாற்றத்தைக் காட்டவோ பாடல்களைப் பயன்படுத்துவதுண்டு. இப்படி பின்னணியிசையாக பாடல்களை பயன்படுத்துவதே மிகச்சிறப்பானது என்று தோன்றியது.
பொன்னியின் செல்வன் பாடல்களில் சோழர் பெருமை சொல்லும் பாடல் மில்லியன் காட்சிகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. படத்திலும் இதுவே முக்கியமானதாக இருக்குமென எண்ணியிருந்தேன். அவ்வாறே ஆகியிருக்கிறது.
இப்போது சட்டென்று இதிலிருந்து முற்றாக விடுபட்டதன் வெறுமை தோன்றுகிறது. எல்லா சினிமாக்களும் கனவுகள்தான். விழித்துக்கொண்டே ஆகவேண்டும்.
இந்தப்பாடல் தமிழிலும் சிறப்பாக உள்ளது. ஆனால் தெலுங்கில் ஒரு படி மேல். தெலுங்கில் எதுகைமோனை இயல்பாக அமைகிறது. ரா ரா என அடிகள் தொடங்கவும் முடியவும் முயல்கின்றன. ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாரதி சொன்னது ஏன் என புரிகிறது.
இப்படம் ஒரு தொடக்கம்தான். இதையொட்டி இளையதலைமுறை நடுவே தமிழ் வரலாறு சார்ந்து ஓர் ஆர்வம் உருவாகுமென்றால், இங்கே சமூக ஊடகங்களில் நிறைந்திருக்கும் எதிர்மறை மனநிலைகளுக்கு அப்பால் சென்று ஒரு நேர்நிலைமனநிலை உருவாகுமென்றால் அதுவே மெய்யான சாதனை. நீடிக்கும் சாதனையும் அதுவே.
*
பொன்னியின் செல்வன் 1 வெளிவந்தபோது உருவான விவாதங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட நூல். வரலாறு, திரைக்கலை, புனைவுக்கலை சார்ந்தது.